பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Thursday, July 8, 2010

தேனை ஆரா அமுதை அனுபவிக்க!

திருமங்கை ஆழ்வார்


ஆழ்வார்களின் பாசுர விளக்கங்கள் எளிமையாக இணையதளத்தில்
தெரிந்து கொள்ள இந்த இணைய தளத்திற்கு செல்லுங்கள்.

- மாதவி பந்தல் - http://madhavipanthal.blogspot.com/
- நான்காயிரம் அமுத திரட்டு - http://aazhvarmozhi.blogspot.com/
-

உதாரணத்திற்கு திருமங்கை ஆழ்வாரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் பாடிய சில
பாசுரங்களையும் காணலாம்
திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் திருவாலி திருநகிரிக்கு மிக அருகிலே உள்ள திருக்குறையலூரில் பிறந்தார். பரமேசுவரன், நந்திவர்மன் போன்ற பல்லவ மன்னர்களைப் பற்றிய குறிப்புகள் இவர் பாடல்களில் இருப்பதால் இவரை எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்ல முடிகிறது. நள வருஷத்தில் கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த தினத்தில் பிறந்ததாக குறிப்புகள் உள்ளன. இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் நீலன். இளம் வயதிலே போர்த் திறமைகள் பயின்றார். தந்தைக்குப் பின் சோழ மன்னனின் சேனாதிபதியாக அமர்ந்து பல போர்களில் வெற்றி பெற்று பரகாலன் (எதிரிகளின் எமன்) என்ற பெயர் பெற்றார். இவருடைய வீரத்துக்குப் பரிசாக சோழ மன்னன் இவரைத் திருமங்கை என்னும் குறுநிலத்திற்கு அரசனாக முடி சூட்டினார்.
திருமங்கை மன்னன் ஒருவிதமான 'ரிபெல்' (rebel) என்று சொல்லலாம். தமிழில் நல்ல ஈடுபாடு கொண்டிருந்தார். பெண்களிடமும் சற்று ஈடுபாடு அதிகம் உள்ளவராக இருந்தார்.


வாணிலா முறுவல், சிறுநுதல் பெருந்தோள் மாதரார்
வனமுறைப் பயனே பேணினேன்...
இளையவர் கலவியின் திறத்தை நாணினேன்
என்று அழகான புன்னகை, சின்ன நெற்றி, பெரிய தோள்களைக் கொண்ட பெண்களைப் பேணியதற்கு நாணினேன் என்று ஒரு கன்ஃபெஷன் தொனியில் பல பாடல்கள் பாடியுள்ளார். இளம் வயதில் வாலிபமும் வீரமும் பொருந்திய இளைஞராகத் திகழ்ந்தவரின் வாழ்க்கையை ஒரு பெண் திசை திருப்பினாள். குளத்தில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்தார். விசாரித்ததில் பெயர் குமுதவல்லி, திருவெள்ளக்குளத்தில் ஒரு வைணவ வைத்தியனின் வளர்ப்பு மகள் என்று தெரிந்தது. நீலன் இவளுடைய அழகால் கவரப்பட்டு வெள்ளக் குளத்திற்கு வந்து அவள் தந்தையிடம் ஆடை ஆபரணங்களைப் பரிசாக வைத்து இவளை எனக்குக் கட்டிக் கொடும் என்று கேட்டார்.

பெண்ணோ பிராமணப் பெண். இவர் கள்ளர் ஜாதி. இருந்தும் தந்தை, பெண்ணுக்கு சம்மதம் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று சொல்லிவிட்டார். பெண்ணைக் கேட்டதில் நான் ஒரு வைணவனுக்குத்தான் வாழ்க்கைப்படுவேன் என்று சொல்லிவிட்டாள். அவ்வளவுதானே நான் வைணவனாகி விடுகிறேன் என்று திருமங்கை மன்னன் திருநறையூர் நம்பியிடம் சென்று என்னை பரம வைணவனாக்கிவிடும் என்று வேண்டிக் கொள்ள, நம்பியிடமிருந்து வைணவர்கள் தீட்சையில் பெறும் பஞ்ச சம்ஸ்காரங்களான சங்கு சக்கர முத்திரை, தாச நாமம், திருமந்திரம், நெற்றிக்கு திருமண் ஸ்ரீசூர்ணம், திருவாராதனை நியமங்கள் போன்றவற்றைப் பெற்றார். திரு வெள்ளக் குளத்துக்கு வந்து இப்போது நான் பரம வைணவனாகிவிட்டேன்; என்னை மணம் செய்வாய் என்று குமுதவல்லியிடம் கேட்க, அந்தப் பெண் இன்னொரு நிபந்தனை வைத்தாள். ஒரு வருஷம் தினம்தோறும் ஆயிரம் பேருக்கு சோறு போடச் சம்மதமா என்று கேட்டாள்.

பரகாலன் விரும்பினதை அடைந்தே தீர்பவர். பின்விளைவுகளை யோசியாமல் அதற்கும் சம்மதம் தெரிவிக்க திருமணம் நடைபெற்றது. தினம் ஆயிரம் பேருக்கு சோறு போடும் செலவை சமாளிப்பது ஒரு குறுநில மன்னனுக்குக்கூட கஷ்டமாக இருந்தது. திருமங்கை மன்னன் அரசனுக்குக் கொடுக்க வேண்டிய திறையையும் செலவழித்து விட்டார். அரசன் கோபங் கொண்டு அவரைக் கைது செய்ய காவலர்களை அனுப்ப, திருமங்கை மன்னன் தன்னுடைய ஆடல்மா என்கிற குதிரை மேல் ஏறிக்கொண்டு அவர்களை அடித்து விரட்டிவிட்டார். அரசனுக்கு மேலும் கோபம் மூண்டது. ஒரு சைன்யத்தையே அனுப்பி அவரைத் தோற்கடித்துச் சிறை வைத்தார். திரையைக் கொடுத்தால் சிறையில்லை என்றார். திருமங்கை மன்னன் மந்திரியை என்னுடன் காஞ்சிக்கு அனுப்புங்கள், காஞ்சியில் பொருள் கிடைக்கும் என்றார். அரசனும் தன் மந்திரியை உடன் அனுப்ப காஞ்சிபுரத்துக்கு வந்தார். வேகவதி நதிக்கரையில் அவருக்குப் புதையல் கிடைத்தது. அரசனுக்குக் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுத்துவிட்டு மிச்சமுள்ள தனத்தை அன்னதானத்துக்கு வைத்துக் கொண்டார். அரசர் இவருடைய நேர்மையை வியந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். திருமங்கை மன்னன் தன் ததியாராதனப் பணியைத் தொடர்ந்தார். மீண்டும் பணத்தட்டுப்பாடு. பரகாலன் ஒரு வினோதமான முடிவெடுத்தார். வழிப்பறி! செல்வந்தர்களிடமிருந்து பணத்தைப் பறித்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்த அந்தக் காலத்து ராபின்ஹ§ட் அவர்... நான்கு தேர்ந்த கூட்டாளிகளை உடன் வைத்துக் கொண்டு வழிப்பறி செய்தார். அந்தப் பணத்தை வைத்து ஏழை வைணவர்களுக்கு சோறு போட்டார். இந்த விந்தையான பக்தனை திருமால் சந்திக்க விரும்பினார். புதுமணத் தம்பதிகள் போல வேடமிட்டுக் கொண்டு ஆடை ஆபரணங்கள் பளபளக்க திருவாலிக்கு அருகே திருமணங் கொல்லை என்னும் இடத்தில் அரசமரத்தினருகில் பதுங்கியிருந்த திருமங்கை மன்னன் முன் அவர்கள் நடந்து சென்றார்கள். இன்று நமக்கு பெரிய வேட்டை என்று அத்தம்பதியை சூழ்ந்து கொண்டு கழற்று எல்லா நகைகளையும் என்று கத்தியைக் காட்டி மிரட்டினார்.

பகவான் எல்லா நகைகளையும் கழற்றிக் கொடுத்தார். கால் விரலில் ஒரு ஆபரணத்தைக் கழற்ற முடியவில்லை. பரகாலன் இதையும் விடமாட்டேன் என்ற சொல்லி குனிந்து வாயால் கடித்து துண்டித்து எடுத்தார். 'சரியான கலியனப்பா நீ' என்று பகவான் அவனுக்கு கலியன் (பலமுடையவன்) என்று பெயரிட்டார். பகவானின் நகைகளை மூட்டை கட்டி வைக்க அதை எடுத்துச் செல்ல முயன்றபோது மூட்டை கனமாக இருந்தது. என்னதான் முயன்றாலும் தரையை விட்டு எடுக்க வரவில்லை.

ரகாலன் 'யாரப்பா நீ மந்திரவாதியோ? என்ன மந்திரம் பண்ணி இதை இத்தனை கனமாக்கினாய், சொல்' என்று அதட்ட, நாராயணன் அவர் காதில் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துக்கள் கொண்ட ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தைச் சொன்னார். ஆழ்வார் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்க்க நாராயணன் தன் திரு உருவில் மனைவியுடன் கருடன் மேல் தரிசனம் தர அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது.

உடனே அவர் பாடிய பாசுரம்:

வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந்துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர் தம்மோடு
அவர்தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வதோர் பொருளால்
உணர்வெனும் பெரும்பதம் தெரிந்து
நாடினேன் நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே

திருமங்கையாழ்வாரின் பாசுரங்களின் அடிநாதம் நாராயணன் என்னும் நாமத்தைக் கண்டு கொண்டது. தின வாழ்வில் செல்வங்களையும் சுகங்களையும் தேடி அலைந்து விட்டு உணர்வால் அந்தப் பெயரின் கடவுள் தன்மையை அறிந்துகொள்ளும் ஒரு கண்டுபிடிப்பு. வியப்பும், கடந்தகாலத் தப்புகளுக்கு வருந்துவதும் அவர் பாடல்களில் இருக்கும். அவர் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதும் தெரியும். நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழி என்ற பிரிவில் ஏறக்குறைய 1100 பாடல்கள் பாடியுள்ளார். இது போக திருநெடுந்தாண்டகம், திருக்குறுந்தாண்டகம், பெரிய திருமடல், சிறிய திருமடல், திருவெழுகூற்றிருக்கை போன்றவைகளையும் இயற்றியுள்ளார். பின் சொன்னவை மூன்றும் பிரபந்தத்தின் இயற்பா என்னும் பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. நீண்ட பாடல்களாயினும் யாப்பிலக்கணப்படி மூன்றையும் மூன்று பாடல்களாகக் கணக்கிடுவதுதான் சரி. இதனால் திவ்யப்பிரபந்தம் மொத்தம் நாலாயிரம் பாடல்களுக்குக் குறைவு. இருந்தாலும் நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்று கூறுவதே வழக்கம். இதில் திருமங்கையாழ்வாரின் பங்கு கணிசமானது. எல்லா வகைப்பாடல்களையும் இயற்றியுள்ளார். எல்லா திவ்யதேசங்களையும் பாடியிருக்கிறார். வடநாட்டிலுள்ள திருவதரி (தேவப் பிரயாகை), திருப்பிருதி, நைமிசாரண்யம், பத்ரிகாசிரமம் இவைகளிலிருந்து துவங்கி தென்னாட்டுக் கோயில்கள் அத்தனையும் விட்டுவைக்காமல் ஊர் ஊராகச் சென்று பாடியிருக்கிறார். திருமங்கை மன்னனின் பாசுரங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்தே சில வைணவக் கோயில்களின் பழமை நமக்குத் தெரிகிறது. உதாரணம் திருவிடவெந்தை. சென்னைக்கு அருகே இருக்கும் அழகான கோயில். மகாபலிபுரம் போகும் வழியில் உள்ளது. அதைப் பாடியிருக்கிறார்


மானே கண்மடவார் மயக்கிற் பட்டு மானிலத்து
நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ் திருவேங்கட மாமலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே

மான்கண் பெண்களின் மோகத்தில் நான்கு விதமான பாவங்களும் செய்தேன்.
திருமங்கையாழ்வாரின் பல பாடல்களில் இவ்வகையான பாவமன்னிப்புக் கோரும் repentant தொனியைப் பார்க்கலாம்.

வைணவக் கருத்துகளில் முக்கியமானது சரணாகதி தத்துவம். தான் செய்த தவறுகளை உணர்ந்து கடவுளிடம் சரணடைந்துவிட்டால் மன்னிப்பு கிடைக்கும் என்பதன் மறுபிரதியை மற்ற மதங்களிலும் காண்கிறோம்.

திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது ஒன்று.

கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே

காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து யாசகம் கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை. வேங்கடப் பெருமானே உன்னை வந்தடைந்து விட்டேன் என்னை ஆட்கொள்வாய்.

தந்தை தாய் மக்களே சுற்றமென்று உற்றவர் பற்றி நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழியெனக் கருதினாயேல்
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனான
மைந்தனர் வல்லவாழ் செல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே

தந்தை, தாய், உறவினர் போன்றவரைச் சார்ந்து நிற்கும் வாழ்க்கையை நீ ஒரு பந்தமாகக் கருதினாயானால் முடிவும், முதலும்-முதலுக்கும் முதலுமான திருமாலை வல்லவாழ் கோயிலில் சென்று அடையும் வழியைப் பார் நெஞ்சே!

ஊனிடைச் சுவர் வைத்து என்பு தூண் நாட்டி
உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும்போது உன்றன்
சரணமே சரணம் என்றிருந்தேன்.

மாமிசம் எலும்பு, உரோமம் இவைகளால் செய்யப்பட்டு ஒன்பது வாசல் வைத்த இந்தச் சரீரத்தை விட்டு உயிர் பிரியும்போது உன்னைச் சரணடைய வேண்டும் என்று இருக்கிறேன்

குலந்தரும் செல்வம் தந்திடும்
அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளோடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும்
பெற்ற தாயினும்ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமமே.

நாராயணா என்னும் நாமம் நல்ல சுற்றத்தைத் தரும். ஐசுவரியத்தைத் தரும். அடியவர்கள் படும் துயரங்களையெல்லாம் தரைமட்டமாக்கி (நிலந்தரம்), பரமபதத்தைக் கொடுக்கும் (நீள்விசும்பு), அருளோடு கைங்கரியம் என்னும் ஸ்தானத்தையும் கொடுக்கும், வலிமை கொடுக்கும், மற்றெல்லாம் தரும். பெற்ற தாயை விட அதிகமான பரிவைத் தரும். நல்லதே தரும் சொல் அது
(sourch-www.desikan.com)

No comments: