பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Friday, August 6, 2010

வயசாவதர்க்கு முன் வதரிவணங்குதுமே - திருமங்கை ஆழ்வார் (968-977)



பெரிய திருமொழி

968
முற்றமூத்துக் கோல்துணையா முன்னடிநோக்கிவளைந்து,
இற்றகால்போல் தள்ளிமெள்ள இருந்தங்கிளையாமுன்,
பெற்றதாய்போல்வந்த பேய்ச்சி பெருமுலையூடு,
உயிரை வற்றவாங்கியுண்ட வாயான் வதரிவணங்குதுமே. 1.3.1

விளக்கம்:-

நல்லா வயசாயிடிச்சி! கொம்பு வச்சிக்கிட்டு அடியை (தரை) பார்த்துகொண்டே கூன் வளைஞ்சு நடக்க கூட முடியாம அங்கங்க உட்கார்ந்து இளைப்பாறி (அப்பப்பா!) இப்படி தொல்லைங்க வருவதற்கு முன்னாடியே (இளமையாக இருக்கும் போதே) பெற்ற அம்மா மாதிரியே வந்த பேயின் பெரிய முலை பற்றி பாலோடு உயிரையும் அடியோடு வாங்கி உண்ட வாயன் (எம் கண்ணன் இருக்கும்) திருவதரி வணங்குவோம்

969
முதுகுபற்றிக் கைத்தலத்தால் முன்னொருகோலூன்றி,
விதிர்விதிர்த்துக் கண் சுழன்று மேற்கிளைகொண்டிருமி,
இதுவென்னப்பர் மூத்தவாறென்று இளையவரேசாமுன்,
மதுவுண்வண்டு பண்கள்பாடும் வதரிவணங்குதுமே. 1.3.2

விளக்கம்:-

கையில முதுகை பிடிச்சிக்கிட்டு இன்னொரு கையில கொம்பைவச்சிக்கிட்டு
உடல் நடுங்கி கண்ணு சுற்றி லொக்கு லொக்குனு இருமிக்கொண்டு செல்வதை பார்த்து அச்சச்சே! இந்த கிழவனை பாரேன்! என்று பொண்ணுங்க (பிகருங்க)கேலி செய்யும் முன் தேன் உண்ட வண்டுகள் இசைத்து பாடும் (எம் பெருமாள் இருக்கும்)
திருவதரி வணங்குவோம்!

970
உறிகள்போல்மெய்ந்நரம்பெழுந்து ஊன்தளர்ந்துள்ளமெள்கி,
நெறியைநோக்கிக்கண் சுழன்று நின்றுநடுங்காமுன்,
அறிதியாகில்நெஞ்சம் அன்பா யாயிரநாமஞ்சொல்லி,
வெறிகொள்வண்டுபண்கள் பாடும் வதரிவணங்குதுமே. 1.3.3

விளக்கம்:-

உறி கயிறு போல உடல் நரம்புகள் வெளிய நீட்டிக்கிட்டு உடல் தளர்ந்து உள்ளம் நொந்து போய் செல்ல வேண்டிய இடத்தை நோக்கி செல்ல முடியாமல் கண் சுற்றி அங்கங்க நின்று நடுங்கி கொண்டிருப்பதற்கு முன் ஏய்! மனமே நீ அறிந்து கொண்டாய் எனில் ஆயிரம் பெயர்கள் சொல்லி, தேன் நுகரும் வாசனையுள்ள வண்டுகள் இசை பாடும் (எம் பெருமாள் இருக்கும்) திருவதரி வணங்குவோம்


971
பீளைசோரக்கண்ணிடுங்கிப் பித்தெழ மூத்திருமி,
தாள்கள்நோவத் தம்மில்முட்டித் தள்ளி நடவாமுன்,
காளையாகிக்கன்று மேய்த்துக் குன்றெடுத்தன்று நின்றான்,
வாளைபாயும்தண்டடஞ்சூழ் வதரிவணங்குதுமே. 1.3.4

விளக்கம்:-

கண்ணு சுருங்கி கோழை சேர்ந்து பித்தம் முத்தி கால்கள் வலிக்க தடுமாறி கொண்டு நடந்து வருவதற்கு முன் (இளமையாக இருக்கும் போதே) காளை போல ஒருவன் மாடுகளை மேய்ச்சிக்கிட்டு இருந்தவன், மலையை குடையாக எடுத்து நின்றவன், வாளை மீன்கள் நிறைந்த குளங்கள் உள்ள (எம் கண்ணன் இருக்கும்) திருவதரி வணங்குவோம்!


972
பண்டுகாமரானவாறும் பாவையர்வாயமுதம் உண்டவாறும்,
வாழ்ந்த வாறும் ஒக்கவுரைத்திருமி,
தண்டுகாலாவூன்றி யூன்றித் தள்ளிநடவாமுன்,
வண்டுபாடும் தண்துழாயான் வதரிவணங்குதுமே. 1.3.5

விளக்கம்:-

முன்னாடி இளமையில் காமத்தில் ஈடுபட்டவரும், பொண்ணுங்க வாய் அமுதம் (எச்சிலை) பருகிஉண்டவரும் , நல்லா ஜல்சாவா வாழ்ந்தவரும், பழச உரக்க கூறி இருமி கொண்டு
கொம்பு காலால் ஊன்றி ஊன்றி தடுமாறி நடப்பதற்கு முன் (இளமையிலேயே) வண்டு பாடும் அதோடு துளசி மாலையை அணிந்தவன் இருக்கும் திருவதரி வணங்குவோம்!

973
எய்த்தசொல்லோது ஈளையேங்கி இயிருமியிளைத்து
உடலம், பித்தர்ப்போலச் சித்தம் வேறாய்ப் பேசியயராமுன்,
அத்தன் எந்தை ஆதிமூர்த்தி ஆழ்கடலைக் கடைந்த,
மைத்தசோதியெம்பெருமான் வதரிவணங்குதுமே. 1.3.6

விளக்கம்:-

ரொம்ப வீக்கான பேச்சோடு வீரமே இல்லாம கோழைதனமா மாறி
லொக்கு லொக்குனு இருமி உடம்பு இளைத்து பயித்தியக்காரன் போல எதோ நனைச்சி ஏதோதோ பேசி சோர்ந்து போவதற்கு முன்னாலே (இளமையாக இருக்கும் போதே) இறைவன், என்னோட தந்தை, ஆதி மூர்த்தி, ஆழமான கடலை கடைந்த,சுடர் விட்டு எரிகின்ற சோதி என்னோட பெருமாள் வசிக்கும் திருவதரி வணங்குவோம்!

974
பப்பவப்பர்மூத்தவாறு பாழ்ப்பது சீத்திரளையொப்ப,
ஐக்கள்போதவுந்த உன்தமர்க்காண்மினென்று,
செப்புநேர்மென் கொங்கை நல்லார் தாம்சிரியாத முன்னம்,
வைப்பும் நங்கள் வாழ்வுமானான் வதரிவணங்குதுமே. 1.3.7

விளக்கம்:-

அச்சச்சே இந்த வயசானவரை (பெர்ச) பாரேன்! கோழைதனமா இருக்காரு
வாயிலிருந்து சீழ் போல கோழை வருது! , உன் ஆளை பாரேன்! (உடனே இன்னொரு பொண்ணு சொல்லும் அய்ய அது உன் ஆளு!. என் ஆளு இல்ல!)என்று இப்படி செப்பு போல மென்மையான முலையுடைய பொண்ணுங்க கேலி பேசி சிரிக்கும் முன், (சின்ன வயசுலேயே) நம்மளோட சொத்தும் வாழ்வும் ஆன (பெருமாள் வசிக்கும்)
திருவதரி வணங்குவோம்!

975
ஈசிபோமினீங்கிரேன்மின் இருமியிளைத்தீர்,
உள்ளம் கூசியிட்டீரென்று பேசும் குவளையங் கண்ணியர்ப்பால்,
நாசமான பாசம் விட்டு நன்னெறி நோக்கலுறில்,
வாசம் மல்கு தண்துழாயான் வதரிவணங்குதுமே. 1.3.8

விளக்கம்:-
அட சீ போயா! போ! இங்க இருக்காத! எப்ப பாரு இருமி இருமி உடம்பு ஒல்லியா போச்சு! என்று உள்ளம் கூசும் படி பேசும் தாமரை மலர் போல அழகான கண்கள் உடைய பிகருங்க (பொண்ணுங்க) மேல் இருக்கும் வீணா போன ஒன்னுத்துக்கும் உதவாத பாசத்தை விட்ருங்க! நல்ல வழிக்கு செல்ல விரும்பினால் நல்ல வாசனையுள்ள குளிர்ச்சியான துளசி மாலை அணிந்தவன் வசிக்கும் திருவதரி வணங்குவோம்!

976
புலன்கள்நைய மெய்யில்மூத்துப் போந்திருந்துள்ளமெள்கி,
கலங்க ஐக்கள் போதவுந்திக் கண்ட பிதற்றாமுன்,
அலங்கலாய தண்துழாய்கொண்டு ஆயிரநாமம் சொல்லி,
வலங்கொள் தொண்டர்ப் பாடியாடும் வதரிவணங்குதுமே. 1.3.9

விளக்கம்:-

கண்ணு சரியா தெரியாம, காது கேக்காம, வாசனையை உணர முடியாம, நாக்கு ருசி தெரியாம, தொடுகின்ற உணர்வு கூட சரியா இல்லாம, இப்படி ஐந்து புலன்கள் வலிமை இழந்து உடல் முதிர்ந்து வயசாகி எல்லாருக்கும் முன்னாடி வர வெட்கப்பட்டு மனசு கலங்கி வாயிலிருந்து கோழை வெளிவர கன்னா பின்னான்னு உலருவதற்கு முன் அழகா வரிசையா கட்டிய குளு குளுன்னு உள்ள துளசி மாலையை கொண்டு (நம்ம பெருமாளின் )ஆயிரம் பெயர்கள் சொல்லி வலமாக சுற்றி வந்து பணிந்து வேண்டி வரம் கொண்ட தொண்டர்கள் ஆடி பாடும் திருவதரி வணங்குவோம்1

977
வண்டு தண்தேன் உண்டு வாழும் வதரி நெடுமாலை
கண்டல்வேலி மங்கைவேந்தன் கலியன் ஒலிமாலை
கொண்டு தொண்டர் பாடியாட கூடிடில் நீள்விசும்பில்
அண்டமல்லால் மற்றவர்க்கு ஓராட்சி அறியோமே. 1.3.10

விளக்கம்:-

வண்டுகள் குளு குளுன்னு உள்ள தேனை உண்டு வாழும் திருவதரி நெடுமாலை
தாழை (தென்னை மரத்தில் ஒரு குலை காய்க்கும் முன் இருக்கும் பருவம்)வேலி கொண்ட திருமங்கை நாட்டு மன்னன் கலியன் ஒலிமாலை கொண்டு
தொண்டர்கள் பாடி ஆடி கூடி மகிழ்ந்தவர்கள் வைகுண்டத்தில் இருந்து
உலகெல்லாம் ஓராட்சி புரிவார்கள் என்பதை மற்றவர்கள் அறியவில்லையோ

No comments: