பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Wednesday, January 4, 2012

இரண்டு கண்களும், நீண்ட கூரான பற்களும், பெரிய வாயும் கொண்டு சிங்க உருவில் வருபவனான நம்பெருமான் சிதம்பரம் எனப்படும் தில்லை சித்திரகூடத்துள்ளானே!

1175
பொங்கி அமரில் ஒரு கால்* பொன் பெயரோனை வெருவ*
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு* ஆயிரம் தோள் எழுந்து ஆட* 
பைங்கண் இரண்டு எரி கான்ற* நீண்ட எயிற்றோடு பேழ் வாய்ச்*
சிங்க உருவின் வருவான்* சித்திரகூடத்துள்ளானே* 3.3.8

விளக்கம்:-
முன்  ஒரு காலத்தில் தூணிலிருந்து வெளிவந்து இரணியனுடன் நடந்த போரில் கோபம் பொங்கி இரணியன் பயப்படும்படி அவன் மார்பில் கூரிய நகங்களாலே அழுத்தி அரக்கனை அழித்த அண்ணல், ஆயிரம் கைகளும் எழுந்து ஆட, நெருப்பு உமிழ்வது போன்று  பசுமையான இரண்டு கண்களும், நீண்ட கூரான பற்களும், பெரிய வாயும் கொண்டு சிங்க உருவில் வருபவனான நம்பெருமான் சிதம்பரம் எனப்படும்  தில்லை சித்திரகூடத்துள்ளானே!


மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
பொங்கி அமரில் ஒரு கால் -  (கோபம்) பொங்கி போரில் ஒரு காலத்தில்
பொன் பெயரோனை வெருவ - இரணியன் பயப்படும்படி 
அங்கு அவன் ஆகம் அளைந்திட்டு - அங்கு (தூணில் தோன்றி) அவன் மார்பை  (நகங்களாலே) அழுத்தி 

ஆயிரம் தோள் எழுந்து ஆட - ஆயிரம் கைகளும் எழுந்து ஆட 

பைங்கண் இரண்டு எரி கான்ற - பசுமையான கண்கள் இரண்டும் நெருப்பு உமிழ்வது (போன்றும்) 

நீண்ட எயிற்றோடு பேழ் வாய்ச் - நீண்ட கூரான பற்களும் பெரிய வாயும் (கொண்டு)

சிங்க உருவின் வருவான் - சிங்க உருவில் வருபவன் 

சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே 


அருமையான பாசுரத்தில் வரும் கதை 
"பிரகலாதனை காத்த பெருமாள்"
 இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன் அதை எதிர்த்தான். பிரகலாதன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரையே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான்.

இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி  தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். ஒரு சமயத்தில் பள்ளி பாடத்தை முடித்து வந்த மகன் ஸ்ரீ ஹரி நாமம் சொல்வதை பார்த்த பிரகலாதன் மிகுந்த கோபம் கொண்டு எங்கேடா இருக்கிறான் ஹரி என்று கேட்க, அவன் எங்கும் இருப்பான் என்று பிரகலாதன் கூறினான்.

உடனே  இரணியன் இந்த தூணில் இருப்பானா!!!!  என்று வெகுண்டெழுந்து  தூணை தட்ட, அங்கே அப்பொழுதே பரம்பொருளான ஸ்ரீமன் நாரயணன் சிம்ம முகமும் மானிட உருவமும் கலந்த நரசிம்ம உருவத்தில் தூணை பிளந்து வந்து இரணியனை அழித்தார். பிரகலாதனுக்கு நல் அருள் கொடுத்தார். பிரகலாதன் பக்தியை போன்றே நாமும் ஸ்ரீமன் நாராயணின் மேல் பக்தியோடு இருக்க ஸ்ரீமன் நாராயணனை வேண்டுவோம். அவர் நமக்கு நிச்சயம் நல் அருள் கொடுப்பார்.