பெரிய திருமொழி
978
ஏனமுனாகி இருநிலமிடந்து அன்று இணையடி இமையவர் வணங்க*
தானவனாகம் தரணியில் புரளத்தடஞ்சிலை குனித்த வெந்தலைவன்,
தேனமர் சோலைக் கற்பகம் பயந்ததெய்வநன் நறுமலர் கொணர்ந்து*
வானவர் வணங்கும் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.1
விளக்கம்:-
முன்னாடி வராக(பன்றி) அவதாரம் எடுத்து தண்ணிக்குள்ள மறைந்து இருந்த பூமியை தன்னோட கொம்பு நுனியால் மேலே தூக்கி வந்த
வராக பெருமாளின் திருவடியை தேவர்கள் வணங்குறாங்க,
அதுமட்டுமா! கொடிய அரக்கன் இரணியனின் உடம்பு மண்ணுல புரளும்படி
பெரிய வில்லை வளைத்த என் தலைவன் தேன் நிறைந்த கற்பக மலர்
சோலையில் தெய்வ தன்மை பொருந்திய நல்ல வாசனையுள்ள
மலர்களை கொண்டு வந்து வானவர்கள் வணங்கும் கங்கை கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!
979
கானிடை யுருவைச் சுடுசரம் துறந்து கண்டுமுன் கொடுந்தொழிலுரவோன்*
ஊனுடை அகலத்து அடுகணை குளிப்ப உயிர் கவர்ந்துகந்த வேம்மொருவன்*
தேனுடைக் கமலத் தயனொடு தேவர்சென்று சென்று இறைஞ்சிட* பெருகு
வானிடை முதுநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.2
விளக்கம்:-
காட்டுல (சீதையை மயக்க வந்த மாய மான்) மாயாவி மாரீசனை பார்த்து
நல்ல கூரான அம்புகளை சர சரன்னு அவன் மேல் விட்டவனும், முன்னாடி
கொடுமையான தொழிலை செய்தவனை (வாலி பல பெண்களை
கற்பழித்தான் அதற்கும் மேலே தன் தம்பி சுக்ரீவன் மனைவியையே
கற்பழிக்க வந்தான்..சுக்ரீவன் நம்ம ஸ்ரீ ராமரிடம் சரண் புகுந்து உதவி கேட்க)
நம்ம ஸ்ரீ ராமர் பெரிய உடம்பு உள்ள வலிமையான வாலியின் மீது கூரான
அம்பை பாய விட்டு அவன் உயிரை பறித்து மகிழ்ந்த எம் ஒருவன்
(ஸ்ரீ ராமர் எங்க இருக்கிறான் தெரியுமா!),
தேன் உடைய தாமரை பூவில் அமர்ந்து கொண்டிருக்கும் பிரம்மனோடு
தேவர்கள் அடிக்கடி சென்று தங்களுக்கு வேணும்ங்கறத வேண்ட,
வானம் அளவு உயர்ந்த கடல் நீர் போல மிகுந்திருக்கும்
கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!
980
இலங்கையும் கடலும் அடலருந்துப்பின் இருநிதிக் கிறைவனும்* அரக்கர் குலங்களுங்கெட முன் கொடுந்தொழில் புரிந்தகொற்றவன் கொழுஞ்சுடர் சுழன்ற*
விலங்கலில் உரிஞ்சி மேல் நின்ற விசும்பில்*வெண்துகிற் கொடியென விரிந்து*
வலந்தரு மணிநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே 1.4.3
விளக்கம்:-
(யாராலயும் அவ்ளோ ஈஸியா போக முடியாது! (ஆனாலும் ஸ்ரீ ராமர் அப்பவே!
கடல்ல அனுமன் மட்டும் அவரோட நண்பர்கள் துணையோடு பிரிட்ஜ் கட்டி )
கடலை கடந்து இலங்கை சென்று மிக கடுமையான பலசாலியானவனும், நிறைய
செல்வங்களுக்கு இறைவனான இராவணனும் அவனோட அரக்க குலங்களும்
அழியும் படி சண்டையிட்ட எங்க ஸ்ரீ ராம ராஜா (இருக்குமிடம் எப்படி இருக்கு பாருங்க!)
மேல இருக்கிற வானத்துல தக தகன்னு கொழுந்து விட்டு எரிகிற சூரியன்
சுற்றி கொண்டே பனி மலை மேலே உராஞ்சிக்கிட்டு வெள்ளை கலர் துணில
ஆன கொடி போல அழகா விரிஞ்சி இருக்கு, அதோடு வளத்தோடு
பெருக்கெடுத்து ஓடும் தெளிந்த அழகான வற்றாத நீரான கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!
981
துணிவு இனி உனக்குச் சொல்லுவன் மனமே தொழுது எழு தொண்டர்கள் தமக்கு*
பிணி ஒழித்தமரர் பெருவிசும்பருளும் பேரருளாளன் எம்பெருமான்*
அணிமலார்க் குழலார் அரம்பையர் துகிலும்*ஆரமும் வாரி வந்து*
அணிநீர் மணிகொழித் திழிந்த கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.4
விளக்கம்:-
துணிவுதான் இனிமேல் உனக்கு!மனமே! சொல்கிறேன் கேள்: (பெருமாளை) வணங்கி வழிபடும் தொண்டர்களாகிய நமக்கு எல்லாவித (பகை ,பிறவி,முதலான அனைத்து) நோய்களையும் ஒழித்த தெய்வம், பெரும் பரமபதத்தை (வைகுண்டம் பெருமாள்
இருக்குமிடம் மோட்சம்ன்னு சொல்வாங்க) பெற்று தரும் பேரருளாளன் எம்பெருமான்,
அழகான மலர் கூந்தலை உடைய வானத்தில் இருக்கும் தேவலோக அழகான
இளம் பெண்களின் உடைகளையும், மாலைகளையும், மணிகளையும் வாரி வந்து
அழகான நீர் அழகா அலை போல பாய்ந்து வந்து விழும்
கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!
982
பேயிடைக் கிருந்து வந்த மற்றவள்தன் பெருமுலை சுவைத்திட*
பெற்ற தாயிடைக் கிருத்தல் அஞ்சுவன் என்று தளர்ந்திட வளர்ந்த என் தலைவன்*
சேய்முகட்டுச்சி அண்டமும் சுமந்த செம்பொன்செய் விளங்கலிலங்கு*
வாய்முகட்டிழிந்த கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.5
விளக்கம்:-
(என்னோட கண்ணன் தைரியமா) தாய் போல வந்த பேயின் (பூதனையின்)
மடியில் இருந்து அவளுடைய பெரிய முலையை சுவைத்து கொண்டிருக்க,
பெற்ற தாயான யசோதை பேயின் மடியிலிருந்து என் குழந்தையை எப்படி
எடுப்பேன் என்று பயத்தில் நடுங்க, (துளியும் பயமில்லாம தைரியமா)
வளர்ந்த என் தலைவன், சிவந்த சிகரத்தின் உச்சியில் வானத்தையே சுமந்த,
(அந்த அளவுக்கு உசரமா இருக்குங்க)சுத்தமான தங்கம் போல தக தகன்னு
பிரகாசமா இருக்கிற இமயமலையில் ஆரம்ப இடத்திலிருந்து வந்து விழும்
கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!
983
தேர் அணங்கு அல்குல் செழுங்கையர் கண்ணி திறத்து ஒரு மறத்தொழில் புரிந்து*
பாரணங்கிமிலேரேழும் முன்னடர்த்த பனிமுகில்வண்ணன் எம்பெருமான்*
காரணந்தன்னால் கடும்புனல் கயத்த கருவறை பிளவெழக்குத்தி*
வாரணங்கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.. 1.4.6
விளக்கம்:-
தேர் வளைஞ்சு நெளிஞ்சு போற மாதிரி அழகா வளைஞ்சு நெளிஞ்சு மெலிசா இருக்கிற
இடையையும், கொழுத்த மீன் போல கண்களையும் உடைய நப்பின்னையை
கல்யாணம் பண்ணுவதற்காக (காளையை அடக்குபவனுக்குதான் பொண்ணு
கொடுப்பேன் என்று கண்ணனோட மாமா சொல்லிடாரு!) உலகமே பயப்படும்படியாக
பெரிய திமிலை உடைய ஏழு எருதுகளை வலிமையால் அடக்கிய குளிர்ந்த
மேகம் போல கலருடைய எம்பெருமான்,(மாமுனிவர் பகீரதன் செய்த தவத்தால்
தேவலோக கங்கை பூமியில இறங்கினாள்) கடுமையான நீர் வளத்தோடு கரிய
மலைகளை பிளந்து கொண்டு ,அங்கிருக்கும் யானைகளையும் அடிச்சிக்கிட்டு வரும்
கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!
984
வெந்திறல் களிறும் வேலை வாயமுதும் விண்ணொடு விண்ணவர்க்கரசும்*
இந்திரர்க்கருளி எமக்கும் ஈந்தருளும் எந்தை எம்மடிகள் எம்பெருமான்*
அந்தரத்தமரர் அடியிணை வணங்க ஆயிர முகத்தினால் அருளி*
மந்தரத் திழிந்த கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.. 1.4.7
விளக்கம்:-
(பாற்கடலிலிருந்து) வெள்ள கலர்ல நிறைய திறமையுள்ள யானையையும் ,
சரியான நேரத்துல அமிர்தமும், விண்ணோடு, விண்ணுலகில் இருப்பவர்களின்
அரசனாக இருக்கும்படி இந்திரனுக்கு அருளி, எமக்கும் கொடுத்து அருளும்,
எம் தந்தை, எம் அடிகள், எம் பெருமான்,(என்ன செஞ்சாரு!
எங்க வசிக்கிரார்னு பாக்கலாமா!) மேலிருக்கும் தெய்வங்கள் அடியினை
வணங்குவதற்காக, (கங்கையில சேரக்கூடிய நீர்) ஆயிரம் முகங்களோடு அவ்ளோ
ஆவேசமா மந்திர கிரி மலையில் இருந்து இறங்கி வந்து விழும் கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!
985
மான் முனிந்தொரு கால் வரிசிலை வளைத்த மன்னவன் பொன்னிறத் துறவோன்*
ஊன்முனிந்து அவனதுடல் இருபிளவா உகிர்நுதி மடுத்து*
அயனரனைத் தான் முனிந்திட்ட வெந்திறல் சாபம் தவிர்த்தவன்*
தவம் புரிந்து உயர்ந்த மாமுனி கொணர்ந்த கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.. 1.4.8
விளக்கம்:-
சீதையை மயக்க வந்த மாய மானை அழிக்க அழகிய வில்லை வளைத்து
நச்சுன்னு அம்பு விட்டவன் , பொன் போல கலருடைய வலிமை வாய்ந்த
மன்னன் (அந்த ராஸ்கல்) இரணியனின் உடலை இருபிளவாக பிளக்க கூரான
நகத்தால ஒரே அமுக்கா அழுத்தியவன் , பிரம்மன் (தனது தலையில் ஒரு
தலையை வெட்டியதால் கோபம் கொண்டு) சிவனுக்கு கொடுத்த வலிமை
வாய்ந்த சாபத்தை நீக்கியவன், (எங்க இருக்கிறான் என்று தெரியுமா!
பகீரதன் தவம் புரிந்ததால் தேவலோகத்துக்கு மட்டுமே சொந்தமான கங்கை
பூமிக்கு வந்தாள்) தவம் புரிந்து உயர்ந்த மாமுனிவர் கொண்டு வந்த
கங்கையின் கரை மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!
986
கொண்டல் மாருதங்கள் குலவரைத் தொகுநீர்க் குரைகடல் உலகுடன் அனைத்தும்*
உண்டா மாவயிற்றோன் ஒன்சுடரேய்ந்த உம்பரும் ஊழியும் ஆனான்*
அண்டமூடறுத்து அன்று அந்தரத்திழிந்து அங்கு அவனியால் அலமர*
பெருகும் மண்டு மாமணிநீர் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமத்துள்ளானே.. 1.4.9
விளக்கம்:-
மேகம், காற்று ,பெரிய மலை, சீறி வரும் கடல் அதோடு உலகம் முழுதும் உண்ட
பெரிய வயிற்றை உடையவனும், சந்திரனையும் சூரியனையும் பொருத்தி
தேவரும் யுகமும் அவனே ஆனான்.(அப்பேற்பட்ட எம்பெருமான் இருக்குமிடம்)
பூமியே நடுங்கும் படி (சும்மா அதிருதுல்ல) மேலிருந்து நாலாப்பக்கமும் சீறி
பாய்ந்து உலகமே அசையும் படி (அந்த அளவுக்கு ஆவேசமா) , வளத்தோடு
பெருக்கெடுத்து ஓடும் தெளிந்த அழகான வற்றாத நீரான கங்கையின் கரை மீதுள்ள
திருவதரி ஆச்சிரமத்தில் உள்ளானே!
987
வருந்திரை மணிநீர்க் கங்கையின் கரைமேல் வதரியாச்சிராமதுள்ளானை*
கருங்கடல் முந்நீர் வண்ணனை எண்ணிக் கலியன் வாய் ஒலி செய்த பணுவல்*
வரம் செய்த இவை ஐந்துமைந்தும் வல்லார்கள் வானவர் உலகுடன் மருவி*
இருங்கடல் உலகமாண்டு வெண்குடைக்கீழ் இமயவராகுவர் தாமே. . 1.4.10
விளக்கம்:-
பெரிசு பெருசா அலைகளும் , வற்றாத அழகான நீரும் உடைய கங்கையின் கரை
மீதுள்ள திருவதரி ஆச்சிரமத்தில் இருப்பவனை , கடல் போல கலருடைய
பத்ரிநாத பெருமாளை எண்ணி கொண்டே கலியனாகிய நான் இசையுடன்
பாடிய வரம் பெற்ற இவை ஐந்தும் + ஐந்தும் (கூட்டி பாருங்க! எவ்ளோ) பத்தும்
(என்னை போலவே பெருமாளை எண்ணி கொண்டே) வல்லார்கள்
வானவர் உலகுடன் சேர்ந்து எல்லா வினைகளையும் அறுத்து உலகம் ஆண்டு
வெள்ளை நிற குடையின் கீழ் தேவர்களும் ஆவார்கள்.
திருமங்கை ஆழ்வார் சொன்ன வதரி உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தலம். திருவதரியாசிரமம் என்னும் பத்திரிநாத் ஹரித்துவாரிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ளது. பேருந்து இமயமலையில் உள்ள பாதையில் செல்ல வேண்டும். அலகாந்தா நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது. பனிபடர்ந்த சூழலில் இலந்தை மரக்காடுகள் நிறைந்துள்ள இடத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 23310 அடி உயரத்தில் உள்ளது. (பத்திரி - இலந்தை) ரிஷிகேசத்திலிருந்து தேவப் பிரயாகை, உருத்திரப்பிரயாகை, நத்தப் பிரயாகை, ஜோஷிமட் ஆகிய ஊர்கள் வழியாகப் பேருந்து மூலமாகப் பத்ரிநாத்தை அடையலாம்.
பெருமாள்:- ஸ்ரீ பத்திரி நாராயணப் பெருமாள்
தாயார்:- ஸ்ரீ அரவிந்தவல்லி நாச்சியார் - தனிச்சந்நிதி
No comments:
Post a Comment