பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Monday, February 7, 2011

நின்றான்! இருந்தான்! கிடந்தான்! நடந்தாற்க்கு இடம்* மாமலை ஆவது நீர்மலையே!

 
பெரிய திருமொழி1078

அன்று ஆயர் குலக் கொடியோடு* அணி மாமலர் மங்கையோடு அன்பு அளாவி* அவுணர்க்கு
என்றானும் இரக்கம் இலாதவனுக்கு* உறையும் இடம் ஆவது* இரும் பொழில் சூழ்
நன்று ஆய புனல் நறையூர் திருவாலி குடந்தை* தடம் திகழ் கோவல் நகர்*
நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்க்கு இடம்* மாமலை ஆவது நீர்மலையே*2.4.1

அன்று ஆயர் குலக் கொடியோடு - முன்பு பசு மேய்ப்பவர்களின் குலத்தில் பிறந்த கொடி போல இடையுடைய பொண்ணு நப்பின்னையோடு அணி மாமலர் மங்கையோடு அன்பு அளாவி - அழகான தாமரை மலர் (மேல் அமர்ந்த) மகாலட்சுமியோடு அன்பு கலந்து அவுணர்க்கு என்றானும் இரக்கம் இலாதவனுக்கு - அசுரர்களுக்கு என்றுமே இரக்கம் இல்லாதவனுக்கு உறையும் இடம் ஆவது - வசிக்கும் இடம் ஆவது இரும் பொழில் சூழ் நன்று ஆய புனல் - எங்கும் மரம் செடிகள் சூழ்ந்து நல்ல நீரும் (உடைய) நறையூர் திருவாலி குடந்தை தடம் திகழ் கோவல் நகர் - திருநறையூர், திருவாலி, திருகுடந்தை, நீர்நிலைகள் உள்ள திருகோவலூர் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்க்கு இடம் மாமலை ஆவது திருநீர்மலையே

விளக்கம்:-
முன்பு பசு மேய்ப்பவர்களின் குலத்தில் பிறந்த கொடி போல இடையுடைய அழகான
பொண்ணு நப்பின்னையோடும், அழகான தாமரை மலரில் (அமர்ந்த) மகாலட்சுமியோடும் அன்பு கலந்து மகிழ்ந்தவனும், அசுரர்களுக்கு என்றுமே இரக்கம் இல்லாதவனுமான நம் அன்பு கண்ணன் வசிக்கும் இடம் ஆவது, எங்கும் நிறைந்திருக்கும் செடிகளும் மரங்களும் சூழ்ந்த நல்ல நீர் நிலைகள் உள்ள அழகான திருநறையூரில் நின்ற திருகோலம் , திருவாலியில் அமர்ந்த திருகோலம், திருக்குடந்தையில் படுத்து கொண்ட திருகோலம் , நீர்நிலைகள் உள்ள அழகிய திருகோவலூரில் உலகம் அளந்த திருகோலம், இப்படி நின்றான் இருந்தான் கிடந்தான்,நடந்தாற்க்கு இடம் சிறந்த மலையான திருநீர்மலையே1079

காண்டாவனம் என்பதோர் காடு* அமரர்க்கு அரையன் அது கண்டு அவன் நிற்க* முனே
மூண்டார் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும்* முன் உலகம் பொறை தீர்த்து
ஆண்டான்*அவுணன் அவன் மார்பு அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து* அரியாய்
நீண்டான்* குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம்* மாமலை ஆவது நீர்மலையே*2.4.2


