பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Thursday, December 30, 2010

எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனேதிருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி


1068
வில் பெரு விழவும் கஞ்சனும் மல்லும்* வேழமும் பாகனும் வீழச்*
செற்றவன் தன்னை புரம் எரி செய்த* சிவன் உறு துயர் களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு பார்த்தன் தன் தேர் முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துரந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.1


வில் பெரு விழவும் - பெரிய வில் விழாவும்
கஞ்சனும் - (அதை நடத்திய) கம்சனும்,
மல்லும் வேழமும் பாகனும் - மல்யுத்த வீரர்களும் யானையும், யானை ஓட்டுபவனும்
வீழச் செற்றவன் தன்னை - (கீழே) விழ அழித்தவன்
புரம் எரி செய்த சிவன் உறு துயர் களை தேவை - திரிபுரம் எரிக்க செய்த சிவனின் துன்பம் நீக்கிய தேவனும்
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு - எதிரிகள் அழியுமாறு சாட்டை கையில் கொண்டு
பார்த்தன் தன் தேர் முன் நின்றானை - அர்ச்சுனன் தேர் முன் நின்றவனை
சிற்றவை பணியால் முடி துரந்தானைத் - சின்னம்மா உத்தரவால் அரச பதவியை விட்டு கொடுத்தவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிகேணியில் கண்டேனே

விளக்கம்:-
(பெரிய வில் விழாவை (நடத்திய) கம்சனும், (கம்சன் அனுப்பிய) வலிமை வாய்ந்த வீரர்களும் ,யானையும், பாகனும் (கீழே மண்ணை கவ்வுமாறு) விழ (செய்து) அழித்தவன் கண்ணன் (ஹே சூப்பரு !), திரிபுரம் எரிக்க செய்த (நம் அன்பு) சிவன் (திரிபுர அசுரர்களை கொல்ல முடியாமல் தவிக்க அவருக்கு ஏற்பட்ட) துன்பத்தை நீக்கிய தேவனை
,கௌரவர்களான) எதிரிகள் அழிய) (எவனா இருந்தாலும் வாங்கடா! என்பது போல தில்லா!) கையில் சாட்டை கொண்டு அர்ச்சுனன் தேரில் முன் நின்றவனை, (தனது) சின்னம்மா கைகேயியின் கட்டளையால் அரச பதவியை (ஏற்காமல்) விட்டு கொடுத்தவனை திருவல்லிக்கேணியில் கண்டேனே. (Hey Hey jolly)


பாசுர விளக்கத்திற்கு ஏற்ற கண்ணனின் ஐந்து உண்மை கதைகளை பார்ப்போமா!

முதல் கதை
கொடிய அரக்கன் கம்சன் தங்கை தேவகியின் வயிற்றில் பிறக்கக்கூடிய எட்டாவது குழந்தை அரக்க சுபாவம் கொண்ட அந்த அரசனை கொல்லப் போகின்றது என்பதை முன்பே அறிந்து. குழந்தைகள் பிறக்கப் பிறக்க அவற்றை ஒவ்வொன்றாக கொல்லவும் செய்தான். பல ஆண்டுகளாக இது தொடர தேவகி எட்டாவதாக ஒரு ஆண் குழந்தையை பெற்றாள். தேவகியின் எட்டாவது குழந்தையை இந்த குழந்தையும் கம்சன் கொள்வான் என் பயந்து யாருக்கும் தெரியாமல் நந்த குலத்தில் உள்ள நந்தகோபரின் வீட்டிற்கு எடுத்து சென்றார்.
கம்சன் தன்னை கொள்ளும் ஒருவன் பிறந்து விட்டன என்பதை தெரிந்து கொண்டு அவனை கொல்ல பல திட்டங்களை போட்டான். அனைத்தும் தோல்வியில் முடிந்து கம்சனும் கண்ணனால் கொல்லபட்டான்.

இரண்டாம் கதை
கம்சன் வில் யாகம் ஒன்று நடத்தினான். அதற்க்கு கண்ணன் வர வேண்டும் என் அழைப்பு விடுக்க கண்ணனும் வந்தான். வில் யாகம் நடக்கிறது என்பதை உணர்த்துவதற்காக யாராலும் தூக்க முடியாத மிகவும் கனமான வில் ஒன்று வைத்திருந்தான்.. அதை பார்த்த கண்ணன் காவலர்களின் பேச்சை எல்லாம் சட்டை செய்யாமல் இடது கையில் Easyaa தூக்கி ஓடித்தான் . இந்த விஷயம் கம்சன் அறிந்த பின்பு கண்ணனின் வலிமையை கண்டு மிரண்டு போனான்


மூன்றாம் கதை
திருதராஷ்டினின் மகன்கள் கௌரவர்கள். திருதராஷ்டினின் தம்பி பாண்டுவின் மகன்கள் பாண்டவர்கள். கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடைப்பட்ட போரில் நல்லவர்களான பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் துணை இருந்தார், (பாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனனுக்கு தேர் பாகனாக இருந்து உதவி செய்தார்)

நான்காம் கதை
சிவபக்தர்களான மூன்று அசுரர்கள் கடுமையாக தவம் புரிந்து வரமாக மூன்று பறக்கும் நகரங்களை பெற்றனர் . திரிபுரம் என்று அழைக்கப்பட்டது.பறக்கும் கோட்டைகள் மூன்றும் மிகவும் பிரகாசமாக ஒளிர்ந்தன. அவை பறக்கும்போது விண்ணிலும் மண்ணிலும் பலருக்கும் அவதி. பூமியில் இறங்கினாலோ மானிடருக்குக் கஷ்டம். விண்ணில் இறங்கினாலோ தேவர்கள் அனைவரும் படாத பாடு படுவார்கள்.. இதனால் சிவபெருமான் திரிபுரத்தை எரித்து அழித்தார். ஆனால் திரிபுர அரக்கர்களை கொல்ல முடியமால் போகவே சிவபெருமான் மிகவும் வருந்தினார் பெருமாள் அம்பாக மாறி சிவனுக்கு உதவி புரிந்தார்
அரக்கர்கள் கொல்ல பட்டனர்.

ஐந்தாம் கதை
தசரதனின் முதல் மனைவியான கோசலை மகன் இராமர். இரண்டாம் மனைவி (இராமருக்கு சிற்றன்னை ஆன) கைகேயி, அவளது மகன் பரதன். தசரதன் இராமன் மன்னனாக இருக்க முடிவு செய்ய கைகேயி சூழ்சிக்கார பெண் மந்தரை பேச்சை கேட்டு இராமரை காட்டுக்கு அனுப்பி தன் மகன் பரதனை மன்னனாக இருக்க ஏற்பாடு செய்தாள் .
1069
வேதத்தை வேதத்தின் சுவைப் பயனை* விழுமிய முனிவர் விழுங்கும்*
கோது இல் இன் கனியை நந்தனார் களிற்றைக்* குவலயத்தோர் தொழுது ஏத்தும்*
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை* ஒப்பவர் இல்லா
மாதர்கள் வாழும்* மாட மா மயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.2

வேதத்தை - வேத சொருபமானவனை
வேதத்தின் சுவைப் பயனை - வேதத்தின் சுவை பயனை தருபவனை
விழுமிய முனிவர் விழுங்கும் - உயர்ந்த முனிவர் விழுங்கும்
கோது இல் இன் கனியை - குற்றம் இல்லாத இனிய கனியை
நந்தனார் களிற்றைக் - நந்தகோபலனின் மகன் யானையை போன்றவனை
குவலயத்தோர் தொழுது ஏத்தும் - பூமியில் உள்ளோர் வணங்கி போற்றும்
ஆதியை அமுதை என்னை ஆள் உடை அப்பனை - ஆதியை அமுதை என்னை அடிமை கொண்ட அப்பனை
ஒப்பவர் இல்லா மாதர்கள் வாழும் - ஒப்பில்லாத பெண்கள் வாழும்
மாட மா மயிலைத் - மாடங்கள் சூழ்ந்த மா மயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனேவிளக்கம்:-
வேத ( சொருபமானவனை ) வேதங்களில் (அவரவர் விருப்பங்களின் படி பலன்கள் சொல்லப்பட்டு இருப்பதால் அவரவர் விருப்ப) சுவைக்கு (ஏற்றபடி) பயன் (தருபவனை) , சிறந்த உயர்வான முனிவர்கள் விழுங்கும் குற்றமே இல்லாத இனிய கனியை, நந்தகோபலரின் (செல்ல குட்டி பையன் வலிமையான) யானையை போன்றவனை,பூமியில் உள்ளவர்கள் (அன்போடும், பாசத்தோடும்) வழிபட்டு போற்றும் முழுமுதல் கடவுளை, (தித்திக்கும் தேன்) அமுதை, என்னை அடிமை கொண்ட அப்பனை, (தனக்கு) இணையானவர்கள் யாருமே இல்லாத (அழகான) பொண்ணுங்க வாழும் மாடங்கள் (சூழ்ந்த மயிலாப்பூர் என்ற) மாமயிலை (அருகில் உள்ள) திருவல்லிக்கேணியில் கண்டேனே. (Hey Hey jolly)
1070
வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி* வந்த பேய் அலறி மண் சேர*
நஞ்சு அமர் முலை ஊடு உயிர் செக உண்ட நாதனைத்* தானவர் கூற்றை*
விஞ்சை வானவர் சாரணர் சித்தர்* வியந்து துதி செய்யப் பெண் உரு ஆகி*
அஞ்சுவை அமுதம் அன்று அளித்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.3

வஞ்சனை செய்யத் தாய் உரு ஆகி - விசமத்தனம் செய்ய யசோதை உருவம் ஆகி
வந்த பேய் அலறி மண் சேர - வந்த பேய் அலறி தரையில் விழும்படி
நஞ்சு அமர் முலை ஊடு - விஷம் தடவிய முலை வழியாக
உயிர் செக உண்ட நாதனைத் - உயிர் ஒழியும்படி (முலை பாலை) உண்ட இறைவனைத்
தானவர் கூற்றை - அரக்கர் எமனை
விஞ்சை வானவர் சாரணர் சித்தர் - மேலோங்கிய வானவர் முனிவர் சித்தர்
வியந்து துதி செய்யப் பெண் உரு ஆகி - ஆச்சர்யபட்டு வழிபாடு செய்ய பெண் உருவம் ஆகி
அஞ்சுவை அமுதம் அன்று அளித்தானைத் - இனிய சுவை அமுதம் அன்று அளித்தவனைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே .

விளக்கம்:-
(கம்சன் கண்ணனை அழிக்க அனுப்பிய அரக்கி) நம்ப செய்து (கண்ணனுக்கு தீமை) செய்ய ) அம்மா (யசோதை) போல உருவம் மாறி வந்த பேய் (பூதனை ஆ! என்று பயங்கரமாக) அலறி மண்ணை கவ்வுமாறு , விஷம் தடவிய (மார்பக) முலை வழியாக (நம்ம செல்ல குழந்தை கண்ணன் பாலை குடிப்பது போல அந்த பேயின் உயிர் ஒழிய (முலை பாலை) உண்ட இறைவனை, அரக்கர்களின் எமனை,மேலோங்கிய வானவர், முனிவர், சித்தர் (போன்றோர்) வியந்து (போற்றி) வழிபாடு செய்யும் (நம் பெருமாள் அன்று தீயவர்களான அசுரர்களுக்கு அமிர்தம் சேராமல் தேவர்களுக்கு கிடைக்க) பெண் போல (மோகினி) வடிவம் கொண்டு (அரக்கர்களை மயக்கி தேவர்களுக்கு) இனிய சுவை உடைய அமுதம் அன்று அளித்தவனை, திருவல்லிக்கேணியில் கண்டேனே. (Hey Hey jolly)


பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை பார்ப்போமா!

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்து கொண்டிருந்தது. அதனால் தங்கள் குலம் அழிந்துவிடுமோ என்று கவலைப்பட்ட தேவர்கள் தங்கள் குறையை பிரம்ம தேவரிடம் சென்று முறையிட்டனர், அவரும் தேவர்களை திருமாலிடம் அழைத்துச் சென்றார். பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வரும் அமிர்தத்தை உண்டால் மரணமில்லா பெருவாழ்வு எய்தலாம் என்று பெருமாள் கூற பாற்கடலை கடைந்து தேவர்களும் அசுரர்களும் எம் பெருமாளின் துணையோடு அமிர்தம் எடுத்தனர்


1071
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த* எழில் விழவில் பழ நடை செய்*
மந்திர விதியில் பூசனை பெறாது* மழை பொழிந்திடத் தளர்ந்து* ஆயர்
எந்தம்மோடு இன ஆநிரை தளராமல்* எம்பெருமான் அருள் என்ன*
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*2.3.4

இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த - இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த
எழில் விழவில் பழ நடை செய் - அழகான விழாவில் பழைய நடை முறைப்படி செய்ய
வேண்டிய
மந்திர விதியில் பூசனை பெறாது - மந்திரங்கள் சொல்லி விதிப்படி பூஜை பெறாது
மழை பொழிந்திடத் தளர்ந்து - மழை பொழிந்திட துன்பப்பட்டு
ஆயர் எந்தம்மோடு இன ஆநிரை தளராமல் - ஆயர் எங்களோடு கூட்டமாக உள்ள பசுக்களும் துன்பபடாமல்
எம்பெருமான் அருள் என்ன - எம்பெருமானே அருள் என்று வேண்ட
அந்தம் இல் வரையால் மழை தடுத்தானைத் - அளவில்லாத (மிக பெரிய) மலையால் மழை தடுத்தவனைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே.

விளக்கம்:-
இந்திரனுக்கு என்று ஆயர்கள் எடுத்த அழகான விழாவில் பழைய நடை (முறைப்படி) செய்யும் மந்திரங்கள் (ஓதி) விதி (முறைப்படி செய்ய வேண்டிய பூஜைகளை நம்
செல்ல கண்ணன் இந்திரனுக்கு செய்யாமல் கோவர்த்தன மலைக்கு செய்யுங்கள் என்று கூற இதனால் இந்திரன்) பூஜை பெறாமல் (கண்ணன் மற்றும் ஆயர்மக்கள் மேல் மிகுந்த கோபம் கொண்டு ஆலங்கட்டி) மழையை பொழிந்திட (இதனால் மிகவும்) துன்பப்பட்ட ஆயர் (மக்கள்) எங்களோடு கூட்டம் கூட்டமாக (இருக்கும்) பசுக்களையும் துன்பபடாமல் எம்பெருமானே அருள் (என்று) சொல்ல அளவில்லாத மிக பெரிய (கோவர்த்தன மலையை)ஒரு குடை போல Easyaa தூக்கி) மலையால் மழை தடுத்தானை திருவல்லிகேணியில் கண்டேனே. (Hey Hey . Jolly)

பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை பார்ப்போமா!
ஆயர்பாடி, இந்தியாவில் உத்திர பிரதேச மாவட்டத்தில் டில்லி ஆக்ரா ரயில் பாதையில் மதுராவிலிருந்து 12 Km தொலைவில் உள்ளது. பரம்பொருள் இறைவனான ஸ்ரீமன் நாராயணன் கிருஷ்ணா அவதாரத்தில் வாழ்ந்த இடம் ஆயர்பாடி . ஒரு சமயம் ஆயர்பாடி மக்கள் பழைய நடைமுறைப்படி பலவகையான படையல்களிட்டு இந்திரனைச் சிறப்பு செய்யும் இந்திர விழாவினை, செய்ய வரும்போது, தேவர்களின் தலைவன் என்ற கர்வம் இந்திரனுக்கு இருந்த படியால் நம் அன்பு கண்ணன் வீணாக இந்திரனுக்கு பூஜை செய்யாதீர்கள். அதற்க்கு பதில் பசுக்கள் பசிதீர புல் மேயும் கோவர்த்தன மலைக்குச் செய்யுமாறு ஆயர்களிடம் கூறினான். ஆயர்களும் அவ்வண்ணமே செய்ய,கோபமுற்ற இந்திரன், ஆயர்ப்பாடியில் பயங்கர ஆலங்கட்டி மழையை பொழிய செய்தான். மழையிலிருந்து ஆயர்களையும், பசு க்களையும் காக்க, சிறுவனான கண்ணன், கோவர்த்தன மலையையே குடையாய்ப் பிடித்து, அதனடியில் அனைவரையும் நிற்க வைத்து, ஆலங்கட்டி மழையிலிருந்து அனைவரையும் காத்தான். இறுதியாக, இந்திரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு, இறைவனிடம் மன்னிப்புக் கேட்டான்.

1072
இன் துணைப் பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன்* நல் புவி தனக்கு இறைவன்*
தன் துணை ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை* மற்றையோர்க்கு எல்லாம்
வன் துணை* பஞ்ச பாண்டவர்க்காகி* வாய் உரை தூது சென்று இயங்கும்
என் துணை* எந்தை தந்தை தம்மானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.5

இன் துணைப் - இனிய துணையான
பதுமத்து அலர்மகள் தனக்கும் இன்பன் - தாமரை மலர் மகள் அவளுக்கும் இன்பன்
நல் புவி தனக்கு இறைவன் - நல்ல பூமி அவளுக்கும் இறைவன்
தன் துணை - தனக்கு துணையான
ஆயர் பாவை நப்பின்னை தனக்கு இறை - ஆயர் பெண் நப்பின்னை அவளுக்கும் இறை
மற்றையோர்க்கு எல்லாம் வன் துணை - மற்றவர்களுக்கு எல்லாம் நீங்காத துணை
பஞ்ச பாண்டவர்க்காகி - பஞ்ச பாண்டவர்களுக்கு ஆகி
வாய் உரை தூது சென்று இயங்கும் - வாய் வார்த்தை தூது சென்று செயல்படும்
என் துணை - என் துணை
எந்தை தந்தை தம்மானைத் - என் அப்பாவுக்கு அப்பா வழிபட்ட இறைவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே

விளக்கம்:-
(தனக்கு) இனிய துணையான தாமரை மலரில் (பிறந்த) மகள் மகாலட்சுமிக்கும் இனிமையானவன், நல்ல (பொண்ணு பூமா தேவியான நம்) பூமிக்கும் இறைவன், தன்னையே துணையாக (உடைய) ஆயர் (குல பெண்ணும் கண்ணனின் மாமன் மகளும் ஆன) நப்பின்னைக்கும் இறைவன், மற்றுமுள்ள எல்லாருக்கும் என்றுமே நீங்காத துணையாய் (இருப்பவன் முன்பு கிருஷ்ணா அவதாரத்திலே தர்மன், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் போன்ற ) பஞ்சபாண்டவர்களுக்காக வாய் வார்த்தை (சொல்ல) தூது சென்று செயல்பட்டவனும், எனக்கு துணையானவனும், என் அப்பாவுக்கு அப்பா (எங்கள் குலமே வழிபட்ட) இறைவனைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே. (Hey Hey Jolly)
1073
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசர்க்கு இளையவன்* அணி இழையைச் சென்று*
எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது* எம் பெருமான் அருள் என்ன*
சந்தம் அல் குழலாள் அலக்கண் நூற்றவர் தம்* பெண்டிரும் எய்தி நூல் இழப்ப*
இந்திரன் சிறுவன் தேர் முன் நின்றானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.6

அந்தகன் சிறுவன் - குருடன் (மகன்) துரியோதனன்
அரசர் தம அரசர்க்கு - ராஜாதி ராஜாவுக்கு
இளையவன் - தம்பி (துச்சாசனன்)
அணி இழையை - அழகிய ஆபரணம் அணிந்தவளை
எந்தமக்கு உரிமை செய் எனத் - எங்களுக்கு அடிமை செய் என கூற
தரியாது - (அதனை) பொறுக்க முடியாமல்
எம்பெருமான் அருள் என்ன - எம்பெருமானே அருள் என்று வேண்ட,
சந்தம் அல் குழலாள் - அழகிய கறுத்த கூந்தலை உடையவள்
அலக்கண் - மனவருத்தத்தை
நூற்றவர் தம் - (கௌரவர்களான) நூறு பேரின்
பெண்டிரும் எய்தி நூல் இழப்ப - மனைவிகளும் அடைந்து தாலி இழக்க
இந்திரன் சிறுவன் - இந்திரன் மகன் (அர்ச்சுனன்)
தேர் முன் நின்றானை - தேர் முன் நின்றவனை
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே

விளக்கம்:-
குருடன் (திருதராஷ்டினின்) மகன் ராஜாதி ராஜாவான துரியோதனன் தம்பி (துச்சாசனன்) அழகான ஆபரணம் (அணிந்த பெண் திரௌபதியிடம்) சென்று எங்களுக்கு அடிமை செய் என (கூற திரௌபதி இதை) பொறுக்க முடியாமல் எம்பெருமானே அருள் (என்று) வேண்ட, அழகிய கறுத்த கூந்தலையுடைய (திரௌபதியின்) மன வருத்தம் (போக்கிய எம்பெருமான், பின்பு கௌரவர்ளுக்கும் பாண்டவர்களுக்கும் நடந்த போரில் கௌரவர்களான) நூறு பேரின் மனைவிகளும் (துன்பம்) அடைந்து தாலியை இழக்குமாறு (கௌரவர்களை அழிக்க எம்பெருமான்) இந்திரன் மகன் (அர்ச்சுனன் தேர் முன் (தேர் ஓட்டுபவனாக தில்லா) நின்றவனை திருவல்லிக்கேணியில் கண்டேனே. (Hey Hey Jolly)


பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை பார்ப்போமா!

கௌரவர்களின் தந்தையான குருடன் திருதராஷ்டினின் மகன் துரியோதனன். அவன் தம்பி துச்சாதனன் திருதராஷ்டினின் தம்பி பாண்டு மன்னனின் மனைவி குந்தியின் மகனான தருமர் அஸ்தினாபுரத்தில் துரியோதனிடம் சூதாட்டம் ஆடிய போது அனைத்தையும் இழந்தார். தன் மனைவி திரௌபதியையும் பணயம் வைத்து தோற்றார். திரௌபதி அவர்களுக்கு அடிமை ஆனதால் துச்சாதனன் திரௌபதியை அழைத்து நடு சபையில் புடவையை உரிக்க திரௌபதி என்ன செய்வது என்று தெரியாமல் கோவிந்தா! எனக்கு அருள் புரிவாய் என்று கைகளை தலை மேல் கூப்பி வேண்ட உடனே கண்ணன் திரௌபதியின் வருத்தம் போக்கி துச்சாதனன் புடவையை உரிக்க உரிக்க மீண்டும் மீண்டும் கண்ணன் அருளால் புடவை வளர்ந்து கொண்டே இருக்க துச்சாதனன் முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்தான். திரௌபதியின் துன்பத்தை நீக்கி மானம் காத்தான் நம் ஆனந்த கண்ணன்.

இந்திரன் சிறுவன் - இந்திரன் மகன் அர்ச்சுனன் (இதை பற்றிய ஒரு சிறு கதை)

முன்பு பாண்டு மன்னனுக்கு மனைவி குந்தியிடம் சேரகூடாது என்ற சாபம் இருக்கிறபடியால் துர்வாச முனிவர் உபதேசித்த மந்திர மகிமையால் எமனால் தருமரையும், வாயு தேவரால் பீமனையும், தேவர்களின் தலைவன் இந்திரனால் அர்ச்சுனனையும் பெற்றாள். என்பது புராண வரலாறு

1074
பரதனும் தம்பி சத்துருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்*
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற* இராவண அந்தகனை எம்மானை*
குரவமே கமழும் குளிர் பொழில் ஊடு* குயிலோடு மயில்கள் நின்றால*
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியாத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*2.3.7


பரதனும் தம்பி சத்துருக்கனனும் - *பரதனும் (அவன்) தம்பி சத்துருக்கனும்
இலக்குமனோடு மைதிலியும்*- லட்சுமனோடு ஸ்ரீ ராமர் மனைவி சீதையும்
இரவும் நன் பகலும் துதி செய்ய நின்ற - இரவும் பகலும் இடைவிடாது போற்றி புகழ்ந்து வழிபட நின்ற
இராவண அந்தகனை எம்மானை - இராவணனுக்கு எமனான எம் பெருமானை
குரவமே கமழும் குளிர் பொழில் ஊடு - குரவ மலர்கள் நறுமணம் வீசும் குளிர்ந்த சோலைகளிலே
குயிலோடு மயில்கள் நின்று ஆல - - குயில்களோடு மயில்கள் நின்று ஆரவாரம் செய்ய
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்து அறியாத் - சூரிய ஒலி கதிர்கள் நுழைய முடியாத
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே

விளக்கம்:-
பரதனும் அவன் தம்பி சத்துருக்கனனும், இலட்சுமனோடு ஸ்ரீ ராமரின் மனைவி சீதையும் இரவும் பகலும் இடைவிடாமல் போற்றி புகழ்ந்து வழிபட நின்ற இராவணனுக்கு எமனான எம் பெருமானை, குரவ மலர்கள் கம கமன்னு நல்ல வாசம் வீசும் (குளிர்ந்த மரம் செடிகள் சூழ்ந்த) சோலைகளுக்கு நடுவில் குயில்களோடு சேர்ந்து மயில்கள் நின்று ஆரவாரம் செய்ய, (சுற்றிலும் சோலைகள் சூழ்ந்து இருப்பதால்) சூரிய ஒலி கதிர்கள் நுழைய முடியாத(அழகான) திருவல்லிக்கேணியில் கண்டேனே. . (Hey Hey Jolly)

பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை
தசரத‌னி‌ன் முதல் மனைவி கோசலை ஆவாள். அவள் வயிற்றிலிருந்து திருமால் இராமராகப் பிறந்தார். இரண்டாம் மனைவி கைகேயி வயிற்றில் பரதன் பிறந்தான். மூன்றாம் மனைவி சுமத்திரை வயிற்றில் இலக்குவன், சத்துருக்கன் என்ற இருவரும் பிறந்தனர்.

1075
பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்* வாயில் ஓர் ஆயிரம் நாமம்*
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு* ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி*
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண்ப் புடைப்ப* பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய்*
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத்* திருவல்லிக்கேணி கண்டேன்*.2.3.8

பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் - பள்ளியில் கல்வி கற்று வந்த தன் மகன்
வாயில் ஓர் ஆயிரம் நாமம் - வாயில் ஓர் ஆயிரம் பெருமாள் பெயர்கள்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு - ஒளியுடன் ஆகி ஞானத்தால் (பிரகலாதன் கூற) அவ்விடத்தில் அதை
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி - சிறிதளவும் பொறுக்க இயலாதவன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண்ப் படைப்ப - மகனை சீறி மிகவும் கோபப்பட்டு தூணை அடிக்க
பிறை எயிற்று அனல் விழி பேழ் வாய் - கூரான வளைந்த பற்களும், நெருப்பு போன்ற
கண்களும், பெரிய வாயும் (உடைய)
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவைத் - தெளிந்த தூய சிங்க தேவனை
திருவல்லிக்கேணி கண்டேன். - திருவல்லிக்கேணியில் கண்டேனே.

