பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Friday, September 23, 2011

வெண்ணை திருடி உண்ட கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்த ராஜனாக தரிசனம் தருகிறானே! - 3


1170
பண்டு இவன் வெண்ணெய் உண்டான்  என்று* ஆய்ச்சியர் கூடி இழிப்ப* 
எண் திசையோரும் வணங்க* இணை மருது ஊடு நடந்திட்டு*
அண்டரும் வானத்தவரும்* ஆயரம் நாமங்களோடு*
திண் திறல் பாட வருவான்* சித்திரகூடத்துள்ளானே*3.3.3

விளக்கம்:-
முன்பு இவன் வெண்ணெய் திருடி உண்டான் என்று பசு மேய்க்கும் பெண்கள் எல்லோரும் 
கூடி கேலி பேசியும், குற்றம் கூற, எட்டு திசைகளில் உள்ளவரும் வணங்கும் பெருமை 
வாய்ந்தவனை, குழந்தை பருவத்தில் வெண்ணெய் உண்டதற்காக அம்மா கோபத்தில் உரலில்
கட்டி விட உரலை இழுத்து கொண்டு அருகருகே நின்றிருந்த இரண்டு மருத மரங்களின் 
இடையே சென்று மரங்களை சாய்த்து இருவரின் சாபம் நீக்கியவனை,பூமியில் உள்ளவரும்
வானத்தில் உள்ளவரும் ஆயிரம் திருபெயர்களோடு திடமான திறமைகளை பாடும்படி 
வருபவன்  சிதம்பரம் எனப்படும்  தில்லை சித்திரகூடத்துள்ளானே!

மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
பண்டு இவன் வெண்ணெய் உண்டான்  - முன்பு இவன் வெண்ணெய் (திருடி) உண்டான் 
என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப - என்று பசு மேய்க்கும் பெண்கள் கூடி குற்றம் கூறவும் 
எண் திசையோரும் வணங்க - எட்டு திசையில் உள்ளோரும் வணங்க 
இணை மருது ஊடு நடந்திட்டு - இரண்டு அருகருகே (உள்ள) மருத (மரங்களின்) இடையே 
நடந்து (இருவரின் சாபம் போக்கி)

அண்டரும் வானத்தவரும் - பூமியில் உள்ளோரும் வானத்தில் உள்ளோரும் 
ஆயரம் நாமங்களோடு - ஆயிரம் திரு பெயர்களோடு 
திண் திறல் பாட வருவான் - வலிமையான் திறமையை பாடும்படி வருபவன் 
சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே 



அருமையான பாசுரத்தில் வரும் கதை
"உரலில் கட்டப்பட்ட கண்ணன் செய்த லீலை"
நளகூபன், மணிக்ரீவன் என்ற அவ்விருவரும் குபேரனின் பிள்ளைகள்.பெருஞ்செல்வத்தால் 
ஆணவம் கொண்டிருந்த அவர்கள் இருவரும் கந்தர்வப்பெண்களுடன் ஒரு தடாகத்தில் நீர் 
விளையாட்டு விளையாடச் சென்றனர். அப்போது தற்செயலாகநாரத முனிவர் அவ்விடத்தைக் 
கடக்க நேரிட்டது. அவரைக் கண்டதும் அந்த கந்தர்வ பெண்கள் நடுநடுங்கி விரைவில் தங்கள் 
ஆடைகளை அணிந்து கொண்டுஅவரை வணங்கி நின்றனர்.

ஆனால் குபேரனின் பிள்ளைகளோ, மிதமிஞ்சிய மது மயக்கத்தாலும் தங்கள் ஆணவத்தாலும் 
நாரதர் வந்ததையே கவனியாமலும் தங்கள் ஆடைகளை அணியாமலும் இருந்தனர். இதைக் 
கண்டு கோபமுற்ற நாரதர் மரம் போல் நிற்கும் நீங்கள் இருவரும் பூவுலகில் இரு மருத மரங்களாக 
மாறக் கடவது என்று சாபமளித்தார். அவரது சாபத்தைக் கேட்டு தன் நிலையறிந்த இருவரும் 
நாரதரிடம் மன்னிப்புக் கேட்டு, தங்கள் சாபத்திற்கு விமோசனத்தை அருளும்படி வேண்டினர்.

அவர்கள்பால் இரக்கம் கொண்ட முனிவரும், ஸ்ரீமந்நாராயணன் பூமியில் கண்ணனாக அவதாரம் எடுக்கும்போது உங்களுக்கும் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார்.அதற்கான காலமும் 
வந்தது . ஒரு நாள் நம் கண்ணன் வெண்ணெய் உண்டதால் அம்மா யசோதை குழந்தை கண்ணனை 
உரலில் கட்டிவிட உரலோடு இழுத்து கொண்டு ஒன்றுகொன்று அருகில் நின்றிருந்த இரு மருத 
மரங்களின் இடையில் புகுந்து சென்றதால் மரம் இரண்டாக உடைய அவர்களுக்கு 
சாப விமோசனம் கிடைத்ததுகுபேரனின் குமாரர்களும், கண்ணனை வணங்கி 
தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

No comments: