பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Friday, March 11, 2011

நினைப்பவர்களின் உள்ளத்தில் வசிப்பவனை காணாது திரிந்து கொண்டிருந்தேன் இன்று கண்டு கொண்டேன் மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனத்தே!


ஸ்தல சயன பெருமாள்

1088
பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணைப்* படு கடலில் அமுதத்தைப் பரி வாய் கீண்ட
சீரானை* எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே* முளைத்து எழுந்த தீம் கரும்பினை*
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினைப்* புணர் மருதம் இற நடந்த பொன் குன்றினை*
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக்* கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே* 2.5.1


பார் ஆயது உண்டு உமிழ்ந்த பவளத் தூணைப் - உலகம் ஆகியவற்றை உண்டு துப்பிய பவள தூண் போன்றவனை
படு கடலில் அமுதத்தைப் - கடலில் படுத்து கொண்டிருக்கும் அமுதத்தைப்
பரி வாய் கீண்ட சீரானை - குதிரை வாயை பிளந்த செல்வம் உடையவனை
எம்மானை தொண்டர் தங்கள் சிந்தையுள்ளே - எம் இறைவனை தொண்டர்கள் தங்கள் உள்ளத்துள்ளே
முளைத்து எழுந்த தீம் கரும்பினை - தோன்றி எழுந்த இனிப்பான கரும்பினை
போர் ஆனைக் கொம்பு ஒசித்த போர் ஏற்றினைப்- போர் யானை கொம்பை ஒடித்த போர் சிங்கத்தை
புணர் மருதம் இற நடந்த- ஒன்றோடொன்று இணைந்த மருத மரங்களை விழும்படி நடந்த
பொன் குன்றினை - தங்க குன்றினை போன்றவனை
கார் ஆனை இடர் கடிந்த கற்பகத்தைக் - அழகான யானையின் துன்பத்தை அழித்த கற்பக மரம் போன்றவனை
கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே - கண்டது நான் கடல் மல்லை தல சயனத்தே

விளக்கம்:-
முன்னாடி உலகம் முழுதும் பெரிய அழிவு ஏற்பட்ட போது உலகம் முழுவதையும் உண்டு தன்னோட வயிற்றில் வைத்து பாதுகாத்து, பின்பு வெளியில் துப்பிய செக்க செவேல்னு உள்ள பவள தூணை போன்றவனை,

பாற்கடலில் படுத்து கொண்டிருக்கும் அமுதத்தை, கம்சன் அனுப்பிய கேசி என்ற அரக்கன் மிக பெரிய குதிரை வடிவில் கண்ணனை கொல்ல வந்ததை அறிந்து, தன்னோட கையை குதிரை வாயில் வைத்து, வாயை பொளந்த பெருமை உடையவனை, என்னோட இறைவனை,
தொண்டர்களின் உள்ளத்துள்ளே தோன்றி எழுந்த இனிப்பான கரும்பினை, முன்பு கம்சன் கண்ணனை கொல்ல அனுப்பிய போர் யானையின் கொம்பை ஒடித்த போர் சிங்கத்தை, முன்பு மரமாகும் படி நாரதரால் சாபம் பெற்ற இருவரின் சாபம் நீக்க, கண்ணன் குழந்தையாக இருக்கும்போது வெண்ணை திருடி உண்டாயே! என்று யசோதை அம்மா கண்ணனை உரலில் கட்டி விட, உரலை இழுத்து கொண்டு ஒன்றோடொன்று இணைந்த அந்த இரு மருத மரங்களுக்கு இடையில் தவழ்ந்து சென்று ஒடித்த தங்க மலை போன்று அழகானவனை,
முன்பு அழகான யானை ஒன்று பக்தியுடன் பெருமாளுக்கு பூ எடுக்க குளத்தில் இறங்கிய போது முதலை, யானை காலை லபக்குனு கடித்தவுடன், ஆதி மூலமே! என்று பிளிற, உடனே கருட வாகனத்தில் வந்து யானையின் துன்பத்தை போக்கிய கேட்க கேட்க கொடுக்கும் கற்பக மரம் போன்றவனை, கண்டது நான் (மகாபலிபுரம்) கடல் மல்லை தல சயனத்திலே!

1089
பூண்டு அவத்தம் பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப்* பொய்நூலை மெய்ந்நூல் என்று என்றும் ஓதி
மாண்டு* அவத்தம் போகாதே வம்மின்* எந்தை என் வணங்கப்படுவானை* கணங்கள் ஏத்தும்
நீண்ட வத்தைக் கருமுகிலை எம்மான் தன்னை* நின்றவூர் நித்திலத்தைத் தொத்து ஆர் சோலை*
காண்டவத்தைக் கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக்* கண்டது நான் கடல் மல்லைத் தலசயனத்தே* 2.5.2

பூண்டு அவத்தம் - (மாற்றி படிக்க) பூண்டு அவத்தம் - பயனற்றவைகளை ஏற்று கொண்டு
பிறர்க்கு அடைந்து தொண்டு பட்டுப் - பிறரிடம் தஞ்சம் அடைந்து தொண்டு செய்து
பொய்நூலை மெய்ந்நூல் என்று - பொய்நூலை உண்மையான நூல் என்று
என்றும் ஓதி மாண்டு அவத்தம் போகாதே - எப்போதும் படித்து கடைசியில் இறந்து வீணா போகாதே
வம்மின் எந்தை என் வணங்கப்படுவானை - வாருங்கள்! என் தந்தை என்னால் வணங்கப்படுபவனை
கணங்கள் ஏத்தும் நீண்ட வத்தைக் - கூட்டங்கள் போற்றி வழிபடும் நீண்ட கைகளை உடைய
கருமுகிலை எம்மான் தன்னை - கரிய மேகமான எம் இறைவனான அவனை
நின்றவூர் நித்திலத்தைத் - திருநின்றவூர் திருத்தலத்தில் உள்ள முத்தை
தொத்து ஆர் சோலை காண்டவத்தைக் - கொத்து கொத்தாக உள்ள மரம் செடிகள் பூக்கள் கொண்ட சோலையான காண்டவனத்தை (எரிக்க )
கனல் எரிவாய்ப் பெய்வித்தானைக் - கடுமையான சூடான நெருப்பை அக்னி வாயில் பெய்வித்தவனை
கண்டது நான் கடல் மல்லைத் தலசயனத்தே - கண்டது நான் கடல் மல்லை தல சயனத்திலேவிளக்கம்:-
பயனற்றவைகளை ஏற்று கொண்டு, பிறரிடம் தஞ்சம் அடைந்து அவர்களுக்கு சேவைகள் செய்து, ஏதேதோ பொய்யான புத்தகங்களை எல்லாம் உண்மையான புத்தகங்கள் என்று எண்ணி எந்நேரமும் அவற்றை வீணாக படித்து கொண்டு காலத்தை வீணாக்கி கடைசியில் இறந்து பயனற்று போகாதீர்கள்.

வாருங்கள்! என் தந்தையானவனும், என்னை போன்றவர்களால் வணங்கப்படுபவனும், அறிவுடையவர்கள் கூட்டமாக போற்றி வழிபடுபவனை

கேட்பவர்களுக்கு தேடி சென்று கொடுக்கும் நீண்ட கைகளை உடைய கருமையான மேகம் போன்றவனை,
என்னோட இறைவனானவனை, திருநின்றவூர் திருதலத்தில் வசிக்கும் என் செல்ல முத்தை,

சுவேதகி என்ற மன்னன் தொடர்ந்து ஆண்டுகள் யாகம் நடத்த அந்த யாக தீயில் விடப்பட்ட நெய்யை அக்னி தொடர்ந்து உண்ண, யாகம் முடிந்தவுடன் அக்னிக்கு அகோர பசி எடுக்க பிரம்மன் இந்திரனின் காண்டவனே காடே உனது பசிக்கு சரி! என்று கூற, அக்னியை எரிக்க விடாமல் இந்திரன் மழையை பெய்விக்க, கண்ணனிடம் அக்னி சரணடைந்து தனக்கு உதவுமாறு கூற , அதன் படியே கொத்து கொத்தாக மரம் செடி பூக்கள் நிறைந்த சோலையான காண்டாவனத்தை எரிக்க, நல்ல சூடான நெருப்பை அக்னியில் வாயில் மழை போல பெய்வித்தவனை, கண்டது நான் (மகாபலிபுரம்) கடல் மல்லை தல சயனத்திலே!


நின்றவூர் நித்தலத்தை என்று திருமங்கை ஆழ்வார் சொன்ன திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில்

1090
உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் மூர்த்தி வேறாய்* உலகு உய்ய நின்றானை* அன்று பேய்ச்சி
விடம் பருகு வித்தகனைக்* கன்று மேய்த்து விளையாட வல்லானை வரை மீ கானில்*
தடம் பருகு கருமுகிலைத் தஞ்சைக் கோயில்* தவநெறிக்கு ஓர் பெரு நெறியை வையம் காக்கும்*
கடும் பரி மேல் கற்கியை நான் கண்டு கொண்டேன்* கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே* 2.5.3


உடம்பு உருவில் மூன்று ஒன்றாய் - உடம்பு உருவில் (பிரம்மன், சிவன், இந்திரன்) மூவரும் சேர்ந்து ஒன்றாய் (இருப்பவன் ஆனால் அவனே)
மூர்த்தி வேறாய் உலகு உய்ய நின்றானை - தெய்வம் வேறு வேறாய் உலகம் வாழ நின்றவனை
அன்று பேய்ச்சி விடம் பருகு வித்தகனைக் - அன்று பூதனை பேயின் விஷம் உண்ட மாய காரனை
கன்று மேய்த்து விளையாட வல்லானை - பசு குட்டிகளை மேய்த்து விளையாட திறமையானவனை
வரை மீ கானில் - மலை மேலுள்ள காட்டில்
தடம் பருகு கருமுகிலைத் - குளத்தில் (பசு குட்டிகள் நீர்) பருக (சொல்லி கொடுக்கும்) கருப்பான மேகம் போன்றவனை
தஞ்சைக் கோயில் - தஞ்சாவூர் மாமணி கோவில்
தவநெறிக்கு ஓர் பெரு நெறியை - (இறைவனை அதாவது அவனை அடைய) மேற்கொள்ளும் தியான முறைக்கு ஒரு பெரிய வழிகாட்டியை
வையம் காக்கும் கடும் பரி மேல் கற்கியை - உலகம் காக்கும் (பொருட்டு) வேகமாக ஓடும் குதிரை மேல் (வரும்) கல்கியை
நான் கண்டு கொண்டேன் - நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே - மணம் வீசும் பூக்கள் செடி கொடிகள் மரங்கள் சூழ்ந்துள்ள கடல் மல்லை தல சயத்திலே!

விளக்கம்:-
பிரம்மன்,சிவன், இந்திரன் என்று மூவரும் ஒரே உடம்பு உருவத்தில் உள்ளவனை, ஆனால் படைத்தல், அழித்தல், காத்தல் இவைகளை செய்வதற்காக வேறு வேறு தெய்வங்களாக நின்றவனை,

முன்பு கம்சன் கண்ணனை கொல்ல அனுப்பிய பூதனை பேயின் விஷம் தடவிய முலையில் பாலை குடிப்பது போல விஷம் பருகி அவளை கொன்ற மாயக்காரனை, பசுக்களையும், பசு குட்டிகளையும் மேய்த்து விளையாட திறமையானவனை, மலை மேல் உள்ள காட்டில் பசு குட்டிகள் குளத்தில் நீர் குடிக்க பயப்படும் போது, தானே முதுகில் கையை கட்டி கொண்டு வாயால் நீர் குடிக்க கன்றுகளுக்கு சொல்லி கொடுத்த கருமையான மேகம் போன்றவனை,

தஞ்சாவூர் மாமணி கோவிலில் வசிப்பவனை, (இறைவனை அதாவது) அவனை அடைய மேற்கொள்ளும் தியான முறைக்கு அவனை பற்றுவதே சிறந்த வழி என்று தானே ஒரு பெரிய வழிகாட்டியாக இருப்பவனை,

உலகத்தை காக்கும் பொருட்டு வேகமாக ஓடும் குதிரை மேல் வரபோகும் கல்கியை நான் கண்டு கொண்டேன், நல்ல மணம் வீசும் சோலைகள் சூழ்ந்துள்ள (மகாபலிபுரம்) கடல் மல்லை தல சயனத்திலே!


Kalki perumal

1091
பேய்த் தாயை முலை உண்ட பிள்ளை தன்னைப்* பிணை மருப்பின் கருங்களிற்றைப் பிணை மான் நோக்கின்*
ஆய்த்தாயர் தயிர் வெண்ணை அமர்ந்த கோவை* அந்தணர் தம் அமுதத்தைக் குரவை முன்னே
கோத்தானை* குடம் ஆடு கூத்தன் தன்னைக்* கோகுலங்கள் தளராமல் குன்றம் ஏந்திக்
காத்தானை* எம்மானைக் கண்டு கொண்டேன்* கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே* 2.5.4

பேய்த் தாயை முலை உண்ட பிள்ளை தன்னைப் - பேய் தாயின் முலை உண்ட குழந்தையான அவனை
பிணை மருப்பின் கருங்களிற்றைப் - இரு தந்தம் கொண்ட கரிய ஆண் யானைகுட்டியை போன்றவனை
பிணை மான் நோக்கின் ஆய்த்தாயர் - பெண் மான் (போல அழகான) பார்வை உடைய அழகான அம்மா (யசோதை செய்த)
தயிர் வெண்ணை அமர்ந்த கோவை - தயிர், வெண்ணை (மேலே ஆசை) வைத்து (விரும்பி சாப்பிடும் கோவலனை
அந்தணர் தம் அமுதத்தைக் - ஒழுக்கமுடையவர்களான பிராமணர்களுக்கு அமுதத்தை போன்றவனை
குரவை முன்னே கோத்தானை - பெண்களோடு முன்பு கை கோர்த்து கூத்து ஆடியவனை
குடம் ஆடு கூத்தன் தன்னைக் - குடத்தை தலையில் வைத்து கொண்டு கூத்து ஆடியவனை
கோகுலங்கள் தளராமல் - (முன்பு இந்திரன் கடும் மழை பெயவித்தபோது) கோகுலங்கள் துன்ப படாமல்
குன்றம் ஏந்திக் காத்தானை - மலையை (கையில்) தூக்கி (அனைவரையும்) காப்பாற்றிய்வனை
எம்மானைக் கண்டு கொண்டேன் - என் இறைவனை கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே - மணம் வீசும் பூக்கள் செடி கொடிகள் மரங்கள் சூழ்ந்துள்ள கடல் மல்லை தல சயத்திலே

விளக்கம்:-
முன்பு கம்சன் குழந்தை கண்ணனை கொல்ல அனுப்பிய தாய் வடிவில் வந்த பூதனை பேயின் விஷம் தடவிய முலையை வாயில் வைத்து கொண்டு பால் குடிப்பது போல அவளது உயிரை உண்ட குழந்தையான அவனை, ஜோடியாக உள்ள தந்தங்களை கொண்ட துரு துரு என்று இருக்கும் இனிய ஆண் யானைகுட்டி போன்றவனை,

பெண் மான் கண்களை போல அழகான பார்வை கொண்ட பசு மேய்க்கும் குலத்தில் பிறந்த அழகான யசோதை அம்மா கடைந்து வைத்த தயிர் , வெண்ணை மேலே ஆசை வைத்து விரும்பி உண்ணும் கோவலனை, பிராமணர்களுக்கு இனிப்பான அமுதம் போன்றவனை,

குட்டி கண்ணன் முன்பு பொண்ணுங்களோடு கை கோர்த்து கொண்டு அழகா குரவை கூத்தாடியவனை, குடத்தை வரிசையாக தலையில் வைத்து கொண்டு ஒவ்வொரு கைகளிலும் ஒரு குடத்தை வைத்து கொண்டு தலையில் உள்ள குடம் கீழே விழாதவாறு கையில் உள்ள குடத்தை தூக்கி போட்டு பிடித்து ஆடும் குடமாடு கூத்தனை,

முன்பு இந்திரனுக்கு செய்ய வேண்டிய பூஜையை கண்ணன் தடுத்து கோவர்த்தன மலைக்கு செய்யுங்கள் என மக்களிடம் கூற, இதனால் கோபமுற்ற இந்திரன் இடி மின்னலுடன் பயங்கரமான மழையை பெய்விக்க, மிக பெரிய கோவர்த்த மலையையே தூக்கி குடையாக பிடித்து கோகுலத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றியவனை, என்னோட இறைவனை கண்டு கொண்டேன் நல்ல மணம் வீசும் சோலைகள் சூழ்ந்துள்ள (மகாபலிபுரம்) கடல் மல்லை தல சயனத்திலே!


கோவர்த்தன மலையை தூக்கும் பெருமாள்

1092
பாய்ந்தானைத் திரி சகடம் பாறி வீழப்* பாலகனாய் ஆல் இலையில் பள்ளி இன்பம்
ஏய்ந்தானை* இலங்கு ஒளி சேர் மணிக் குன்று அன்ன * ஈர் இரண்டு மால் வரை தோள் எம்மான் தன்னை*
தோய்ந்தானை நிலமகள் தோள் தூதில் சென்று* அப்பொய் அறைவாய்ப் புகப் பெய்த மல்லர் மங்கக்
காய்ந்தானை* எம்மானைக் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே* 2.5.5


பாய்ந்தானைத் திரி சகடம் பாறி வீழப் - மாற்றி படிக்க - திரி சகடம் பாரி வீழ பாய்ந்தானை அதாவது உருளுகின்ற சக்கரம் சிதறி அழியும் படி அதன் மேல் காலால் உதைத்தவனை
பாலகனாய் ஆல் இலையில் பள்ளி இன்பம் ஏய்ந்தானை - குழந்தையாய் ஆலமர இலையில் படுத்து இன்பம் அடைந்தவனை
இலங்கு ஒளி சேர் மணிக் குன்று அன்ன - பிரகாசமான ஒளி சேரும் ஜொலிக்கும் மணி குன்று போன்றவனை
ஈர் இரண்டு மால் வரை தோள் - நான்கு பெரிய மலை (போன்ற) தோளை உடையவனை
எம்மான் தன்னை - என் இறைவனான அவனை
தோய்ந்தானை நிலமகள் தோள் - மாற்றி படிக்க - நிலமகள் தோள் தோய்ந்தானை அதாவது பூமி தாயாரின் தோள் அணைத்தவனை
தூதில் சென்று அப்பொய் அறைவாய்ப் - (பாண்டவர்களுக்கு) தூது சென்று அந்த பொய் இருக்கையில் (அமர்ந்து பாதாள அறையில்)
புகப் பெய்த மல்லர் மங்கக் காய்ந்தானை - உள்ளே விழுந்தவுடன் (அங்கிருக்கும்) வலிமை வாய்ந்த வீரர்கள் அழியும்படி கோபம் கொண்டவனை
எம்மானைக் கண்டுகொண்டேன் - என் இறைவனை கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே -
மணம் வீசும் பூக்கள் செடி கொடிகள் மரங்கள் சூழ்ந்துள்ள கடல் மல்லை தல சயத்திலேவிளக்கம்:-
கம்சன் கண்ணனை கொல்ல அனுப்பிய அரக்கன் சகடாசுரன் சக்கரம் வடிவில் குழந்தை கண்ணன் மேலே ஏறி கொல்ல வந்தான். விளையாட்டு தனமாக காலை உதைத்து உதைத்து விளையாடி கொண்டே நைசா, அந்த சக்கர வடிவில் வந்த அசுரன் சிதறி அழியும் படி தன் பிஞ்சு காலால் உதைத்தவனை,உலகமே அழிவுக்கு உண்டான போது குழந்தையாய் எல்லா உலகையும் விழுங்கி ஆலமரத்து இலையில் படுத்து கொண்டு இன்பம் அடைந்தவனை,

பிரகாசமான ஒளி வரும் ஜிகு ஜிகுன்னு இருக்கும் மணி குன்று போன்றவனை,
சங்கு ,சக்கரம் அபய , வரத (அபய வரத என்றால் பெருமாள் ஒரு கை மேலே ஆசிர்வாதம் பண்ணுவாரு அதான் , வரத என்றால் ஒரு கையை தன்னோட பாதத்தை காமிப்பாரு அதான் புரிஞ்சுதோ! So சங்கு, சக்கரம், அபய, வரத) என நான்கு பெரிய மலை போல தோள்களை உடைய என் இறைவனான அவனை, நம்ம பூமி தாயாரின் தோளை அன்போடு அணைத்து கொண்டிருப்பவனை,

(*சின்ன வயசுல நம்ம பசங்க ஒரு பள்ளம் ரோட்டுல தோண்டி அதன் மேலே நமக்கு தெரியாம புல்லு,மாதிரி ஏதாவது வைத்து மறைத்து விடுவாய்ங்க! கரெக்டா நம்ம அந்த ரோட்டுல போகும்போது டபக்குன்னு பள்ளத்துல காலை வச்சிடுவோம்! உடனே ஹி ஹி ன்னு சிரிப்பானுங்க நம்ம பசங்க! ஆனால்! இந்த பாவி துரியோதனன் என் அன்பு செல்ல கண்ணனை கொல்ல என்ன செஞ்சான்னு பாருங்க கீழே)முன்பு கண்ணன் பாண்டவர்களுக்காக தூது செல்லும் போது, கண்ணனே பாண்டவர்களின் பெரிய பலம் என்பதை அறிந்த துரியோதனன் சதியால் கண்ணனை கொல்வதற்காக, பூமிக்கு கீழே பெரிய பாதாளம்
அமைத்து அதன் மேல் பொய்யாக சிம்மாசனம் வைத்து, கண்ணனை அதில் உட்கார வைக்க, கண்ணன் டபக்குன்னு உள்ளே விழுந்தவுடன் பாதாளத்தில் ரெடியா கண்ணனை கொல்ல தயாராக இருந்த மல்லர்கள் அழியும்படி , விஸ்வரூபத்துடன் கோபம் கொண்டவனை, என் இறைவனை கண்டு கொண்டேன் நல்ல மணம் வீசும் சோலைகள் சூழ்ந்துள்ள (மகாபலிபுரம்) கடல் மல்லை தல சயனத்திலே!


சகடாசுரனை அழித்த கண்ணன்

1093
கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக்* கிளர் பொறிய மறி திரிய அதனின் பின்னே
படர்ந்தானைப்* படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப்* பார் இடத்தை எயிறு கீற
இடந்தானை* வளை மருப்பின் ஏனம் ஆகி* இரு நிலனும் பெரு விசும்பும் எய்தா வண்ணம்
கடந்தானை* எம்மானைக் கண்டுகொண்டேன்* கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே*2.5.6

கிடந்தானைத் தடங்கடலுள் பணங்கள் மேவிக் - மாற்றி படிக்க - தடங்கடலுள் பணங்கள் மேவி கிடந்தானை அதாவது பெரிய பாற்கடலில் பாம்பு (ஆதிசேஷன்) தலைகளின் கீழே படுத்து கிடந்தானை
கிளர் பொறிய மறி திரிய - (உடல்) மேலெழுந்த புள்ளிகளுடன் மான் குட்டி திரிய
அதனின் பின்னே படர்ந்தானைப் - அதன் பின்னே ஓடியவனை
படு மதத்த களிற்றின் கொம்பு பறித்தானைப் - மாற்றி படிக்க - மதத்த படு அதாவது மதம் உண்டான ஆண் யானையின் கொம்பை பிடிங்கியவனை
பார் இடத்தை எயிறு கீற இடந்தானை - உலகமான பூமியை வாய் கொம்பினால் குத்தி பெயர்த்து எடுத்தவனை
வளை மருப்பின் ஏனம் ஆகி - வளைந்த கொம்போடு பன்றி ஆகி
இரு நிலனும் பெரு விசும்பும் - இப்பெரிய பூமியோடு பெரிய விண் உலகமும்
எய்தா வண்ணம் கடந்தானை - இது போதாது என்ற படி வளர்ந்து (உலகம்) தாண்டியவனை (அளந்தவனை)
எம்மானைக் கண்டுகொண்டேன் - என் இறைவனை கண்டுகொண்டேன்
கடி பொழில் சூழ் கடல் மல்லைத் தல சயனத்தே - மணம் வீசும் பூக்கள் செடி கொடிகள் மரங்கள் சூழ்ந்துள்ள கடல் மல்லை தல சயத்திலேவிளக்கம்:-
மிக பெரிய பாற்கடலில் பல தலைகள் கொண்ட ஆதிசேஷன் மேல் படுத்து கொண்டு இருப்பவனை, இராவணன் சீதையை கடத்தி கொண்டு போக போவதற்காக அவன் மாமன் மாரீசனை மாய மான் உருவில் அனுப்பினான் .அந்த மானை கண்டு மயங்கிய சீதை அந்த மான் வேண்டும் என இராமரிடம் கூற, இராமரும் அன்பு மனைவி ஆசைபட்டாளே! என்று , தம்பி லட்சுமணனை சீதைக்கு பாதுகாப்பாக இருக்க சொல்லி மானை துரத்தி அதன் மேல் அம்பு விட, மாய மான் உருவில் வந்த மாரீசன் தந்திரமாக ராமனை போலவே லட்சுமணா! என்று குரல் கொடுக்க, அங்கிருக்கும் சீதை நம் புருஷன் இராமன்தான் ஆபத்தில் கத்துகிறார் என்று எண்ணி லட்சுமணனை அனுப்பி வைக்க, அந்த சரியான நேரம் பார்த்து இராவணன் சீதையை கடத்தி கொண்டு போனான்.இப்படி அழகான புள்ளிகள் கொண்ட அந்த மான் பின்னாடியே சென்றவனை,

முன்பு கம்சன் கண்ணனை கொல்ல அனுப்பிய மதம் பிடித்த யானையின் கொம்பை பிடுங்கியவனை, பல யுகங்களுக்கு முன்பு இரணியனின் தம்பி இரணியாக்சன் என்ற அரக்கன் பூமியை அலேக்கா தூக்கி கொண்டு கடலுக்கு அடியில் வைத்து விட்டதால் பூமியை காப்பாற்ற வளைந்த கோரை பற்களுடன் பன்றி வடிவம் எடுத்து பூமியை கொம்பினால் குத்தி பெயர்த்து எடுத்து வந்தவனை,

பூமி , பெரிய வானுலகம் இதெல்லாம் போதாது என்பது போல பெரிய உருவத்துடன் வளர்ந்து உலகம் முழுவதையும் தன் மலர் போன்ற திருவடியாலே அளந்தவனை, என் இறைவனை கண்டு கொண்டேன்! நல்ல மணம் வீசும் சோலைகள் சூழ்ந்துள்ள (மகாபலிபுரம்) கடல் மல்லை தல சயனத்திலே!


வராக பெருமாள்

1094
பேணாத வலி அரக்கர் மெலிய அன்று* பெருவரைத் தோள் இற நெரித்து அன்று அவுணர் கோனைப்*
பூண் ஆகம் பிளவு எடுத்த போர் வல்லானைப்* பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை*
ஊண் ஆகப் பேய் முலை நஞ்சு உண்டான் தன்னை* உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை*
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன்* கடி பொழில் சூழ் கட மல்லைத் தல சயனத்தே*2.5.7


பேணாத வலி அரக்கர் மெலிய அன்று - விரும்பாத வலிமையான அரக்கர் அழிய அன்று
பெருவரைத் தோள் இற நெரித்து - பெரிய மலை தோள் அழிய முறித்தவனை
அன்று அவுணர் கோனைப் பூண் ஆகம் - முன்பு அரக்கர்களின் மன்னன் (இரணியனின்) நகைகள் அணிந்த மார்பை
பிளவு எடுத்த போர் வல்லானைப் - பிளந்து அழித்த போர் புரிவதில் வல்லவனை
பொரு கடலுள் துயில் அமர்ந்த புள் ஊர்தியை - அலைகள் அடிக்கும் பார் கடலில் தூங்குவது போல படுத்திருக்கும் கருட வாகனம் உடையவனை
ஊண் ஆகப் பேய் முலை நஞ்சு உண்டான் தன்னை - உணவாக பேய் முலையில் தடவியிருந்த விஷத்தை உண்டவன் அவனை
உள்ளுவார் உள்ளத்தே உறைகின்றானை - நினைப்பவர்களின் உள்ளத்தில் வசிப்பவனை
காணாது திரி தருவேன் கண்டு கொண்டேன் - காணாமல் திரிந்து கொண்டிருந்தேன் (இன்று) கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கட மல்லைத் தல சயனத்தே - மணம் வீசும் பூக்கள் செடி கொடிகள் மரங்கள் சூழ்ந்துள்ள கடல் மல்லை தல சயத்திலே


விளக்கம்:-
முன்பு இறைவனை விரும்பாமல் பல கொடூரமான செயல்களை செய்து கொண்டிருந்த வலிமையான அரக்கர்கள் சாக அவர்களின் மலை போல இருக்கும் தோள்களை ஒரே முறுக்கா முறுக்கி அழித்தவனை,

முன்பு அரக்கர்களின் மன்னனாக இருந்த இரணியனின் ஜிகு ஜிகுன்னு நகைகள் அணிந்த மார்பை ஒரே போடா போட்டு பிளந்த போர் புரிவதில் வல்லவனை, அலைகள் அடிக்கும் பாற்கடலில் ஆதிசேசன் மேலே படுத்து கொண்டு தூங்குவது போல நடித்து கொண்டு நம்மையெல்லாம் பார்த்து கொண்டிருக்கும் கருட வாகனம் உடையவனை.

முன்பு கண்ணனை கொல்ல வந்த பேயான பூதனையின் முலையில் தடவியிருந்த விஷத்தை உணவாக உண்டவனை, தன்னை நினைத்து கொண்டிருப்பவர்களின் உள்ளத்தில் வசிப்பவனை,

இத்தனை நாளாக காணாது எங்கு எங்கோ திரிந்து கொண்டிருந்தேன்! இன்று கண்டு கொண்டேன்! நல்ல மணம் வீசும் சோலைகள் சூழ்ந்துள்ள (மகாபலிபுரம்) கடல் மல்லை தல சயனத்திலே!


இரணியனை அழித்த பெருமாள்


1095
பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானைப்* பிறை எயிற்று அன்று அடல் அரியாய்ப் பெருகினானை*
தண் ஆர்ந்த வார் புனல் சூழ் மெய்யம் என்னும்* தட வரை மேல் கிடந்தானைப் பணங்கள் மேவி*
எண்ணாணை எண் இறந்த புகழினானை* இலங்கு ஒளி சேர் அரவிந்தம் போன்று நீண்ட
கண்ணானைக்* கண் ஆரக் கண்டு கொண்டேன்* கடி பொழில் சொழ்ழ் கடல் மல்லைத் தல சயனத்தே*2.5.8பெண் ஆகி இன் அமுதம் வஞ்சித்தானைப் - பெண் ஆகி இனிப்பான அமுதம் (அசுரர்களுக்கு தராமல்) ஏமாற்றியவனை
பிறை எயிற்று அன்று - பிறை போன்ற (வளைந்த கூரான) பற்களுடன் அன்று
அடல் அரியாய்ப் பெருகினானை - வலிமை வாய்ந்த நரசிங்கமாய் (தூணை உடைத்து கொண்டு) வளர்ந்தவனை
தண் ஆர்ந்த வார் புனல் - குளிர்ச்சி பொருந்திய முகுந்த நீரையுடைய ஆறுகள்
சூழ் மெய்யம் என்னும் தட வரை மேல் - சூழ்ந்த திருமெய்யம் என்னும் பெரிய மலை மேல்
கிடந்தானைப் பணங்கள் மேவி - மாற்றி படிக்க - பணங்கள் மேவி கிடந்தானை அதாவது ஆதிசேஷன் பாம்பின் தலைகளின் கீழே படுத்து கொண்டிருப்பவனை
எண்ணாணை - (அன்புள்ளம் கொண்டவர்களால் மனதில்) எண்ணகூடிய்வனை
எண் இறந்த புகழினானை - எண்ணற்ற புகழ் உடையவனை
இலங்கு ஒளி சேர் - பிரகாசமான ஒளி உடைய
அரவிந்தம் போன்று நீண்ட கண்ணானைக் - தாமரை போன்று நீண்ட கண்கள் உடையவனை
கண் ஆரக் கண்டு கொண்டேன் - கண் குளிர கண்டு கொண்டேன்
கடி பொழில் சொழ்ழ் கடல் மல்லைத் தல சயனத்தே - மணம் வீசும் பூக்கள் செடி கொடிகள் மரங்கள் சூழ்ந்துள்ள கடல் மல்லை தல சயத்திலே


விளக்கம்:-
பாற்கடலை கடைந்து எடுத்த, மரணமே ஏற்படாமல் இருக்க செய்யும் இனிப்பான
அமுதத்தை, கெட்டவர்களான அசுரர்களுக்கு கிடைக்காமல் தேவர்களுக்கு கிடைக்க, அழகான ஜில் ஜில்ல்னு ஒரே கில்மாவா மோகினி பெண் உருவம் கொண்டு, அரக்கர்களை மயக்கி இனிப்பான அமுதம் அவர்களுக்கு கிடைக்காமல் ஏமாற்றியவனை,

வானத்துல இருக்கும் பிறையை போல அழகான வளைந்த கூரான பற்களுடன் நரசிங்கமாக தூணை பிளந்து கொண்டு வளர்ந்தவனை, குளிர்ச்சியான நிறைய நீர்நிலைகள் கொண்ட புதுகோட்டை பக்கத்துல திருமெய்யம் என்னும் ஊரில் இருக்கும் பெரிய மலையில் குடைந்து எடுத்த கோவிலில், ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேசன் மேல் படுத்து கொண்டிருப்பவனை,

அன்பு உள்ளம் கொண்டவர்களால் ஆசையோடு நினைக்க கூடியவனை,
எண்ணற்ற புகழ் உடையவனை, பிரகாசமாக ஒளியுடன் இருக்கும் தாமரை மலர் போன்று நீண்ட கண்கள் உடையவனை கண் குளிர கண்டு கொண்டேன்! நல்ல மணம் வீசும் சோலைகள் சூழ்ந்துள்ள (மகாபலிபுரம்) கடல் மல்லை தல சயனத்திலே!மோகினி அவதார பெருமாள்


1096
தொண்டு ஆயார் தாம் பரவும் அடியினானைப்* படி கடந்த தாளாளர்க்கு ஆளாய் உய்தல்
விண்டானை* தென் இலங்கை அரக்கர் வேந்தை* விலங்கு உண்ண வழங்கைவாய்ச் சரங்கள் ஆண்டு*
பண்டு ஆய வேதங்கள் நான்கும்* ஐந்து வேள்விகளும் கேள்வியோடு அங்கம் ஆறும்
கண்டானைத்* தொண்டனேன் கண்டு கொண்டேன்* கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே*2.5.9

தொண்டு ஆயார் தாம் பரவும் அடியினானைப் - தொண்டு செய்பவர்கள் போற்றி வழிபடும் திருவடியை உடையவனை
படி கடந்த தாளாளர்க்கு - உலகம் அளந்த தலைவனுக்கு
ஆளாய் உய்தல் விண்டானை - ஆளாய் (இருந்து தப்பித்து கொண்டு) வாழ்வதை தவிர்த்தவனான
தென் இலங்கை அரக்கர் வேந்தை - தென் இலங்கை அரக்கர்களின் மன்னனை (இராவணனை)
விலங்கு உண்ண வழங்கைவாய்ச் - விலங்குகள் உண்ணும்படி வலது திருகையாலே
சரங்கள் ஆண்டு - அம்புகளை தன்வசம் கொண்டு (அழித்தவனை)
பண்டு ஆய வேதங்கள் நான்கும் - பழமையான வேதங்கள் (ரிக், யஜூர், சாம, அதர்வண என நான்கும் ஆனவனை
ஐந்து வேள்விகளும் கேள்வியோடு - பிரம்ம வேள்வி, தேவ வேள்வி, பூத வேள்வி, பித்ரு வேள்வி, மனித வேள்வி
என ஐந்து வேள்வியோடு தர்ம சாஸ்திரங்களோடு
அங்கம் ஆறும் கண்டானைத் - சீக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என வேத அங்கம் ஆறிலும் நிறைந்து இருப்பவனை
தொண்டனேன் கண்டு கொண்டேன் - தொண்டனாகிய நான் கண்டு கொண்டேன்
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தல சயனத்தே - மணம் வீசும் பூக்கள் செடி கொடிகள் மரங்கள் சூழ்ந்துள்ள கடல் மல்லை தல சயத்திலே!


விளக்கம்:-
ஆர்வத்தோடு தொண்டு செய்யும் தொண்டர்கள் அன்போடு வழிபடும் மலர் போன்ற அழகான திருவடிகளை உடையவனை, ரெண்டே அடியாலே உலகம் முழுதும் அளந்த இறைவனுக்கு ஆளாய் இருந்து வாழ்வதை தவிர்த்தவனான இந்தியாவின் தெற்கில் உள்ள இலங்கையில் உள்ள அரக்கர்களுக்கு மன்னனாய் இருந்த அந்த பாவி இராவணனை விலங்குகள் உண்ணும்படி தனது வலது கையாலே அம்புகளை கொண்டு அவனை அழித்தவனை,

ரிக் யஜூர் சாம அதர்வண என பழமையான நான்கு வேதங்களிலும்,
பிரம்ம வேள்வி - வேதம் ஓதுதல் , தேவ வேள்வி - வேள்வித் தீயில் உணவில் ஒரு பகுதியை இடுதல், பூத வேள்வி - நாய், பூனை, காக்கைக்கு உணவிடுதல், பித்ரு வேள்வி - இறந்தவர்களை பூஜித்து உணவு வைத்து திருப்தி படுத்தி உணவின் ஒரு பகுதியை அளித்தல், மனித வேள்வி - விருந்தினருக்கு உணவளித்தல், தானம் செய்தல் என ஐந்து வேள்விகளிலும்,

தர்ம சாஸ்திரங்களோடு, சீக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என வேதத்தின் ஆறு அங்கங்களில் (ரொம்ப குழம்புதோ! ஒன்னும் இல்லீங்க! நான்கு வேதம் இருக்குல்ல! அதில் இருக்கும் பிரிவுகளைதான் அங்கம்னு சொல்வாங்க!
மேலே இருக்கும் ஆறும் வேதத்துக்கு மூக்கு ,வாய், கால், காது, கண், கை என்பர். இப்படி
வேதங்களிலும், வேள்விகளிலும், ஆறு வேத அங்கங்களிலும் ) நிறைந்து இருப்பவனை,
தொண்டனான நான் கண்டு கொண்டேன் ! நல்ல மணம் வீசும் சோலைகள்
சூழ்ந்துள்ள (மகாபலிபுரம்) கடல் மல்லை தல சயனத்திலே!