விளக்கம்:-

ஸ்கூலுக்கு சென்று கற்றுக்கொண்டு வந்த தன் மகன் (பிரகலாதன்) வாயில் ஆயிரம் பெருமாள் பெயர்கள் ஒளியுடன் அழகாக ஞானத்தால் (கூறுவதை பார்த்து) அந்த நேரம் சிறிதும் பொறுக்க இயலாதவன் ஆகி தன் மகனை சீறி வெகுண்டு (நாராயணன் எங்கே இருக்கிறான்டா என்று கேட்க, எங்கும் இருப்பான் என்று பிரகலாதன் கூற, எங்கே இந்த தூணில் காட்டுடா பார்ப்போம் என்று) தூணை அடிக்க, வளைந்த கூரான பற்களும், நெருப்பு போன்ற கண்களும், பெரிய வாயும் (உடைய) தெளிந்த தூய்மையான நரசிங்கம் ஆகிய (என் தேவாதி) தேவனை, திருவல்லிக்கேணியில் கண்டேனே. . (Hey Hey Jolly)


பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன், அதை எதிர்த்தான். பிரகலாதன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.

ஒரு சமயத்தில் பள்ளி பாடத்தை முடித்து வந்த மகன் ஸ்ரீ ஹரி நாமம் சொல்வதை பார்த்த பிரகலாதன் மிகுந்த கோபம் கொண்டு எங்கேடா இருக்கிறான் ஹரி என்று கேட்க, அவன் எங்கும் இருப்பான் என்று பிரகலாதன் கூற, எங்கே இந்த தூணில் இருப்பான என்று எதேச்சையாக இரணியன் கேட்டு தூணை தட்ட, அங்கே அப்பொழுதே பரம்பொருளான ஸ்ரீமன் நாரயணன் சிம்ம முகமும் மானிட உருவமும் கலந்த நரசிம்ம உருவத்தில் தூணை பிளந்து வந்து இரணியனை அழித்தார். பிரகலாதனை காத்தார். பிரகலாதன் பக்தியை போன்றே நாமும் ஸ்ரீமன் நாராயணின் மேல் பக்தியோடு இருக்க ஸ்ரீமன் நாராயணனை வேண்டுவோம். அவர் நமக்கு நிச்சயம் தருவார்.1076
மீன் அமர் பொய்கை நாள் மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்று இழிந்த
கான் அமர் வேழம் கை எடுத்து அலறக்* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து*சென்று நின்று ஆழி தொட்டானை*
தேன் அமர் சோலை மாட மாமயிலைத்*திருவல்லிக்கேணிக் கண்டேனே*2.3.9


மீன் அமர் பொய்கை - மீன்கள் இருக்கும் குளத்தில்
நாள் மலர் கொய்வான் வேட்கையினோடு - நாள்தோறும் மலர் பரிப்பவனான (கஜேந்திர யானை ஒரு நாள்) ஆசையோடு
சென்று இழிந்த - போய் (குளத்தில்) இறங்கிய
கான் அமர் வேழம் கை எடுத்து அலறக் - காட்டில் இருக்கும் கஜேந்திர யானை தும்பிக்கை எடுத்து அலறும்படி
கரா அதன் காலினைக் கதுவ - முதலை அதன் காலினை கவ்வ
ஆனையின் துயரம் தீரப் புள் ஊர்ந்து - யானையின் துயரம் தீர்க்க கருட வாகனத்தில்
சென்று நின்று ஆழி தொட்டானை - சென்று நின்று (முதலை அழியும் படி) சக்கரத்தை செலுத்தியவனை
தேன் அமர் சோலை மாட மாமயிலைத் - தேன் இருக்கும் சோலைகளை உடைய மாடங்கள் சூழ்ந்த திருமயிலைத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே - திருவல்லிக்கேணியில் கண்டேனே.

விளக்கம்:-
மீன்கள் இருக்கும் குளத்தில் நாள்தோறும் புதிய மலர்களை பறிப்பவன் (கஜேந்திர யானை) , ஆசையோடு சென்று (பூ பறிக்க ஒரு நாள் குளத்தில்) இறங்க, காட்டில் வாழும் (அந்த கஜேந்திர) யானை தும்பிக்கை தூக்கி அலறும்படி, முதலை அதன் காலினை கவ்வ,
யானையின் துயரம் தீர்க்க கருட வாகனத்தில் சென்று (அங்கே) நின்று (முதலை அழியும் படி) சக்கரத்தை செலுத்தியவனை, தேன் (நிறைந்திருக்கும்) சோலைகளும், (விளக்கேற்றும் அழகான) மாடங்களும் (உள்ள) திரு மயிலை (அருகில் உள்ள) திருவல்லிக்கேணியில் கண்டேனே. . (Hey Hey Jolly)

பாசுர விளக்கத்திற்கு ஒரு கதை
பெருமாள் மீது பக்தியுடைய யானை ஒன்று தினமும் குளத்தில் இருந்து தாமரை மலர்களை பறித்து பெருமாளுக்கு சமர்பித்து கொண்டு இருந்தது. ஒரு சமயம் குளத்தில் இறங்கி தாமரையை பறித்த போது முதலை யானையின் காலை பிடிச்சுக்கிச்சி. உடனே யானை தன் உடலை பற்றி சிறிதும் கவலை படாமல் எப்படியாவது தாமரை மலரை பெருமாளுக்கு சமர்பிக்க வேண்டுமே என்ற ஏக்கத்தில் “ஆதி மூலமே” என்று நினைத்து பிளிறிய போது பெருமாள் கருட வாகனத்தில் விரைந்து வந்து முதலையை தன் சக்கரத்தால் அழித்து யானையை காப்பாற்றினார். யானைக்கு மறு பிறவி இல்லாத மோட்சத்தை பெருமாள் அருளினார். கஜேந்திர மோட்சம்

