1171
வளைக் கை நெடுங்கண் மடவார்* ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப*
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்* தண் தடம்புக்கு அண்டர் காண*
முளைத்த எயிற்று அழல் நாகத்து* உச்சியில் நின்று அது வாடத்*
திளைத்து அமர் செய்து வருவான்* சித்திரகூடத்துள்ளானே*3.3.4
விளக்கம்:-
வளையல் போட்டு கொண்டு பெரிய நீண்ட கண்களையுடைய அழகான பசு மேய்க்கும்
பெண்கள் பயப்பட்டு கொண்டு எல்லாரும் வாங்களேன்! காளிங்க பாம்பின் மேல் நம்
கண்ணன் நடனமாடுகிறான்!! என்று அழைக்கவும், அழகாக மலர்ந்த தாமரை மலர்கள் உள்ள
பொய்கை குளத்தின் குளிர்ச்சியான கரைக்கு வந்து பசு மேய்க்கும் பெண்கள் காணும்படி,
முளைத்த கூரான பற்களையுடைய விஷ பாம்பின் தலைகளின் உச்சியில் நின்று அது
வாடும்படி அனுபவித்து ஆனந்த நடனம் செய்து கொண்டு வருபவன் சிதம்பரம் எனப்படும்
தில்லை சித்திரகூடத்துள்ளானே!
மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
வளைக் கை நெடுங்கண் மடவார் - வளையல் (அணிந்த) கைகளும், பெரிய நீண்ட கண்களும்
(உள்ள) பெண்களான
ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப - பசு மேய்க்கும் பெண்கள் பயப்பட்டு (காளிங்க பாம்பின் மேல்
கண்ணன் நடமாடுவதை இங்கே வந்து பாருங்கள் என்று) அழைக்க
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத் - கட்டு அவிழ்ந்த தாமரை (பூக்களுடைய) பொய்கை
(குளத்தின்)
தண் தடம்புக்கு அண்டர் காண - குளிர்ந்த கரைக்கு வந்து பசு மேய்க்கும் பெண்கள் காண
முளைத்த எயிற்று அழல் நாகத்து - முளைத்த (கூரான) பற்களுடைய விஷ பாம்பின்
உச்சியில் நின்று அது வாடத் - உச்சியில் நின்று அது வாடும்படி
திளைத்து அமர் செய்து வருவான் - அனுபவித்து ஆனந்த (தாண்டவம்) செய்து (கொண்டு)
வருபவன்
சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே
சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே
அருமையான பாசுரத்தில் வரும் கதை
“காளிங்க நர்த்தனம்''
யமுனை நதியின் ஒருபகுதியில் கொடிய விஷத்தைக் கொண்டுள்ள ஐந்து தலை நாகமொன்று
இருந்து வந்தது. அதன் பெயர் காளிங்கம் (அ) காளியன். அது தன் விஷத்தை எல்லாம் நதி நீரிலேயே
கக்கி கக்கி அப்பகுதி நீர் முழுதும் விஷமாகவே மாறிவிட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் எந்த
ஒரு உயிரினமும், தாவரங்களோ, விலங்கினங்களோ உயிர் வாழ முடிவதில்லை. ஒரே ஒரு
கடம்ப மரம் மட்டும் கரையில் வளர்ந்திருந்தது
ஒரு நாள் பிருந்தாவனத்திலே, தன் தோழர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தான் சிறுவன்
கண்ணன். அப்பொழுது திடீரென அப்பந்து காளிங்கன் இருந்த பகுதியில் சென்று விழுந்து விட்டது.
பலர் அங்கு செல்லவேண்டாம் விஷ பாம்பு உள்ளது என்று சொல்லி தடுத்தும் கண்ணன்,
கடம்ப மரத்தின் கிளை வழியாக காளிங்கன் இருந்த இடத்திற்குச் சென்றான்.
கண்ணனும் அவன் போக்கிலே விட்டு பின் அதன் தலைமேல் ஏறி நின்று, தன் புல்லாங்குழலை
இசைத்தவண்ணம் நடனம்(நர்த்தனம்) புரியத் துவங்கினான். இந்த நடனத்தின் பெயர் ''காளிங்க நர்த்தனம்''.
இறைவனின் கால் காளிங்கனின் தலை மேல் படும் போது, அண்ட சராசரமே திரண்டு வந்து தன்
தலையில் உருளுவதைப் போல் உணர்ந்தான். தன் ஆணவத்தால் அவன் தலைத் தூக்கும்
போதெலாம், இறைவன் அந்த தலையில் ஒரே மிதியாய் மிதித்து நடனமாடினான். காளிங்கனும்
சோர்வுற்று மரணபயம் கொண்டு, செய்வதறியாது திகைத்தான்.இறைவனும் காளிங்கனைக்
கொல்லாது, அதன் ஆணவத்தை மட்டும் கொன்று திருவருள் புரிந்தான்.