பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Friday, October 8, 2010

திருவேங்கடம் அடை நெஞ்சமே*! - திருமங்கை ஆழ்வார் (1018-1127)


திருப்பதி ஏழுமலையான்


பெரிய திருமொழி


1018
கொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த* கோவலன் எம்பிரான்*
சங்கு தங்கு தடங்கடல்* துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
பொங்கு புள்ளினை வாய்ப் பிளந்த* புராணர் தம்மிடம்*
பொங்கு நீர் செங்கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.1

விளக்கம்:-

(கண்ணனை கொல்ல கம்சன் அனுப்பிய அசுரன் குருந்த மரமாக மாறி நின்றான்!) நல்ல
வாசனையுள்ள மலர்களையுடைய குருந்த(மரத்தை) ஒடித்த எம் கிருஷ்ணன்
எம் இனிய இறைவன் , சங்குகள் தங்கியிருக்கின்ற பெரிய கடலில் ஹாயாக (தூங்குவது போல நடித்து உள்ளுக்குள் நம்மை கவனத்துடன் பார்த்து கொண்டே பாதி கண்கள் மூடியவாறு)படுத்து கொண்டுள்ள தாமரை (மலர் போல அழகான குளிர்ந்த) கண்களுடையவனும்,(கண்ணனை கொல்ல வேறு வடிவில் வந்த அசுரனை அதாவது) பொங்கி வந்த கொக்கின்வாயை பிளந்த பழமைக்கும் (பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் உள்ள ஆதியும்அந்தமும் இல்லாத பரம்பொருள்) இருக்குமிடம்), பொங்கி வரும் நீரில் கொழுத்த மீன்கள் (மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடும்) குளங்களும் (அருவிகளும் நிறைந்துள்ள) திருவேங்கடம் தயவு செய்து தித்திக்கும் கரும்பான என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே!

1019
பள்ளியாவது பாற்கடல் அரங்கம்* இரங்க வன் பேய்முலை*
பிள்ளையாய் உயிருண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*
வெள்ளியான் கரியான்* மணி நிற வண்ணன் என்று எண்ணி*நாள்தொறும்
தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.2

விளக்கம்:-

(என் இனியவன் இறைவன்) பள்ளி கொண்டிருக்கும் (இடங்கள்) பாற்கடல், ஸ்ரீரங்கம் (அப்படி படுத்து கொண்டிருந்தவன் கிருஷ்ணா அவதாரத்திலே கெட்ட எண்ணத்துடன் கண்ணனை
கொல்ல கம்சன் அனுப்பிய பூதனை என்பவள் ஒரு சமயத்தில் குழந்தை கண்ணன்
அழும்போது அம்மா போல நடித்து கண்ணன் அழுவதை பார்த்து விஷ பாலை கொடுக்க வந்தவளை) கதற (கதற) கொடிய பேயின் முலையை (வாயில் பற்றிக்கொண்டே
சிறு) பிள்ளையாய் (ஒன்றும் தெரியாதது போல அவள்) உயிரையும் உண்ட
என் தந்தை(யாகிய) இறைவன் வளரும் இடம், வெள்ளியானே,கரியவனே ,(நீல) மணி வண்ணனே! என்று எண்ணி நாள்தோறும் தெளிந்த (அறிவுடையோர்) வணங்கும் மலை திருவேங்கடம்(தயவு செய்து தித்திக்கும் கற்கண்டு என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே!

1020
நின்ற மா மருது இற்று வீழ* நடந்த நின்மலன் நேமியான்*,
என்றும் வானவர்க் கைதொழும்* இணைத் தாமரையடி எம்பிரான்*
கன்றி மாரி பொழிந்திடக்* கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான்*,
சென்று குன்றம் எடுத்தவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.3

விளக்கம்:-

(முன்பு இருவர் செய்த மகா தவறுக்காக சாபம் பெற்று பல காலமாக இருவரும் மரங்களாக மாறி நின்றனர். ஒரு சமயத்தில் இறைவன் கிருஷ்ணா அவதாரம் எடுத்த போது குழந்தை பருவத்தில் வெண்ணை திருடி சாப்பிட்டதால் யசோதை அம்மாவால் உரலால் கட்டப்பட்ட
குட்டி கண்ணன் இருவரின் சாபம் நீக்க உரலில் கட்டப்பட்ட கயிற்றை அவிழ்ப்பது போல)
நின்ற பெரிய மருத (மரங்கள்) ஒடிந்து விழும்படி (இரு மரத்திற்கும் இடையில்)நடந்த
மாசற்றவன், (அழகான) சக்கரத்தை (கையிலே) கொண்டிருப்பவன், என்றுமே வானத்தில் (உள்ளவர்களும்) கை (எடுத்து கும்பிட்டு) வணங்கும் தாமரை மலருக்கு இணையாக
(அழகான) பாதத்தை (உடைய) எம் இறைவன், (ஒரு சமயம் இந்திரனின் கோபத்தால் பலத்த) மழை பெய்ய , (உடனே) வேகமாக சென்று பசு கூட்டங்களின் துன்பத்தை நீக்கினான்.
(பசுக்களை மழை தாக்காதவாறு உடனே) சென்று மலையை (குடையாக) தூக்கியவன் (வசிக்கும் இடம்) திருவேங்கடம் (தயவு செய்து மனமே! தித்திக்கும் சக்கரகட்டி என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே!

1021
பார்த்தர்க்காய் அன்று பாரதம் கை செய்திட்டு* வென்ற பரஞ்சுடர்*
கொத்து அங்கு ஆயர் தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*
ஏத்துவார் தம் மனத்துள்ளான்* இடவெந்தை மேவிய எம்பிரான்*
தீர்த்த நீர் தடம் சோலை சூழ்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*.! 1.8.4


விளக்கம்:-

அர்ச்சுனனுக்காக அன்று (நடந்த) பாரத போரில் (தேர் ஓட்டுபவனாக இருந்து அவர்களுக்கு உதவியாக) கை கொடுத்து வென்ற எல்லையில்லா ஒளி உடைய இறைவன், (என்ன செஞ்சான்னா) தன்னோட ஊரில் பசு மேய்ப்பவர்களோடு சேர்ந்து கைகோர்த்து (ஆனந்தமாக விளையாடிய குட்டி) கண்ணன், (பாசத்தோடு) போற்றி வழிபடுபவர்களின் மனசுல உள்ளான்.
(அது தவிர) திருவிடவெந்தை(யிலும்) பரவிய எம் இறைவன் (வசிக்கும் இடம்), புனிதமான நீருடைய குளங்களும், சோலைகளும் சூழ்ந்த (அழகான) திருவேங்கடம், (தயவு செய்து தித்திக்கும் வெல்ல கட்டி என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி)
அடை நெஞ்சமே!

1022
வண் கையான் அவுணர்க்கு நாயகன்* வேள்வியில் சென்று மாணியாய்**
மண் கையால் இரந்தான்* மராமரம் ஏழும் எய்த வலத்தினான்**
எண் கையான் இமயத்துள்ளான்* இருஞ்சோலை மேவிய எம்பிரான்**
திண் கைம்மா துயர் தீர்த்தவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.5

விளக்கம்:-

பிறருக்கு கொடுத்து உதவும் கைகளை உடையவனும் அசுரர்களுக்கு ஹீரோவான (மகாபலி நடத்திய) வேள்வியில் (குள்ளமான வாமன அவதாரம் எடுத்து) சென்று மண் (ஒட்டியுள்ள) கைகளை (ஏந்தி மூன்று அடி மண் தருவாயா! என்று) கெஞ்சி கேட்ட (உலகளந்த பெருமாள் இராம அவதாரம் எடுத்து, தன்னோட வில் திறமையால் ஒரே சமயத்தில்) ஏழு மரா மரங்களை (அம்பு) விட்டு வீழ்த்திய வலபக்க (தோளில்) அம்பை வைத்துள்ள (இராமன்) எண்ணற்ற கைகளை உடையவன், இமயமலையில் உள்ளான், (அது தவிர) திருமாலிருஞ்சோலையிலும் பரவிய எம் இறைவன், வலிமையான கனத்த தும்பிக்கையுடைய (யானை முன்பு பெருமாளுக்கு பூவை குளத்தில் இருந்து எடுத்து வரும் போது முதலை யானையின் காலை பிடித்து கடிக்க, பெருமாளுக்கு பூ வைக்க வேண்டுமே என்ற ஆசையில் கால் போனாலும் பரவாயில்லை பெருமாளுக்கு வைக்கும் பூவை காப்பாற்ற வேண்டுமே என்ற எண்ணத்தில் பூவை தும்பிக்கையில் தூக்கி வைத்து கொண்டு (ஆதி மூலமே!) என்று எண்ணி யானை பிளிற உடனே கருட வாகனத்தில் யானையின் முன் தோன்றி முதலை
பிடியில் இருந்து யானையின்) துன்பத்தை தீர்த்தவன் (எம் இறைவன் அவன் வசிக்கும் இடம்) திருவேங்கடம், (தயவு செய்து தித்திக்கும் திருபாதம் என் ஏழுமலையான் வாசம்
செய்யும் திருப்பதி) அடை நெஞ்சமே!1023
எண் திசைகளும் ஏழுலகமும் வாங்கிப்* பொன் வயிற்றில் பெய்து*
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்* பால் மதிக்கு இடர் தீர்த்தவன்*
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்* ஒள் எயிற்றோடு*
திண் திறல் அரி ஆயவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*. 1.8.6


விளக்கம்:-

மிகவும் பழமை வாய்ந்த காலத்தில் (எல்லா உலகங்களும் பெரிய அழிவுக்கு உண்டான
போது) எட்டு திசைகளையும், ஏழு உலகங்களையும் தூக்கி (அப்படியே அல்வா சாப்பிடறா
மாதிரி விழுங்கி தன்னோட) தங்கமான வயிற்றில் வைத்து ஒரு அரச இலையின் மீது
படுத்து கொண்டவன் (என் செல்ல கண்ணன்) , பாலை போல வெள்ளை நிறமுடைய நிலா (முன்பு செய்த தவறால் சாபம் வாங்கிடிச்சு! சந்திரனின் சாபம் நீக்கி) துன்பத்தை
தீர்த்தவனும் (என் ஆனந்த கண்ணன்) ,ஜிம் பாடி கணக்கா நல்ல வலிமை பொருந்திய அசுரன் (இரணியனின்) மார்பில் கூரான நகங்களை வைத்தவன் (யார் தெரியுமா!) ஒளியுடைய நல்லா பள பளன்னு கூரான பற்களோடு வாட்ட சாட்டமா
மிக வலிமையுடன் (தூணிலிருந்து வெளிவந்த என் ஆசிரியர் எமக்கு இறைவனுமான)
நரசிம்ம பெருமாள் ஆனவர்! (வசிக்கும் இடம்) திருவேங்கடம், (தயவு செய்து
தித்திக்கும் அக்கரக்கனி அமுது என் ஏழுமலையான் வாசம் செய்யும் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே!

1024
பாரு நீர் எரி காற்றினொடு* ஆகாசமும் இவை ஆயினான்*,
பேரும் ஆயிரம் பேசநின்ற* பிறப்பிலி பெருகுமிடம்,*
காரும் வார்ப் பனி நீள் விசும்பிடைச்* சோரு மாமுகில் தோய்தர*,
சேரும் வார்ப் பொழில் சூழ்* எழில் திருவேங்கடமடை நெஞ்சமே*. 1.8.7


விளக்கம்:-

உலகமும் உலகத்திலுள்ள நிலம், நீர், நெருப்பு காற்றினோடு ஆகாயமும் இவைகள் (எல்லாமும்) ஆகினான், (அதுமட்டுமா௧) பெயரும் ஆயிரம் என்று (இனிய வாயினால்) சொல்லும்படி நின்ற பிறப்பில்லாதவன் (ஆதி இறைவன்) நிறைந்துள்ள இடம், (மேகங்கள்
சூழ்ந்த) கரிய பெரிய நீளமான வானத்தில் (இருந்து) பனி (உருகி) ஊற்றி கொண்டிருக்க, (வானத்திலேயே சுற்றி கொண்டிருப்பதால்) சோர்வடைந்த பெரிய மேகங்கள்
( மலை மேலே) படிந்து (ஓய்வெடுப்பது போல போல காட்சி) தர (அதனோடு) சேர்ந்து
(சுற்றிலும்) பெரிய சோலைகள் சூழ்ந்த அழகான திருவேங்கடம் (தயவு செய்து தித்திக்கும்
தேன் சாரல் என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி) அடை நெஞ்சமே

1025
அம்பரம் அனல் கால் நிலம்* சலம் ஆகி நின்ற அமரர் கோன்*
வம்புலாம் அலர் மேல்* மலி மடமங்கை தன் கொழுநன் அவன்*
கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்* நீள் இதணம் தொறும் *
செம் புனம் அவை காவல் கொள் திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.8

விளக்கம்:-

வானம், தீ காற்று , நிலம், நீர் (இவைகள் எல்லாமும்) ஆகி நின்ற தெய்வங்களின்
அரசனானவன்,எங்கும் கம கமன்னு நல்ல வாசனை பரவி உள்ள மலர் மேல் (அமர்ந்திருக்கும்) மிகவும் இளமையுள்ள (அழகான) பெண் (மகாலட்சுமியின்) கணவன் அவன் (வசிக்கும் இடம் எப்படின்னா!) பூக்கள் நிறைந்த (செடியின்) கொம்புகள் வளைஞ்சி வளைஞ்சி ஆடுறது போல அன்னம் போல மெதுவா தலுக் தலுக்க்னு ஆடுற அழகான மெல்லிய இடையை கொண்டஇளமையுள்ள குறி சொல்லும் பெண்கள், உயர்ந்த பரண் தோறும் இருந்து கொண்டுசெழுமையான வயல்களை (தீயவை நெருங்காதவாறு) காவல் கொண்டுள்ள திருவேங்கடம். (ஆஹா! தயவு செய்து மனமே! இவ்ளோ அழகான மலை! அவன் உதடு மேல் நம் உதடுவைத்து (kiss பண்ணா!) தித்திக்கும் செர்ரி பழம் போல சிவந்த இதழ்களை கொண்ட என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி) அடை நெஞ்மே!

1026
பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும்* சொல்லி நின்று பின்னரும்*
பேசுவார் தம்மை உய்ய வாங்கிப்* பிறப்பறுக்கும் பிரானிடம்*
வாச மா மலர் நாறு வார் பொழில்* சூழ் தரும் உலகுக்கெல்லாம்*
தேசமாய்த் திகழும் மலை* திருவேங்கடம் அடை நெஞ்சமே*!. 1.8.9


விளக்கம்:-

(பொதுவாக எல்லாராலும் பெரிதும்) பேசப்படும் (ஓம் நமோ நாராயணா! என்னும்) எட்டு
எழுத்து திரு நாமத்தை சொல்லி சொல்லி கொண்டும் (அதன்) பின்னரும் (பெருமாளை பற்றியே) பேசி கொண்டிருப்பவர்களை (நல்ல விதமாக) வாழும்படி காப்பாற்றி (அவர்களை தான்) எடுத்து கொண்டு பிறப்பை அறுக்கும் பிரியமான (இறைவன்) இடம், நல்ல வாசனையுள்ள பெரிய பெரிய (அழகான) மலர்களாலும், கம கமக்கும் நீண்ட (மரங்களும் செடி கொடிகளும் கொண்ட குளிர்ச்சியான) சோலைகளாலும் சூழ்ந்து (காட்சி) தருவதோடு, உலகுக்கெல்லாம் (திலகம் போன்று சிறந்த) திருநாடாய் திகழும் மலை திருவேங்கடம், (தயவு செய்து தித்திக்கும் லட்டு என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி) அடை நெஞ்சமே

1027
செங்கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடத்து உறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி* வண் தமிழ் செஞ்சொல் மாலைகள்*
சங்கை இன்றித் தரித்து உரைக்க வல்லார்கள்* தஞ்சம் அதாகவே *
வங்க மா கடல் வையம் காவலராகி* வானுலகு ஆள்வரே*!. 1.8.10


விளக்கம்:-

சிவந்த (செழுமையான) கயல் மீன்கள் (மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடும் அழகான) குளங்களையும் (அருவிகளையும் உடைய) திருவேங்கடத்தில் வசிக்கும் (என்) பொக்கிஷம் (ஏழுமலையானை) திருமங்கை நாட்டு தலைவன் கலிகன்றி வண்ணமயமான (அழகான)
தமிழில் (கூறிய இனிமையான) இலக்கண சொல்லால் (ஆன புகழ்) மாலையை (பலனை எதிர்ப்பார்க்காமல் அவன் ஏற்பானா ஏற்க மாட்டானா! என்ற) சந்தேகம் இல்லாமல் (தெளிவாக நமக்கு) அடைக்கலம் பெருமாளே! என்று பாசத்தோடு சொல்ல ஆற்றல் (உடையவர்கள்) கப்பல்களை கொண்டுள்ள பெரிய கடல் சூழ்ந்த உலகத்துக்கு காவலர் ஆகி,(பின்பு) வான் உலகமும் ஆட்சி செய்வார்கள்!


திருப்பதி ஏழுமலையானின் திருமங்கை ஆழ்வார் பாடிய பாசுரங்களின் தூய தமிழின் விளக்கம்!

பார்த்தன் - அருச்சுனன்
புள் - பறவை
திளைத்து : கலந்து : பொருந்தியவள்
செங்கயல் - கொழுத்த மீன்கள்
குருந்து - குருந்த மரம்
ஒசித்த – ஒடித்த
கொங்கு - வாசனை
அலர்ந்த - வளமான , மலர்ந்த
தடங்கடல் – பெரிய கடல்.
எந்தை – என்தந்தை
கோவலன் - கிருஷ்ண பரமாத்மா
தெள்ளியார் - தெளிந்த அறிவுடையவர்
சுனை - மலை ஊற்று, குளம்
புராணம் - பழமைக்குப் பழமையாய் புதுமைக்குப் புதுமையாய் இருப்பவன் பரம் பொருள்
பிரான் - தலைவன், கடவுள்; சிவன்; திருமால்
வெள்ளி - வான் மண்டலத்திலுள்ள ஒரு நட்சத்திரம்.Or ஒரு உலோக வகை.
இரங்கு - தயை செய்; இரக்கம் கொள்; அழு; வருந்து பரிதவி:
பள்ளிகொள்ளுதல் - படுத்தல்
அமலன், விமலன், நிமலன், நின்மலன் - நான்கு பதங்களும் மாசற்றவன்
நின்மலன் - அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை "அவர்கள் பேறு பெறுவதற்காக" செய்வதாக நினைக்கும் குறை இல்லாதவன்.
அதாவது அடியார்களுக்கு செய்யும் உபகாரத்தை கூட தன் பேறாக எண்ணி செய்கிறான்
நின்மலம் _ மாசின்மை.
நின்மலன் _ கடவுள் :.
நேமியான் - சக்கரத்தை கையிலே கொண்டிருப்பவன்
வீழ - விழ
கன்றுதல் - முதிர்தல், அடிபடுதல், குறைதல், சினக் குறிப்புக் காண்பித்தல்,
கடிது - விரைவாக
ஆநிரை – பசுக்கூட்டம்
இடர் – துன்பம்
பார்த்தன் (அர்ச்சுனன்)
பயன்பாடு பாரதம், பழமையான பண்பாடுகள் கொண்ட நாடு.
பரஞ்சுடர் - ஒப்பற்ற ஒளியுடைய முழு முதற்கடவுள்
ஆயர் - ஆடு மாடுகளை மேய்ப்பவர்
பாடி – ஊர்
குரவை = கைகோத்தாடுதல்
கோவலன் – இனங்காப்பார்
கோவலன் - கிருஷ்ண பரமாத்மா
ஏத்து – போற்று
மேவி - பரவி - அல்லது கலந்து
தடம் – குளம், பாதை
தீர்த்தம் - புனித நீர்
அவுணர் – அசுரர்
மாணி - திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும்
இரந்து - கெஞ்சி; மன்றாடு.வண் கை - ஈகை, கொடை பொருள் உதவி
ஒண் - ஒண்ணு .பொருந்து
எண் - எண்ணம், எட்டு, எண்ணற்ற
திண் - திடமான
ஆலிலை - ஆலமரத்து இலை
மதி - நிலா
திறல் - வலிமை.
உரம் - மார்பு
உகிர் – நகம்
ஒள் ஒளி
எயிற்று - பல்,
அரி – சிம்மம்
ஆய - ஆகிய
பார் - நிலம், உலகம்
பிறப்பிலி - பிறப்பில்லாதவன்
கார் - கரிய , மேகம் , மழை கால நெற்பயிர்
வார் - ஊற்றுதல் நீண்ட
நீள் - நீளமான
விசும்பு - வானம்
இடை - இடுப்பு, நடு, மத்தி
சோர் - சோரென்னேவல் : சோர்வு : வஞ்சகம்
மாமுகில் - பெரிய மேகங்கள்
தோய் - படிதல், நனைதல்
சேர் - ஒன்றோடு ஒன்று இணையும் செயல்
பொழில் – மழைக்காடு, சோலை, மரங்களும் செடி கொடிகளும் நிறைந்த குளிர்ச்சியான இடம்
எழில் - அழகான
வார் பொழில் – நீண்ட சோலை
தோய்தர - பொருந்த
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வம்பு - மணம்
அலர் - பூ, மலர்
மலி - மிகுந்த
மடம் - இளமையுமுடைய,
மங்கை – பெண்
கொம்பின்- பூங்கொம்பு
இதணம் – பரண்
புனம் – காடு , வயல்
கொழுநன் - கணவன்
அம்பரம் - வானம்
அனல் - தீ
கால் - காற்று
சலம் - நீர்
அமரர் - தேவர்
கோன் –, அரசன்
உய்ய – வாழ
நாறு - வாசம்
திளைத்து : கலந்து : பொருந்தியவள்
உறை = வசிக்கும் .
சங்கை - அச்சம், பயம்
தரித்து - அணிந்து
உரைக்க - சொல்லுதல் , கூற
வல்லமை - ஆற்றல், சக்தி, பெரும்வலிமை
தஞ்சம் - அடைக்கலம்
வங்கம் - மரக்கலம்,கப்பல்
வையம் - உலகம்
செஞ்சொல் மாலை – இலக்கணசொல், புகழ் மாலை
ஏழுமலையானுக்கு சமர்ப்பணம்!
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!

No comments: