மூலவர்: எவ்வுள்கிடந்தான் (ஸ்ரீ வீரராகவ பெருமாள்)
பெரிய திருமொழி
1058
காசை ஆடை மூடி ஓடிக்* காதல் செய்தான் அவன் ஊர்*
நாசம் ஆக நம்ப வல்ல* நம்பி நம் பெருமான்*
வேயின் அன்ன தோள் மடவார்* வெண்ணெய் உண்டான் இவன் என்று*
ஏச நின்ற எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே.2.2.1
விளக்கம்:-
(எம் செல்லமான அண்ணன் ஸ்ரீராமரின் மனைவியான சீதையை இராவணன் கடத்தி சென்று) காவி ஆடையை மூடி (கொண்டு மறைந்து ஒளிந்து) ஓடி காதல் செய்தான். அவனோட ஊரான (இலங்கையை) நாசம் ஆகும்படி (அழித்த என்றுமே நாம்) நம்ப தகுந்த இறைவனான நம்ம பெருமாள் (முன்பு கண்ணனாக அவதாரம் எடுத்து சிறிய வயதில் லூட்டி அடிச்சிக்கிட்டு அங்கிருப்பவர்களின் வீடுகளில் புகுந்து வெண்ணையை திருடி உண்டான். இதை பார்த்த) மூங்கில் போல (வழ வழன்னு அழகா இருக்கிற) அன்ன பறவை (போல மென்மையான தோள்களையுடைய இளமையான பொண்ணுங்க! (தோ இவன்தான்) வெண்ணை (திருடி) உண்டான் என்று (கேலி) பேச நின்ற எம்பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.
1059
தையலாள் மேல் காதல் செய்த* தானவன் வாள் அரக்கன்*
பொய் இலாத பொன் முடிகள்* ஒன்பதோடு ஒன்றும்* அன்று
செய்த வெம்போர் தன்னில்* அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள*
எய்த எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.2
விளக்கம்:-
(அழகான) பெண்ணான (சீதையின்) மேல் காதல் செய்த அசுரனும், (கையிலே கூரான) கத்தியை (வைத்திருக்கும்) அரக்கனுமான (இராவணனின்) உண்மையான (சுத்த) பொன்னால் (செய்யப்பட்ட கிரீடத்தை வைத்திருக்கும் அவனது) பத்து தலைகளையும் , முன்பு செய்தகொடிய போரில் (எங்க அண்ணன் ) இராமர் (சென்று) அங்கு ஒரே ஒரு
(அனல் பறக்கும்) சிவந்த அம்பினால் (அவனது பத்து தலைகளும் அறுத்து கீழே தரையில் கோலி உருட்டுவது போல) உருள விட்ட என் தந்தை எம்பெருமாள் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.
1060
முன் ஓர் தூது* வானரத்தின் வாயில் மொழிந்து* அரக்கன்
மன் ஊர் தன்னை* வாளியினால் மாள முனிந்து* அவனே
பின் ஓர் தூது* ஆகி மன்னருக்கு ஆகிப் பெரு நிலத்தார்*
இன்னார் தூதன் என நின்றான்* எவ்வுள் கிடந்தானே*2.2.3
விளக்கம்:-
முன்பு ஒரு செய்தியை ஆஞ்சனேயரிடம் கூறி (இராவணனிடம் தெரிவித்து விட்டு வருமாறு தூது அனுப்பியவனும்) , அரக்கன் (இராவணனின்) சிறந்த ஊரான (இலங்கையை நச் நச்ன்னு கூரான) அம்பினால் கோபப்பட்டு அழித்த (எங்கள் அன்பு அண்ணன் இராமன்) அவனே பின்பு ஓர் தூதனாகி, (அதாவது தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் முதலான பஞ்ச பாண்டவ) மன்னருக்கு தூதனாகி, பெரும் நிலத்தை உடைய (செல்வந்தன் கொடுமைகாரன் அந்த) துரியோதனிடம் தான் பாண்டவர்களின் தூதன் என (கூறி) நின்றான் (என் அண்ணன் கண்ணன் திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.
1061
பந்து அணைந்த மெல் விரலாள்* பாவை தன் காரணத்தால்*
வெந்திறல் ஏறு ஏழும் வென்ற* வேந்தன் விரி புகழ் சேர்*
நந்தன் மைந்தன் ஆக ஆகும்* நம்பி நம் பெருமான்*
எந்தை தந்தை தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.4
பாசுர விளக்கத்திற்கு முன் கண்ணனின் மாமன் மகள்
அழகான பொண்ணு நப்பின்னை பற்றி தெரிந்து கொள்ளலாமா!:__
கண்ணனின் மாமன் மகள் நப்பின்னை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள் மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் நப்பின்னையை திருமணம் செய்ய விரும்பி ஏழு முரட்டு எருதுகளை அடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான். நப்பின்னை - கடல்தாயின் அம்சம் - நீளா தேவி
இன்னொரு கதையும் பார்க்கலாமே பாசுர விளக்கத்திற்கு முன், கண்ணன் நந்த கோபரின் வளர்ப்பு மகன் ஆனது எப்படி?
மதுரா நகரத்தின் அரசனான கம்சன் தன் தங்கையான தேவகிக்கு வயது வந்தவுடன் யதுகுலத்தவரான வசுதேவருக்கு அவளை மணமுடித்தான். திருமணம் முடிந்து தானே மணமக்கள் இருவரையும் தேரில் வைத்து மதுரா நகரின் சாலைகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றான். அப்போது திடீரென கம்சனின் செவிகளில், எந்தத் தங்கையை அரசன் ஊர்வலமாகக் கொண்டு செல்கின்றானோ, அதே தங்கையின் வயிற்றில் பிறக்கக்கூடிய எட்டாவது குழந்தை அரக்க சுபாவம் கொண்ட அந்த அரசனை கொல்லப் போகின்றது எனும் வார்த்தைகள் ஒலித்தன. அதைக் கேட்ட அரசன், தங்கை என்றும் பாராமல் உடனே தேவகியைக் கொல்ல முற்பட்டான். வசுதேவர், பிறக்கும் குழந்தைகளை உனக்கே தந்துவிடுகிறேன் ஆனால் என் மனைவியை ஒன்றும் செய்துவிடாதே, எனக் கம்சனிடம், கெஞ்சினார். அதற்கு மனம் இளகிய கம்சன், அவர்கள் இருவரையும் கொல்லவில்லை ஆனால் அதற்கு பதிலாக அவர்களைச் சிறையில் அடைத்து வைத்தான். குழந்தைகள் பிறக்கப் பிறக்க அவற்றை ஒவ்வொன்றாக கொல்லவும் செய்தான். பல ஆண்டுகளாக இது தொடர தேவகி எட்டாவதாக ஒரு ஆண் குழந்தையை பெற்றாள். இந்த குழந்தையும் கம்சனால் கொல்லப்படும் என்று பயந்து தேவகியின் கணவர் வாசுதேவர் இரவோடு இரவாக பால கிருஷ்ணரை நந்த குலத்திற்கு எடுத்து சென்றார் வசுதேவர்.விழித்திருந்த காவலர்கள் அனைவரும் மாயையால் உறங்கினர்; சிறைக்கதவுகள் தானாக திறந்து கொண்டன. வெள்ளம் கரை புரண்டு பய்ந்த யமுனை நதி இரண்டாகப் பிளந்து வசுதேவருக்கு பாதை அமைத்தது. மழையிலிருந்து கண்ணனைக் காப்பாற்ற ஆதி சேஷன் வந்து குடைப் பிடித்தான்.பெண் குழந்தை பெற்ற யசோதை தன் உணர்வின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். கண்ணனை அங்கு விட்டு, வசு தேவர் அந்த பெண் குழந்தையை எடுத்து சிறை திரும்பி வந்தார்; சிறைக்கதவுகள் பூட்டிக் கொண்டன. மாயை விலகி காவலர்கள் விழித்துக் கொண்டனர். அந்தக் குழந்தை அழுதது. குழந்தை பிறந்த செய்தி மன்னனுக்கு பறந்தது. ஆசையுடன் வரவேண்டிய தாய் மாமன் ஆயதத்துடன் வந்தான். ஈவு இரக்கமில்லாமல் பெண் குழந்தை என்றும் பாராமல் கொல்ல முற்பட்டான் . குழந்தை அம்மன் சக்தி வடிவமாக வானத்தில் நின்று உன்னைக் கொல்லப்பிறந்தவன் கோகுலத்தில் உள்ளான் என்னும் உண்மை நிலை உணர்த்தி மறைந்தது. அதன் பின் யசோதையும் நந்தகோபரும் கண்ணனை தன் குழந்தை போல பாசமாக வளர்த்தனர்
விளக்கம்:-
பூ சுற்றி வைத்துள்ள பந்து வைத்திருப்பது (போல) மிருதுவான விரல்களை (உடைய அழகான) பெண் (நப்பின்னையை கல்யாணம் செஞ்சுக்க வேண்டும் என்ற) காரணத்தினால் கொடிய (மூர்க்க தனமான) ஏழு ஆண் எருதுகளை (அடக்கி) வென்ற ராசா (என் அண்ணன் கண்ணன்) எங்கும் பெரும் புகழ் சேரும் (கோகுலத்தில் வசிக்கும்) நந்தனின் (வளர்ப்பு) மகன் ஆக ஆகியவன் (என்றுமே) நம்ப தகுந்தவன் நம் பெருமான் என் தந்தைக்கு தந்தை (தொண்டு செய்து வழிபட்ட) தம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.
1062
பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு* பண்டு ஆல் இலை மேல்*
சால நாளும் பள்ளி கொள்ளும்* தாமரைக் கண்ணன் எண்ணில்*
நீலம் ஆர் வண்டு உண்டு வாழும்* நெய்தல் தண் கழனி*
ஏல நாறும் பைம் புறவில்* எவ்வுள் கிடந்தானே* 2.2.5
விளக்கம்:-
வெகு காலத்திற்கு முன்பு (பிரபஞ்சமே பெரிய அழிவுக்கு உண்டான போது பரம்பொருளான இறைவன் கண்ணன்) குழந்தை ஆகி ஏழு உலகங்களையும் (அப்படியே அல்வா சாப்பிடறா மாதிரி விழுங்கி) உண்டு ஆலமரத்து இலையின் மேலே வெகு நாட்களாக (தேவர் முனிவர் பிரபஞ்சம் என யாருக்கும் எந்த ஆபத்தும் நெருங்காதவாறு தனது வயிற்றுக்குள் சுமந்து கொண்டு ஹாயாக) படுத்து கொள்ளும், தாமரை (மலர் போல அழகான கண்களை உடைய என் அண்ணன்) கண்ணன் (அழகான) எண்ணற்ற நீல நிறமுடைய வண்டுகள் (தேனை) உண்டு வாழும் லில்லி மலர்கள் (சூழ்ந்த) குளிர்ந்த வயல்வெளிகளும்., நல்ல வாசனை உடைய பசுமையான பயிர்கள் வளர்ந்த ( நிலமும் உடைய திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.
1063
சோத்த நம்பி என்று* தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்*
ஆத்த நம்பி செங்கண் நம்பி* ஆகிலும் தேவர்க்கு எல்லாம்*
மூத்த நம்பி முக்கண் நம்பி என்று* முனிவர் தொழுது*
ஏத்தும்* நம்பி எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.6
விளக்கம்:-
(நல்ல குணங்களை கொண்டவரே) வணங்குகிறோம் இறைவா! என்று தொண்டர்கள் வலிமையுடன் தொடர்ந்து அழைக்கும், (அனைவரும்) விரும்பும் இறைவன், சிவந்த கண்களையுடைய (அழகான) இறைவன், (இப்படிபட்ட சிறப்புகளை உடையவன்
என் அண்ணன் கண்ணன்), ஆகிலும் (அவனை பார்த்து) தேவர்க்கு எல்லாம் மூத்த இறைவனே , மூன்று கண்களுடைய (சிவனுக்கும்) இறைவனே என்று முனிவர்கள் தொழுது போற்றும் இறைவன், எம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.
1064
திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி* திசை முகனார்*
தங்கள் அப்பன் சாமி அப்பன்* பாகத்திருந்த* வண்டுண்
தொங்கல் அப்பு நீள் முடியான்* சூழ் கழல் சூட நின்ற*
எங்கள் அப்பன் எம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.7
விளக்கம்:-
(பரம்பொருளான இறைவன்) நிலவு நீர் வானம் நெருப்பு காற்று (முதலிய பஞ்ச பூதங்கள்)ஆகியவன், (அதுமட்டுமில்லாமல்) நான்கு முகங்களை உடைய பிரம்மனுக்கு அப்பன், சாம வேதங்களின் (ஹீரோவான) பொன் அப்பன், (என் அண்ணன் கண்ணனின் அழகான திருமேனியில் ஒரு) பாகத்தில் இருக்கும் (அது சரி பெருமாள் திருமேனியில் ஒரு பாகத்தில் இருப்பது யாரு? மகாலட்சுமி என்று நினைத்து இருப்பீர்களே! ஹி! ஹி! இன்னொருத்தர் அவர்! யார் தெரியுமா! இதோ!)வண்டுகள் (தேனை விரும்பி உண்ணக்கூடிய அழகான கொன்றை) பூமாலை (அணிந்து கங்கை) நீர் (சூடிய) நீளமான முடியுடைய (அன்புள்ளம் கொண்ட ஈசனின் தலையில் (பெருமாளின் பாதம் இருக்கிறதே! அடடே! என்ன ஒரு பாக்கியம் ஈசனுக்கு, கொடுத்து வச்சவருப்பா! நம்ம அன்பு சிவன், அது கூட தலையில் ஒரு பகுதி மட்டுமல்ல எங்கும் ) சூழ்ந்து (இருக்குமாறு தனது திரு) பாதத்தை சூட நின்ற எங்கள் அப்பன் எம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.
1065
முனிவன் மூர்த்தி மூவர் ஆகி* வேதம் விரித்து உரைத்த
புனிதன்* பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர் கோன்*
தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும்* தன் அடியார்க்கு
இனியன்* எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.8
விளக்கம்:-
(பரம்பொருள் இறைவன்) பெருமாளே! (சிவன், பிரம்மன், பெருமாள் என) மூன்று மூர்த்திகளாகி (என்னாது பெருமாளே பெருமாள் ஆகி! என்று சொல்றாரா ஆழ்வார்!! என்றுதானே நினைக்கிறீங்க!.ஹி! ஹி! ஆமாங்க! அவனே அவனும் ஆகி, SO பெருமாளே மூன்று மூர்த்திகளாகி) வேதத்தை விரிவாக (விளக்கி) சொன்ன புனிதமானவன், காய மலர் போல (நீல) வண்ணமுடையவன், பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய (அண்ணல் என் அண்ணன் கண்ணன்), நல்ல செயல்களையே செய்யும் (புண்ணியன்), வானவர்களுக்கு அரசன், தனி ஒருவன் (யாருக்கும் ஒப்பில்லாதவன்) யாராலும் முழுவதும் அறியமுடியாதவன், (இறைவன்) தான் ஒருவனே ஆகிலும், தன் அடியார்க்கு இனிமையானவன், என் தந்தை, எம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.
1066
பந்து இருக்கும் மெல் விரலாள்* பாவை பனி மலராள்*
வந்து இருக்கும் மார்வன்* நீலமேனி மணிவண்ணன்*
அந்தரத்தில் வாழும்* வானோர் நாயகனாய் அமைந்த*
இந்திரற்கும் தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*2.2.9
விளக்கம்:-
பூ சுற்றி வைத்துள்ள பந்து (போல) இருக்கும் மென்மையான (அழகான) விரலுடைய பெண்ணும், குளிர்ந்த தாமரை மலர் (மேல அமர்ந்திருக்கும்) பெண் (அட யாருப்பா இவ்ளோ அழகான்னு கேட்கிறீங்களா! ஹி ஹி மகாலட்சுமி) வந்து (தங்கி) இருக்கும் மார்பை உடையவனும், நீல (நிற அழகான திரு) மேனி ( உடைய நீல)மணி வண்ணன் (செல்லகுட்டி என் அண்ணன் கண்ணன் அதுமட்டுமில்ல) வானத்தில் வாழும் (சூரியன், நிலா, மழை மற்றும் பல) தேவர்களுக்கு தலைவனாய் அமைந்த இந்திரருக்கும் (இறைவன்) தம் பெருமான் (திருவள்ளூர் என்ற திரு)எவ்வுளில் படுத்து கொண்டிருக்கிறானே.
1067
இண்டை கொண்டு தொண்டர் ஏத்த* எவ்வுள் கிடந்தானை*
வண்டு பாடும் பைம் புறவின்* மங்கையர் கோன் கலியன்
கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை* ஈர் ஐந்தும் வல்லார்*
அண்டம் ஆள்வது ஆணை* அன்றேல் ஆள்வர் அமரர் உலகே*2.2.10
விளக்கம்:-
(பூ மற்றும் துளசி முதலிய) மாலைகள் கொண்டு தொண்டர்கள் போற்றி (வழிபடும் திருவள்ளூர் என்று திரு) எவ்வுளில் படுத்து கொண்டிருப்பவனை வண்டுகள் பாடும் பசுமையான வயல்கள் (சூழ்ந்த) திருமங்கை (நாட்டு) மன்னன் போர்வீரனான (திருமங்கை ஆழ்வான்) நேர்த்தியான அழகு கொண்ட குளிர்ந்த தமிழால் செய்த மாலை இரண்டு ஐந்தும் (என்னை போலவே உருக்கமாக பெருமாள் மேல் அன்பு கொண்டு பக்தியோடு சொல்ல) வல்லவர்கள் உலகம் ஆள்வது ஆணை அப்படி இல்லை என்றால் ஆள்வார்கள் தேவர் உலகே.
உற்சவர்: ஸ்ரீ வைத்திய வீர ராகவ பெருமாள்
திருமங்கை ஆழ்வார் பாடிய எவ்வுள் தற்போது காலமாற்றத்தால் திருவள்ளூர் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் உள்ள சென்னையிலிருந்து 30 Km தொலைவில் திருவள்ளூர் அமைந்துள்ளது.
இங்கு பெருமாள் ஆதிசேஷன் மேல் படுத்த கோலத்தில் அழகாக காட்சியளிக்கிறார். பெருமாளின் பெயர் வீரராகவர். மக்களின் நோய்களை அடியோடு நீக்குபவர் ஆதலால் அன்போடு ஸ்ரீ வைத்திய வீரராகவர் என்று அழைக்க படுகிறார். தாயார் கனகவல்லி தாயார் .
திருமங்கை ஆழ்வார் பாடிய திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாளின் 10 பாசுரங்களின் தூய தமிழில் சொற்பொருள் .
மடவார் - இளமையுடைய பெண்
வேய் – மூங்கில்
தையலாள் - பெண்
தானவன் - அசுரன்
வாள் - ஒளி, கத்தி
பொய் இலாத - உண்மையான
முடிகள் - தலைகள்
வெம் - கொடிய
செஞ்சரம் எய்த - சிவந்த அம்பு விட்ட
எந்தை - என் தந்தை
தூது - செய்தி தெரிவிக்கும் பணி
மன் - சிறந்த
வாளி - அம்பு
வானரம் - குரங்கு, அனுமன், ஆஞ்சநேயர்
மொழிந்து - கூறியது
மாள - இறக்க
முனிந்து – சினந்து , வெறுத்து
பெருநிலத்தார் - அதிகமான நிலம் உடைய பணக்காரன், துரியோதனன்
இன்னார் - தன்னை யாரென்று அறிமுகபடுத்தி கொள்ளுதல்
பந்து அணைந்த - பந்தை தழுவிய (போல)
மெல் - மிருதுவான, மென்மையான, மெல்லிய
பாவை - பெண்
வெந்திறல் - கொடிய திறமை
ஏறு - ஆண் எருது
வேந்தன் - அரசன், மன்னன்
விரி புகழ் - பெரும் புகழ்
பண்டு - வெகு காலம் முன்பு, மிகவும் பழமை வாய்ந்த
ஆல் - ஆலமரம்
சால - மிகவும்,ரொம்ப
நாளும் - நாட்களாக
பள்ளி - படுத்து
எண்ணில் - எண்ணற்ற
ஆர் – பொருந்திய, ஒலி
நெய்தல் - நீரில் பூக்கும் வெள்ளை, நீல நிற லில்லி மலர்கள் உள்ள இடம் (ஆம்பல்)
தண் - குளிர்ந்த
கழனி - வயல் வெளி
ஏல - பொருந்த, இயல
நாறும் - நல்ல மணமிக்க
பைம் - பசுமை
புறவு - காடு, முல்லை நிலம், பயிர்கள் வளர்ந்த நிலம்,
சோத்தம் - வணக்கம்
மிண்டி - வலிமை
ஆத்தன் - விருப்பமானவன்
செங்கண் - சிவந்த கண்கள்
முக்கண் - சிவபெருமான்
நம்பி - இறைவன், நம்ப தகுந்தவர்
திங்கள் - நிலவு
அப்பு - நீர், அப்பா, அன்பாக கூறுவது
வான் - வானம்
எரி - நெருப்பு
கால் - காற்று
திசைமுகனார் - பிரம்மன், நான்கு முகங்களை கொண்டவர்
அப்பன் - தந்தை
சாமி - பொன் , சாமவேதம், இறைவன்
தொங்கல் - பூமாலை
நீள் - நீளமான
சூழ் - சுற்றி
கழல் - பாதம், திருவடி
சூட - அணிந்த
முனிவன் - இறைவன்
மூர்த்தி மூவர் - பிரம்மன், சிவன், திருமால்
அண்ணல் - வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரியவர், தலைவன்
புண்ணியன் - நற்செயல்களை செய்பவன்
கோன் - அரசன்
தனியன் - தனி ஒருவன், ஒப்பில்லாதவன் தனக்கு இணையாக யாரும் இல்லாதவன்
சேயன் - அறிய முடியாதவன், முருகன்
பந்து - பூவை சுற்றி விட்டு இருப்பது, உருண்டை வடிவம்
பனிமலர் - குளிர்ந்த இடத்தில பூக்கும் மலர், தாமரை
அந்தரம் - நடுவெளி, ஆகாயம்
நாயகன் - தலைவன்
இண்டை - மாலை
ஏத்த - போற்ற
கலியன் - போர்வீரன்
சீர் - அழகு, நேர்த்தி,செய்யுளில் ஒரு வகை வரிசை
தண் - குளிர்ந்த
செய் - செய்த
அண்டம் - உலகம்
அன்றேல் - இல்லை என்றால் , வேண்டாம் என்றால்
அமரர் - வானோர் தேவர்
சரணு சரணு சரணு சரணு ஸ்ரீ வைத்திய வீரராகவர் திருவடியே சரணம்.
ஸ்ரீ வைத்திய வீரராகவருக்கு சமர்ப்பணம். கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!
4 comments:
டாக்குட்டர் வீரராகவனைப் பற்றிய இடுகை அருமை.
நேரம் இருக்கும்போது இந்தச் சுட்டியிலும் கொஞ்சம் பாருங்க.
http://thulasidhalam.blogspot.com/2009/12/blog-post.html
கரீட்டா சொன்னீங்க டாக்டர் பெருமாள்னு. உங்க பதிவையும் பார்த்தேனுங்க! இனிமை
கலியன் திருப்பாசுரங்களில் சிலவற்றையே படித்திருக்கிறேன்; நிறைய படிக்க வேண்டும் என்று எண்ணினாலும் நேரம் எடுத்துக் கொண்டு படிக்க இயலாத போது உங்கள் பதிவுகளில் தொடர்ந்து படித்துச் சுவைக்கக் கிடைக்கிறது. நன்றி இராஜேஷ்.
அடடே! ரொம்ப நன்றி குமரன் சார்!
Post a Comment