1077
மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும்* மாட மாளிகையும் மண்டபமும்*
தென்னன் தொண்டையர்க் கோன் செய்த நல் மயிலைத்*திருவல்லிக்கேணி நின்றானை* கன்னி நல் மாட மங்கையர் தலைவன்* காமரு சீர்க் கலிகன்றி*
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார்* சுகம் இனிது ஆள்வர் வான் உலகே* 2.3.10


மன்னு தண் பொழிலும் வாவியும் மதிளும் - சிறப்புவாய்ந்த குளிர்ந்த மரம் செடிகளும், நீர்நிலைகளும், வெளிப்புற சுற்று சுவர்களும்
மாட மாளிகையும் மண்டபமும் - மாட மாளிகையும், மண்டபமும் (இருக்கும்படி)
தென்னன் தொண்டையர்க் கோன் செய்த - பாண்டிய மன்னன் தொண்டைமான் சக்ரவர்த்தி செய்த
நல் மயிலைத் திருவல்லிக்கேணி நின்றானை - அழகான மயிலாப்பூர் (அருகில் உள்ள) திருவல்லிக்கேணியில் நின்றவனை (வேங்கட கிருஷ்ணனான பார்த்தசாரதியை)
கன்னி நல் மாட மங்கையர் தலைவன் - புதிய அழகான மாடங்கள் உடைய திருமங்கை நாட்டு தலைவன்
காமரு சீர்க் கலிகன்றி - திருமங்கை அழகு பெற்ற செய்யுளால்
சொன்ன சொல் மாலை பத்து உடன் வல்லார் - சொன்ன சொல் மாலை பத்துடன் (சொல்ல) வல்லவர்கள்
சுகம் இனிது ஆள்வர் வான் உலகே - இனிய சுகத்துடன் வான் உலகையே ஆள்வார்கள்.

விளக்கம்:-
சிறப்பு வாய்ந்த குளிர்ந்த (அழகான) மரம் செடிகளும், நீர் நிலைகளும், வெளிப்புற சுற்று சுவர்களும், மாட மாளிகையும், மண்டபமும், பாண்டிய மன்னன் தொண்டைமான் சக்ரவர்த்தி செய்த, அழகான மயிலாப்பூரின் (அருகில் உள்ள) திருவல்லிகேணியில் நின்றவனை (அழகான வேங்கட கிருஷ்ணனான பார்த்தசாரதியை) , புதிய் அழகான மாடங்கள் உடைய திருமங்கை நாட்டு மன்னன் திருமங்கையன் அழகு பெற்ற செய்யுளால் சொன்ன சொல்லால் (தொடுட்ட) மாலை பட்டுடன் (என்னை போலவே பெருமாள் மீது பாசத்துடன் சொல்ல) வல்லவர்கள், இனிய சுகத்துடன் வான் உலகையே ஆள்வார்கள்

திருவல்லிக்கேணி என் அன்பு ஸ்ரீ வேங்கட கிருஷ்ணா கோவில் வரலாறு

இந்த கோவிலில் வீற்றிருக்கும் பார்த்தசாரதி பெருமாள் ‌திரு‌முக‌த்‌தி‌ல் தழு‌ம்புக‌ள் இரு‌க்கு‌ம், மகாபாரத‌ப் போ‌ரி‌ல் அ‌ர்ஜூனனு‌க்கு தேரோ‌ட்டியாக வ‌ந்து, போ‌ரி‌ல் ஏற்ப‌ட்ட ‌விழு‌ப்பு‌ண்க‌‌ளி‌ன் தழு‌ம்புக‌ள்தான் அவை எ‌ன்று ஐதீகம். மேலு‌ம் ‌மீசையுட‌ன் உள்ள ‌கிருஷ‌்ண அவதாரமாகவும் இங்கு இருக்கிறார். மகாபாரத‌த்‌தி‌ல் தேரோ‌ட்டியாக (சார‌தி) வ‌ந்து அ‌ர்‌ஜூனனு‌க்கு (பா‌ர்‌த்தா) அ‌றிவுரை சொ‌ன்ன ‌கிரு‌ஷ‌்ண‌ரே (அவதாரம்) பா‌ர்‌த்தசார‌தி என்று அழைக்கப்பட்டார்.

மூலவரின் பெயர் வேங்கட கிருஷ்ணன். வலப் புறத்தில் ருக்மணி பிராட்டியாரும், வரதமுத்திரையுடன் கையில் கலப்பை ஏந்திய அண்ணன் பலராமனும், இடப்புறத்தில் தம்பி சாத்யகி, மகன் ப்ரத்யும்னன், பேரன் அநிருத்தன் ஆகியோரையும் கொண்டு மூலவர் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் வீற்றிருக்கிறார். இத்திருத்தலத்தில் பா‌ர்‌த்தசார‌தி‌க்கு‌ம், நர‌சி‌ம்மரு‌க்கு‌ம் த‌னி‌த்‌த‌னி கொடிமர‌ங்க‌ள் அமை‌க்க‌ப்ப‌‌ட்டிருக்கின்றன.
பா‌ர்‌த்தசார‌தி ச‌‌ன்ன‌தி‌க்கு வலது புற‌த்‌தி‌ல் வேதவ‌ல்‌லி‌த் தாயா‌‌ரி‌ன் ச‌ந்ந‌தி அமை‌ந்து‌ள்ளது.

வேதவ‌ல்‌லி‌த் தாயா‌ர் ச‌ந்‌நி‌தி‌க்கு ‌பி‌ன்புற‌த்‌தி‌ல் ‌கிழ‌க்கு நோ‌க்‌கியபடி கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிக‌ளி‌ன் ச‌ந்‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. கஜே‌ந்‌திரா எ‌ன்ற யானை ‌நீ‌ர்‌நிலை ஒ‌ன்‌றி‌ல் த‌ண்‌ணீ‌ர் குடி‌க்க‌ச் செ‌ன்றபோது அ‌ங்‌கிரு‌ந்த முதலை‌யி‌ன் வா‌யி‌ல் ச‌ி‌க்‌கி‌க் கொ‌ண்டது, அப்போது அந்த யானை தனது உ‌யிரை‌க் கா‌ப்பா‌ற்றுமாறு பெருமாளை நினைத்து வே‌ண்டியது. அ‌ப்போது உடனடியாக கருட‌னி‌ல் வ‌ந்த பெருமா‌ள் முத‌லை‌யிட‌ம் சிக்கியிருந்த கஜே‌ந்‌திரனை ‌‌மீ‌ட்டா‌ர், யானை‌க்கு அரு‌ள் பா‌லி‌த்த ‌நிலை‌யி‌ல் இ‌ந்த ச‌ந்‌‌நி‌தி‌யி‌ல் கஜே‌ந்‌திர வரதராஜ சுவா‌மிகளாக வீற்றிருக்கிறார்.

பா‌‌ர்‌த்தசார‌தி ச‌ந்‌‌‌நி‌தி‌யி‌ன் இடது புர‌த்‌தி‌ல் ஆ‌ண்டா‌‌ள் ச‌ந்‌‌நி‌தி அமை‌ந்து‌ள்ளது. இவர் பூதே‌வி எ‌ன்று‌ம் அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர். இந்த கோவில் தீர்த்தத்தின் பெயர் கைரவினி, இ‌தி‌ல் இந்திர, சோம, மீன, அக்னி, விஷ்ணு ஆ‌‌கிய தீர்த்தங்கள் அடங்கியுள்ளன. இத்திருக்குளத்தில் அல்லி பூக்கள் அதிகமாக காணப்பட்டதால் அல்லிக்கேணி என்ற பெயரும் ஏற்பட்டது.


திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள அருள்மிகு பார்த்தசாரதி பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இ‌ந்த கோ‌விலை பிருந்தாரண்ய ஸ்தலம் பஞ்ச வீரத்தலம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஆத்ரேயரால் வணங்கப்பட்ட திருத்தலமாகு‌ம். திருவல்லிக்கேணி இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் சென்னை மெரீனா கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ளது.

இ‌‌த்‌திரு‌த்தல‌த்‌தி‌ல் பிருகு முனிவர், மார்க்கண்டேயர், மதுமான் மகரிஷி, சப்தரோம அத்ரி மகரிஷி, ஜாபாலி மகரிஷி, தொண்டைமான் சுமதி மன்னன் என பலருக்கு இறைவன் காட்சியளித்திருக்கிறார். திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகு‌ம்

திருவல்லிக்கேணி என் அன்பு ஸ்ரீ வேங்கட கிருஷ்ணா மலர் பாதங்களுக்கு சமர்ப்பணம்:

5 comments:

sury said...

ஒவ்வொரு பாசுரமும் ஒரு நல் முத்தாகத்திகழக்கண்டேன்.
ஒளிபடர்ந்த மேனியன் வல்லிகேணியவன் புகழைக்கேட்டேன்.
ஓதியே நித்தம் மகிழ்வின்
ஒளடதம் இதுவே இதுவே என்றேன்.

சுப்பு ரத்தினம்.
http://pureaanmeekam.blogspot.com

Narasimmarin Naalaayiram said...

மிக்க நன்றி சுப்பு தாத்தா:)
ஒ ஒ ஒ ஒ என்று அழகாக பின்னூட்டி இருக்கிறீர்களே:)

குமரன் (Kumaran) said...

பாசுரங்கள் ஒவ்வொன்றும் மிகவும் இனிமை! மிகவும் எளிமை! கதைகளோடு நீங்கள் அதனை விளக்கியதும் அருமை!

திருவல்லிக்கேணிக்கு ஒரு முறை சென்று வந்து போல் இருந்தது!

Narasimmarin Naalaayiram said...

குமரன் (Kumaran) said...

//பாசுரங்கள் ஒவ்வொன்றும் மிகவும் இனிமை! மிகவும் எளிமை! கதைகளோடு நீங்கள் அதனை விளக்கியதும் அருமை!

திருவல்லிக்கேணிக்கு ஒரு முறை சென்று வந்து போல் இருந்தது!//


தாங்கள் கூறியதை எம்பெருமான் திருவடிகளுக்கே சமர்பிக்கிறேன் :)

jaganathan said...

arumai arumai arumai eliyorkum puriyumvanam vivarithathu puthumai
thayavu seithu thirupathi kaliyuga theivam eluzmalaiyanai patri padiya kulasekarar,namazwar pasurathathukum thangal kainkaryam(explanation) puriya enthai thanthai sri parthasarathy perumal arul puriya vendugiren