பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Wednesday, December 28, 2011

பெண்கள் கை கூப்பி தொழும்படி வீதியில் வருபவன் தேவர்கள் வணங்கும் குளிர்ச்சியான சிதம்பரம் எனப்படும் தில்லை சித்திரகூடத்துள்ளானே!

1174
ஆவர் இவை செய்து அறிவார்* அஞ்சன மா மலை போலே* 
மேவு சினத்து அடல் வேழம்* வீழ முனிந்து* அழகாய 
காவி மலர் நெடுங்கண்ணார்* கை தொழ வீதி வருவான்* 
தேவர் வணங்கு தண் தில்லைத்* சித்திரகூடத்துள்ளானே* 3.3.7

விளக்கம்:-
கண்ணனை தவிர யார் இந்த செயல்களை செய்வார்கள்!!! கரிய பெரிய மலை
போல மிகுந்த கோபத்துடன் தன்னை கொல்ல வந்த வலிமையான யானை மடியும்படி
வெகுண்டெழுந்து போர் செய்து  கொன்றவனே! என்று சொல்லி  அழகான நீல மலரை
போன்ற நீண்ட  கண்களையுடைய பெண்கள் கை கூப்பி தொழும்படி வீதியில் வருபவன் 
தேவர்கள் வணங்கும் குளிர்ச்சியான சிதம்பரம் எனப்படும்  தில்லை சித்திரகூடத்துள்ளானே!

மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
ஆவர் இவை செய்து அறிவார் - வேறு யார் இந்த செயல்களை செய்வார் (என் கண்ணனை தவிர)

அஞ்சன மா மலை போலே - கரிய பெரிய மலை போலே 

மேவு சினத்து அடல் வேழம் - மிகுந்த கோபமுடைய வலிமையான யானை 
வீழ முனிந்து - அழியும்படி வெகுண்டெழுந்த (கண்ணனை)

அழகாய காவி மலர் நெடுங்கண்ணார்  - அழகான நீல மலரை (போன்ற) நீண்ட கண்களையுடைய (பெண்கள்)

கை தொழ வீதி வருவான் - கை கூப்பி வணங்க வீதியில் வருபவன் 

தேவர் வணங்கு தண் தில்லைத் - தேவர்கள் வணங்கும் குளிர்ச்சியான தில்லைத் 

சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே


அருமையான பாசுரத்தில் வரும் முதல் கதை
"கொல்ல வந்த யானை மற்றும் மல்யுத்த வீரர்களை த்வம்சம் செய்த கண்ணன்"
கம்சன் தனூர் யாகம் ஒன்று உடனே நடத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மல்யுத்தப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். இந்த விழாவிற்கு கண்ணனுக்கும், பலராமனுக்கும் அழைப்பு விடுத்தான்.

சாணூரன், சலன் முதலிய மல்லர்களை அழைத்து, கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மகன்களான கண்ணன், பலராமன் இவர்களால்தான் எனக்கு மரணம் என்று விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நான் ஏற்பாடு
செய்துள்ள மல்யுத்தத்திற்கு அவர்களை அழைத்துள்ளேன். நீங்கள் அவர்களுடன் மல்யுத்தம் செய்து அவர்களை அழித்துவிட வேண்டும்என்று ஆணையிட்டான்.
ஆனால் அதற்க்கு முன்பே கண்ணனை கொல்ல மேலும் ஒரு வழியை ஏற்பாடு செய்தான்குவலயாபீடம்என்னும் போர் யானையின் பாகனை அழைத்து மல்யுத்தம் காணவரும் கிருஷ்ணனையும், பலராமனையும், மல்யுத்த அரங்கு வாசலிலேயே குவலயாபீடத்தினால், மிதித்துக் கொல்ல ஏற்பாடு செய்என்றும் கம்சன் கட்டளையிட்டான். கண்ணன் அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்றான். அதன் பின் தயாராக இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்களையும் த்வம்சம் செய்தான் கண்ணன்

Tuesday, December 20, 2011

தெய்வாம்சமான கருட பறவை மேல் ஏறி வருபவன் சிதம்பரத்தில் கோவிந்தராஜனாக படுத்து கொண்டு காட்சி தருகிறானே!!!


1173
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க* வரு மழை காப்பான்
உய்யப் பரு வரை தாங்கி* ஆ நிரை காத்தான் என்று ஏத்தி*
வையத்து எவரும் வணங்க* அணங்கு எழு மா மலை போலே
தெய்வப் புள் ஏறி வருவான்சித்திரகூடத்துள்ளானே* 3.3.6

விளக்கம்:-
ஸ்ரீ ராமராக பிறந்து கொடிய அரக்கன் இரணியனையும் அவன் ஊரான இலங்கையையும் அம்புகள் விடுத்து சிதைத்ததோடு மட்டுமல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணனாக பிறந்து கொடிய மழையிலிருந்து ஆயர்பாடியில் பசு கூட்டங்களையும் மக்களையும் காப்பதற்காக பெரிய மலையை தூக்கி 
குடையாக பிடித்து காத்தவன் என்று போற்றி உலகத்தில் உள்ளோர் அனைவரும்
வணங்க தெய்வாம்சம் கொண்ட பெரிய மலை எழுந்து வருவது போல தெய்வமான
கருட பறவை மேலே ஏறி வருபவன் சிதம்பரம் எனப்படும் 
தில்லை  சித்திரகூடத்துள்ளானே!
மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
எய்யச் சிதைந்தது இலங்கை - (திரு ராமராக அவதரித்து சரமாரியாக அம்பை) செலுத்தியதால்  சிதைந்தது இலங்கை (அதுமட்டுமின்றி)மலங்க வரு மழை காப்பான் - (திரு கிருஷ்ணனாக அவதரித்து  ஆயர்பாடியில் உள்ளவர்கள்) துன்பப்படும்படி  வந்த மழையை தடுப்பதற்காக 

உய்யப் பரு வரை தாங்கி - (பசுக்கூட்டங்கள்) பிழைக்கவும் பெரிய மலையை தாங்கி 

ஆ நிரை காத்தான் என்று ஏத்தி - பசுக்கூட்டங்கள் (முதற்கொண்டு அனைவரையும்) காத்தான் என்று போற்றி 
வையத்து எவரும் வணங்க - உலகத்தில்  (உள்ளோர்) அனைவரும் வணங்க 

அணங்கு எழு மா மலை போலே - தெய்வாம்சம் (கொண்டு) எழுந்த பெரிய மலை போலே 

தெய்வப் புள் ஏறி வருவான்  - தெய்வாம்சமான (கருட) பறவை (மேல்) ஏறி வருவான் 

சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே 

Saturday, November 26, 2011

அழகாக ஆனந்தமாக ஆடி வரும் கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்தராஜனாக தரிசனம் தருகிறானே!

1172
பருவக் கரு முகில் ஒத்து  * முத்து உடை மா கடல் ஒத்து *
அருவித் திரள் திகழ்கின்ற* ஆயிரம் பொன் மலை ஒத்து *
உருவக் கருங்குழல் ஆய்ச்சி திறத்து* இன மால் விடை செற்று*
தெருவில் திளைத்து வருவான்* சித்திரகூடத்துள்ளானே* 3.3.5

விளக்கம்:-
மழைகாலத்தில் வரும் கரிய மேகம் போன்ற நிறமுடையவனும், முத்துகள் உடைய பெரிய கடலை போன்ற நீல நிறமுடையவனும், அருவிகள் கூட்டமாக திகழ்கின்ற ஆயிரம் பொன் மலையை போன்றவனும் ,அழகிய உருவத்துடன் கரிய கூந்தலையுடைய நப்பின்னையின் மேல் கொண்ட ஆசையால் ஏழு வலிமை வாய்ந்த பெரிய காளைகளை அடக்கி, தெருவில் ஆனந்தமாக வருபவன் சிதம்பரம் எனப்படும்  தில்லை சித்திரகூடத்துள்ளானே!மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
பருவக் கரு முகில் ஒத்து  - மழை காலத்தில் (வரும்) கரிய மேகம் போன்றவனும் 
 


முத்து உடை மா கடல் ஒத்து - முத்துகள் உடைய பெரிய கடல் போன்றவனும் 

அருவித் திரள் திகழ்கின்ற - அருவிகள் கூட்டமாக திகழ்கின்ற 
ஆயிரம் பொன் மலை ஒத்து - ஆயிரம் பொன் மலையை போன்றவனும் 

உருவக் கருங்குழல் ஆய்ச்சி திறத்து - (அழகிய) உருவத்துடன் கரிய கூந்தல் (உடைய) நப்பின்னை மேல் ஆசை கொண்டு 
இன மால் விடை செற்று - (ஒரே) இனத்தை (சேர்ந்த) பெரிய காளைகளை அழித்து

தெருவில் திளைத்து வருவான் - தெருவில் ஆனந்தத்துடன் வருபவன் 
சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே 

அருமையான பாசுரத்தில்  வரும் கதை
ஏழு காளைகளை அடக்கிய எம்பெருமான்
கண்ணன்யசோதையின் குழந்தையாகஆயர்பாடியில வளர்ந்துட்டு இருக்கும் போதேஅதாவது கண்ணன் சின்ன பாலகனா இருக்கும் போதேயசோதையின் சகோதரனும்துவரைப்பதியின் மன்னனுமான கும்பன் என்பவரின் பொண்ணுதான் நப்பின்னை.  கண்ணனின் வருங்கால மனைவின்னு சின்ன வயசுலேயே முடிவு செஞ்சுட்டாங்க.

நப்பின்னையும் கண்ணன் பால் காதல் கொள்கிறாள். ஆனாநப்பின்னையோட அப்பா,ஒரு நிபந்தனை வைக்கிறார். தன்னிடம் உள்ள ஏழு அடங்காத முரட்டுக் காளைகளையார் அடக்குறாங்களோ! அவங்களுக்குத்தான் நப்பின்னையை மணம் முடித்துக் கொடுப்பேன்னு சொல்லிடறாரு.எத்தனையோ பேர் முயன்றும் முடியாமல் தோத்துப் போகநம்ம மதுரைவீரன்மாயக்கண்ணன் வந்து ஏழு காளைகளையும் அடக்கிதன் மாமாவின் மகளான  நப்பின்னையைத் திருமணம் செய்து கொண்டார்.


Tuesday, September 27, 2011

காளிங்கன் பாம்பின் மேல் நடமாடி கொண்டு வரும் கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்தராஜ பெருமாளாக தரிசனம் தருகிறானே!


1171
வளைக் கை நெடுங்கண் மடவார்* ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப* 
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்* தண் தடம்புக்கு அண்டர் காண*
முளைத்த எயிற்று அழல் நாகத்து* உச்சியில் நின்று அது வாடத்* 
திளைத்து அமர் செய்து வருவான்* சித்திரகூடத்துள்ளானே*3.3.4

விளக்கம்:-
வளையல் போட்டு கொண்டு பெரிய நீண்ட கண்களையுடைய அழகான பசு மேய்க்கும் 
பெண்கள் பயப்பட்டு கொண்டு எல்லாரும் வாங்களேன்! காளிங்க பாம்பின் மேல் நம் 
கண்ணன் நடனமாடுகிறான்!! என்று அழைக்கவும், அழகாக மலர்ந்த தாமரை மலர்கள் உள்ள
பொய்கை குளத்தின் குளிர்ச்சியான கரைக்கு வந்து பசு மேய்க்கும் பெண்கள் காணும்படி,
முளைத்த கூரான பற்களையுடைய விஷ பாம்பின் தலைகளின் உச்சியில் நின்று அது 
வாடும்படி அனுபவித்து ஆனந்த நடனம் செய்து கொண்டு வருபவன் சிதம்பரம் எனப்படும்  
தில்லை சித்திரகூடத்துள்ளானே!மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
வளைக் கை நெடுங்கண் மடவார் - வளையல் (அணிந்த) கைகளும், பெரிய நீண்ட கண்களும்
(உள்ள) பெண்களான 
ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப - பசு மேய்க்கும் பெண்கள் பயப்பட்டு (காளிங்க பாம்பின் மேல் 
கண்ணன் நடமாடுவதை இங்கே வந்து பாருங்கள் என்று) அழைக்க 
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத் - கட்டு அவிழ்ந்த தாமரை (பூக்களுடைய) பொய்கை 
(குளத்தின்)
தண் தடம்புக்கு அண்டர் காண  - குளிர்ந்த கரைக்கு வந்து பசு மேய்க்கும் பெண்கள் காண 
முளைத்த எயிற்று அழல் நாகத்து - முளைத்த (கூரான) பற்களுடைய விஷ பாம்பின் 
உச்சியில் நின்று அது வாடத் - உச்சியில் நின்று அது வாடும்படி 
திளைத்து அமர் செய்து வருவான் - அனுபவித்து ஆனந்த (தாண்டவம்) செய்து (கொண்டு)
வருபவன் 
சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே

அருமையான பாசுரத்தில் வரும் கதை
காளிங்க நர்த்தனம்''
யமுனை நதியின் ஒருபகுதியில் கொடிய விஷத்தைக் கொண்டுள்ள ஐந்து தலை நாகமொன்று 
இருந்து வந்தது. அதன் பெயர் காளிங்கம் () காளியன். அது தன் விஷத்தை எல்லாம் நதி நீரிலேயே 
கக்கி கக்கி அப்பகுதி நீர் முழுதும் விஷமாகவே மாறிவிட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் எந்த 
ஒரு உயிரினமும், தாவரங்களோ, விலங்கினங்களோ உயிர் வாழ முடிவதில்லை. ஒரே ஒரு 
கடம்ப மரம் மட்டும் கரையில் வளர்ந்திருந்தது

ஒரு நாள் பிருந்தாவனத்திலே, தன் தோழர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தான் சிறுவன் 
கண்ணன். அப்பொழுது திடீரென அப்பந்து காளிங்கன் இருந்த பகுதியில் சென்று விழுந்து விட்டது.
பலர் அங்கு செல்லவேண்டாம் விஷ பாம்பு உள்ளது என்று சொல்லி தடுத்தும் கண்ணன்
கடம்ப மரத்தின் கிளை வழியாக காளிங்கன் இருந்த இடத்திற்குச் சென்றான்.

கண்ணனும் அவன் போக்கிலே விட்டு பின் அதன் தலைமேல் ஏறி நின்று, தன் புல்லாங்குழலை
இசைத்தவண்ணம் நடனம்(நர்த்தனம்) புரியத் துவங்கினான். இந்த நடனத்தின் பெயர் ''காளிங்க நர்த்தனம்''.

இறைவனின் கால் காளிங்கனின் தலை மேல் படும் போது, அண்ட சராசரமே திரண்டு வந்து தன் 
தலையில் உருளுவதைப் போல் உணர்ந்தான். தன் ஆணவத்தால் அவன் தலைத் தூக்கும் 
போதெலாம், இறைவன் அந்த தலையில் ஒரே மிதியாய் மிதித்து நடனமாடினான். காளிங்கனும் 
சோர்வுற்று மரணபயம் கொண்டு, செய்வதறியாது திகைத்தான்.இறைவனும் காளிங்கனைக் 
கொல்லாது, அதன் ஆணவத்தை மட்டும் கொன்று திருவருள் புரிந்தான்.

Friday, September 23, 2011

வெண்ணை திருடி உண்ட கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்த ராஜனாக தரிசனம் தருகிறானே! - 3


1170
பண்டு இவன் வெண்ணெய் உண்டான்  என்று* ஆய்ச்சியர் கூடி இழிப்ப* 
எண் திசையோரும் வணங்க* இணை மருது ஊடு நடந்திட்டு*
அண்டரும் வானத்தவரும்* ஆயரம் நாமங்களோடு*
திண் திறல் பாட வருவான்* சித்திரகூடத்துள்ளானே*3.3.3

விளக்கம்:-
முன்பு இவன் வெண்ணெய் திருடி உண்டான் என்று பசு மேய்க்கும் பெண்கள் எல்லோரும் 
கூடி கேலி பேசியும், குற்றம் கூற, எட்டு திசைகளில் உள்ளவரும் வணங்கும் பெருமை 
வாய்ந்தவனை, குழந்தை பருவத்தில் வெண்ணெய் உண்டதற்காக அம்மா கோபத்தில் உரலில்
கட்டி விட உரலை இழுத்து கொண்டு அருகருகே நின்றிருந்த இரண்டு மருத மரங்களின் 
இடையே சென்று மரங்களை சாய்த்து இருவரின் சாபம் நீக்கியவனை,பூமியில் உள்ளவரும்
வானத்தில் உள்ளவரும் ஆயிரம் திருபெயர்களோடு திடமான திறமைகளை பாடும்படி 
வருபவன்  சிதம்பரம் எனப்படும்  தில்லை சித்திரகூடத்துள்ளானே!

மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
பண்டு இவன் வெண்ணெய் உண்டான்  - முன்பு இவன் வெண்ணெய் (திருடி) உண்டான் 
என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப - என்று பசு மேய்க்கும் பெண்கள் கூடி குற்றம் கூறவும் 
எண் திசையோரும் வணங்க - எட்டு திசையில் உள்ளோரும் வணங்க 
இணை மருது ஊடு நடந்திட்டு - இரண்டு அருகருகே (உள்ள) மருத (மரங்களின்) இடையே 
நடந்து (இருவரின் சாபம் போக்கி)

அண்டரும் வானத்தவரும் - பூமியில் உள்ளோரும் வானத்தில் உள்ளோரும் 
ஆயரம் நாமங்களோடு - ஆயிரம் திரு பெயர்களோடு 
திண் திறல் பாட வருவான் - வலிமையான் திறமையை பாடும்படி வருபவன் 
சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே அருமையான பாசுரத்தில் வரும் கதை
"உரலில் கட்டப்பட்ட கண்ணன் செய்த லீலை"
நளகூபன், மணிக்ரீவன் என்ற அவ்விருவரும் குபேரனின் பிள்ளைகள்.பெருஞ்செல்வத்தால் 
ஆணவம் கொண்டிருந்த அவர்கள் இருவரும் கந்தர்வப்பெண்களுடன் ஒரு தடாகத்தில் நீர் 
விளையாட்டு விளையாடச் சென்றனர். அப்போது தற்செயலாகநாரத முனிவர் அவ்விடத்தைக் 
கடக்க நேரிட்டது. அவரைக் கண்டதும் அந்த கந்தர்வ பெண்கள் நடுநடுங்கி விரைவில் தங்கள் 
ஆடைகளை அணிந்து கொண்டுஅவரை வணங்கி நின்றனர்.

ஆனால் குபேரனின் பிள்ளைகளோ, மிதமிஞ்சிய மது மயக்கத்தாலும் தங்கள் ஆணவத்தாலும் 
நாரதர் வந்ததையே கவனியாமலும் தங்கள் ஆடைகளை அணியாமலும் இருந்தனர். இதைக் 
கண்டு கோபமுற்ற நாரதர் மரம் போல் நிற்கும் நீங்கள் இருவரும் பூவுலகில் இரு மருத மரங்களாக 
மாறக் கடவது என்று சாபமளித்தார். அவரது சாபத்தைக் கேட்டு தன் நிலையறிந்த இருவரும் 
நாரதரிடம் மன்னிப்புக் கேட்டு, தங்கள் சாபத்திற்கு விமோசனத்தை அருளும்படி வேண்டினர்.

அவர்கள்பால் இரக்கம் கொண்ட முனிவரும், ஸ்ரீமந்நாராயணன் பூமியில் கண்ணனாக அவதாரம் எடுக்கும்போது உங்களுக்கும் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார்.அதற்கான காலமும் 
வந்தது . ஒரு நாள் நம் கண்ணன் வெண்ணெய் உண்டதால் அம்மா யசோதை குழந்தை கண்ணனை 
உரலில் கட்டிவிட உரலோடு இழுத்து கொண்டு ஒன்றுகொன்று அருகில் நின்றிருந்த இரு மருத 
மரங்களின் இடையில் புகுந்து சென்றதால் மரம் இரண்டாக உடைய அவர்களுக்கு 
சாப விமோசனம் கிடைத்ததுகுபேரனின் குமாரர்களும், கண்ணனை வணங்கி 
தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.