காண்டாவனம் என்பதோர் காடு - காண்டாவனம் என்னும் ஓர் காடு
அமரர்க் கரியன் அது கண்டவன் நிற்க - தேவர்களுக்கு தலைவன் இந்திரன் தன் காடு எரிவதை பார்த்து கொண்டிருக்க
முனே மூண்டார் அழல் உண்ண - முன்னே பற்றிக்கொண்டு நெருப்பு உண்ண முனிந்ததுவும் அதுவன்றியும் - வெகுண்டு எழுந்தவன், அது மட்டுமில்லாமல்
முன் உலகம் பொறை தீர்த்து ஆண்டான் - முன் உலகம் பாரத்தை தீர்த்து ஆண்டான்
அவுணன் அவன் மார்பகலம் - அசுரன் இரணியனின் மார்பை
உகிரால் வகிர் ஆக முனிந்து - கூரிய நகத்தால் இருபிளவாக பிளக்க வெகுண்டு
அரியாய் நீண்டான் - நரசிம்மமாய் தோன்றினான்
குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம் - குள்ள வாமன உருவம் ஆகி உலகம் அளக்க திரிவிக்ரமானாய் வளர்ந்தவனுக்கு இடம் மாமலை ஆவது திருநீர்மலையே - சிறந்த மலையான திருநீர்மலையேகாண்டாவனம் கத்திரி வெயில் ஒரு சிறு கதை:_
காண்டவனம் என்னும் காடு தேவர்களின் தலைவன் இந்திரனுடையது. அக்னி தேவன் பசியால் வாட, கோர பசிக்கு காண்டாவன காடே ஏற்றது என்று அறிந்து, கண்ணனிடம் இந்திரனின் காண்டாவனத்தை எரித்து என் பசியை போக்க உதவ வேண்டும் என கூற, கண்ணனும் அக்னிக்கு உதவி புரிந்தான். அக்னியிடம், “உனக்கு 21 நாட்கள் கெடு கொடுக்கின்றேன். அதற்குள்ளாக நீ வனத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என கண்ணன் கூற, அக்னிக்கு கண்ணன் உதவி செய்வதால் இந்திரன் எதுவும் செய்ய முடியாமல் பே! பே! என்று பார்த்து கொண்டிருக்க, முதல் எழு நாட்கள் அக்னி மெல்ல மெல்ல உணவை விழுங்க ஆரம்பித்தான். அப்போது வெப்பம் மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்தது. அடுத்த ஏழு நாட்கள் கொஞ்சம் அதிகமாயும், வேகமாயும் காட்டை விழுங்க ஆரம்பிக்க வெப்பம் கடுமையானது. கடைசி எழு நாட்கள், படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்தது காடும், அக்னியின் வேகமும். வெப்பம் மெல்ல மெல்லக் குறைந்தது. இந்த இருபத்தி ஒரு நாட்களையே அக்னி நட்சத்திரம் என்ற பெயரில் சொல்லுகின்றோம். சென்னை மக்களால் கத்திரி வெயில் என்றழைக்கப் படும்.


விளக்கம்:-
தேவர்களின் தலைவன் இந்திரன் பார்த்து கொண்டு நிற்க, அவன் முன்னேயே காண்டவன காட்டை பற்றி கொண்டு அக்னி உண்ண உதவியாக வெகுண்டு எழுந்து அருளியவனும், அதுமட்டுமில்லாமல் முன்பு பாரத போரில் கம்சன் முதலான அரக்கர்களை அழித்து உலகின் பாரங்களை தீர்த்து ஆட்சி செய்தான். அசுரன் இரணியனின் அகலமான மார்பை கூரிய நகத்தால் இரு பிளவாக பிளக்க வெகுண்டு நரசிம்மமாய் தோன்றினான். குள்ள வாமன உருவம் ஆகி உலகம் அளக்க திரி விக்ரமனாய் நிமிர்ந்தவனுக்கு இடம் சிறந்த மலையான திருநீர்மலையே.

                                                         உலகளந்த பெருமாள்

1080

அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து* அடல் ஆழியினால் அணி ஆர் உருவில்*
புலம் மன்னும் வடம்புனை கொங்கையினாள்* பொறை தீர முன் ஆள் அடுவாள் அமரில்*
பல மன்னர் படச் சுடர் ஆழியினைப்* பசுலோன் மறையப் பணி கொண்டு அணி சேர்*
நில மன்னனுமாய் உலகு ஆண்டவனுக்கு இடம்* மாமலை ஆவது நீர்மலையே*2.4.3அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து - கலப்பையும் சிறந்த வலிமையாக முழங்கும் முறுக்கலான சங்கையும் எடுத்து
அடல் ஆழியினால் - வலிமையான வெற்றியே தரும் சக்கரத்தால்
அணி ஆர் உருவில் - அழகு பொருந்திய உருவில்
புலம் மன்னும் - கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என ஐந்து புலன்களும் மகிழ்ச்சியடையும் படி சிறந்த
வடம்புனை கொங்கையினாள் - நகைகளை அணிந்த முலையுடையவளான பூமி தாயாரின்
பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில் - பாரம் தீர முன் ஆட்களை நெருங்கி கொடிய போரில்
பல மன்னர் படச் சுடர் ஆழியினைப் - பல தீய மன்னர்கள் அழியுமாறு ஒளியுடைய சக்கரத்தை
பசுலோன் மறையப் பணி கொண்டு - சூரியன் மறையும் அளவுக்கு தன் வேலையாளாக கொண்டு
அணி சேர் நில மன்னனுமாய் - அழகு பொருந்திய நிலத்திற்கு மன்னனாய்
உலகு ஆண்டவனுக்கு இடம் - உலகம் முழுதும் ஆட்சி செய்பவனுக்கு இடம்
மாமலை ஆவது நீர் மலையே - சிறந்த மலையான திருநீர்மலையே

விளக்கம்:-
அழகு பொருந்திய உருவில் கலப்பையும் சிறந்த வலிமையாக முழங்கும் முறுக்கலாக இருக்கும் அழகு சங்கை எடுத்து, அதனோடு வலிமையான சக்கரத்தால், ,கண், காது, மூக்கு, நாக்கு, தோல் என ஐந்து புலன்களும் மகிழ்ச்சியடையும் படி சிறந்த நகைகளை அணிந்த முலையுடையவளான அழகு பூமி தாயாரின் பாரம் தீர, முன்பு பாரத போரில் பல தீய மன்னர்கள் மேல் படும் படி ஒளியுடைய சக்கரத்தினை சூரியன் மறையும் படி தன் பணியாளனாக கொண்டு அவர்களை நெருங்கி அழிக்கும்படி செய்தவன், அதுமட்டுமில்லாமல் அழகு பொருந்திய நிலத்திற்கு மன்னனாய் உலகம் முழுதும் ஆட்சி செய்பவனுக்கு இடம் சிறந்த மலையான திருநீர்மலையே1081

தாங்காதது ஓர் ஆள் அரியாய்* அவுணன் தனை வீட முனிந்து அவனால் அமரும்*
பூங்கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து  அது அன்றியும்* வென்றி கொள் வாள் அமரில்*
பாங்காக முன் ஐவரோடு அன்பு அளவிப்* பதிற்றைந்திரட்டிப் படை வேந்தர் பட*
நீங்காச்செருவில் நிறை காத்தவனுக்கு இடம்* மாமலை ஆவது நீர்மலையே* 2.4.4


தாங்காதது ஓர் ஆள் அரியாய் -   தாங்கமுடியாத வலிமையுடன் ஒரு நரசிம்ம உருவெடுத்து
அவுணன் தனை வீட முனிந்து - அசுரன் இரணியனின் உயிர் விட சீறி
அவனால் அமரும் - அந்த இரணியனால் அமரும்
பூங்கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து -பூ வைத்துள்ள கூந்தலையுடைய பெண்கள் கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பிலே மூழ்க செய்தவனும்
அது  அன்றியும் வென்றி கொள் வாள் அமரில் - அதுமட்டுமில்லாமல் வெற்றி கொள்கின்ற கொடிய போர்களத்தில்
பாங்காக முன் ஐவரோடு அன்பு அளவிப் - பக்குவமாக முன்பு பஞ்ச பாண்டவர்களோடு அன்பு கலந்து
பதிற்றைந்திரட்டிப் படை வேந்தர் பட - கௌரவர்களான நூற்றவர் உள்ள படையில் துரியோதனன் முதலான மன்னர்கள் அழிய
நீங்காச்செருவில் நிறை காத்தவனுக்கு இடம் - முடியாத சண்டையில் (போரை முடித்து)  திரௌபதியின் மானம் காத்தவனுக்கு இடம்
மாமலை ஆவது நீர்மலையே - சிறந்த மலையான திருநீர்மலையே
ஒரு சிறு கதை .
"திரௌபதியை நடு சபையில் கௌரவர்கள் அவமான படுத்த நினைத்த போது
கோபத்தில் திரௌபதி சபதம் எடுத்தாங்க!

தேவி திரௌபதி சொல்வாள்--
ஓம் தேவி பராசக்தி ஆணை யுரைத்தேன்
பாவி துச்சாசனன் செந்நீர் - அந்தப்
பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம் ,
மேவி இரண்டுங்கலந்து - குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக்குழல் முடிப்பேன் யான் -இது
செய்யுமுன்னே முடியே" என்றுரைத்தாள்

தன் முடியை பிரித்தபடி வைத்திருக்க பாரதப்போர் முடிந்து தன் சபதத்தை எப்போது நிறைவேற்றப்
போகிறோம் என்று காத்திருக்கிறாள் அவள் .தலைக்குளிக்காமல ஒரே சிக்குப்பிடித்திருந்தது.
பாரதப்போர் முடிந்தது ஆவேசத்துடன் ஓடி வந்து தன் சபதத்தை நிரைவேற்றுகிறாள் திரௌபதி. நம் கண்ணனே பாரத போரை முடித்து வைத்தவன்

விளக்கம்:-
எதிரிகளால் தாங்க முடியாத வலிமையுடன் ஒரு நரசிம்ம உருவமாய் வந்து அசுரன் இரணியன் உயிரை விடுமாறு சீறி, அவனால் அமரும் பூ வைத்துள்ள அழகான கூந்தல் உடைய பெண்களும் கொழுந்து விட்டு எரிகின்ற நெருப்பிலே மூழ்க செய்தவனும் , அதுமட்டுமில்லாமல் முன்பு பஞ்ச பாண்டவர்களோடு அவர்களுக்கு தக்கபடி பக்குவமாக அன்பு கலந்து, வெற்றி கொள்கின்ற கொடிய போர்களத்தில் கௌரவர்களான நூற்றவர் படையில் துரியோதனன் முதலான மன்னர்கள் அழியும் படி செய்துமுடியாத சண்டையில் (போரை முடித்து)  திரௌபதியின் மானம் காத்தவனுக்கு இடம்சிறந்த மலையான திருநீர்மலையே.


                                                                                          நீர்வண்ண பெருமாள்

1082

மாலும் கடல் ஆர மலைக் குவடு இட்டு* அணை கட்டி வரம்பு உருவ* மதி சேர்
கோல மதிள் ஆய இலங்கை கெட* படை தொட்டு ஒரு கால் அமரில் அதிர*
காலம் இது என்று அயன் வாளியினால்* கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும்*
நீல முகில் வண்ணன் எமக்கு இறையவர்க்கு இடம்* மாமலை ஆவது நீர்மலையே* 2.4.5
மாலும் கடல் ஆர - பெரிய கடல் நிறைய
மலைக் குவடு இட்டு - மலை குன்றுகளை இட்டு
அணை கட்டி வரம்பு உருவ - அணைகட்டி கரை நன்றாக
மதி சேர் கோல மதிள் ஆய - நிலவை தொடும் அளவுக்கு அழகான சுற்று சுவர்களை உடைய
இலங்கை கெட - இலங்கை கெடும்படி
படை தொட்டு ஒரு கால் அமரில் அதிர - ஆயுதம் ஏந்திய படை வீரர்களை செலுத்தி ஒரு காலத்தில் போரில் அதிர
காலம் இது என்று அயன் வாளியினால் - காலம் இது என்று பிரம்ம அம்பினால்
கதிர் நீள் முடி பத்தும் அறுத்து அமரும் - ஒளியுடைய நீண்ட தலை பத்தும் அறுத்து அமரும்
நீல முகில் வண்ணன் - நீலமுகில் வண்ணன்
எமக்கு இறையவர்க்கு இடம் - எமக்கு இறையவர்க்கு இடம்
மாமலை ஆவது நீர்மலையே - சிறந்த மலையான திருநீர்மலையே


விளக்கம்:-
பெரிய கடல் நிறம்பும்படி மலை கற்களை இட்டு, அணை கட்டி, அதன் மூலம் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்ல நன்றாக வழி அமைத்து அக்கரைக்கு சென்று, நிலவை தொடும்படி இருக்கும் அழகிய சுற்று சுவர்களை உடைய இலங்கை கெடும்படி, போர்வீரர்களை கொண்டு முன் ஒரு காலத்தில் நடந்த போரில் இராவணன் முதலான அவன் படைகள் அதிர, ஸ்ரீராமர் தன் படைகளை முன் நடத்தி செல்ல ,இதுவே அரக்கன் இராவணனை அழிக்க சரியான காலம் என்று எண்ணி பிரம்மன் கொடுத்த அம்பால் இராவணனின் கிரீடங்களால் ஒளி பெற்ற நீண்ட பத்து தலைகளையும் அறுத்து, சாந்தமாக பக்தர்களின் உள்ளத்தில் அமர்ந்த நீலமேக வண்ணன் , எமக்கு இறையவர்க்கு இடம் சிறந்த மலையான திருநீர்மலையே

1082

பார் ஆர் உலகும், பனி மால் வரையும்* கடலும் சுடரும் இவை உண்டும்* எனக்கு
ஆராது என நின்றவன் எம்பெருமான்* அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய*
அப்பேரானை முனிந்த முனிக்கு அரையன்* பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான்*
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம்* மாமலை ஆவது நீர்மலையே*2.4.6
பார் ஆர் உலகும் - உலகத்தவர் உள்ள உலகும்
பனி மால் வரையும் - குளிர்ந்த பெரிய பெரிய மலைகளும்
கடலும் சுடரும் இவை உண்டும் - கடலும், நிலவும், சூரியனும் இவை எல்லாம் உண்டும்
எனக்கு ஆராது என நின்றவன் எம்பெருமான் - எனக்கு போதாது என் நின்றவன் எம்பெருமான்
அலை நீர் உலகுக்கு அரசு ஆகிய - கடல் சூழ்ந்த நீர் உலகுக்கு அரசர்கள் ஆகிய
அப்பேரானை முனிந்த - சத்ரியர்கள் என்ற பெயர் உடைய குலத்தை சீறி கொண்டு (அழித்தவன்)
முனிக்கு அரையன் - முனிவர்களுக்கெல்லாம் அரசனான பரசுராமன்
பிறர் இல்லை நுனக்கு எனும் எல்லையினான் - உனக்கு எல்லை பிறர் இல்லை என்னும் எல்லையில் இருப்பவன்
நீர் ஆர் பெயரான் நெடுமால் அவனுக்கு இடம் - நீர்வண்ணன் என்னும் பெயர் உடைய நெடுமால் அவனுக்கு இடம்
மாமலை ஆவது நீர்மலையே - சிறந்த மலையான திருநீர்மலையே


ஒரு சிறு கதை
பெருமாளின் ஆறாவது அவதாரம் பரசுராமர். இவர் ஜமதக்னி முனிவருக்கும் ரேனுகாம்பாளுக்கும் பிறந்தவர். ஜமதக்னி முனிவர் அனைத்தையும் கேட்டவுடன் கொடுக்கும் காமதேனு பசு வைத்திருந்தார் . மகா பலசாலியான சத்திரியனான கார்த்த வீரியன் என்பவன் முனிவரிடமிருந்து பசுவை திருடிகொண்டான் . இதனால் பரசுராமர் அவனை கொன்றார். இதனால் கார்த்த வீரியனின் மகன்கள் முனிவரை கொன்றனர் . ரேணுகாம்பாள் கதறி அழ கோபமுற்ற பரசுராமர் 21 தலைமுறை சத்திரியர்களை அழித்தார்.
குறிப்பு: சத்திரியர்கள் பிராமணருக்கு அடுத்தபடியாக இரண்டாவது நிலையில் வைக்கப்படுகின்றனர். சத்திரியர் பிரிவில் ஆள்வோரும், போர்த்தொழில் புரிவோரும் அடங்குவர்.


விளக்கம்:-
உலகத்தவர் எல்லாரும் இருக்கும் மிக பெரிய உலகையும், குளிர்ந்த பெரிய மலைகளும், கடலும், நிலவும்,சூரியனும் இவை எல்லாம் உண்டு எனக்கு பற்றவில்லை என நின்றவன் எம்பெருமான், கடல் சூழ்ந்த நீர் உலகுக்கு அரசர்களாக இருந்த சத்ரிய குலத்தை சீறி கொண்டு அழித்தவன் , முனிவர்களுக்கு அரசனான பரசுராமன். தனக்கு இணையாக அதாவது தனக்கு மேலே பிறர் இல்லை என்னும் எல்லையில் இருப்பவன் . நீர்வண்ணன் என்னும் பெயரை உடைய நெடுமால் அவனுக்கு இடம் சிறந்த மலையான திருநீர்மலையே.

1083

புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப்* புகழ் விட முனிந்து உயிர் உண்டு* அசுரன்
நகர் ஆயின பாழ் பட நாமம் எறிந்து அது அன்றியும்* வென்றி கொள் வாள் அவுணன்*
பகராதவன் ஆயிரம் நாமம்* அடிப் பணியாதவனை பணியால் அமரில்*
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் அவனுக்கு இடம்* மாமலை ஆவது நீர்மலையே*2.4.7


புகர் ஆர் உரு ஆகி முனிந்தவனைப் - ஒளி பொருந்திய உருவம் ஆகி கோபம் கொண்டவனை
புகழ் விட முனிந்து உயிர் உண்டு - அவன் புகழ் அழியும்படி சீறி உயிர் பறித்து
அசுரன் நகர் ஆயின பாழ் பட - அசுரர்கள் தங்களுக்கென்று அமைத்த நகரங்களாக உள்ளவற்றை அழிந்து போகும் படியும்
நாமம் எறிந்து அது அன்றியும் - அசுரர்கள் பெயரை தூக்கி எறிந்து அது மட்டுமில்லாமல்
வென்றி கொள் வாள் அவுணன் - வெற்றி கொண்ட வாளை உடைய அரக்கன் இரணியனை
பகராதவன் ஆயிரம் நாமம் - ஸ்ரீமன் நாராயணனின் ஆயிரம் பெயர் சொல்லாதவனை
அடிப் பணியாதவனை பணியால் அமரில் - திருவடி பணியாதவனை பிரகலாதன் சொல்லால் போரில்
நிகர் ஆயவன் நெஞ்சு இடந்தான் - தனக்கு நிகராக உடைய அவன் நெஞ்சை பிளந்தான்
அவனுக்கு இடம் மாமலை ஆவது நீர்மலையே - அவனுக்கு இடம் சிறந்த மலையான திருநீர் மலையே


ஒரு சிறு கதை
பெருமாளின் கிருஷ்ணா அவதாரத்தில் பௌண்ட்ரக வாசுதேவன் என்ற காசி அரசன் ஒருவன் இருந்தான. அவனுக்கு தன் பெயரின் மேல் அலாதி பற்று. அந்தப் பற்று கொஞ்சம் கொஞ்சமாக கர்வமாயிற்று. அவன் என்ன நினைத்தான் என்றால் என் பெயரில் வாசுதேவன் என்று வருகிறது. அதனால் வாசுதேவனாகிய விஷ்ணு நான்தான். நானே கடவுள். என் முன் அந்த விஷ்ணு கைகளில் பஞ்சாயுதம் தரித்துக் கொண்டு நிற்கக்கூடாது தானே கிருஷ்ணர் என கூறி கொண்டு கண்ணனை போலவே சங்கு சக்கரம் எடுத்து கொண்டு ஒளி பொருந்திய உருவத்துடன், தூதனை அனுப்பி அந்த கிருஷ்ணன் நான்தான் .நீ சங்கு சக்கரம் வைத்திருக்க கூடாது. வேண்டுமென்றால் என்னிடம் போர் புரிந்து என்னை வென்று வைத்து கொள்ளலாம் என கண்ணனிடம் கூற சொல்ல, தூதனும் அவ்வாறே நம் கிருஷ்ணரிடம் கூற, அவனிடம் போர் புரிந்து தன்னை அவதாரமாக பொய் கூறிய பௌண்ட்ரக வாசுதேவனை அழித்தார்.

விளக்கம்:-
ஹிரண்யாக்க்ஷன் or பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன் சங்கு சக்கரங்களை ஏந்தி கொண்டு தானே கண்ணன் என்று ஒளி பொருந்திய உருவம் ஆகி, கோபம் கொண்டு வந்தவனை அவன் புகழ் முழுதும் அழிய சீறி கொண்டு உயிரை பறித்து, மேலும் அசுரர்கள் தங்களுக்கென்று உருவாக்கிய நகரங்களை அழித்து, எங்கும் ஒலித்து கொண்டிருந்த அசுரர்களின் பெயர் முழுதும் தூக்கி எறிந்ததோடு மட்டுமில்லாமல், வெற்றியை தரும் வீர வாள் வைத்துள்ள அரக்கன் இரணியனானவன், ஸ்ரீமன் நாராயணனின் ஆயிரம் பெயர்களை சொல்லாதவன், திருவடி பணியாதவன், அப்பேற்பட்ட அரக்கனை பிரகலாதன் சொல்லுக்கு கட்டுப்பட்டு போரில் தனக்கு நிகராக உடையவனின் நெஞ்சை பிளந்தான். அவனுக்கு (எம் அன்பு நரசிம்மனுக்கு) இடம் சிறந்த மலையான திருநீர்மலையே.
                                                                   பால நரசிம்மர்
1084

பிச்சைச் சிறு பீலி பிடித்து* உலகில் பிணம் தின் மடவார் அவர் போல்* அங்கனே
அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால்* அவர் செய்கை வெறுத்து அணி மாமலர் தூய்*
நச்சி நமனார் அடையாமை* நமக்கு அருள் செய் என உள் குழைந்து ஆர்வமொடு*
நிச்சம் நினைவார்க்கு அருள் செய்யும் அவற்கு இடம்* மாமலை ஆவது நீர்மலையே*2.4.8


பிச்சைச் சிறு பீலி பிடித்து - தோகைகளையுடைய சிறு மயிலின் இறகுகளை பிடித்து
உலகில் பிணம் தின் மடவார் அவர் போல் - உலகில் பிணம் தின்னும் முட்டாள்கள் அவர் போல
அங்கனே அச்சம் இலர் நாண் இலர் ஆதன்மையால் - அங்கு பயம் இல்லாதவர் வெட்கம் இல்லாதவர் ஆகையால்
அவர் செய்கை வெறுத்து அணி மாமலர் தூய் - அவர் செயல்களை வெறுத்து அழகான சிறந்த பூக்களை தூவி
நச்சி நமனார் அடையாமை - பக்தியோடு எமன் எங்களை அடையாமல்
நமக்கு அருள் செய் என உள் குழைந்து ஆர்வமொடு - எமக்கு அருள் செய் என உள்ளம் உருகி ஆர்வமோடு
நிச்சம் நினைவார்க்கு - நினைப்பவர்களுக்கு நிச்சயம்
அருள் செய்யும் அவற்கு இடம் - அருள் செய்யும் அவருக்கு இடம்
மாமலை ஆவது நீர்மலையே - சிறந்த மலையான திருநீர்மலையே


விளக்கம்:-
சிறு பூச்சி எறும்புகள் கூட சாகடிக்க கூடாது என்பதற்காக ஜைனர்கள், தோகைகளையுடைய சிறிய மயிலின் இறகை கையில் பிடித்து கொண்டு,
உலகில் பிணம் தின்னும் முட்டாள்களை போல, அங்கே சிறிதும் பயம் இல்லாமல், வெட்கம் இல்லாமல் நிர்வாணமாக ரோட்டில் திரிவர். அதனால அவர்களின் செயல்களை
வெறுத்து, அழகான சிறந்த மலர்களை தூவி, பக்தியோடு எமனார் விரைவில் வராதபடி எமக்கு அருள் செய் என உள்ளம் உருகி ஆர்வமோடு நினைப்பவர்க்கு, நிச்சயம் அருள் செய்யும் எம் பெருமாளுக்கு இடம் சிறந்த மலையான திருநீர்மலையே.


                                                              ரங்கநாத பெருமாள்1085

பேசும் அளவு அன்று இது வம்மின்* நமர் பிறர் கேட்பதன் முன் பணிவார் வினைகள்*
நாசம் அது செய்திடும் ஆதன்மையால்* அதுவே நமது உய்விடம் நாள் மலர் மேல்*
வாசம் அணி வண்டு அறை பைம் புறவில்* மனம் ஐந்தொடு நைந்து உழல்வார்* மதி இல்
நீசர் அவர் சென்று அடையாத அவனுக்கு இடம்* மாமலை ஆவது நீர்மலையே*2.4.9


பேசும் அளவு அன்று இது - பேசும் அளவு இல்லை இது
வம்மின் நமர் பிறர் கேட்பதன் முன் - வாருங்கள்! நம்மவர்களே! மத்தவங்க கேட்பதற்கு முன்
பணிவார் வினைகள் - பணிபவர்களின் பாவங்களை
நாசம் அது செய்திடும் - அழிந்து போக செய்திடும்
ஆதன்மையால் அதுவே நமது உய்விடம் - ஆகையால் அதுவே நமக்கு வாழ வழி
நாள் மலர் மேல் வாசம் - நாள்தோறும் மலரும் புதிய பூவின் மேல் உட்கார்ந்து
அணி வண்டு அறை பைம் புறவில் - அழகான வண்டுகள் ஒலிக்கும் பசுமையான சோலைகளையுடைய (திருநீர்மலை)
மனம் ஐந்தொடு நைந்து உழல்வார் - மனம் ஐம்புலன்களின் ஆசையால் வருந்தி அவதிபடுபவர்கள்
மதி இல் நீசர் அவர் சென்று அடையாத - புத்தியே இல்லாத கீழான அற்பமானவர்கள் சென்று அடையாத (மலை வாசன்)
அவனுக்கு இடம் மாமலை ஆவது நீர்மலையே - அவனுக்கு இடம் சிறந்த மலையான திருநீர்மலையேவிளக்கம்:-
இந்த பெருமாளை பற்றி பேச ஆரம்பித்தால் இந்த அளவுதான் என்பது இல்லை, பேசினால் பேசி கொண்டே போகலாம். வாருங்கள்! நம்மவர்களே! மற்றவர்கள் கேட்பதற்கு முன்னாடியே முழுமையாக சரணடைந்து, பணிபவர்களின் பாவங்களை நாசம் செய்து விடுவார். ஆகையால் நம்ம பெருமாளை பணிந்து வழிபடுவதே, நமக்கு எவ்வித குறையும் இல்லாமல் வாழ்வதற்கு சிறந்த வழி.நாள்தோறும் பூக்கும் புதிய பூவின் மேல் அமர்ந்து கொண்டிருக்கும், அழகான வண்டுகள் ஒலிக்கும் பசுமையான வயல்வெளிகளும், மரம் செடி கொடிகளும் உடைய, இடத்தில் வாழும் இப்பெருமாளிடம், மனமானது கண், காது, மூக்கு, நாக்கு, தோல் முதலிய ஐம்புலன்களால் உண்டாகும் ஆசையில் சிக்கி வருந்தி அவதிப்படும் புத்தி இல்லாத அற்பமானவர்கள் சென்று அடைய முடியாது.இவ்வளவு சிறப்புகள் உடைய பெருமாளுக்கு இடம் சிறந்த மலையான திருநீர்மலையே.1086

நெடுமால் அவன் மேவிய நீர் மலை மேல்* நிலவும் புகழ் மங்கையர் கோன்*அமரில்
சுட மா களி யானை வல்லான்* கலியன் ஒழி செய் தமிழ் மாலை வல்லார்க்கு* உடனே
விடு மால் வினை* வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் அன்றி இலங்கொலி சேர்*
கொடு மா கடல் வையகம் ஆண்டு* மதிக் குடை மன்னவராய் அடி கூடுவரே*2.4.10


நெடுமால் அவன் மேவிய நீர் மலை மேல் - உயர்ந்த பெருமாள் அவன் பரவிய
நீர் மலை மேல்
நிலவும் புகழ் மங்கையர் கோன் - நிலையான புகழ் திருமங்கை மன்னன்
அமரில் கட மா களி யானை வல்லான் - போரில் யானை கூட்டத்தில் உள்ள பெரிய மத யானையை நடத்த திறமையானவன்
கலியன் ஒலி செய் தமிழ் மாலை வல்லார்க்கு - போர்வீரன் வெளியீடு செய்த தமிழ் மாலையை சொல்ல திறமை உடையவர்
உடனே விடு மால் வினை - உடனே மயக்கம் தரும் பாவங்கள் விடும்
வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும் - வேண்டினால் மேல் உலகும் (சுவர்கமும்) எளிதாகிவிடும்
அன்றி இலங்கொலி சேர் - அதுமட்டுமில்லாமல் பிரகாசமான சத்தம் உண்டாகும்
கொடு மா கடல் வையகம் ஆண்டு - வளைந்த பெரிய கடல் உடைய உலகம் ஆண்டு
மதிக் குடை மன்னவராய் அடி கூடுவரே - நிலவை போல ஒரு குடை கீழ் மன்னவராய் (ஆட்சி செய்து ) திருமால் அடி கூடுவரே


விளக்கம்:-
நெடுமால் வாழும் திருநீர்மலை மேலே, நிலையான புகழை உடைய திருமங்கை நாட்டு மன்னன், போரில் யானை கூட்டத்தில் உள்ள பெரிய வெறி பிடித்த யானையையும் வழி நடத்தக்கூடிய திறமையுள்ள போர்வீரனான திருமங்கயாழ்வார் அருள் செய்த தமிழ் மாலையை பெருமாள் மீது பாசத்துடன் சொல்ல திறமை உள்ள்ளவர்களுக்கு சிற்றின்ப மயக்கத்தால் முன் செய்த பாவங்கள் உடனே விலகும், வேண்டினால் மோட்சமும் எளிதாகிடும். அதுமட்டுமில்லாமல் பிரகாசமான சத்தத்துடன் வரும் அலைகளை உடைய வளைந்த பெரிய கடல் உள்ள உலகம் ஆண்டு, நிலாவை போல வெள்ளை நிற குடை கீழ் மன்னராக ஆட்சி செய்து, அதன் பின்பு திருமால் திருவடி கூடுவரே!

திருமங்கை ஆழ்வார் பாடிய நீர்வண்ண பெருமாள் கோவில் அமைந்துள்ள இடம்:-

சென்னை தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருநீர்மலை உள்ளது. பல்லாவரம் சென்று, அங்கிருந்து திருநீர்மலை வழியாக செல்லும் பஸ்களில் 5 கி.மீ., சென்றால் இக்கோயிலை அடையலாம்

மங்களாசாசனம்: திருமங்கை ஆழ்வார்:- 19 Paasuram
பூதத்தாழ்வார் - 1 Passuram

மூலவர் : நீர்வண்ண பெருமாள் (நின்ற திருகோலம்)
ரங்கநாத பெருமாள் (படுத்து கொண்டிருக்கும் திருகோலம்)
உலகளந்த பெருமாள் (நடந்த திருகோலம் , அதாவது உலகத்தை அளக்கும் திருகோலம்)
பால நரசிம்மர் (அமர்ந்த திருகோலம்)

தாயார்: அணிமாமலர் மங்கை, ரங்கநாயகி


ஸ்ரீ நீர்வண்ண பெருமாள் திருவடிகளே சரணம்

ஸ்ரீ நீர்வண்ண பெருமாளுக்கு திரு மலர் பாதங்களுக்கு சமர்ப்பணம்!