
பெரிய திருமொழி
988
கலையும் கரியும் பரிமாவும் திரியும் கானம் கடந்து போய்*
சிலையும் கணையும் துணையாகச் சென்றான் வென்றிச் செருக்களத்து*
மலை கொண்டு அலைநீர் அணைகட்டி மதிள் நீர் இலங்கை வாளரக்கர் தலைவன்*
தலை பத்து அறுத்துகந்தான் சாளக்கிராமம் அடை நெஞ்சே. 1.5.1
விளக்கம்:-
மான்களும், யானைகளும், குதிரைகளும் திரியும் காட்டை கடந்து போய் வில்லையும் அம்பையும் துணையாக கொண்டு வெற்றி தரும் போர் களத்துக்கு சென்றான்.. அது மட்டுமா அந்த காலத்துலேயே அனுமன் மற்றும் அவரோட நண்பர்கள் துணையோடு மலைகளை கொண்டு அலை சூழ்ந்த பெரிய கடலில் பிரிட்ஜ் கட்டி, பெருசு பெருசா சுவரையையும், கடலையும் கொண்ட இலங்கையில் கத்தியை கையில் வைத்துள்ள அரக்கர்கள் தலைவனான (அந்த ராஸ்கல்) இராவணனின் பத்து தலைகளையும் அறுத்து மகிழ்ந்தான்.
(தயவு செய்து எங்க ஸ்ரீ ராமர் வசிக்கும்) சாளகிராமம் அடை நெஞ்சே!
989
கடம் சூழ் கரியும் பரிமாவும் ஒலி மாந்தேரும் காலாளும்*
உடன் சூழ்ந்து எழுந்த கடி இலங்கை பொடியா வடிவாய்ச் சரம் துரந்தான்*
இடம் சூழ்ந்து எங்கும் இருவிசும்பில் இமையோர் வணங்க மணம் கமழும்*
தடம் சூழ்ந்து எங்கும் அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.2
விளக்கம்:-
நல்லா மதம் பிடித்த யானைகளும், குதிரைகளும், சத்தத்தோடு வரும் பெரிய தேரும் , நின்று சண்டை போடும் போர் வீரர்களும், சூழ்ந்து காணப்படும் காவல் கொண்ட இலங்கையை (மொளகா பொடி மாதிரி) பொடி பொடியா ஆக்குவதற்கு கூரான அம்புகளை அற்புதமா விட்ட (எங்க ஸ்ரீ , ராமரை) பெரிய வானத்தில் உள்ள தேவர்கள் நிலத்தில் எல்லா இடமும் சூழ்ந்து வணங்க வசதியா நல்ல வாசனையுள்ள மலர்கள் நிறைந்துள்ள குளங்களால் சூழப்பட்டு எங்கும் அழகாக காட்சி அளிக்கும் சாளகிராமம் (தயவு செய்து) அடை நெஞ்சே!
990
உலவு திரையும் குலவரையும் ஊழி முதலா எண் திக்கும்*
நிலவும் சுடரும் இருளுமாய் நின்றான் வென்றி விறலாழி வலவன்*
வானோர் தம்பெருமான் மருவா அரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*
சலம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.3
விளக்கம்:-
எப்பவுமே உலாத்தி கொண்டிருக்கும் கடல் அலையும், மலையும், (Daily வரும்
நாட்கள் அதாங்க காலம் அதோடு எட்டு திசைகள், நிலா, அப்புறம் சூரியன், இருளும் ஆக நின்றான் (அப்பா! அப்பப்பா எல்லாமே அவர்தாங்க! யாரு! தெரியுமா! இதோ!) வெற்றி ஒன்றையே தரும் சக்கரத்தை வலக்கையில் வைத்து கொண்டிருக்கும் தேவர்களுக்கும் தேவன் (எம் பெருமான்) அவரிடம் நெருங்காத, சரணடையாத (நீ என்ன சொல்றது! நான்தான் அப்படின்னு திமிரா இருக்கிற அரக்கர்களுக்கு எப்பவுமே பகைவன்.(தயவு செய்து எம் பெருமான் வசிக்கும்) நீரால் சூழப்பட்டு அழகாக காட்சி அளிக்கும் சாளகிரமம் அடை நெஞ்சே!
991
ஊரான் குடந்தை உத்தமன் ஒருகால் இருகால் சிலை வளைய*
தேரா அரக்கர் தேர் வெள்ளம் செற்றான் வற்றா வருபுனல் சூழ் பேரான்*
பேராயிரம் உடையான் பிறங்கு சிறை வண்டு அறைகின்ற தாரான்*
தாரா வயல் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே. 1.5.4
விளக்கம்:-
திரு ஊரான், திருகுடந்தை உத்தமன் ,ஒரு முறை என்ன செஞ்சான்னா!
பெரிய வில்லை வளைத்து நன்மை எது என்றே! ஆராயாம (எங்க ஸ்ரீ ராமரோடு போரிட வந்த ) அரக்கர் சேனைகளை ஒட்டுமொத்தமாக அழித்தான். வற்றாத காவிரி ஆறு சூழ்ந்த திருபேரான்.. அவனோட பெயரும் ஆயிரம். (ஏ மனமே!) துளசி மாலையை அணிந்தவன் எம்பெருமான். சிறகுகள் உடைய வண்டுகள் ஆரவாரம் செய்யும் தாரா என்னும் நீர் பறவை நிறைந்துள்ள வயல்கள் சூழ்ந்த இடத்தில இருக்காரு! தயவு செய்து எம்பெருமான் வசிக்கும் இடமான சாளகிராமம் அடை நெஞ்சே!
992
அடுத்தார்த்தெழுந்தாள் பிலவாய் விட்டு அலற அவள் மூக்கு ஆயில் வாளால் விடுத்தான்* விளங்கு சுடராழி விண்ணோர் பெருமான் நண்ணார் முன்*
கடுத்தார்த் தெழுந்த பெருமழையைக் கல் ஒன்று ஏந்தி இனநிரை காத்தடுத்தான்*
தடம் சூழ்ந்து அழகாய சாளக்கிராமம் அடை நெஞ்சே. 1.5.5
விளக்கம்:-
ஒரே அட்டகாசம் ஆரவாரம் செய்து கொண்டு தன்னை அணுகி வந்த அரக்கி
சூர்பனகையின் குகை போன்ற வாயை தொறந்து அலறும்படி அவள் மூக்கை கூறிய வாளால் அறுத்தான். பளிச்சுன்னு இருக்கிற சங்கை வைத்துள்ளவன். வானத்தில் உள்ள தேவர்களுக்கும் பெருமான் (என்ன செஞ்சாருன்னா!) முன் பகையால் கோபம் கொண்டு ஆரவாரம் செய்து கொண்டு வந்த பிச்சிக்கிட்டு அடிக்கும் பயங்கர மழையை பெரிய மலையை கையில் தூக்கி (மழை , புயல் தாக்காதவாறு) பசு கூட்டங்களை காப்பாற்றினான். (மனமே தயவு செய்து இப்படிப்பட்ட நல்லவன் எம் கண்ணன் வசிக்கும் இடமான) குளம் சூழ்ந்து அழகாக காட்சி அளிக்கும் சாளகிரமம் அடை நெஞ்சே!
993
தாயாய் வந்த பேயுயிரும் தயிரும் விழுதும் உடனுண்ட வாயான்*
தூய அரியுருவிர் குறள் ஆய்ச் சென்று மாவலியை ஏயான் இரப்ப*
மூவடி மண் இன்றே தாவென்று உலகேழும் தாயான்*
காயா மலர் வண்ணன் சாளக்கிராமம் அடை நெஞ்சே. 1.5.6
விளக்கம்:-
அம்மா மாதிரியே உருவு எடுத்து வந்த பேயான பூதனையின் உயிரையும், தயிரும் வெண்ணையும் சேர்த்து உண்ட வாயான். பிறரிடம் மன்றாடி பொருள் கேட்கும் தொழிலை செய்யாதவன் . தூய்மையான குட்டி குள்ளமா வடிவம் எடுத்து (வாமனனா) சென்று மாவலியிடம் கை நீட்டி மூன்று அடி மண் இன்று எனக்கு கொடுக்கிறியா! என்று கேட்க (ஹூம் ஜுஜூபி மூன்று அடிதானே எடுத்துக்கோ! என்பது போல மாவலியும் சம்மதிக்க உடனே வாமனான நம்ம குள்ள பெருமாள் திரிவிக்ரமனாக பெரிய உருவம் எடுத்து இரண்டே அடியில் உலகம் அளந்தான்.எம் உலகளந்த பெருமாள்) ஏழு உலகங்களுக்கும் தாய் ஆனவன் தெரியுமா! (காயா மலரை போல நீல கலருடையவன்! தயவு செய்து) காயா மலர் வண்ணன் வசிக்கும் இடமான சாளகிராமம் அடை நெஞ்சே!
994
ஏனார் அஞ்ச வெஞ்சமத்துள் அரியாய்ப் பரிய இரணியனை*
ஊனார் அகலம் பிளவெடுத்த ஒருவன் தானே இருசுடராய்*
வானாய்த் தீயாய் மாருதமாய் மலையாய் அலை நீர் உலகனைத்தும் தானாய்*
தானும் ஆனான் தன் சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.7
விளக்கம்:-
சுற்றி இருக்கிறவங்க (அரக்கர்கள்) பயப்படும்படி அந்தி சாயும் மாலை வேளையில் நரசிம்ம உருவெடுத்து பருத்த நல்ல குண்டா இருந்த இரணியனின் பெரிய உடலை பிளந்த ஒருவன் (என் செல்லம் என் நரசிம்மன்) சந்திரனாகவும் , சூரியனாகவும் , வானமாகவும் , நெருப்பாகவும் , காற்றாகவும், மலையாகவும் , கடலாகவும், உலகம் எல்லாம் தானாய், தானே தானும் ஆனான் .( தயவு செய்து அவன் வசிக்கும் இடமான)
சாளகிராமம் அடை நெஞ்சே!

995
வெந்தார் என்பும் சுடு நீரும் மெய்யில் பூசிக் கையகத்து*
ஓர் சந்தார் தலைக்கொண்டு உலகேழும் திரியும் பெரியோன் தான் சென்று*
என் எந்தாய்! சாபம் தீர் என்ன இலங்கமுது நீர் திருமார்பில் தந்தான்*
சந்தார் பொழில் சூழ்ந்த சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.8
விளக்கம்:-
வெந்து போன எலும்பையும் , சுடுகாட்டு சாம்பலையும் உடம்புல அணிந்து பூசி கையில மண்டை ஒட்டு தலையை வச்சிக்கிட்டு உலகம் முழுதும் (உலகம் சுற்றும் வாலிபன் போல)சுற்றி கொண்டு திரியும் பெரியவர் எம் ஈசன் பெருமாளிடம் சென்று அச்சோ! என்னோட தந்தையே! (பிரம்மன் தலையை வெட்டியதால் வந்த) சாபம் தீர்க்கணும் என்று கேட்க (பரம்பொருளான பெருமாளின் எச்சிலும் அமுதம்! வியர்வையும் அமுதம் தெரியுமா! கேட்டவுடனே நம்ம ஹீரோ பெருமாள்) தன்னோட
திரு மார்பில் இருந்து அமுத நீரை கபாலத்தில் இட்டு ஈசனின் சாபம் தீர்த்தார். (தயவு செய்து எம்பெருமான் வசிக்கும் ) சந்தன மர சோலைகள் நிறைந்த சாளகிராமம் அடை நெஞ்சே!
996
தொண்டாம் இனமும் இமையோரும் துணை நூல் மார்பின் அந்தணரும்*
அண்டா எமக்கே அருளாய் என்று அணையும் கோயில் அருகெல்லாம்*
வண்டார் பொழிலின் பழனத்து வயலின் அயலே கயல் பாய*
தண் தாமரைகள் முகமலர்த்தும் சாளக்கிராமம் அடை நெஞ்சே*. 1.5.9
விளக்கம்:-
தொண்டு செய்பவர்களும் , தேவர்களும் , பூணூல் மார்பில் அணிந்த பிராமணர்களும், உலகங்களின் தலைவனே எமக்கே அருள் புரிய வேண்டும் என்று ஒன்று சேர்ந்து வழிபடும் கோவில் பக்கத்தில வண்டுகள் சத்தம் விடும் அழகான தோட்டத்துல உள்ள மருத நிலத்து வயலில் உள்ள நீரில் வெளியூர்ல இருந்து கயல் மீன்கள் ஒரே பாய்ச்சலா பாய்ந்து பூந்து விளையாடுதுங்க! இதை பார்த்து சில்லுன்னு குளிர்ந்த தாமரைகள் (ஈன்னு இளிச்சுக்கிட்டு) முகம் மலர (அப்ப்பப்பா! இவ்ளோ அழகான ஊரில் எம்பெருமான் வசிக்கிறாரே! தயவு செய்து) சாளகிராமம் அடை நெஞ்சே!
997
தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத்து அடிகளை
காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய் தமிழ்மாலை*
ஆரார் உலகத்து அறிவுடையார் அமரர் நன்னாட்டு அரசாள*
பேராயிரமும் ஒதுமின்கள் அன்றி இவையே பிதற்றுமினே*1.5.10
விளக்கம்:-
தாரா நீர் பறவைகள் வாழும் வயல்கள் சூழ்ந்த அழகான சாளகிராமத்தில் வசிக்கும் எம் அடிகளை எம் பெருமானை கரிய காடுகள் நிறைந்த திருமங்கை நாட்டு மன்னன் கலியன் பாடிய தமிழ் மாலையை இந்த உலகத்தில் அறிவு உடையவர்களே! வானோர் நல்ல நாட்டை அரசாள வேண்டுமானால் (அந்த அளவுக்கு உங்களுக்கு திறமை வந்து விடும்) எம்பெருமானின் பெயர்கள் ஆயிரத்தை சொல்லுங்கள் அல்லது இந்த பத்து பாசுரங்களை ஆசையோடு எம்பெருமானை நினைத்து பிதற்றி கொண்டிருங்கள்,

திருமங்கை ஆழ்வார் சொன்ன சாளக்கிராமம்
குத்தலம் நேபாள நாட்டில் உள்ள காட்மண்டு என்னும் நகரத்தின்
வடமேற்கில் 250 கி.மீ தொலைவில் உள்ளது. இது கண்டகி
நதிக்கரையில் உள்ள திவ்விய தேசமாகும்.
இதனை முத்திநாத் எனவும் வழங்குவர்.
பெருமாள்:- ஸ்ரீமூர்த்தி (நின்ற கோலம்)
தாயார்:- ஸ்ரீ தேவி நாச்சியார்
No comments:
Post a Comment