1097
பட நாகத்து அணைக் கிடந்து அன்று அவுணர் கோனைப்* பட வெகுண்டு இடை போய் பழன வேலித்*
தடம் ஆர்ந்த கடல் மல்லைத் தல சயனத்துத்* தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவன் தன்னைக்*
கடம் ஆரும் கருங்களிறு வல்லான்* வெல் போர்க் கலிகன்றி ஒலி செய்த இன்பப்பாடல்*
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார்* தீவினையை முதல் அரிய வல்லார் தாமே*2.5.10


பட நாகத்து அணைக் கிடந்து - படமெடுத்து கொண்டு இருக்கும் ஆதிசேஷன் மேலே படுத்து கொண்டிருப்பவனை
அன்று அவுணர் கோனைப் பட வெகுண்டு - அன்று அரக்கர்களின் மன்னன் (இரணியனை) அழிக்க கோபம் கொண்டு (தூணை பிளந்து கொண்டு நசிங்க உருவம் கொண்டு வந்தவனை)
மருது இடை போய் - இரண்டு மருத மரங்களுக்கு இடையில் போய் (இருவரின் சாபம் நீக்கியவனை)
பழன வேலித் தடம் ஆர்ந்த - வயல்வெளிகள் மற்றும் நீர்நிலைகள் நிறைந்த
கடல் மல்லைத் தல சயனத்துத் - (மகாபலிபுரம் என்ற)கடல் மல்லைத் தல சயனத்தில்
தாமரைக் கண் துயில் அமர்ந்த தலைவன் தன்னைக் - தாமரை போல அழகான கண்கள் கொண்டு தூங்குவது போல படுத்து கொண்டிருக்கும் தலைவனான அவனை
கடம் ஆரும் கருங்களிறு வல்லான் - மதம் கொண்ட கருமையான ஆண் யானையை நடத்த வல்லவனும்
வெல் போர்க் கலிகன்றி ஒலி செய்த இன்பப்பாடல் - போரில் வெற்றியை பெரும் போர்வீரன் ஓசையுடன் பாடிய இன்பமயமான பாடல்
திடம் ஆக இவை ஐந்தும் ஐந்தும் வல்லார் - துணிவாக இவை பத்தும் சொல்ல வல்லவர்கள்
தீவினையை முதல் அரிய வல்லார் தாமே - தீய செயல்களால் உண்டான பாவங்களை வேரோடு நீக்க வல்லவர்கள் ஆவார்கள்.


விளக்கம்:-
தலைகளை தூக்கி படமெடுத்து கொண்டு மெத்தை போல மெத்து மெத்துன்னு இருக்கும் மிக பெரிய பாம்பான ஆதிசேஷன் மேலே படுத்து கொண்டிருப்பவனை, முன்பு அரக்கர்களின் மன்னனான இரணியனை அழிக்க நரசிங்க உருவம் கொண்டு தூணில் இருந்து வெளி வந்தவனை,

கண்ணன் குழந்தையாக இருக்கும்போது வெண்ணை திருடி உண்டாயே! என்று யசோதை அம்மா கண்ணனை உரலில் கட்டி விட, உரலை இழுத்து கொண்டு ஒன்றோடொன்று இணைந்த இரு மருத மரங்களுக்கு இடையில் தவழ்ந்து சென்று மரங்களை ஒடித்து, மரமாகும் படி முன்பு நாரதரால் சாபம் பெற்ற இருவரின் சாபம் நீக்கியவனை,

நிறைய பச்சை பசேல் என்று இருக்கும் வயல்வெளிகள் அவற்றோடு நீர்நிலைகள் நிறைந்து காணப்படும் (மகாபலிபுரம்) கடல் மலை தல சயனத்தில் தாமரை போல அழகான கண்களுடன் தூங்குவது போல ஜம்முனு படுத்து கொண்டிருக்கும் என் தலைவனான அவனை,

மதம் பிடித்த கருப்பான ஆண் யானையும் திறமையாக நடத்த வல்லவனும், போரில் வெற்றியை பெரும் கலிகன்றி என்னும் திருமங்கையன் இசையுடன் பாடிய இன்பமயமான பாடல் பத்தும் துணிவோடு என்னை போலவே பெருமாளுடன் அன்பு கொண்டு சொல்ல வல்லவர்கள் தீமையான செயல்களால் உண்டான பாவங்கள் அனைத்தையும் வேரோடு நீக்க வல்லவர்கள் ஆவார்கள்.


மூலவர் : ஸ்தல சயன பெருமாள்
உற்சவர்: உலகுய்ய நின்றான்
அம்மன்/தாயார் : நிலமங்கை தாயார்

மங்களாசாசனம்: திருமங்கை ஆழ்வார்:- 26 பாசுரம்
பூதத்தாழ்வார் - 1 பாசுரம்

திருகடல் மல்லைசயன திருத்தலம் அமைந்துள்ள இடம்:-

INDIA – TAMILNADU - சென்னையிலிருந்து 64KM தொலைவில் உள்ளது . மகாபலிபுரம் பீச்சுக்கு போய் இருக்கீங்களா! அதுக்கு பக்கதுலதாங்க இருக்கு! நம்ம ஸ்தல சயன பெருமாள் ஜம்முனு பூமியின் மேலே அதாவது தரையில அழகா படுத்துக்கொண்டு காட்சி தராரு! எவ்ளோ அழுகு தெரியுமா SO NICE!திருகடல் மல்லைத் தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்!
திருகடல் மல்லைத் தல சயன பெருமாளின் திருவடிகளுக்கு சமர்ப்பணம்!