பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Thursday, October 21, 2010

திருவேங்கடவா! அடியேனை ஆட் கொண்டருளே!



பெரிய திருமொழி


1028
தாயே தந்தை என்றும்* தாரமே கிளை மக்கள் என்றும்*
நோயே பட்டொழிந்தேன்* உன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
வேயேய் பூம் பொழில் சூழ்* விரையார் திருவேங்கடவா!*
நாயேன் வந்து அடைந்தேன்* நல்கி ஆள் என்னைக் கொண்டருளே
.. 1.9.1

விளக்கம்:-

அம்மா அப்பா என்றும் பொண்டாட்டி சொந்தகாரங்க என்றும் (இவர்களின் மேலே பாசம் என்னும்) நோயே பட்டு ஒழிந்தேன்! (அப்பப்பா இவர்களை எல்லாம் நம்பி இவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தி பட்டது போதுமப்பா! போதும்!),மூங்கில் புதர்களும் பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் சூழ்ந்துள்ள நல்ல மணம் வீசும் திருவேங்கடவா! (திருப்பதியில் வசிக்கும் என் கோவிந்தா! நீயே என்றும் நிலையான சொந்தம் என்று) உன்னை பார்க்கணும் என்றொரு ஆசையினால் நாயாகிய நான் வந்து (சரண்) அடைந்தேன்! (ஆள்பவனே! யப்பா ஏழுமலையானே!) விரும்பி என்னை ஏற்று கொண்டு அருள் புரியணும்! (please)


1029
மானேய் கண் மடவார்* மயக்கில் பட்டு மாநிலத்து*
நானே நானாவித* நரகம் புகும் பாவம் செய்தேன்*
தேனேய் பூம்பொழில் சூழ்* திருவேங்கட மா மலை* என்
ஆனாய்! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே
. 1.9.2

விளக்கம்:-

மான் (போல அழகான) கண்களையுடைய இளமையான (டீன் ஏஜ் பெண்களை Sight அடித்து அவர்கள் அழகில்) மயக்கம் கொண்டு இந்த மாநிலத்திலே நான் நரகம் செல்லகூடிய (அளவுக்கு)பல வித பாவங்களை செய்தேன். தேன் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்துள்ள
(திருப்பதி) திருவேங்கட உயர்ந்த மலையில் (உள்ள கோவிந்தா!) என் வலிமையுடைய காளையே! அழகுடையவனே! (நான் திருந்த எண்ணி உன் திருவடியே சரணம் என்று ) வந்து அடைந்தேன்!அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும் (please)

1030
கொன்றேன் பல் உயிரை* குறிக்கோள் ஒன்று இல்லாமையால்*
என்றேனும் இரந்தார்க்கு* இனிதாக உரைத்து அறியேன்*
குன்றேய் மேகம் அதிர்* குளிர் மா மலை வேங்கடவா!*
அன்றே வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே
. 1.9.3

விளக்கம்:-

குறிக்கோள் ஒன்றும் இல்லாமல் (கண்ணு மண்ணு தெரியாம) பல உயிர்களை கொன்றேன்.
(அப்புறம்) என்னிடம் பிச்சை கேட்டு வருபவர்களிடம் (போ! போ! சில்லறை இல்ல! என்றல்லவா கடுமையாக சொல்லி இருக்கிறேன்!) என்னைக்குமே இனிமையாக பேசியது கூட இல்லை! குன்றுகள் (போல காட்சி தரும்) மேகங்கள், சத்தம் (வரும் அளவுக்கு வானத்தில் எப்போதுமே மிகுதியாக சுற்றி கொண்டிருப்பதால்) குளிர்ச்சியாக இருக்கிற உயர்ந்த மலையில்(வசிக்கும் திருப்பதி) வேங்கடவா! (கோவிந்தா! அக்குற்றங்களோடு உன் பாதமே சரணம் என்று எண்ணிய) அன்றே வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும் .(please)

1031
குலம் தான் எத்தனையும்* பிறந்தே இறந்து எய்த்து ஒழிந்தேன்*
நலம் தான் ஒன்றும் இலேன்* நல்லதோர் அறம் செய்தும் இலேன்*
நிலம் தோய் நீள் முகில் சேர்* நெறியார் திருவேங்கடவா!*
அலந்தேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
1.9.4

விளக்கம்:-

எத்தனையோ குலங்களில் பிறந்தும் இறந்தும் இளைத்தும் ஒழிந்து போனேன்! நல்லவை ஒன்றும் செய்தது இல்லை! நல்லவிதமாக ஒரு (தான, தர்ம) புண்ணியம் கூட செய்ததும் இல்லை! (மலை மேலே உள்ள) நிலத்தில் படிவது (போல அழகாக உள்ள) நீளமான மேகங்கள் (ஒன்று) சேர்ந்து (செல்லும் அழகான மலை மேல் வசிக்கும் என்றைக்குமே) நிலையான திருவேங்கடவா! (திருப்பதி கோவிந்தா! உன்னையே சரணம் அடைய) பல துன்பங்களோடு வாடியும் (வருந்தி) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும். (please)

1032
எப் பாவம் பலவும்* இவையே செய்து இளைத்து ஒழிந்தேன்*
துப்பா! நின் அடியே* தொடர்ந்து ஏத்தவும் கிற்கின்றிலேன்*
செப்பார் திண் வரை சூழ்* திருவேங்கட மா மலை* என்
அப்பா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
1.9.5

விளக்கம்:-

(ஒன்னு ரெண்டு இல்லப்பா!) பாவங்கள் பலவற்றையே செய்து இளைத்து ஒழிந்தேன்! (இதனால என்ன ஆச்சுனா- யப்பா!) நல்லவரே! உன் திருவடியை தொடர்ந்து போற்றி புகழவும் சக்தி இல்லாமல் இருக்கிறேன். செப்பு (போல) வலிமையான மலைகளை சூழ்ந்துள்ள திருவேங்கட உயர்ந்த மலையில் வாழும் (திருப்பதி கோவிந்தனாகிய) என் அப்பா! (உன்னை சரணடையவே விருப்பபட்டு) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும். (please ppaa)



1033
மண்ணாய் நீர் எரி கால்* மஞ்சு உலாவும் ஆகாசமுமாம் *
புண்ணார் ஆக்கை தன்னுள்* புலம்பித் தளர்ந்து எய்த்து ஒழிந்தேன்*
விண்ணார் நீள் சிகர* விரையார் திருவேங்கடவா!*
அண்ணா! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
1.9.6

விளக்கம்:-

மண் கொண்ட (நிலம்) , நீர் , நெருப்பு, காற்று, மேகங்கள் சுற்றி கொண்டிருக்கும் வானம் (என்று பஞ்ச பூதங்களால் ஆன) புண் உடம்பை (வைத்து கொண்டு அடிக்கடி வரும்
உடல் நல கோளாறால்) எனக்குள்ளேயே புலம்பி (உடல்) தளர்ந்து மெலிந்து நொந்து ஒழிஞ்சி போயிட்டேன்! (பெருமாளே!) , வானத்தை தொடும் அளவுக்கு உயர்ந்த சிகரங்களை (கொண்ட) நல்ல மணம் வீசும் திருவேங்கடவா! (திருப்பதி கோவிந்தனாகிய) என் அண்ணா! (உன்னிடமே சரணடைய விரும்பி) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை எடுத்து கொண்டு அருள் புரியணும். (please annaa!)

1034
தெரியேன் பாலகனாய்* பல தீமைகள் செய்துமிட்டேன்*
பெரியேன் ஆயின பின்* பிறர்க்கே உழைத்து ஏழை ஆனேன்*
கரி சேர் பூம்பொழில் சூழ்* கன மா மலை வேங்கடவா!*
அரியே! வந்து அடைந்தேன்* அடியேனை ஆட் கொண்டருளே.
1.9.7

விளக்கம்:-
சின்ன வயசுல விவரம் தெரியாம (பொண்ணுங்கள SIGHTஅடிக்கறது, திருடுறது, கண்மூடிதனமா ஊற சுத்துறது, இப்படியே இன்னும் பல) பல தீமைகள் செய்து விட்டேன். (சரி சின்ன வயசுலதான் இப்படின்னா!) பெரியவன் ஆன பின்பு பிறருக்காகவே உழைத்து (உழைத்து) ஏழை ஆகி விட்டேனே! யானைகள் (ஒன்று) சேரும் பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிர்ந்த சோலைகள் சூழ்ந்துள்ள, மரியாதைக்கு உரிய உயர்ந்த மலை (மேல் வசிக்கும்) வேங்கடவா! (திருப்பதி கோவிந்தா!) அரியே! (உன்னிடம் சரணம் அடையவே) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை முழுமையாக எடுத்து கொண்டு அருள் புரியணும்.(please iraivaa)

1035
நோற்றேன் பல் பிறவி* நுன்னைக் காண்பது ஓர் ஆசையினால்*
ஏற்றேன் இப் பிறப்பே* இடர் உற்றனன் எம்பெருமான்!*
கோல் தேன் பாய்ந்து ஒழுகும்* குளிர் சோலை சூழ் வேங்கடவா!*
ஆற்றேன் வந்து அடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே.
1.9.8

விளக்கம்:-

உன்னை பார்க்க வேண்டும் என்ற ஆசையினால் பல பிறவியாய் தவம் செய்தேன். இந்த பிறப்பையும் ஏற்றேன். (இந்த பிறவியில்தான் உன்னை கண்டு கொண்டேன். இப்பிறவி என்னும்) துன்பம் (நீங்க உன்னை) அடைந்தேன் எம்பெருமானே! கொம்பு தேன் பாய்ந்து
ஒழுகும் குளிர்ந்த மரங்களும் செடி கொடிகளும் சூழ்ந்துள்ள (அழகான இடத்தில் வசிக்கும்) வேங்கடவா! (திருப்பதி கோவிந்தா! இவ்வுலகில் பிறந்து வருந்தினேன்)மன சுமையை பொறுக்க முடியலப்பா! (இனி பிறவாமல் இருக்க உன் பாதமே சரணம் சரணம் என்று ) வந்து அடைந்தேன். அடி பணிந்தவனை எடுத்து கொண்டு அருள் புரியணும். (please)

1036
பற்றேல் ஒன்றும் இலேன் * பாவமே செய்து பாவி ஆனேன்*
மற்றேல் ஒன்று அறியேன் * மாயனே! எங்கள் மாதவனே!*
கல் தேன் பாய்ந்து ஒழுகும்* கமலச் சுனை வேங்கடவா!*
அற்றேன் வந்து அடைந்தேன் * அடியேனை ஆட்கொண்டருளே.
1.9.9
விளக்கம்:-

(கோவிந்தா! உன் அழகான மலர் பாதத்தை தவிர எனக்கு வேறு) பற்று ஒன்றும் இல்லை. பாவங்களையே செய்து பாவி ஆனேன், (கோவிந்தா! நீயே எனக்கு அடைக்கலம் உன்னை தவிர) மற்றொன்று நான் அறியவில்லை. மாயனே! எங்கள் மாதவனே! (மலை மேலிருந்து) மலை தேன் பாய்ந்து ஒழுகும் (தித்திக்கும்) தாமரை குளங்கள் (நிறைந்த அழகான இடத்தில் வாழும்) வேங்கடவா! (திருப்பதி கோவிந்தா! உன்னை தவிர வேறு பற்று) இல்லாதவன் (நீயே சரணம் என்று) வந்து அடைந்தேன். அடியேனை எடுத்து கொண்டு அருள் புரியணும். (please)

1037
கண்ணாய் எழுலகுக்கு* உயிராய எங்கார் வண்ணனை*
விண்ணோர் தாம் பரவும்* பொழில் வேங்கட வேதியனை*
திண்ணார் மாடங்கள் சூழ்* திருமங்கையர் கோன் கலியன்*
பண்ணார் பாடல் பத்தும்* பயில்வார்க்கு இல்லை பாவங்களே.
1.9.10

விளக்கம்:-

ஏழு உலகுக்கும் கண்ணாகவும், உயிராகவும் (உள்ள) எங்கள் கரிய மேகம் போல வண்ணம் கொண்டவனை, விண்ணோர்கள் சுற்றி நின்று கொண்டு (ஆசையோடு வழிபடும்) மரங்களும் செடிகளும் நிறைந்த குளிர்ந்த (இடத்தில் வசிக்கும்) (வேதங்களின் ஹீரோவான) வேங்கட வேதியனை (திருப்பதி கோவிந்தனை)திடமான மாடங்கள் சூழ்ந்துள்ள திருமங்கை (நாட்டு) மன்னன் கலியன் இசையால் பாடிய (இந்த) பத்தும் கற்பவர்களுக்கு இல்லை பாவங்களே!

திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய 10 பாசுரங்களின் தூய தமிழ் சொற்களின் பொருள்.

விரையார் - மணம் பொருந்திய
வேயேய் - மூங்கில் புதர்
பூம் பொழில் - பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிரிந்த சோலை
நல்கி - விரும்பி
ஆள் - ஆட்சி செய்தல்
மடவார் - இளமையுடைய பெண்
நானாவித - நாலாவிதம், பல விதமான
மா – பெரிய, உயர்ந்த
ஆன் - பசு, பெண் எருது, அவ்விடம், காளை
ஆய் - அழகு, நுண்மை, சிறுமை, இடையர் குலம்
ஆட்கொண்டு - முழுமையாக எடுத்து கொண்டு
உரைக்க - சொல்லுதல் , கூற
இரந்து - கெஞ்சி; மன்றாடு
அறியேன் - அறியாது
அதிர்- ஒலி, நடுக்கம்
எய்த்து – இளைத்து
அறம் - தருமம், புண்ணியம்
தோய் - படிதல், நனைதல்
நெறியார் - நிலையினையுடையவர்
நிலம் - பூமியின் மேற்பரப்பு
அலந்த - வாடிய
அலம் - துன்பம்
துப்பு - நல்லன, உணவு
நின் - உன்
ஏத்து - போற்று, புகழ்ந்து
கிற்கின்றிலேன் - சக்தி ஒன்றும் இல்லை
செப்பு - செம்பு, தாமிரம்
ஆர் - பொருந்திய, ஒலி
திண் - திடமான
வரை - மலை
எரி - நெருப்பு
கால் - காற்று
மஞ்சு - மேகம்
ஆகாசம் - வானம், ஆகாயம்
புண் - காயம்
ஆக்கை - உடல்
எய்த்து - இளைத்து
விண் - வானம்
நீள் - நீளமான, உயர்ந்த
விரையார் - மணம் பொருந்திய
பாலகன் - கற்று குட்டி, சிறியவன், இளையவன், குழந்தை
கரி - யானை
பூம் பொழில் - பூக்கள் நிறைந்த மரங்களும் செடிகளும் நிறைந்த குளிர்ந்த சோலை
கனம் - பாரம், எடையின் அளவு, மரியாதைக்கு உரிய
நுன்னை - உன்னை
நோற்றது - தவம் செய்தது;
நோற்றேன் - தவம் செய்தேன்
இடர் - துயரம், துன்பம்,வறுமை
ஆற்று - மனசுமையை பிறரிடம் கூறி குறைத்து கொள்ளுதல்
ஆற்றார் - வலியரல்லாதவர், வறுமையுடையவர், பொறுக்க மாட்டாதவர்
ஆற்றேன் - கவலை, இழப்பு இவற்றை பொறுக்க முடியாதவன் (தாங்க முடியாதவன்)
கோல் - கொம்பு
உற்றனன் - அடைந்தான்
சோலை - குளிர்ந்த மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த இடம்
பற்றேல் - பிடித்தல், ஆதாரம், பிடிமானம்
மற்றேல் - மற்றபடி
அறியேன் - அறியாது
கல் தேன் - மலை தேன் என்றும் சொல்லலாம்
கமலச்சுனை - தாமரை குளம்
அற்றேன் - இல்லாதவன்
கார் - கரிய , மேகம் , மழை கால நெற்பயிர்
திண் - திடமான
பொழில் - சோலை, தோட்டம், மரங்களும் செடிகளும் உள்ள குளிர்ச்சியான இடம்
பரவி - சுற்றிலும், படர்தல், பரவுதல்
கோன் - அரசன்
கலியன் - போர்வீரன், திருமங்கை ஆழ்வார்
பண் - இசை, இசை பாட்டு
பயில்வார் - கற்பவர், படிப்பவர்


திருப்பதி கோவிந்தனுக்கு சமர்ப்பணம்!
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!

4 comments:

ராம்ஜி_யாஹூ said...

பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
பாடல்களில் அற்புதமான தமிழ்ப் புலமை.

நாடி நாடி நரசிங்கா! said...

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா!

radhakrishnan said...

NARASIMMARIN RAJJIYATHTHIL UYYALALA.
ENNA BAKTHI.ENNA THAMIZH,ADIYEN SARANAM.MIKKA NANRI.
RADHAKRISHNAN

நாடி நாடி நரசிங்கா! said...

ராதாகிருஷ்ணன் ஐயா! மிக்க நன்றி .

திருமங்கை நாட்டு மன்னனாகி, பின் கள்வனாகி, ஸ்ரீமன் நாராயணன் அருளால் ஆழ்ந்த பக்தனானவர் ஆயிற்றே! அவரின் பக்தியோடு
நரசிம்மரின் ராஜ்யத்தில் உய்யலாலா!