பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Tuesday, November 2, 2010

அண்ணா! அடியேன் இடரைக் களையாயே.பெரிய திருமொழி

1038
கண்ணார் கடல் சூழ்* இலங்கைக்கு இறைவன் தன்*
திண் ஆகம் பிளக்கச்* சரம் செல உய்த்தாய்!*
விண்ணோர் தொழும் வேங்கட மா மலை மேய*
அண்ணா! அடியேன்* இடரைக் களையாயே.1.10.1


விளக்கம்:-

கண் (போல பார்த்து கொண்டு வெளியாள் யாரும் நுழைய விடாமல் பாதுகாக்கும் ) கடல் சூழ்ந்துள்ள இலங்கைக்கு இறைவன் (இராவணனின் வலிமை வாய்ந்த) திடமான மார்பை பிளக்க, அம்பை ஒன்றன் பின் ஒன்று வரிசையாக அனுப்பி (இராவணனை அழித்த எங்கள் இராமனே!) விண்ணோர் வழிபடும் (திருப்பதி திரு) வேங்கட உயர்ந்த மலையில் (வாழும் என்) அண்ணா! அடியேனின் துன்பத்தை களையாயே!


1039
இலங்கைப் பதிக்கு* அன்று இறையாய அரக்கர்*
குலம் கெட்டு அவர் மாளக்* கொடிப் புள் திரித்தாய்!*
விலங்கல் குடுமித்* திருவேங்கடம் மேய*
அலங்கல் துளப முடியாய்!* அருளாயே. 1.10.2


பாசுர விளக்கத்திற்கு முன் சிறு குறிப்பு:-

சுமாலி என்பவன் இராவணனுடைய தாயாகிய கேகசிக்குத் தந்தை. அதாவது தாய் வழிப் பாட்டன். இவன் தன் சகோதரர்களான மாலி, மாலியவான் ஆகியோருடன் இலங்கையில் குடிபுகுந்து தேவர்களுக்குப் பல இன்னல்கள் புரிந்து வந்தனர். திருமால் வந்து போர் புரிந்து வென்று மாலி என்பவனைக் கொன்றுவிட, மற்றவர்கள் பாதாளத்தில் பதுங்கிக் கொண்டனர்.(அதாவது மாலியவான், சுமாலி, மாலி என்பவர்கள் இராவணனுக்கு முன்பு இலங்கையை ஆண்டனர்.)

விளக்கம்:-

இலங்கை அரசனான (இராவணனுக்கு) முன்பு (இலங்கையின்) இறைவனான (மாலி முதலிய) அரக்கர் குலமே கெட்டு அவர்கள் (அனைவரும் துண்ட காணோம்! துணிய காணோம்! என்பது போல அலறியடித்து கொண்டு ஓடும்படி) சுற்றி கொண்டே மேலே பறந்து செல்லும் (சக்கர ஆயுதத்தை செலுத்தி அரக்கர்களை) கொன்ற, கருட கொடியோனே!(என் கோவிந்தா!) உயர்ந்த மலை உச்சியான (திருப்பதி) திருவேங்கடத்தில் வாழ்கின்ற (என் கோவிந்தா!) துளசி மாலையை திரு முடியில் (அழகாக அணிந்த என் கோவிந்தா! அடியேனுக்கு) அருளாயே!

1040
நீரார் கடலும்* நிலனும் முழுது உண்டு*
ஏர் ஆலம் இளந்தளிர் மேல்* துயில் எந்தாய்!*
சீரார்* திருவேங்கட மா மலை மேய*
ஆரா அமுதே!* அடியேற்கு அருளாயே. 1.10.3


விளக்கம்:-

(முன்பு உலகம் அழியும் காலத்தில் உலகை காப்பாற்ற) நீரை உடைய கடலும், நிலனும் (மற்றும் உலகம்) முழுதும் உண்டு, (தன் வயிற்றில் வைத்து பாதுகாத்து) அழகான ஆலமரத்து இளம் இலையின் மேலே (ஒன்றும் தெரியாத குழந்தை போல) உறங்கும் (கண்ணனே!) என் தந்தையே! அழகான திரு வேங்கட உயர்ந்த மலை (மேல்) வாழும் (என்றுமே தித்திக்கும்) திகட்டாத அமிர்தமே, அடியேற்கு அருளாயே!

1041
உண்டாய் உறி மேல்* நறு நெய் அமுதாக*
கொண்டாய் குறளாய்* நிலம் ஈர் அடியாலே*
விண் தோய் சிகரத்* திருவேங்கடம் மேய
அண்டா!* அடியேனுக்கு அருள் புரியாயே. 1.10.4

விளக்கம்:-

(பசு மேய்க்கும் பொண்ணுங்க) மேலே கயிற்றால் கட்டி வைத்துள்ள பானைகளில் உள்ள நறுமணம் மிக்க வெண்ணையை அமுதாக உண்டாயே (என் கண்ணா!) . குள்ளமான (வாமன வடிவம் கொண்டு ஒன்றும் தெரியாதது போல மகாபலியிடம் இரண்டடி மண் கேட்க, உன்னை பார்த்து மகாபலி, ஹூம் ஜுஜுபி என்பது போல இரண்டடி தானே எடுத்துக்கோ! என்று சொல்ல உடனே நீ வானளவு உயர்ந்து) இரண்டே அடியில் (உலகத்தை அளந்தாயே என் வாமனா!) விண்ணை தொடுவது (போல காட்சியளிக்கும் உயர்ந்த) மலையான திருவேங்கத்தில் வாழ்கின்ற (உலகத்தை ஆள்பவனே!என்) தேவனே! அடியேனுக்கு அருள் புரியாயே!

1042
தூண் ஆய் அதனூடு* அரியாய் வந்து தோன்றி*
பேணா அவுணன் உடலம்* பிளந்திட்டாய்!*
சேண் ஆர் திருவேங்கட* மா மலை மேய*
கோண் நாகணையாய்!* குறிக்கொள் எனை நீயே.. 1.10.5


விளக்கம்:-

அழகிய தூணை (பிளந்து) அதிலிருந்து நரசிம்ம பெருமாளாய் வந்து தோன்றி, (யாரும்) விரும்பாத (கொடுமைகாரனான) அரக்கன் (இரணியனின்) உடலை (அக்கு வேரா! ஆணி வேரா! ) பிளந்தாயே (என் நரசிம்மா!) பெருமை பொருந்திய (திருப்பதி) திருவேங்கட உயர்ந்த மலையில் வாழும் வளைந்த (நெளிந்த) பாம்பான (ஆதிசேஷனை) மெத்தையாக கொண்ட (கோவிந்தா! நல்லா பாரப்பா!) பார்த்து காப்பாற்றுப்பா! என்னை நீயே!
1043
மன்னா* இம் மனிசப் பிறவியை நீக்கி*
தன் ஆக்கித்* தன் இன்அருள் செய்யும் தலைவன்
மின் ஆர் முகில் சேர்* திருவேங்கடம் மேய*
என் ஆனை என் அப்பன்* என் நெஞ்சில் உளானே. 1.10.6

விளக்கம்:-

(இவ்வுலகை ஆளும்) அரசனே! இந்த மனித பிறவியை நீக்கி (என்னை) உன்னுடைய ஆளாக ஆக்கி, எனக்கு இனிமையான நல்ல (கருணை மனதோடு வாரி வாரி) அருள் செய்யும் (என்) தலைவனே! (தலைவா! வானத்தில் பளிச் பளிச்ன்னு மின்னும்)மின்னலோடு மேகங்கள் (ஒன்று) சேர்ந்து (அழகாக காட்சி தரும் திருப்பதி) திருவேங்கடத்தில் வாழும் (கோவிந்தனே! என் செல்லம்!) என் யானை, என் அப்பா! என் நெஞ்சில் உள்ளானே!

1044
மானே மட நோக்கி* திறத்து எதிர் வந்த*
ஆன் ஏழ் விடை செற்ற* அணி வரைத் தோளா!*
தேனே!* திருவேங்கட மா மலை மேய*
கோனே! என் மனம்* குடி கொண்டு இருந்தாயே. 1.10.7

பாசுர விளக்கத்திற்கு முன் கண்ணனின் மாமன் மகள்
அழகான பொண்ணு நப்பின்னை பற்றி தெரிந்து கொள்ளலாமா!:__
கண்ணனின் மாமன் மகள் நப்பின்னை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள் மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் நப்பின்னையை திருமணம் செய்ய விரும்பி ஏழு முரட்டு எருதுகளை அடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான்.------நப்பின்னை - கடல்தாயின் அம்சம் - நீளா தேவி

விளக்கம்:-

மான் (போல அழகான கண்களை உடைய) இளமையான (நப்பின்னையை திருமணம் செய்ய வேண்டும்) என்ற குறிக்கோளோடு, (பயங்கரமான) வலிமையுடன் எதிரில் வந்த (ஏழு) எருதுகளை அழித்த, மலையை (கவசமாக) அணிந்தது (போல வலிமையான) தோளா! (செம்ம Arms-டி செல்லம் உனக்கு! என்னோட) தேனே! (திருப்பதி) திருவேங்கட உயர்ந்த மலையில் வாழும் (என்னை ஆளும்) அரசே! என் மனம் (என்னும் கோவிலிலே) குடி கொண்டு இருந்தாயே!

1045
சேயன் அணியன்* என் சிந்தையுள் நின்ற
மாயன்* மணி வாள் ஒளி* வெண் தரளங்கள்*
வேய் விண்டு உதிர்* வேங்கட மா மலை மேய*
ஆயன் அடி அல்லது* மற்று அறியேனே.. 1.10.8

விளக்கம்:-

(கண்ணன்) தொலைவில் உள்ளவன் (என்றும்) அருகில் உள்ளவன் (என்றும் சொல்கிறார்கள் ஆனால் அவன் இளநியின் உள்ளே நீர் வந்தது போலே)என் நெஞ்சின் உள்ளே நின்ற மாயக்காரன், (நீல) மணியை (போன்று) பேரொளி (கொண்ட பிரியமான என் ஆனந்த கண்ணன் குளிர்ந்த பனிகள்) வெள்ளை முத்துக்கள் (மேலிருந்து விழுவதை போல) மூங்கில் (மரங்களை) நீக்கி (அழகாக) உதிர்க்கும் (திருப்பதி) திருவேங்கட உயர்ந்த மலையில் வாழும் என் அன்பு) கண்ணன் அடி தவிர வேறொன்றையும் (நான்) அறியேனே!

1046
வந்தாய் என் மனம் புகுந்தாய்* மன்னி நின்றாய்*
நந்தாத கொழுஞ்சுடரே* எங்கள் நம்பீ!*
சிந்தாமணியே* திரு வேங்கடம் மேய
எந்தாய்!* இனி யான் உன்னை* என்றும் விடேனே. 1.10.9


விளக்கம்:-

(என் அன்பே! எம் பெருமானே! நீ) வந்தாய். என் மனம் புகுந்தாய், (என்னை விட்டு) நீங்காமல் நிறைந்து நின்றாய்.(என்றைக்குமே அழிவில்லாத) அணையாமல் (என்றும் நிலையான) கொழுந்து விட்டு எரிகின்ற சுடரே. எங்கள் (நம்பிக்கைக்கு உரியவனே!) நம்பியே! (என்றுமே ஒளி குறையாத ஒசத்தியான உயர்ந்த வகை மணியை போன்றவனே) சிந்தாமணியே! (திருப்பதி) திரு வேங்கடம் வாழ்கின்ற எனது தந்தையே! இனி நான் உன்னை என்றும் விடவே மாட்டேன்.

1047
வில்லார் மலி* வேங்கட மா மலை மேய*
மல்லார் திரள் தோள்* மணி வண்ணன் அம்மானைக்*
கல்லார் திரள் தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லார் அவர்* வானவர் ஆகுவர் தாமே. 1.10.10

விளக்கம்:-

வில்லை உடைய (வேடர்கள்) மிகுந்துள்ள (திருப்பதி திரு) வேங்கட உயர்ந்த மலையில் வாழும் வலிமை வாய்ந்த கனமான பெரிய தோளை (உடைய நீல) மணி (போல வண்ணம் உடைய) இறைவனை, கல்லை (போல) கனமான பெரிய தோளை (உடைய) கலியன் (பாடிய சொல்லால் ஆன) மாலையை (சொல்ல) வல்லவர் (எவரோ) அவர் வானவர் ஆகுவர் தாமே

திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய 10 பாசுரங்களின் தூய தமிழ் சொல்லின் பொருள்

ஆர் - பொருந்திய, ஒலி
திண் - திடமான
ஆகம் – உடல், மார்பு
சரம் - அம்பு ,ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக
செல உய்த்து - செல்லுமாறு அனுப்பி
மேய = பொருந்திய
இடர் - துன்பம், வருத்தம்
களை - நீக்கு
பதி - தலைவன், கணவன் அரசர்
மாள - இறக்க
புள் - பறவை, கருடன்
கொடி புள் - கருட கொடியை கொண்டவன்
திரித்தாய் - திருகாணி போல சுற்றி கொண்டே மேலே செல்வது
விலங்கல் - மலை
குடுமி - உச்சி
அலங்கல் - மாலை, பூமாலை
துளப - துளசி
நீரார் - நீர் பொருந்திய
ஏர் - அழகு
ஆலம் - ஆலமரம்
இளந்தளிர் - புதியதாக வளர்ந்திருக்கும் மென்மையான இளம் இலை
துயில் - உறங்குதல்
எந்தாய் - என் தந்தையே!
சீரார் - அழகு பொருந்திய
ஆரா அமுதே - திகட்டாத அமுதே , இனிப்பு, வீடுபேறு, நிவேதனம், அமிர்தம்
உறி - மேலிருந்து கயிற்றால் பானைகள் தொங்கும்படி இருப்பது உறி எனப்படும்
நறு - வாசனை
நெய் - உருக்கிய வெண்ணெய்
அமுது - அமுதம், சோறு, இனிப்பு, நிவேதனம், வீடுபேறு
குறள் - குள்ளன்
தோய் - படிதல், நனைதல்
சிகரம் - மலையின் உச்சி
அண்டா - தேவனே
ஆய் - அழகு
அரி – சிம்மம், பெருமாள்
பேணா - விரும்பாத போற்றாத
அவுணன் - அசுரன்
உடலம் - உடல்
சேண் - உயரம் உள்ள, ஆகாயம், தூரம்
ஆர் - பொருந்திய
கோண் - வளைந்து
நாகம் - நல்ல பாம்பு
அணை - படுக்கை, தூங்கும் இடம்
குறிக்கொள் - நினைத்து காத்தருள்
மன்னா - அரசனே
இன் - இனிய
அருள் - கருணை, இரக்கம்
மின் - மின்னல்
ஆனை - யானை
அப்பன் - அப்பா
மடம் - இளமையுமுடைய,
நோக்கி - ஒருவரை குறிக்கோளாக கொண்டு
திறத்து - தம் வலிமையினால்
ஆன் - பசு, பெண் எருது, அவ்விடம், காளை
விடை - ஆண் விலங்கு, எருது
செற்ற - அழித்த
அணி - உடுத்துவது
வரை - மலை
கோன் –, அரசன்
சேயன் - தொலைவில் உள்ளான்
அணியன் - அண்மையில் உள்ளான்
வாள் - ஒளி, கத்தி
தரளம் - முத்து
வேய் - மூங்கில்
விண்டு - நீங்கி
ஆயன் - இடையன் , ஆடு மாடு மேய்ப்பவன், கண்ணன்
மன்னி - நீக்கமற எங்கும் நிறைந்து
நந்தாத – கெடாத, அணையாத
சிந்தாமணி - ஒளி கெடாத ஒரு வகை மணி
வில்லார் - வில்லை உடையவர், வேடர்கள்
ஆர் – பொருந்திய
மலி = மிகுந்த
மல்லார் - வலிமை பொருந்திய
திரள் தோள் - திரண்ட தோள், பெருத்த தோள்
திருப்பதி எம் பெருமான் மலர் பாதங்களுக்கு சமர்ப்பணம் !
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!

No comments: