பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Wednesday, July 28, 2010

பிரிதி சென்று அடை நெஞ்சே! - திருமங்கை ஆழ்வார் (958-967)



பெரிய திருமொழி

958
வாலிமாவலத்தொருவன துடல்கெட வரிசிலைவளைவித்து,
அன்று ஏலநாறு தண்தடம்பொழிலிடம்பெற இருந்தநலிமய்யத்துள்,
ஆலிமாமுகிலதிர்தர அருவரை அகடுறமுகடேறி,
பீலிமாமயில்நடஞ்செயும் தடஞ்சுனைப் பிரிதிசென்றடை நெஞ்சே. (2) 1.2.1

விளக்கம்:-
மிக பெரிய வலிமை வாய்ந்த வாலி என்ற அரக்கனின் உடல் அழியுமாறு வில்லை வளைத்து அம்பு விட்டார் நம்ம இராமர்.
(இராமர் இருக்குமிடம் எப்படி இருக்குனு பாருங்க) நிறைய சோலைகள் சூழ்ந்துள்ள இமயமலையில் நல்ல அதிர்வோடு கரிய பெரிய மேகங்கள் மலைகளின் மீது உரசுவதால் வந்த சவுண்ட கேட்டு மயில்கள் தோகை விரித்து அழகா டான்ஸ் ஆடுது. அதோடு அருவிகளும் நிறைந்துள்ள ( என்னோட இராமர் வாழும் இடமான) திருபிரிதி சென்று அடை நெஞ்சே!


959
கலங்கமாக்கடலரிகுலம் பணிசெய்ய அருவரையணை கட்டி,
இலங்கைமாநகர்ப் பொடிசெய்தவடிகள் தாம் இருந்தநல்லிமயத்து,
விலங்கல்போல் வனவிறலிருஞ்சினத்தன வேழங்கள் துயர்க்கூர,
பிலங்கொள் வாளெயிற்றரியவை திரிதரு பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.2

விளக்கம்:-
பெரிய கடலும் கலங்கும்படி(சும்மா அதிருதுல்ல)
நம்ம ஆஞ்சநேயரும் அவரோட நண்பர்களும் சேர்ந்து மலைகளை தூக்கி வந்து கடலில் அணை( பிரிட்ஜ்) கட்டுனாங்க. கடலை கடந்து இலங்கை மாநகரை தூள் தூள் ஆக்கிய இராமர் இருக்குமிடம் அழகான இமயமலையில் மலை போல வலுவான மிக கோபமுடைய யானைகளுக்கும் துயரம் தருகின்ற
குகை மாதிரி பெரிய வாயுடைய சிங்கங்கள் திரிந்து கொண்டிருக்கும் (என்னோட இராமர் வாழும் இடமான)
திருபிரிதி சென்று அடை நெஞ்சே!


960
துடிகொள் நுண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற் றிளங்கொடிதிறத்து,
ஆயர் இடிகொள் வெங்குரலினவிடையடர்த்தவன் இருந்த நல்லிமயத்து,
கடிகொள்வேங்கையின் நறுமலரமளியின் மணியறை மிசைவேழம்,
பிடியினோடு வண்டிசைசொலத் துயில்கொளும் பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.3

விளக்கம்:-
சும்மா தல தலன்னு துடிக்கின்ற மெலிசான இடையையும் ,நல்ல கருப்பான கூந்தலையும், மெல்லிய சிரிப்பையும் இளம் கொடி (நல்ல இளசா இருக்கின்ற) நப்பின்னையை (யசோதையின் சகோதரன் பொண்ணு நப்பின்னையை கல்யாணம் பண்ணுவதற்காக) இடியை போல பயங்கரமான குரலை உடைய ஏழு எருதுகளை அடக்கிய நம்ம கண்ணன் இருக்குமிடம் இமயமலையில்
நல்ல வாசனையுள்ள வேங்கை மலர் மேல் (பெட் மாதிரி) யானை தன் குழந்தையோடு படுத்துக்கினு இருக்கு, அதே நேரத்தில வண்டுகள் கீ கீ ன்னு இனிமையான இசை எழுப்புவதை கேட்டு யானை ஹாயா தூங்குது!
(இப்படி அழகான என்னோட கண்ணன் இருக்கும் இடமான)
திருபிரிதி சென்று அடை நெஞ்சே!


961
மறங்கொளாளரியுருவென வெருவர ஒருவனதகல்மார்வம் திறந்து,
வானவர்மணிமுடி பணிதர இருந்தநல்லிமயத்துள்,
இறங்கியேனங்கள் வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவீசும்,
பிறங்குமா மணியருவியொடிழிதரு பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.4

விளக்கம்:-
ஜிம் பாடியோட(6 pack) மனுசனும் சிங்கமும் கலந்தா போல உருவெடுத்து தூணை பிளந்து வெளிவந்து இரணியனின் மார்பை இரண்டா பிளந்தவனும், வானத்தில் உள்ளவர்களும் தலை வணங்கி தொழும் எங்க நரசிம்மர் இருக்குமிடம் இமயமலையில் உள்ள பன்றிகள் வளைந்த கொம்புகளால்
மணி பாறைகளை பிளக்க அவற்றிலிருந்து சிதறும் மணிகள் அருவியோடு கலந்து அழகா ஒளி (லைட்) தருது!
(இவ்ளோ அழகான என்னோட நரசிம்மர் இருக்குமிடமான)
திருபிரிதி சென்று அடை நெஞ்சே


962
கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல் அமரர்கள்தொழுதேத்த,
அரைசெய்மேகலையலர்மகளவளொடும் அமர்ந்தநல்லிமயத்து,
வரைசெய்மாக்களிறீளவெதிர் வளர்முளை அளைமிகு தேன்தோய்த்து,
பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும் பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.5

விளக்கம்:-
கரையுடன் கூடிய பெரிய கடலில் படுத்து கொண்டு இருப்பவன் ,
(எங்க ஆளோட) மலர் பாதங்களை தேவர்களும் வழிபடுவார்கள்,
திருவரையில் சாத்தபட்ட உடையுடன் மகாலட்சுமியோடு ஜோடி போட்டுக்கிட்டு அமர்ந்த இமயமலையில் மலை போல பெரிய யானைகள் இளசான மூங்கில் இலைகளை பறித்து அருகில் இருக்கும் தேனில் தோய்த்து (dip panni)
அந்த தேன் வெள்ளத்தை பிழிந்து தன்னோட இளம் குட்டிகளின் வாயில் ஊட்டும்!
(ஸ் என்ன நாக்கு ஊறுதா! இவ்ளோ அழகான எம்பெருமான் வாழும் இடமான)
திருபிரிதி சென்று அடை நெஞ்சே!


963
பணங்களாயிரமுடைய நல்லவரவணைப் பள்ளிகொள் பரமாவென்று,
இணங்கி வானவர் மணிமுடி பணிதர இருந்தநல்லிமயத்து,
மணங்கொள் மாதவி நெடுங்கொடி விசும்புற நிமிர்ந்தவைமுகில்பற்றி,
பிணங்கு பூம்பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.6

விளக்கம்:-
ஆயிரம் தலைகள் உள்ள ஆதிசேசன் மேலே படுத்து கொண்டு இருக்கும் பரமா! என்று சொல்லி வானத்தில் உள்ளவர்கள் தலை தாழ்த்தி வணங்குவர் (என் பரமன் (இறைவன்) இருக்குமிடம்)
இமயமலையில் நல்ல வாசனையான குருத்தி கொடிகள் வானம் அளவுக்கு உயர்ந்து அங்கே இருக்கும் மேகங்களை பற்றி வளைக்கும்.
இப்படிபட்ட அழகான பூஞ்சோலைகள் நடுவே நுழைந்து வண்டுகள் இன்னிசை பாடும் (இவ்ளோ அழகான என் பரம்பொருள் இருக்கும் இடமான)
திருபிரிதி சென்று அடை நெஞ்சே!


964
கார்கொள் வேங்கைகள் கனவரைதழுவிய கறிவளர்க்கொடி துன்னி,
போர்கொள் வேங்கைகள் புனவரைதழுவிய பூம்பொழிலிமயத்துள்,
ஏர்கொள் பூஞ்சுனைத்தடம்படிந்தினமலர் எட்டுமிட்டிமையோர்கள்,
பேர்களாயிரம் பரவி நின்றடிதொழும் பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.7

விளக்கம்:-
வானம் அளவு உயர்ந்த வேங்கை மரங்களை
தாழ்வாக வளரும் மிளகு கொடிகள் தழுவுது,
நல்லா போர் செய்யும் வேங்கை புலிகள்
மலை குன்றுகளை தழுவி வாழ்கிறது,
அதுமட்டுமா! பூஞ்சோலைகளும் உள்ள இமயமலையில் பூக்கள் நிறைந்த குளத்தில் தேவர்கள் நல்லா நீராடி ( நம்மளோட ஸ்ரீமன் நாராயணன் மீது) எட்டு வகையான மலர்களை தூவி , பெயர்கள் ஆயிரம் சொல்லி நின்று அடி தொழும் திருபிரிதி சென்று அடை நெஞ்சே!


965
இரவுகூர்ந்திருள் பெருகிய வரைமுழை இரும்பசியதுகூர,
அரவமாவிக்கு மகன்பொழில்தழுவிய அருவரையிமயத்து,
பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று எண்ணிநின்று இமையோர்கள்,
பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகைப் பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.8

விளக்கம்:-
நைட் ஆகிடிச்சு! ஒரே இருட்டா இருக்கு!மலை குகைகளில் ரொம்ப பசியோடு பாம்புகள் பெருமூச்சி விட்டு கொண்டிருக்கும்
உட்சோலைகளை தழுவிய மலைகள் சூழ்ந்துள்ள இமயமலையில்
பரமனே! ஆதி மூலமே! பனிமுகில் வண்ணா! என்று சொல்லி
நின்று தேவர்கள் பிரம்மனோடு சென்று அடி தொழும்
திருபிரிதி சென்று அடை நெஞ்சே


966
ஓதியாயிரநாமங்கள் உணர்ந்தவர்க்கு உறுதுயரடையாமல்,
ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை இருந்தநல்லிமயத்து,
தாதுமல்கிய பிண்டிவிண்டலர்கின்ற தழல்புரையெழில் நோக்கி,
பேதைவண்டுகளெரியெனவெருவரு பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.9

விளக்கம்:-
ஆயிரம் நாமங்கள் சொல்லி பொருளை உணர்ந்தவங்களுக்கு சிறு துன்பமும் வராமலும், மனசு கஷ்டம் ஏற்படாமலும் அருள் தரும் எமது பெரியவர் இருக்கும் இடமான இமயமலையில் தேன் நிறைந்துள்ள அசோக மலர்கள் விரிந்து எரிமலை போல செக்க செவேலென்று அழகா இருக்கு. இதை பார்த்து அறிவில்லாத வண்டுகள் எரிகின்ற நெருப்பு என நினைத்து பயப்படுதுங்க!
(ஹி ஹி ஒரே காமெடி போங்க! பூவின் சிகப்பை பார்த்து நெருப்புன்னு பயப்படுது வண்டு இப்படிப்பட்ட அழகான எம்பெருமான் இருக்கும் இடமான) திருபிரிதி சென்று அடை நெஞ்சே!


967
கரியமாமுகிற்படலங்கள்கிடந்து அவைமுழங்கிட,
களிறென்று பெரியமாசுணம் வரையெனப்பெயர்தரு பிரிதியெம்பெருமானை,
வரிகொள் வண்டறை பைம்பொழில் மங்கையர் கலியனதொலிமாலை,
அரியவின்னிசைபாடு நல்லடியவர்க்கு அருவினையடயாவே. 1.2.10

விளக்கம்:-
கருப்பு கலர்ல பெரிய மேகங்கள் (பூமிலர்ந்து தண்ணி நிறைய உறிஞ்சிடுச்சி போல) சுத்த முடியாம ஒரே இடத்துல கிடந்து சவுண்டு விடுது! இதை பார்த்து பெரிய மலை பாம்புகள் ஆஹா! நம்ம பசிக்கு இரையாக (கரிய மேகங்களை பார்த்து) யானைகள் வருது என்று அதை பிடிக்க மெதுவா ஊர்ந்து ஊர்ந்து வரும் இடமான திருபிரிதி எம்பெருமானை வரி வண்டுகள் இசைக்கும்! அதோடு பசுமையான சோலைகள் உள்ள திருமங்கை நாட்டு கலியனது ஒலி மாலையை அரிய இன்னிசையாடு பாடும் நல்ல அடியவர்களுக்கு தீவினைகளே வராதுப்பா!


பிரிதி பிரிதி என்று ஆழ்வார் சொல்றாரே பிரிதி எங்கப்பா இருக்கு?

திருமங்கை ஆழ்வார் சொன்ன திருப்பிருதி ஜோஷிமட் என வழங்கப்படுகிறது. பத்திரிநாத்திலிருந்து 52கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 6150 அடி உயரத்தில் உள்ளது. இங்கு நரசிம்மர் ஆலயமும், வாசுதேவப் பெருமாள் ஆலயமும் உள்ளது
பெருமாள்:- பரமபுருஷன் (Kidantha kolam)
தாயார்:- பரிமளவல்லி நாச்சியார்

Saturday, July 17, 2010

நாராயணா வென்னும் நாமம்




ஓம் நமோ நாராயணாய!

திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களை பெரிய திருமொழி என்று அழைக்க படுகிறது,

பெரிய திருமொழி முதல் பத்து
948
வாடினேன்: வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயரிடும்பையில் பிறந்து,
கூடினேன்: கூடியிளையவர்த் தம்மோடு
அவர்த்தரும் கலவியேகருதி,
ஓடினேன்: ஓடியுய்வதோர்ப் பொருளால்
உணர்வெனும் பெரும் பதம்f திரிந்து,
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
நாராயணா வென்னும் நாமம். (2) 1.1.1

விளக்கம்:-
வாடினேன் வாடி வாடி. ரொம்பவும் வருந்தினேன். அவ்ளோ மனசுல வருத்தம்.
இந்த உலகத்தில் பிறந்து அதில் ஊறினேன்.
கூடினேன் பொண்ணுங்க தரும் சுகத்தையே பெரிசா நினைத்து அதை தேடியே ஓடினேன்.
அப்புறம்தான் இந்த உலகத்தில் நன்மை தீமைகளை ஆராய தொடங்கினேன்.
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்


949
ஆவியே. அமுதே. எனநினைந்துருகி
அவரவர்ப்பணைமுலைதுணையா,
பாவியேனுணரா தெத்தனைபகலும்
பழுதுபோயொழிந்தனநாள்கள்,
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்
சூழ்புனற்குடந்தையேதொழுது, என்
நாவினாலுய்யநான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும் நாமம். (2) 1.1.2

விளக்கம்:-
ஆவியே! அமுதே என்று பொண்ணுங்கள(பிகர்) நினைச்சு உருகி
அவர்களின் பெரிய முலையே துணையா எண்ணினேன்.
பாவி உணராததால் இத்தனை நாட்கள்
சுத்தமா ஒழிஞ்சி போச்சு.(வேஸ்டாபோச்சு)
அன்னபறவை தன் துணையோடு வாழும் ,
நிறைய நீர் வளம் உள்ள திரு குடந்தை (கும்பகோணம்)
சாரங்கபாணி ஆராவமுது பெருமாளை வழிப்பட்டு ,
வாய் திறந்து சொல்லும் படியாக நான் கண்டு கொண்டேன்.
நாராயணா என்னும் நாமம்.


950
சேமமேவேண்டித் தீவினைபெருக்கித்
தெரிவைமாருருவமேமருவி,
ஊமனார் கண்டகனவிலும்பழுதாய்
ஒழிந்தனகழிந்தவந்நாள்கள்,
காமனார் தாதைநம்முடையடிகள்
தம்மடைந்தார்மனத்திருப்பார்,
நாமம் நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.3

விளக்கம்:-
நல்லா இருக்கணும்னு தீமைகளை நிறைய செய்து ,
பொண்ணுங்க உடல் அழகையே ரசித்து இருந்தேன்.
ஊமை கண்ட கனவு போல வீணாக ஒழிந்தது அந்த நாட்கள்.
காமனுக்கு அப்பா , நம்ம தலைவர் ,
தம்மிடம் சரணடைந்தவர்களின் மனசுல குடி இருப்பார் .
அப்பேற்பட்டவரின் நாமம் வாய் திறந்து சொல்லும் படியாக நான் கண்டுகொண்டேன்.
நாராயணா என்னும் நாமம்.


951
வென்றியே வேண்டி வீழ்பொருட் கிரங்கி
வேற்கணார் கலவியே கருதி,
நின்றவா நில்லா நெஞ்சினையுடையேன்
என்செய்கேன் நெடுவிசும்பணவும்,
பன்றியா யன்றுபாரகங்கீண்ட
பாழியா னாழியானருளே,
நன்று நானுய்ய நான்கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.4

விளக்கம்:-
வெற்றி ஒன்றையே விரும்பி , அழியும் பொருள்களுக்காக ஆசைப்பட்டு இரங்கி,
அழகான கண்கள் உடைய பெண்கள் தரும் சுகத்தையே விரும்பி ,
மனசு ஒரே இடத்துல நிலையாக இல்லாத நெஞ்சை உடைவனப்பா நான்! இனி நான் என்ன செய்வது என்று தவித்து கொண்டிருக்கையில், வானம் அளவுக்கு உயர்ந்த திருமேனி உடையவன் , பன்றி (வராக) உருவம் எடுத்தவன் , சக்கரத்தை கையிலே கொண்டு இருப்பவனின் அருளால் , நல்லா வாய் திறந்து சொல்லும் படியாக நான் கண்டு கொண்டேன் .
நாராயணா என்னும் நாமம்.



952
கள்வனேனானேன் படிறுசெய்திருப்பேன்
கண்டவா திரிதந்தேனேலும்,
தெள்ளியேனானேன் செல்கதிக்கமைந்தேன்
சிக்கெனத் திருவருள்பெற்றேன்,
உள்ளெலாமுருகிக்குரல் தழுத்தொழிந்தேன்
உடம்பெலாம் கண்ணநீர்சோர,
நள்ளிருளளவும் பகலும் நானழைப்பன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.5

விளக்கம்:-
ஐயோ! நான் திருடனாவே மாறி பல தப்புங்க செஞ்சிட்டேன்.
கண் போன போக்கிலே ஊற சுத்திக்குனு இருந்தேன். ஆனாலும் பாத்தீங்களா இன்று நான் தெளிவாகி விட்டேன் . நல்ல வழிகளில் செல்ல முடிவெடுத்த உடனே பெருமாளின் திருவருளும் பெற்றேன்.
உள்ளமெல்லாம் உருகி குரல் தழுதழுக்க , உடம்பெல்லாம் ஆனந்த கண்ணீரில் நனைய , நள்ளிருள் அளவும் , பகலும் நான் அழைப்பேன்
நாராயணா என்னும் நாமம்.


953
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்
எனக்கரசு என்னுடைவாணாள்,
அம்பினால் அரக்கர்வெருக்கொளநெருக்கி
அவருயிர்செகுத்தவெம்மண்ணல்,
வம்புலாஞ்fசோலைமாமதிள் தஞ்சை
மாமணிக்கோயிலேவணங்கி,
நம்பிகாள் உய்யநான் கண்டு கொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். (2) 1.1.6

விளக்கம்:-
எம்பிரான் என்னுடைய தந்தை , என்னுடைய சொந்தம் ,
எனக்கு ராசா , என்னுடைய வாழ்நாளே அவருதான் ,
அம்பை விட்டு அரக்கர் குலத்தையே வேரோடு அழித்த என் அண்ணல்!
அழகான சோலைகள் , பெரிய மதில்கள் உடைய
தஞ்சாவூர் மாமணி கோவிலையே வணங்கி ,
அடியோர்களே! நாவினால் சொல்ல நான் கண்டு கொண்டேன்.
நாராயணா என்னும் நாமம்.


954
இற்பிறப்பறியீர் இவரவரென்னீர்
இன்னதோர்த்தன்மையென்றுணரீர்,
கற்பகம்புலவர்களைகணென்றூலகில்
கண்டவாதொண்டரைப்பாடும்,
சொற்புருளாளீர்சொல்லுகேன்வம்மின்
சூழ்புனற்குடந்தையேதொழுமின்,
நற்பொருள்காண்மின் பாடி நீருய்ம்மின்
நாராயணாவென்னும்நாமம். 1.1.7

விளக்கம்:-
இல்லற வாழ்க்கையின் குடி பிறப்பை அறியமாட்டீர்!
இவர் அவர் என்றும் எண்ணமாட்டீர்!
இந்த பொருளுக்கு இந்த தன்மை என்றும் உணரமாட்டீர்!
கற்பகமே! புலவர்களை காப்பவரே!
என்று சொல்லும் பொருளும் சேராதவாறு கண்ணில் பட்ட தொண்டரை பாடும் திறமையுடைய கவிகள் ஒன்று சொல்கிறேன்!இங்கே வாங்க!
நான் சொல்வதை கேட்பீங்களா! நிறைய நீர் வளம் உடைய திருகுடந்தை (கும்பகோணம்) சாரங்கபாணி ஆராவமுது பெருமாளை வழிபடுங்கள்!
அப்புறம் நடப்பதை பாருங்கள்! நீங்கள் நல்பொருள் பாப்பீங்க!
நீங்களும் நாவினால் பாடி பரவசபடுவீர்கள் !
நாராயணா என்னும் நாமம்


955
கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை,
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெருநிலத்தாருயிர்க்கெல்லாம்,
செற்றமேவேண்டித்திரிதருவேன் தவிர்ந்தேன்
செல்கதிக்குய்யுமாறெண்ணி,
நற்றுணையாகப்பற்றினேன் அடியேன்
நாராயணாவென்னும்நாமம். 1.1.8

விளக்கம்:-
கலைகளை கற்றவன் இல்லை! ஐம்புலன்கள் தரும் ஆசையில் மனதை செலுத்தினேன்!
இப்படி அறிவுகெட்ட தனமா இருந்ததால ஒரு நன்மையையும் பெறவில்லை!
உலகில் உள்ள உயிர்களுக்கெல்லாம் தீமைகளை செய்து பொழுது போக்கி ஊற சுத்திக்கினு இருந்தேன். இப்படியெல்லாம் நான் செய்வதை பிறகு நிறுத்தினேன்.
நல்ல வழிக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டு
நல்ல துணையை பற்றி கொண்டேன் அடியேன்!
நாராயணா என்னும் நாமம்!


956
குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயராயினவெல்லம்,
நிலந்தரஞ்செய்யும் நீள்விசும்பருளும்
அருளொடுபெருநிலமளிக்கும்,
வலந்தரும்மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயினசெய்யும்,
நலந்தருஞ்சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணாவென்னும்நாமம். (2) 1.1.9

விளக்கம்:-
நல்ல சொந்தங்களை தரும் , நிறைய செல்வம் கொடுக்கும்.
நம்ம கஷ்டங்களை தரை மட்டமாக்கும் . பரமபதத்தை கொடுக்கும் (அதாம்பா மோட்சம் வைகுண்டம் சொல்றாங்களே பெருமாள் இருக்குமிடம் ) , நமக்கு நல்ல அருளோடு தொண்டு செய்யும் வாய்ப்பையும் கொடுக்கும் . சும்மா ஆஞ்சநேயர் போல வலிமையை கொடுக்கும் . நல்லது எல்லாமே கொடுக்கும் .அட நம்ம பெற்ற அம்மாவை விட அதிக பாசம் பரிவு இன்னும் நிறைய செய்யும் . (அட இதெல்லாம் யாருப்பா செய்யறது! வேற யாரு இதோ)
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்.

957
மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர்
மங்கையார்வாள்ff கலிகன்றி,
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்fமாலை
இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின்
துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு
நாராயணாவென்னும் நாமம். (2) 1.1.10

விளக்கம்:-
மேகங்கள் சுற்றி கொண்டிருக்கும் சோலைகள்,
வண்டுகள் சவுண்ட் விடும் நிறைய வளங்களையும் கொண்ட
திருமங்கை நாட்டு மன்னன் ஒளி வீசும் வாளை உடைய கலிகன்றி!
இனிய சொற்களால் தொடுத்த தெய்வ மாலையை,
தொண்டர்களே டக்குனு பிடிசிக்குங்க!
தூக்கத்திலே கூப்பிடுங்க! மனசுல கஷ்டம் இருந்தா நினையுங்கள்!
துயரம் இல்லீனா வாயை திறந்து சொல்லுவதும் மிக நன்று!
இதெல்லாம் விஷம்தான் தெரியுமா நம்மளோட வினைக்கு,
நாராயணா என்னும் நாமம்!

Tuesday, July 13, 2010

நரசிம்மரின் நாலாயிரம்




ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருவடிகளை பற்றி ஆரம்பிக்கிறேன்.

நரசிம்மர் பாசுரம் நாலாயிரம் சொல்றேனே என்று நினைகிறீங்களா!
ஆழ்வார்கள் பெருமாள் மேல் சொல்லப்பட்ட பாசுரங்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம்.
நரசிம்மர் யாரு ஸ்ரீமன் நாராயணன் அப்படின்னா நரசிம்மரின் நாலாயிரம் சொல்வதில் தவறு இல்லையே!

ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் கோவிலின் பதிவிலேயே காலத்தை ஒட்டி விடலாம் என்று நினைத்து இருந்தேன் .

பெருமாள் விடுவாரா! அதான் சொல்றாங்களே பெரியவங்க வாலிபம் 20 ஆண்டுகள் விவரம் தெரியாமல் கடந்து விடுகிறது. தூக்கத்தில் பாதி காலம் கடந்து விடுகிறது . எஞ்சியது சில ஆண்டுகளே அந்த சிறிது ஆண்டுக்குள் வீணாக்காமல் உருப்படியா எதாச்சும் பண்ணலாமே என்றுதான் பெருமாளின் பாசுரங்களை விளக்கலாம் என்று முடிவெடுத்து உள்ளேன்.

உண்மைய சொல்லனும்னா எனக்கு தூய தமிழ் அவ்வளவா தெரியாது. இருந்தாலும் நான் படித்து கொண்டிருக்கிற நாலாயிர திவ்ய பிரபாந்த புத்தகத்தில் இருந்து ஆழ்வார் பாசுரங்களை இன்னும் எளிமையாக எனக்கு தெரிந்த வரையில் கொடுக்கிறேன்.
நான்கு வரி பாசுரத்திற்கு நான்கு வரி எளிய (localaa) விளக்கம்.

உதாரணம்.

குலந்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே


விளக்கம்

நல்ல சொந்தங்களை தரும் , நிறைய செல்வம் கொடுக்கும் நம்ம கஷ்டங்களை தரை மட்டமாக்கும் . பரமபதத்தை கொடுக்கும் (அதாம்பா மோட்சம் வைகுண்டம் சொல்றாங்களே பெருமாள் இருக்குமிடம் ) , நமக்கு நல்ல அருளோடு தொண்டு செய்யும் வாய்ப்பையும் கொடுக்கும் . சும்மா ஆஞ்சநேயர் போல வலிமையை கொடுக்கும் . நல்லது எல்லாமே கொடுக்கும் . அட நம்ம பெற்ற அம்மாவை விட அதிக பாசம் பரிவு இன்னும் நிறைய செய்யும் . (இதெல்லாம் யாருப்பா செய்யறது! வேற யாரு இதோ )
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்.

புரிஞ்சிதுங்களா இப்படிதாங்க எளிய விளக்கம் தரலாம் என்று இருக்கிறேன் .

சொல் குற்றமோ பொருள் குற்றமோ இருந்தால் தெரிந்த அன்பர்கள் சுட்டி காட்டுங்கப்பா!

முதலில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் நல் ஆசியோடு திருமங்கை ஆழ்வார் பாசுரங்களை இனி வரும் பதிவுகளில் பார்க்கலாம் .

அதற்கு முன்பு அவரை வாழ்த்தி பாடுவோம் . அதான் தனியன் என்று சொல்றாங்களே அதேதானுங்க!
ரெடி ஜூட்!

வாழி பரகாலன்!வாழி கலிகன்றி! வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல்!

- எம்பெருமானார்

நெஞ்சுக்கு இருள்கடி தீபம்--- அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம்--- தமிழ் நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம், ஆரண சாரம், பரசமயப்
பஞ்சுக்கு அனலின் பொறி --- பரகாலன் பனுவல்களே

- கூரத்து ஆழ்வான்

எங்கள் கதியே இராமானுசமுனியே! சங்கை கெடுத்தாண்ட தவ ராசா பொங்குபுகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எங்களுக்கு தா இராமானுசா
- எம்பார்

Thursday, July 8, 2010

தேனை ஆரா அமுதை அனுபவிக்க!

திருமங்கை ஆழ்வார்


ஆழ்வார்களின் பாசுர விளக்கங்கள் எளிமையாக இணையதளத்தில்
தெரிந்து கொள்ள இந்த இணைய தளத்திற்கு செல்லுங்கள்.

- மாதவி பந்தல் - http://madhavipanthal.blogspot.com/
- நான்காயிரம் அமுத திரட்டு - http://aazhvarmozhi.blogspot.com/
-

உதாரணத்திற்கு திருமங்கை ஆழ்வாரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் பாடிய சில
பாசுரங்களையும் காணலாம்




திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார். பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது. நள வருஷத்தில் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் பிறந்ததாக குறிப்புகள் உள்ளன. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நீலன். இளம் வயதிலே போர்த் திறமைகள் பயின்றார். தந்தைக்குப் பின் சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார். இவருடைய வீரத்துக்குப் பரிசாக சோழ மன்னன் இவரைத் திருமங்கை என்னும் குறுநிலத்திற்கு அரசனாக முடி சூட்டினார்.
திருமங்கை மன்னன் ஒருவிதமான 'ரிபெல்' (rebel) என்று சொல்லலாம். தமிழில் நல்ல ஈடுபாடு கொண்டிருந்தார். பெண்களிடமும் சற்று ஈடுபாடு அதிகம் உள்ளவராக இருந்தார்.


வாணிலா முறுவல், சிறுநுதல் பெருந்தோள் மாதரார்
வனமுறைப் பயனே பேணினேன்...
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்
என்று அழகான புன்னகை, சின்ன நெற்றி, பெரிய தோள்களைக் கொண்ட பெண்களைப் பேணியதற்கு நாணினேன் என்று ஒரு கன்ஃபெஷன் தொனியில் பல பாடல்கள் பாடியுள்ளார். இளம் வயதில் வாலிபமும் வீரமும் பொருந்திய இளைஞராகத் திகழ்ந்தவரின் வாழ்க்கையை ஒரு பெண் திசை திருப்பினாள். குளத்தில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தார். விசாரித்ததில் பெயர் குமுதவல்லி, திருவெள்ளக்குளத்தில் ஒரு வைணவ வைத்தியனின் வளர்ப்பு மகள் என்று தெரிந்தது. நீலன் இவளுடைய அழகால் கவரப்பட்டு வெள்ளக் குளத்திற்கு வந்து அவள் தந்தையிடம் ஆடை ஆபரணங்களைப் பரிசாக வைத்து இவளை எனக்குக் கட்டிக் கொடும் என்று கேட்டார்.

பெண்ணோ பிராமணப் பெண். இவர் கள்ளர் ஜாதி. இருந்தும் தந்தை, பெண்ணுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார். பெண்ணைக் கேட்டதில் நான் ஒரு வைணவனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்று சொல்லிவிட்டாள். அவ்வளவுதானே நான் வைணவனாகி விடுகிறேன் என்று திருமங்கை மன்னன் திருநறையூர் நம்பியிடம் சென்று என்னை பரம வைணவனாக்கிவிடும் என்று வேண்டிக் கொள்ள, நம்பியிடமிருந்து வைணவர்கள் தீட்சையில் பெறும் பஞ்ச சம்ஸ்காரங்களான சங்கு சக்கர முத்திரை, தாச நாமம், திருமந்திரம், நெற்றிக்கு திருமண் ஸ்ரீசூர்ணம், திருவாராதனை நியமங்கள் போன்றவற்றைப் பெற்றார். திரு வெள்ளக் குளத்துக்கு வந்து இப்போது நான் பரம வைணவனாகிவிட்டேன்; என்னை மணம் செய்வாய் என்று குமுதவல்லியிடம் கேட்க, அந்தப் பெண் இன்னொரு நிபந்தனை வைத்தாள். ஒரு வருஷம் தினம்தோறும் ஆயிரம் பேருக்கு சோறு போடச் சம்மதமா என்று கேட்டாள்.

பரகாலன் விரும்பினதை அடைந்தே தீர்பவர். பின்விளைவுகளை யோசியாமல் அதற்கும் சம்மதம் தெரிவிக்க திருமணம் நடைபெற்றது. தினம் ஆயிரம் பேருக்கு சோறு போடும் செலவை சமாளிப்பது ஒரு குறுநில மன்னனுக்குக்கூட கஷ்டமாக இருந்தது. திருமங்கை மன்னன் அரசனுக்குக் கொடுக்க வேண்டிய திறையையும் செலவழித்து விட்டார். அரசன் கோபங் கொண்டு அவரைக் கைது செய்ய காவலர்களை அனுப்ப, திருமங்கை மன்னன் தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிக்கொண்டு அவர்களை அடித்து விரட்டிவிட்டார். அரசனுக்கு மேலும் கோபம் மூண்டது. ஒரு சைன்யத்தையே அனுப்பி அவரைத் தோற்கடித்துச் சிறை வைத்தார். திரையைக் கொடுத்தால் சிறையில்லை என்றார். திருமங்கை மன்னன் மந்திரியை என்னுடன் காஞ்சிக்கு அனுப்புங்கள், காஞ்சியில் பொருள் கிடைக்கும் என்றார். அரசனும் தன் மந்திரியை உடன் அனுப்ப காஞ்சிபுரத்துக்கு வந்தார். வேகவதி நதிக்கரையில் அவருக்குப் புதையல் கிடைத்தது. அரசனுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்துவிட்டு மிச்சமுள்ள தனத்தை அன்னதானத்துக்கு வைத்துக் கொண்டார். அரசர் இவருடைய நேர்மையை வியந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். திருமங்கை மன்னன் தன் ததியாராதனப் பணியைத் தொடர்ந்தார். மீண்டும் பணத்தட்டுப்பாடு. பரகாலன் ஒரு வினோதமான முடிவெடுத்தார். வழிப்பறி! செல்வந்தர்களிடமிருந்து பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்த அந்தக் காலத்து ராபின்ஹ§ட் அவர்... நான்கு தேர்ந்த கூட்டாளிகளை உடன் வைத்துக் கொண்டு வழிப்பறி செய்தார். அந்தப் பணத்தை வைத்து ஏழை வைணவர்களுக்கு சோறு போட்டார். இந்த விந்தையான பக்தனை திருமால் சந்திக்க விரும்பினார். புதுமணத் தம்பதிகள் போல வேடமிட்டுக் கொண்டு ஆடை ஆபரணங்கள் பளபளக்க திருவாலிக்கு அருகே திருமணங் கொல்லை என்னும் இடத்தில் அரசமரத்தினருகில் பதுங்கியிருந்த திருமங்கை மன்னன் முன் அவர்கள் நடந்து சென்றார்கள். இன்று நமக்கு பெரிய வேட்டை என்று அத்தம்பதியை சூழ்ந்து கொண்டு கழற்று எல்லா நகைகளையும் என்று கத்தியைக் காட்டி மிரட்டினார்.

பகவான் எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தார். கால் விரலில் ஒரு ஆபரணத்தைக் கழற்ற முடியவில்லை. பரகாலன் இதையும் விடமாட்டேன் என்ற சொல்லி குனிந்து வாயால் கடித்து துண்டித்து எடுத்தார். 'சரியான கலியனப்பா நீ' என்று பகவான் அவனுக்கு கலியன் (பலமுடையவன்) என்று பெயரிட்டார். பகவானின் நகைகளை மூட்டை கட்டி வைக்க அதை எடுத்துச் செல்ல முயன்றபோது மூட்டை கனமாக இருந்தது. என்னதான் முயன்றாலும் தரையை விட்டு எடுக்க வரவில்லை.

ரகாலன் 'யாரப்பா நீ மந்திரவாதியோ? என்ன மந்திரம் பண்ணி இதை இத்தனை கனமாக்கினாய், சொல்' என்று அதட்ட, நாராயணன் அவர் காதில் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தைச் சொன்னார். ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க நாராயணன் தன் திரு உருவில் மனைவியுடன் கருடன் மேல் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது.

உடனே அவர் பாடிய பாசுரம்:

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே

திருமங்கையாழ்வாரின் பாசுரங்களின் அடிநாதம் நாராயணன் என்னும் நாமத்தைக் கண்டு கொண்டது. தின வாழ்வில் செல்வங்களையும் சுகங்களையும் தேடி அலைந்து விட்டு உணர்வால் அந்தப் பெயரின் கடவுள் தன்மையை அறிந்துகொள்ளும் ஒரு கண்டுபிடிப்பு. வியப்பும், கடந்தகாலத் தப்புகளுக்கு வருந்துவதும் அவர் பாடல்களில் இருக்கும். அவர் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதும் தெரியும். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி என்ற பிரிவில் ஏறக்குறைய 1100 பாடல்கள் பாடியுள்ளார். இது போக திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை போன்றவைகளையும் இயற்றியுள்ளார். பின் சொன்னவை மூன்றும் பிரபந்தத்தின் இயற்பா என்னும் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட பாடல்களாயினும் யாப்பிலக்கணப்படி மூன்றையும் மூன்று பாடல்களாகக் கணக்கிடுவதுதான் சரி. இதனால் திவ்யப்பிரபந்தம் மொத்தம் நாலாயிரம் பாடல்களுக்குக் குறைவு. இருந்தாலும் நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்று கூறுவதே வழக்கம். இதில் திருமங்கையாழ்வாரின் பங்கு கணிசமானது. எல்லா வகைப்பாடல்களையும் இயற்றியுள்ளார். எல்லா திவ்யதேசங்களையும் பாடியிருக்கிறார். வடநாட்டிலுள்ள திருவதரி (தேவப் பிரயாகை), திருப்பிருதி, நைமிசாரண்யம், பத்ரிகாசிரமம் இவைகளிலிருந்து துவங்கி தென்னாட்டுக் கோயில்கள் அத்தனையும் விட்டுவைக்காமல் ஊர் ஊராகச் சென்று பாடியிருக்கிறார். திருமங்கை மன்னனின் பாசுரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே சில வைணவக் கோயில்களின் பழமை நமக்குத் தெரிகிறது. உதாரணம் திருவிடவெந்தை. சென்னைக்கு அருகே இருக்கும் அழகான கோயில். மகாபலிபுரம் போகும் வழியில் உள்ளது. அதைப் பாடியிருக்கிறார்


மானே கண்மடவார் மயக்கிற் பட்டு மானிலத்து
நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ் திருவேங்கட மாமலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே

மான்கண் பெண்களின் மோகத்தில் நான்கு விதமான பாவங்களும் செய்தேன்.
திருமங்கையாழ்வாரின் பல பாடல்களில் இவ்வகையான பாவமன்னிப்புக் கோரும் repentant தொனியைப் பார்க்கலாம்.

வைணவக் கருத்துகளில் முக்கியமானது சரணாகதி தத்துவம். தான் செய்த தவறுகளை உணர்ந்து கடவுளிடம் சரணடைந்துவிட்டால் மன்னிப்பு கிடைக்கும் என்பதன் மறுபிரதியை மற்ற மதங்களிலும் காண்கிறோம்.

திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது ஒன்று.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து யாசகம் கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை. வேங்கடப் பெருமானே உன்னை வந்தடைந்து விட்டேன் என்னை ஆட்கொள்வாய்.

தந்தை தாய் மக்களே சுற்றமென்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழியெனக் கருதினாயேல்
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனான
மைந்தனர் வல்லவாழ் செல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

தந்தை, தாய், உறவினர் போன்றவரைச் சார்ந்து நிற்கும் வாழ்க்கையை நீ ஒரு பந்தமாகக் கருதினாயானால் முடிவும், முதலும்-முதலுக்கும் முதலுமான திருமாலை வல்லவாழ் கோயிலில் சென்று அடையும் வழியைப் பார் நெஞ்சே!

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி
உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும்போது உன்றன்
சரணமே சரணம் என்றிருந்தேன்.

மாமிசம் எலும்பு, உரோமம் இவைகளால் செய்யப்பட்டு ஒன்பது வாசல் வைத்த இந்தச் சரீரத்தை விட்டு உயிர் பிரியும்போது உன்னைச் சரணடைய வேண்டும் என்று இருக்கிறேன்

குலந்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே.

நாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் அது
(sourch-www.desikan.com)

பெருமாள் திவ்யதேசங்கள் இணைக்கப்படவேண்டும்



திருப்பதி பெருமாள் கோவில் எந்த ஒரு குறைமின்றி சிறப்பாக செயல்படுகிறது.
அதே போல அனைத்து திவ்யதேச பெருமாள் கோவிலும் சிறப்பாக செயல்படுகிறதா என்றால்
கேள்வி குறி?

இதற்கு வழி அனைத்து திவ்யதேசங்களும் இணைக்க பட வேண்டும் . திருப்பதி கோவில் முதல் கொண்டு திவ்யதேச கோவில்களின் உண்டியல் பணம் அந்த கோவில் நிர்வாகமோ அரசோ ஏற்காமல் அவை திவ்ய தேசங்களின் பெருமாள் கோவில் பராமரிக்கவே பயன்படுத்த வேண்டும் .அதற்கென்று ஒரு திவ்யதேச குழு என்று ஆரம்பித்து அதில் மெய் அடியார்களை சேர்த்து அனைத்து திவ்யதேசமும் சிறப்பாக செயல்பட வழிவகை செய்ய வேண்டும்.

இதன் மூலம் மக்கள் செலுத்தும் பணம் பெருமாளுக்கே செலவிட படுகிறது . திவ்ய தேச பெருமாள் கோவில்களும் சிறப்பாக செயல்படும்.