பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Friday, August 26, 2011

பெருமாளை அடைய விரும்புபவர்களே!! காட்டில் சென்று தவமெல்லாம் செய்ய வேண்டாம்!!!. சிதம்பரம் கோவிலுக்கு சென்று கோவிந்தராஜனை வழிபடுங்கள்.



1158
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு* உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து*
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா* தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர்*
கான் ஆட மஞ்ஞைக்  கணம் ஆட மாடே* கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடை போய்த்* 
தேன் ஆட  மாடக் கொடி ஆடு*  தில்லைத்  திருச்சித்ரகூடம்  சென்று சேர்மின்களே* 3.2.1

விளக்கம்:- 
வானுலகை தம்முடையதாக கொண்டு ஆள வேண்டியிருப்பவர்களே! உடல் வாடும் 
அளவுக்கு உண்ணாமல், உயிர் மட்டும் போகாமல் பாதுகாத்து கொண்டு, உடலில் பிரியாத
கண், காது, மூக்கு, வாய், தோல் இவை ஐந்து புலன்களும் நொந்து தாங்கள் வாட வாட 
தவமெல்லாம் செய்ய வேண்டாம்!

மரம், செடி, கொடிகள் ஆட, அதை பார்த்து மயில் கூட்டங்கள் நடனம் ஆட, அருகே கயல் 
மீன்கள் துள்ளி விளையாடும் வாய்க்கால் நீர் நிறைந்த வயல்களின் மேலே சிறகடித்து 
பறக்கும் தேன் உண்ட வண்டுகள் ஆட, பெரிய மாளிகைகள் மேலே கட்டபட்டிருக்கும் 
கொடி ஆடும், சிதம்பரம் எனப்படும் தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேருங்களேன்!

மேலும் தெரிந்த கொள்ள விரும்பினால் :-
ஊன் வாட உண்ணாது உயிர் காவல் இட்டு - உடல் வாட உண்ணாமல் ஆன்மாவிற்கு 
பாதுகாப்பு கொடுத்து 
உடலில் பிரியாப் புலன் ஐந்தும் நொந்து - உடலை விட்டு பிரியாத புலன்கள் 
(கண்காதுமூக்குவாய்தோல்)  ஐந்தும் நொந்து
தாம் வாட வாடத் தவம் செய்ய வேண்டா -  தாங்கள் வாட வாடத் தவம் செய்ய 
வேண்டாம் 
தமதா இமையோர் உலகு ஆளகிற்பீர் - தம்முடையதாக (கொண்டு) தேவர்கள் உலகை 
ஆள வேண்டி இருப்பவர்களே
கான் ஆட மஞ்ஞைக் கணம் ஆட மாடே - மரம் செடிகள் ஆடமயில் கூட்டங்கள் ஆட
அருகே 
கயல் ஆடு கால் நீர்ப் பழனம் புடை போய்த் -  கயல் மீன்கள் விளையாடும்  வாய்க்கால்
நீர் நிறைந்த வயல்களில் சிறகடித்து (பறந்து) போய் 
தேன் ஆட  மாடக் கொடி ஆடு - தேன் (குடித்த வண்டுகள்ஆடமாளிகைகள் 
(மேலே கட்டியிருக்கும்கொடி ஆடும் 
தில்லைத்  திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே - தில்லை திருச்சித்ரகூடம் சென்று
சேருங்களேன்!

1159
காயோடு நீடு கனி உண்டு வீசு* கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம்* ஐந்து 
தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா* திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்* 
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல் சீர்* மறையாளர் நாளும் முறையால் வளர்த்த* 
தீயோங்கப்  ஓங்கப் புகழ் ஓங்கு* தில்லைத்  திருசித்ரகூடம் சென்று சேர்மின்களே*3.2.2

விளக்கம்:- 
மகாலட்சுமியை  மார்பில் வைத்திருக்கும் மார்பனை மனதில் வைத்திருக்க விருப்பம் கொண்டிருப்பவர்களேகாயோடு, நீண்ட நாட்கள் பழுத்த பழங்களையும், வீசும் சூடான 
காற்றையும் சுவாசித்து கொண்டு, ஐந்து தீயை வளர்த்து அதற்க்கு நடுவில் நின்று கொண்டு 
நீண்ட காலம் தவமெல்லாம் செய்யா வேண்டாம்!! 

வாயில் சொல்லப்படும் வேதங்கள் குறைவில்லாமல வருகின்ற பழம் பெருமை வாய்ந்த 
வேதம் சொல்பவர்கள் நாள்தோறும் முறைப்படி வளர்த்த யாக தீ ஓங்க ஓங்க, அதனால் 
புகழும் ஓங்கும், சிதம்பரம் எனப்படும் தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேருங்களேன்!

மேலும் தெரிந்த கொள்ள விரும்பினால் :-
காயோடு நீடு கனி உண்டு வீசு - காய்களோடு, நீண்ட காலம் (நாட்கள் பழுத்த) பழத்தையும் 
உண்டு வீசுகின்ற 
கடுங்கால் நுகர்ந்து நெடுங்காலம் - கடும் காற்றையும் சுவாசித்து நீண்ட காலம் 
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா - ஐந்து தீயின் (மத்தியில்) நின்று தவம் 
செய்ய வேண்டாம்!
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் - மகாலட்சுமியை (மார்பில் வைத்திக்கும்) 
மார்பனை (பெருமாளை) வைத்து (கொள்ள வேண்டும்) என்று இருப்பவர்களே! 
வாய் ஓது வேதம் மலிகின்ற தொல் சீர் - வாயில் ஓதும் வேதம் குறைவில்லாத பழம் 
பெருமை (வாய்ந்த) 
மறையாளர் நாளும் முறையால் வளர்த்த - வேதம் சொல்பவர்கள் நாள்தோறும் முறைப்படி 
வளர்த்த 
தீயோங்கப்  ஓங்கப் புகழ் - (யாக சாலை) நெருப்பு ஓங்க ஓங்க (அதனால்) புகழும் 
ஓங்கு தில்லைத் திருசித்ரக்கூடம் சென்று சேர்மின்களே - ஓங்கும் தில்லை திருச்சித்ரகூடம் 
சென்று சேருங்களேன்!


1160
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய்* விரி நீர் முது வெள்ளம்  உள்புக்கு அழுந்த*
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான்* அடிப் போது அணைவான் விருப்போடு இருப்பீர்*
பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து* படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த* செம்பொன்
மணி மாடங்கள் சூழ்ந்த* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே* 3.2.3

விளக்கம்:- 
கொதித்தெழுந்த கோபத்துடன் காட்டு பன்றி உருவம் எடுத்து மிக பெரிய கடலில் உள்ளே
புகுந்து மூழ்கிய, வாசனை மிக்க மரம், செடி, கொடி, மலர் என சோலைகள் சூழ்ந்த பூமியை
முன்பு எடுத்து வந்தவனின் மலரடியை பற்றி கொள்ள விருப்பத்தோடு உள்ளவர்களே!

அழகிய பொன்னும், முத்தும், மணியும் கொண்டு வந்து, பெரும் படைகளை கொண்ட பல்லவ
மன்னன் பணிந்து வழிபட்ட, தூய பொன்னும், ஒளி வீசும் மணிகளாலும் ஜொலிக்கும் 
மாளிகைகள் சூழ்ந்த சிதம்பரம் எனப்படும் தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேருங்களேன்!

மேலும் தெரிந்த கொள்ள விரும்பினால் :-
வெம்பும் சினத்துப் புனக் கேழல் ஒன்றாய் - கொதிக்கும் கோபத்தோடு காட்டு ஆண் பன்றி 
ஒன்றாய் )உருவம் கொண்டு(
விரி நீர் முது வெள்ளம்  உள்புக்கு அழுந்த - பரந்த நீரான கடல் வெள்ளம் உள்ளே புகுந்து 
மூழ்கிய 
வம்பு உண் பொழில் சூழ் உலகு அன்று எடுத்தான் - வாசனை பொருந்திய சோலைகள் 
சூழ்ந்த பூமியை அன்று எடுத்தவனின் 
அடிப் போது அணைவான் விருப்போடு இருப்பீர் - அடி மலரை பற்றிக்கொள்ள விருப்பமோடு இருப்பவர்களே
பைம்பொன்னும் முத்தும் மணியும் கொணர்ந்து - அழகிய பொன்னும், முத்தும், மணியும் 
கொண்டு வந்து 
படை மன்னவன் பல்லவர் கோன் பணிந்த - பெரும்) படைகளை) கொண்ட) மன்னன் 
பல்லவ ராஜா பணிந்த 
செம்பொன் மணி மாடங்கள் சூழ்ந்த - தூய பொன்னும், ஒளி வீசும் மணிகளாலும் 
(ஜொலிக்கும்) மாளிகைகள் சூழ்ந்த 
தில்லைத் திருச்சித்ரக்கூடம் சென்று சேர்மின்களே -  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று 
சேருங்களேன்


அருமையான பாசுரத்தில் வரும் கதை 
பூமியை மீட்ட பெருமாள்” 
காசியப முனிவருக்கு இரு மனைவிகள் அதிதி மற்றும் திதி. இதில் அதிதி மஹா
விஷ்ணுவையே மகனாக பெற வேண்டும் என்று கடும் தவம் செய்து வந்தாள்.ஆனால் 
திதியோ தேவர்களையும் வெல்லும் மகன்கள் வேண்டும் என்று ஆசைப்பட, அவள் வயிற்றில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு என்ற இரு ராட்சசர்கள் பிறந்தனர்அவர்களில் இளையவன் ஹிரண்யாக்ஷன்.

அவன் பிரம்மாவைக் குறித்துக் கோரதவம் செய்தான். பிரம்மா இரணியாக்ஷன் தவம்
செய்யுமிடம் அடைந்து அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.அதற்கு அவன்
சிருஷ்டியில் தோன்றிய யாராலும், எதனாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக் கூடாது
தனக்கு மூவுலகத்திற்கும் அதிபதியாகும் வரங்கள் இரண்டும் வேண்டினான்.அதன் பின் 
அவனது அட்டக்காசம் அதிகரித்தது.

வரம் பெற்ற இரணி யாக்ஷன் மூவுலகங்களையும் வென்று தனக்கு எதிரி யாருமின்றி 
ஆளத் தொடங்கினான். ஒரு சமயம் ஆணவத்தினால் பூமியை எடுத்து சென்று வேறொரு 
லோகத்தில் உள்ள ஆழமான கடலுக்குள் ஒளித்து  வைத்துவிட பூமியைப் மீட்க , இறைவன் 
பன்றி உருவத்துடன் வராக பெருமாளாக வந்து  இரணியாக்ஷன் மீது பாய்ந்து தன் தந்தத்தால்
(கோரைப் பல்லால்) குத்தினார். அவன் அதைத் தாளமுடியாமல் சமுத்திரத்திலே குதித்து
மறைந்தான். அவனை வராக பெருமாள் தனது கால்களால் பற்றிக் கொண்டு மறுபடியும் 
தந்தத்தால் குத்தினார் . அதனால் அவன் உடனே மரணமடைந்தான்.

அவனால் எடுத்து செல்லப்பட்ட  பூமியை வராகபெருமாள்  தனது வளைந்த தந்தத்தால் மேல்
தூக்கி கொண்டு வந்து பூமி தேவியை சரியான இடத்தில் வைத்து விட்டு வைகுண்டம் அடைந்தார்.


1161
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய்* அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த*
பெருமான் திருநாமம் பிதற்றி* நும் தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர்*
கருமா கடலுள் கிடந்தான் உவந்து* கவை  நா அரவின் அணைப் பள்ளியின் மேல்* 
திருமால் திருமங்கையோடு ஆடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே* 3.2.4

விளக்கம்:- 
யாராலும் அளக்க முடியாத கடினமான பெரிய உலகை முன்பு அளப்பதற்காக குள்ள 
உருவம் கொண்டு அரக்கன் மகாபலி நடத்திய பெரிய யாகத்தில்  மூன்று அடி மண் 
வேண்டும் என்று பணிந்து கேட்ட, பெருமாளின் திருபெயர்களை எந்நேரமும் வாயில் 
சொல்லி கொண்டுஉங்களின் பிறவி துன்பம் நீங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பவர்களே!

கரிய நிற கடலுள் கூரிய இரண்டு நாக்கையுடைய ஆதிசேசன் என்ற பாம்பு மெத்தை படுக்கையின் 
மேல் மகிழ்ந்து படுத்து கொண்டிருக்கும்  திருமால் திரு லட்சுமியோடு சேர்ந்து காட்சி தரும்  
சிதம்பரம் எனப்படும் தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேருங்களேன்!

மேலும் தெரிந்த கொள்ள விரும்பினால் :-
அரு மாநிலம் அன்று அளப்பான் குறளாய் - (யாராலும் அளக்க முடியாத) கடினமான பெரிய 
உலகை  முன்பு  அளப்பதற்காக குள்ளமாய் 
அவுணன் பெரு வேள்வியில் சென்று இரந்த - அரக்கன் (நடத்திய) பெரிய யாகத்தில் சென்று
 பணிந்து கேட்ட 
பெருமான் திருநாமம் பிதற்றி - பெருமான் திரு பெயர்களை விடாமல் வாயில் சொல்லிக்கொண்டு 
நும் தம் பிறவித் துயர் நீங்குதும் என்னகிற்பீர் - நீங்கள் உங்களின் பிறவி துன்பம் நீங்க 
வேண்டும் (என்ற) எண்ணம் கொண்டிருப்பவர்களே! 
கவை  நா அரவின் அணைப் பள்ளியின் மேல் - இரு கூரிய நாக்கையுடைய பாம்பின் 
மெத்தை படுக்கையின் மேல் 
கருமா கடலுள் கிடந்தான் உவந்து  - உவந்து கருமா கடலுள் கிடந்தான் - மகிழ்ந்து கரிய 
பெரிய கடலுள் (படுத்து) கிடந்தான் 
திருமால் திருமங்கையோடு ஆடு - திருமால் திரு லட்சுமியோடு கூடி (இருக்கும்)
தில்லைத் திருச்சித்ரக்கூடம் சென்று சேர்மின்களே - தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று 
சேருங்களேன்


அருமையான பாசுரத்தில் வரும் கதை
"உலகளந்த பெருமாள்"
மகாபலி என்று மன்னன் ஒருவன் இருந்தான். அவன் இரண்யகசிபுவின் புதல்வனான 
பக்த பிரகலாதன்பேரனாவான். அவர்தன் தவ வலிமையால் தேவர்களை எல்லாம் வெற்றிக் கொண்டான்.அதேசமயம்உலக மக்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதுஉலக உயிர்கள் 
அனைத்தும் இவனின் வெண்கொற்றங்குடைகீழ் மிகுந்த சுகபோகமாக வாழ்ந்தனவாம்.

ஆனால்ஒரு குட்டியோன்டு அளவுள்ள ஆணவம் மட்டும் மாவலிச் சக்கரவர்த்தியின் 
தலைக்குள்ள இருந்துச்சாம். தான் தான் இந்த உலகத்துலேயே ரொம்ப நல்லவரு வல்லவரு. 
யாரு என்னா கேட்டாலும் கொடுத்துடுறவருதானம் செய்வதில் தன்னை விட தலைசிறந்தவர்
எவருமில்லை என்ற எண்ணம் ரொம்பவே இருந்துச்சாம்.தான்தான் தானத்தின் தலைவன் என்கிற
அளவுக்கு இருந்ததாம். இந்த எண்ணத்துடனேயே அவர் ஆட்சி புரிந்து,  விண்ணுலகம்மண்ணுலகம் எல்லாத்துலயும் ஒரு கலக்கு கலக்கினார் மாவலி சக்கரவர்த்தி.

தேவலோக பதவியில் இருந்து நழுவாமல் இருக்கும்படியாக நூறு  அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான். இதனால் மூவுலகிலும் இவன் புகழ் ஓங்கி நின்றதுஅவன் ஆணவத்தை 
அடக்க பெருமாள் காசியப முனிவருக்கு மகனாக வந்து,  வாமனனாகத் பிறந்தார் . வாமனனாக 
வந்த இறைவன்ஒரு கையில் கமண்டலம்மறுகையில் ஒரு குடையும் கொண்டுஉடலை 
மறைக்க மேற்போர்வையாக உத்தரீகமும் அணிந்து கொண்டுகுள்ளமான உருவத்துடன்மகாபலிச் சக்கரவர்த்தி நடத்திய வேள்விக்கு  சென்றான்.

சிறுவனாக வந்த வாமனனிடம்மகாபலிச் சக்கரவர்த்தி 'சிறுவனே! உனக்கு என்னிடம் இருந்து 
என்ன வேண்டும்?' என்று கேட்டார்.வாமனன்தன் காலடியால் அளக்கப்பெற்ற மூன்றடி 
அளவுடையநிலம் வேண்டும் என்று யாசித்தார்.ஜுஜிபி! என்பது போல மூன்றடி மண்தானே எடுத்து
கொள்! என்று கூற குள்ள வாமன பெருமாள் ஓங்கி உயர்ந்து  தன் அடியில் மூவுலகங்களையும் 
அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.முதலடியால் மண்ணையும்
இரண்டாம் அடியால் விண்ணையும் அளந்துவிட்டார்.

மூன்றடியில்இரண்டடியிலேயே அனைத்தையும் அளந்துவிட்டதும்மூன்றாம் அடிக்கு இடம் 
இல்லாது திகைக்கவே....மாவலித் தலைகுனிந்துஇறைவனிடம் வணங்கி நின்றுமூன்றாமடிக்குத் தன்னையே ஏற்றுக் கொள்ளுமாறு கொடுத்துவிட்டார். இறைவனின் திருவடி பட்டதால்மாவலியின் ஆணவம் அழிந்து முக்தி பெற்றான்.






1162
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக்* குல மன்னர் அங்கம் மழுவில் துணிய* 
தாம் அங்கு அமருள் படை தொட்ட வென்றித்* தவ மாமுனியைத் தமக்கு ஆக்ககிற்பீர்*
பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப்* புகழ் மங்கை எங்கும் திகழப்* புகழ் சேர் 
சேமம் கொள் பைம் பூம்பொழில் சூழ்ந்த*  தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே* 3.2.5

விளக்கம்:- 
கொடிய மன்னர்கள்  அழிந்து, கடல் சூழ்ந்த உலகம் செழிக்க,  தன் தந்தையை கொன்ற 
கார்த்தவீரியன் குல மன்னர்களின் உடல்கள் கோடாரியிலே அழியும்படி தாமே போர்களத்தில் 
புகுந்து ஆயுதம் ஏந்தி வெற்றி பெற்ற, தவத்தில் சிறந்த மாமுனிவரான பரசுராமரை தமக்கு 
உரியவராக ஆக்க இருப்பவர்களே!

மகாலட்சுமி வலபக்க மார்பினில் தங்கி, பூமா தேவி இடபக்க மார்பினில் நிலைபெற்று
புகழுடைய நீளா தேவி எங்கும் திகழ, புகழோடு பெரிய சுற்று சுவர்கள் கொண்டுள்ளதும்
பசுமையான பூஞ்சோலைகள் சூழபெற்றதுமான சிதம்பரம் எனப்படும் தில்லை திருச்சித்ரகூடம்
சென்று சேருங்களேன்!

மேலும் தெரிந்த கொள்ள விரும்பினால் :-
கோ மங்க வங்கக் கடல் வையம் உய்யக்  - (கொடிய) அரசர்கள் அழிந்து,  அலை கடல் 
(சூழ்ந்த) உலகம் செழிக்க 
குல மன்னர் அங்கம் மழுவில் துணிய - (கார்த்தவீரியன்) குல மன்னர்களின்  உடல் 
கோடாரியில் அழிய 
தாம் அங்கு அமருள் படை தொட்ட  - தாமே அங்கு போர்களத்தில் (புகுந்து) ஆயுதம் ஏந்தி
வென்றித் தவ மாமுனியைத் தமக்கு ஆக்ககிற்பீர் வெற்றி பெற்ற,  தவத்தில் சிறந்த 
முனியை (பரசுராமரை) தமக்கு (உரியவராக) ஆக்க இருப்பவர்களே 
பூமங்கை தங்கிப் புலமங்கை மன்னிப் - பூவில் அமர்ந்த பெண் (மகாலட்சுமி வலப்பக்கம்) 
தங்கி பூமி பெண் (பூமி தேவி இடப்பக்கம்) நிலைபெற்று 
புகழ் மங்கை எங்கும் திகழப்    - புகழுடைய பெண் (நீளாதேவி) எங்கும் திகழ 
புகழ் சேர்  சேமம் கொள் - புகழோடு கூடிய பெரிய வெளிப்புற  சுவர்கள் கொண்டுள்ள 
பைம் பூம்பொழில் சூழ்ந்த    - பசுமையான  பூஞ்சோலைகள் சூழ்ந்த 
தில்லைத் திருச்சித்ரக்கூடம் சென்று சேர்மின்களே - தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று 
சேருங்களேன்



அருமையான பாசுரத்தில் வரும் கதை
"தவ மா முனி பரசுராமர்"
பெருமாளின்  ஆறாவது அவதாரம் பரசுராமர் ஆவார். இவரது காலம் திரேத யுகம் ஆகும்
இவர் ஜமதக்னி முனிவருக்கும் ரேனுகாம்பாளுக்கும் பிறந்தவர் ஆவார். பரசு என்றால் 
கோடாலி என்று பொருள். இவர் கடுந்தவம் செய்து சிவ பெருமானிடம் இருந்து ஒரு 
கோடாலியைப் பெற்றார். அதனால் இவர் பரசு-ராமர் என்று அழைக்கப்படுகிறார்.

**--பெருமாளே தெய்வம் அவர் எதற்கு தவம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா! 
 பரசுராமராக பிறந்து தான் ஒரு தெய்வம் என்று காட்டிக்கொள்ளவில்லைமனிதர்களுள் 
மனிதராக  அவரும் சாதாரணமாகவே வாழ்ந்தார்.***

ஜமதக்னி முனிவர் அனைத்தையும் கேட்டவுடன் கொடுக்கும் காமதேனு பசு வைத்திருந்தார் . மகா பலசாலியான சத்திரியனான கார்த்த வீரியன் என்பவன் முனிவரிடமிருந்து பசுவை 
திருடிகொண்டான் . இதனால் பரசுராமர் அவனை கொன்றார்.

இதைக் கேள்வியுற்ற கார்த்த வீரியர் மைந்தர், பரசுராமர் இல்லாத நேரத்தில் சமதக்கினி 
முனிவரைக் கொலை புரிந்தனர். பரசுராமர் அங்கு வந்தவுடன், சமதக்கினி முனிவர் 
தேவியார் இருபத்தொரு முறை தம் மார்பிலடித்துக்கொண்டு, அவன் தந்தை இறந்த 
செய்தியைத் தெரிவித்தாள். கோபமுற்ற பரசுராமர் கார்த்தவீரியன் குலமாகிய சூரியகுல 
மரபினர்களை அழிப்பதாக 21 தலைமுறைச் சத்திரியர்களை அழித்தார்.

** ஆமாம்! சத்திரியர்கள் என்பவர்கள் யார்? -- 
சத்திரியர் என்பவர்கள் ஆட்சி செய்ய தகுதியுள்ள மன்னர்களும், போர் தொழில் 
செய்பவர்களும் ஆவர். **


அருமையான பாசுரத்தில் புகழ் மங்கை என்று ஆழ்வார் சொல்வது நீளாதேவி 
என்ற நப்பின்னை!

நீளா தேவி என்பவள்  திருமாலின் துணைவி என்று சொன்னால், ‘அப்படியா’ என்று 
ஆச்சரியப்படுபவர்கள் நிறைய பேர்.

ஏற்கெனவேதுணைவி என்று ஒரு தெய்வம் தாயார் சந்நிதியில் அமர்ந்திருக்கபெருமாள் வீற்றிருப்பதோஸ்ரீ தேவிபூதேவி என்ற இரு நங்கயருடன். வீதி வலம் வந்தாலும்இந்த இவருடன்தான். இந்த இருவருடன் மூன்றாவதாக நீளா தேவியுமா என்று கேட்பவர்கள் 
உண்டு. அவர்களுக்கு ஒரு செய்தி. இந்த நீளா தேவியும் எப்பொழுதும் 2+1 என்றுதான் 
பெருமாளுடன் வீற்றிருக்கின்றாள். வீதி வலத்திலும் அவள் வருகின்றாள்.

ஆனால்  அவளை நம்மால் பார்க்க முடியாது. அவள் பெருமாளை ஒட்டிஅவரது நிழலாக - 
இருட்டாக இருக்கிறாள் என்று பெரியோர் கூறுவர். 

நீளாதேவி என்ற நப்பின்னை யார்?
கண்ணனின் மாமன் மகள் நப்பின்னை. மாமன் கும்பன் ஒரு நிபந்தனை வைத்தான். 
அவனிடம் ஏழு முரட்டுக் காளைகள் இருந்தன. இவற்றை அடக்குபவருக்கே தன் மகள்
மாலை சூட்டுவாள் என்று சொன்னான். இதை அறிந்த கண்ணன் நப்பின்னையை திருமணம்
 செய்ய விரும்பி ஏழு முரட்டு எருதுகளை அடக்கி நப்பின்னையைக் கைப்பிடித்தான்.

மண் என்பது பூமகள் என்பதும், பொன் என்பது திருமகள் என்பதும், பெண் என்பவள் 
நீளா தேவி என்றும் கூறுவர். மேலும் படிக்க http://www.tamilhindu.com/2009/12/neela-devi-in-tamil-tradition/

1163
நெய் வாய் அழல் அம்பு துரந்து* முந்நீர் துணியப் பணி கொண்டு அணி ஆர்ந்து* இலங்கு 
மை ஆர் மணிவண்ணனை எண்ணி* நும் தம் மனத்தே இருந்ததும் படி வாழ வல்லீர்*
அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான்* அரு மா மறை அந்தணர் சிந்தை புக*
செவ்வாய்க் கிளி நான்மறை பாடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே* 3.2.6

விளக்கம்:- 
நெய் ஊற்றி பொங்கி வரும் நெருப்பு போன்ற தீ அம்பை விட்டு கடல் நீரை வற்ற செய்ய 
முயன்ற போது, வருண பகவான் வந்து கடல் நீரை வற்ற செய்வதால் கடல் வாழ் 
உயிரினங்களுக்கு துன்பம் ஏற்படும் என்பதால் கடலில் அணை ஏற்படுத்த கூறியதால், 
அணை கட்டும் பணியை மேற்கொண்டவனும் ஆபரணங்கள் நிறைந்து,  பிரகாசமான 
கரு மணிவண்ணனை எண்ணி  தங்கள் மனதில் நிலைநிறுத்தி வாழ ஆசைப்படும்

அழகு வாயுடைய இளம் பெண்கள் வேதங்களை சொல்லி கொண்டிருக்கஅதை கேட்டு
கொண்டிருந்து   அரிய பெரிய வேதங்கள் பிராமணர்களின் மனதில் புகும்படி சிவந்த வாயுடைய 
கிளிகள்  வேதங்கள் பாடும் சிதம்பரம் எனப்படும் தில்லை திருச்சித்ரகூடம் சென்று 
சேருங்களேன்!

மேலும் தெரிந்த கொள்ள விரும்பினால் :-
நெய் வாய் அழல் அம்பு துரந்து - நெய் ஊற்றிய (நெருப்பு போல) தீ  அம்பை விட்டு 
முந்நீர் துணியப் பணி கொண்டு அணி ஆர்ந்து - கடல் நீரை அழிக்க (முயன்றபோது 
வருண பகவான் வந்து
அணை கட்ட பணிந்து கூறியதால் அணை கட்டும்) பணியை மேற்கொண்டவனும் , 
ஆபரணங்கள் நிறைந்து 
இலங்கு மை ஆர் மணிவண்ணனை எண்ணி - பிரகாசமான கருமை பொருந்திய 
மணிவண்ணனை எண்ணி 
நும் தம் மனத்தே இருந்ததும் படி வாழ வல்லீர் - நீங்கள் தங்கள் மனதில் நிலைபெற்று
 வாழ (ஆசைபடும்) வல்லவர்களே! 
அவ்வாய் இள மங்கையர் பேசவும் தான் -  அழகு வாயுடைய இளம் பெண்கள் (வேதங்களை) சொல்லி கொண்டிருக்க (அதை கேட்டு கொண்டு)
அரு மா மறை அந்தணர் சிந்தை புக - அரிய பெரிய வேதங்களை பிராமணர்களின் மனதில் புகும்படி 
செவ்வாய்க் கிளி நான்மறை பாடு - சிவந்த வாயுடைய கிளி வேதங்களை பாடும் 
தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே  - தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று 
சேருங்களேன்


அருமையான பாசுரத்தில்  வரும் கதை
இராமர் கடலை கடக்க செய்த செயல்

இராவணனிடம் இருந்து சீதா தாயாரை மீட்க  இலங்கை செல்ல கடலை கடக்க வேண்டும் 
என்பதால்  வருண பகவானை வரவழைக்க கடலுக்கு அருகில் சென்றுதர்ப்பைப் புற்களை 
அடுக்கி அதன்மேல் நின்று கொண்டுஏழு நாட்கள் வருண ஜபம் செய்தும்வருணன் வந்து 
தோன்றவில்லை. வருணன் வராததால் தன் கோதண்டத்தை எடுத்து வளைத்துநாணை 
இழுத்து ஒலி எழுப்பினான்.

வருணன் வராததால் இராமனுடைய கோபம் அதிகரித்தது. பிரம்மாஸ்திரத்தை மந்திரம் சொல்லி 
கையில் வாங்கி அதை வில்லில் பூட்டி கடலின் மீது செலுத்த முயல்கிறான். இதனைக் கண்டு
உலகமே நடுங்குகிறது. மேகக்கூட்டம் நடுங்கி சிதறி ஓடுகிறது. உடனே 
கண்களில் கண்ணீரோடுதொழுத கையனாய் வருணன் வந்து இராமனின் பாதங்களில் வந்து 
விழுந்து 'அடைக்கலம் இராமாஎன்கிறான்.தான் தாமதமாக வந்ததற்கு தக்க காரணம் கூற,  
வருண பகவான் சொல்வதை ஏற்று கொண்ட இராமர் வருணனை பார்த்து எனக்குப் பழியை 
உண்டாக்கிய அரக்கர்களது செருக்கை அடக்கக் கடலில் வழி உண்டாக்கித் தரவேண்டும்" என்றான்.

அதற்கு வருணன் "கடலை வற்றச் செய்ய நெடுங்காலம் ஆகும். கடல் நீரை திடமானதாக 
ஆக்குவோமென்றால்கடல் வாழ் உயிரினங்களுக்குத் துன்பம் நேரும். ஆகையால் இவ்விரு 
வழியும் வேண்டாம். என் மீது (கடல்) அணை கட்டிச் செல்வதே நல்லது. என் மீது அணை 
கட்டுவதற்காக இடும் கற்கைளை நான் கடலில் மூழ்கிவிடாமல் வரம்பிலா காலமும் தாங்குகிறேன்" என்றான்.

உடனே இராமர் கடலில் அணை கட்ட தன் நண்பர்களிடம் கூற ஆஞ்சநேயர்  உட்பட வானர 
சேனைகள் காடுகளில் போய் பெரியபெரிய மரங்களையெல்லாம் வேரோடு பெயர்த்து 
எடுத்து வந்தனர். மலைகளில் இருந்து பாறைகளை உருட்டிக் கொண்டு வந்தன
இவற்றையெல்லாம் கடலில் போட்டபோது அதன் நீர் ஆகாயம் வரை உயரக்கிளம்பி சிதறியது. 

பால வேலை துரிதமாகவே நடைபெற பெற்றது. கற்களையும்மரங்களையும் சீராக 
வானரங்கள் அடுக்கிஅடுக்கி வைத்தவாறே அழகிய பாலத்தை வெகு சீக்கிரத்தில் அமைத்தும் 
விட்டனர். இவ்வளவும் நளனென்னும் வானரனின் தலைமையில் நடந்தது. அவனது 
திறமைமிக்க ஆணைகள் மூலமாக பெரிய பெரிய மலை பாறைககளும்மரங்களும் உரிய 
இடங்களில் ஒழுங்காக வைக்கப் பட்டன.

சிறிது காலத்திலேயே பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இலங்கையை அடையப் பாலம் 
அமைக்கப்பட்டபின் வானரர்கள் அடைந்த மகிழ்ச்சியைக் கூறவும் வேண்டுமா?மறுவினாடியே
எல்லா வானரங்களும் அதன் வழியே சென்று இலங்கையின் கரையை அடைந்து விட்டனர்.

இராமரையும் இலட்சுமணனையும்அனுமாரும் அங்கதனும் தம் தோள்மீது ஏற்றிக் கொண்டு 
இலங்கைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். கொடூர அரக்கன் இராவணனை அழித்து 
சீதையை மீட்டனர்.



1164
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து* மகரம் சுழலச் சுழல் நீர்  பயந்த*
தெய்வத் திரு மாமலர் மங்கை தங்கு* திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர்* 
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில்* கமழ சந்தும் உந்தி நிவா வலம் கொள்*
தெய்வப் புனல் சூழ்ந்து அழகாய* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே*3.2.7

விளக்கம்:- 
தாமரை மலரை கூந்தலில் சூடிய அழகான நப்பின்னை தோளை விரும்பி அணைந்தவனும்
மீன்கள் சுழலும்படி சுழன்று வரும் அலை கடல் நீர் பெற்றெடுத்த தெய்வ திரு மாமலர் பெண்ணாகிய  மகாலட்சுமி தங்குகின்ற திரு மார்பனை மனதில் வைத்து கொள்ள விரும்புகிறவர்களே!

பெரிய சத்தத்துடன் பிளிரும் யானையின் தந்தங்களையும், மலையில் நல்ல மணம் கமழும் சந்தன மரங்களையும் அடித்து தள்ளி கொண்டு வரும் வெள்ளாறு சுற்றிலும் சூழபெற்றதும்
புண்ணிய நதிகள் சூழ்ந்து அழகாக காட்சி தரும் சிதம்பரம் எனப்படும் 
தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேருங்களேன்!

மேலும் தெரிந்த கொள்ள விரும்பினால் :-
மௌவல் குழல் ஆய்ச்சி மென் தோள் நயந்து - தாமரை (மலர் சூடிய) நப்பின்னை தாயின் மென்மையான தோளை விரும்பி 
மகரம் சுழலச் சுழல் நீர்  பயந்த - மீன் சுழலும் (படி) சுழலுகின்ற (கடல்) நீர் பெற்றெடுத்த 
தெய்வத் திரு மாமலர் மங்கை தங்கு - தெய்வ திரு மாமலர் பெண் (மகாலட்சுமி)  தங்குகின்ற 
திரு மார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்பீர் - திரு மார்பனை மனதில் வைத்துகொள்ள 
எண்ணம் கொண்டிருப்பவர்களே 
கௌவைக் களிற்றின் மருப்பும் பொருப்பில் - பெரிய சத்ததுடன் (பிளிரும்)யானையின் கொம்புகளையும், மலையில் 
 கமழ சந்தும் உந்தி நிவா வலம் கொள் வாசனை கமழும் சந்தன மரங்களையும் தள்ளி
 (கொண்டு வரும்) வெள்ளாறு சுற்றியும் சூழ பெற்றதும் 
தெய்வப் புனல் சூழ்ந்து அழகாய - புண்ணிய தீர்த்தங்கள் சூழ்ந்து அழகாக (காட்சி தரும்)
தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே - தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று 
சேருங்களேன்

அருமையான பாசுரத்தில் வரும் கதை 
பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி 
திருமகள் பல்வேறு நேரங்களில் பல அவதாரங்களில் திருமாலை மணந்ததாக புராணங்கள் 
கூறுகின்றனதிருமகள் திருபாற்கடலில் தோன்றி திருமாலை மணந்தாள் அது என்ன கதை?

கந்தர்வப் பெண் ஒருவள் வைகுண்டம் வந்தாள். மகாலட்சுமியை வணங்கினாள். மகாலட்சுமியின் 
அழகைக் கண்டு பிரமித்தாள். மனமெல்லாம் மகிழ்ச்சி பொங்க மகாலட்சுமியை போற்றிப் புகழ்ந்தாள்.மகாலட்சுமிக்கு ஏக மகிழ்ச்சி.

தன் தலையில் சூடியிருந்த பூமாலையை அடுத்தப் பெண்ணுக்குப் பரிசாகக் கொடுத்தாள். மனம் 
மகிழ்ந்த அந்தப் பெண் கையில் மாலையுடன் கந்தர்வலோகம் திரும்பிக் கொண்டிருந்தாள். 
வழியில் துர்வாச முனிவரைச் சந்தித்தாள்.

தன்னை வணங்கிய அந்தப் பெண்ணிடமிருந்து அருமையான நறுமணம் வருவதை உணர்ந்த 
முனிவர், “இந்த மணம் எங்கிருந்து வருகிறது?’ என்று அவளிடம் கேட்டார். மகாலட்சுமி தந்த 
பூமாலை இது. இதிலிருந்துதான் இந்த நறுமணம் வருகிறது. இதை தாங்களே வைத்துக் 
கொள்ளுங்கள்என்று கூறிய அந்தப் பெண், அந்த மாலையை துர்வாச முனிவரிடம் தந்துவிட்டு போய்விட்டாள்.

மனம் நிறைய மகிழ்வோடு அந்த மாலையுடன் நடந்த துர்வாச முனிவர், வழியில் இந்திரன் பவனி வருவதைக் கண்டார்.திருமகளின் மாலை இது. பெற்றுக்கொள்என்ற முனிவர் அந்த மாலையை இந்திரனிடம் நீட்டினார்.

யானையின் மேல் இருந்தபடியே அலட்சியமாக அங்குசத்தால் அந்த மாலையை வாங்கிய
இந்திரன் அதை யானையின் மேல் போட்டான். யானையோ அந்த மாலையை தன் துதிக்கையால் 
எடுத்து காலில் போட்டு துவம்சம் செய்தது. முனிவருக்கு கோபம் தலைக்கேறியது.

 “உன்னிடம் இருக்கும் காமதேனு, கற்பக விருட்சம், ஐராவதம் அனைத்தும் உன்னைவிட்டு 
விலகும். உன் யானையான ஐராவதம் காட்டு யானையாகத் திரியும்எனச் சாபமிட்டார்
முனிவரின் சாபத்தைக் கண்டு அஞ்சிய இந்திரன், தன் தவறை மன்னிக்கும்படியும் 
சாபவிமோசனம் தரும்படியும் வேண்டினான்.அவை உரிய நேரத்தில் கிடைக்கும்’ 
என்றார் முனிவர்.

இந்திரன் அனைத்தையும் இழந்ததால் தேவலோகத்தை வறுமை பற்றியது. துன்பம் சூழ்ந்தது
தேவர்கள் வேதனைப்பட்டனர். என்ன செய்வது என்று தேவர்கள் பிரம்மனிடம் கேட்டார்கள். 
பாற்கடலைக் கடைந்தால் அமுதம் கிடைக்கும். அதன்பின் அனைவரும் துன்பமின்றி வாழலாம்
என்றார் பிரம்மன்.

மந்திரமலை மத்தாயிற்று. வாசுகி என்ற பாம்பு நாணாயிற்று. தேவர்களும் அசுரர்களும் 
பாற்கடலை கடையத் தொடங்கினர். ருமால் ஆமை உருவெடுத்து மந்திரமலை 
நழுவிப்போகாமல் காத்தார்.

தேவர்களும் அசுரர்களும் சிவ பெருமானின் அனுமதி பெறாமல் பாற்கடலைக் கடைந்ததால் 
ஆலகாலவிஷம் கடலில் பொங்கத் தொடங்கியது. வர்கள் அஞ்சினர். பிரம்மன் பாதாளத்தில் 
மறைந்தான். பாம்பின் தலைப்பக்கம் நின்ற அசுரர்கள், விஷத்தின் கடுமையால் உடல் வெந்து அழிந்தனர்.வெள்ளை நிறமாக இருந்த திருமாலை நீலநீறமாக மாற்றியது அந்தக் கொடிய விஷம்.

அனைவரும் சிவபெருமானைத் துதிக்க, அவர் ஆலால சுந்தரரை பாற்கடலுக்கு அனுப்பினார்
அவர் அந்த விஷம் முழுவதையும் உருட்டிக் கொண்டு வந்து சிவபெருமானிடம் கொடுக்க
சிவபெருமான் அதனை விழுங்கினார். அந்த விஷயம் சிவபெருமானின் கண்டத்திலேயே 
நிலைத்து நிற்கும்படி பார்வதி செய்தாள். ன்னர் சிவபெருமான் அருளால் பாற்கடல் கடையப்பட்டது. அப்போது அலையின் நடுவே ஓர் அழகிய பெண் மணமாலையுடன் தோன்றினாள். அவளே மகாலட்சுமி.

அவள் மகாவிஷ்ணுவின் மேல் காதல் கொண்டு அவரையே மணந்தாள்.
பாற்கடல் மறுபடியும் கடையப்பட்டது.இந்திரன் இழந்த அனைத்தையும் பெற்றான்.
அமிர்த கலசம் தோன்றியது. தேவர்களும் மற்றவர்களும் அந்த அமிர்தத்தை அருந்தினர்
இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெற்றனர்.


1165
மாவாயின் அங்கம் மதியாது கீறி* மழை மா முது குன்று எடுத்து* ஆயர் தங்கள் 
கோவாய் நிரை  மேய்த்து உலகுண்ட மாயன்* குரை மா கழல் கூடும் குறிப்புடையீர்*
மூவாயிரம் நான்மறையாளர்* நாளும் முறையால் வணங்க அணங்காய சோதி* 
தேவாதி தேவன் திகழ்கின்ற* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே* 3.2.8

விளக்கம்:- 
முன்பு கண்ணனை கொல்ல குதிரை வடிவில் வந்த கேசி அரக்கனின் வாயை பிளந்ததொடு,
உடலையும் மதிக்காமல் பிளந்தெடுத்தவனும்,முன்பு இந்திரன் பெய்வித்த பலத்த மழையால் 
ஆயர்பாடியில் உள்ள ஜீவன்கள் திணற,பெரிய கோவர்த்தன மலையை தூக்கி குடையாக 
பிடித்தவனும்

ஆயர்பாடியில் உள்ளவர்களுக்கு தலைவனாக இருந்து பசு மேய்த்தவனை, முன்பு யுகம் முடிவில் 
பிரளயம் ஏற்பட்டபோது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பதாதவாறு  உலகம்உண்டு தன் வயிற்றில் 
வைத்து பாதுகாத்த மாயனின் ஆபரணங்களால் சத்தம் வரும் சிறந்த திருவடிகளை சேர எண்ணம் உடையவர்களே!

மூவாயிரம் வேதம் ஓதும் மறையாளர்கள் நாள்தோறும் முறைப்படி வேதம் ஓதி வணங்க
அழகாய சோதி தேவாதி தேவன் திகழ்கின்ற சிதம்பரம் எனப்படும் தில்லை
திருச்சித்ரகூடம் சென்று சேருங்களேன்!



மேலும் தெரிந்த கொள்ள விரும்பினால் :-
மாவாயின் அங்கம் மதியாது கீறி - குதிரை வாயோடு (சேர்த்து) உடலையும் மதிக்காமல் பிளந்து 
மழை மா முது குன்று எடுத்து - முது மா மழை குன்று எடுத்து - முன்பு பெரிய மழை 
(இந்திரன் பெய்விக்க ஆயர்பாடியில் உள்ளவர்களை காக்க) மலையை எடுத்து (குடையாக பிடித்து)
ஆயர் தங்கள்  கோவாய் நிரை மேய்த்து  - பசுமேய்க்கும் மக்களுக்கு தலைவனாய் பசு மேய்த்து 
உலகுண்ட மாயன்  - (யுகம் முடிவில் பிரளயம் ஏற்பட்டபோது) உலகை உண்ட மாயன் 
குரை மா கழல் கூடும் குறிப்புடையீர் - (ஆபரண) லியுடைய சிறந்த திருவடிகளை சேர 
எண்ணம் உடையீர் 
மூவாயிரம் நான்மறையாளர் - மூவாயிரம் வேதம் ஓதுபவர்கள் 
நாளும் முறையால் வணங்க - நாள்தோறும் முறைப்படி வணங்க 
அணங்காய சோதி தேவாதி தேவன் திகழ்கின்ற - அழகாய சோதி தேவாதி தேவன் திகழ்கின்ற 
தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே - தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று 
சேருங்களேன்

அருமையான பாசுரத்தில் வரும் முதல் கதை
"குதிரை வடிவில் வந்த அரக்கனை கொன்ற கண்ணன்"
கம்சன் கேசி என்ற அரக்கனை அழைத்து, நீ கோகுலம் சென்று நந்தகோபரின் மகன்கள்
கண்ணனையும், பலராமனையும் கொன்றுவிட்டு வா என்று கட்டளை இட்டு அனுப்பினான்.
கம்சன் அனுப்பிய கேசி என்ற அரக்கன் மிக பெரிய குதிரை வடிவில் கண்ணனை
கொல்ல வந்ததை அறிந்து, தன்னோட கையை குதிரை வாயில் வைத்து, வாயை
பிளந்து கேசி என்ற அரக்கனை கொன்றான்

அருமையான பாசுரத்தில் வரும்  இரண்டாம்  கதை
"கோவர்த்தன மலையை தூக்கிய கண்ணன்"
ஒரு சமயம் ஆயர்பாடி மக்கள் பழைய நடைமுறைப்படி பலவகையான படையல்களிட்டு 
இந்திரனைச் சிறப்பு செய்யும் இந்திர விழாவினை, செய்ய வரும்போது, தேவர்களின் தலைவன் 
என்ற கர்வம் இந்திரனுக்கு இருந்த படியால் நம் அன்பு கண்ணன் வீணாக இந்திரனுக்கு பூஜை 
செய்யாதீர்கள். அதற்க்கு பதில் பசுக்கள் பசிதீர புல் மேயும் கோவர்த்தன மலைக்குச் செய்யுமாறு 
ஆயர்களிடம் கூறினான்


ஆயர்களும் அவ்வண்ணமே செய்ய,கோபமுற்ற இந்திரன், ஆயர்ப்பாடியில் 
பயங்கர ஆலங்கட்டி மழையை பொழிய செய்தான். மழையிலிருந்து ஆயர்களையும்பசு க்களையும் 
காக்க, கண்ணன், மிக பெரிய கோவர்த்தன மலையையே தூக்கி குடையாய்ப் பிடித்து, அதனடியில் அனைவரையும் நிற்க வைத்து, கொடிய  மழையிலிருந்து அனைவரையும் காத்தான்.



அருமையான பாசுரத்தில் வரும் மூன்றாம் கதை 
"உலகம் உண்ட பெருமாள்"
முன்பு யுகம் முடியும் சமயத்தில் பெரும் அழிவு ஏற்பட்ட போது சத்ய லோகம்,
தப லோகம், ஜன லோகம், மகர லோகம் ,சுவர் லோகம்,புவர் லோகம், புலோகம் என மேல் உலகம் 
ஏழும், அதல லோகம், விதல லோகம், சுதல லோகம், தலாதல லோகம்மகாதல லோகம்
ரசாதல லோகம், பாதாள லோகம் என கீழ் உலகம் ஏழும் உண்டு தன் வயிற்றில் வைத்து கொண்டு எம்பெருமான் பாதுகாத்து புது யுகம் தொடங்க மீண்டும் வெளியில் உமிழ்ந்தார் 
என்பது ஐதீகம்.

1166
செரு நீல வேல் கண் மடவார் திறத்துச்* சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும்* 
அரு நீல பாவம் அகலப் புகழ் சேர்* அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர்* 
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து* எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள*
திரு நீலம் நின்று திகழ்கின்ற* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே*3.2.9

விளக்கம்:- 
போரில் பயன்படுத்தும் நீண்ட கூர்மையான நீல நிற வேலை போல அழகான கண்களையுடைய பெண்களிடம் சூடாக நின்று பார்த்து கொண்டு மனத்தால் வளர்க்கும் கொடிய இருளான 
பாவம் அகல, புகழுடைய தேவர்களுக்கும் கிடைக்காத வைகுண்டத்தில் இருக்க வேண்டி 
இருப்பவர்களே

அதிகபடியான நீரை கொண்ட நிவா என்னும் வெள்ளாறு முத்துக்களை எல்லாம் தள்ளி 
கொண்டு நிலத்தில் விதை போன்று விதைக்க, அதை பார்த்து ஏதோவென்று நினைத்து வயலில் 
கயல் மீன்கள் மகிழ்ச்சியுடன்  துள்ளி  விளையாட, அங்கே அழகிய நீல மலர்கள் நின்று திகழ்கின்ற 
சிதம்பரம் எனப்படும் தில்லை திருச்சித்ரகூடம் சென்று சேருங்களேன்!



மேலும் தெரிந்த கொள்ள விரும்பினால் :-
செரு நீல வேல் கண் மடவார் திறத்துச்  போரில் (பயன்படுத்தப்படும் கருவியான) நீல 
நிற வேலை போன்ற கண்களுடைய பெண்களின் மேல் 
சினத்தோடு நின்று மனத்தால் வளர்க்கும் - சூடாக நின்று மனத்தால் வளர்க்கும் 
அரு நீல பாவம் அகலப் புகழ் சேர் - கொடிய இருளான பாவம் அகல புகழ் கொண்ட 
அமரர்க்கும் எய்தாத அண்டத்து இருப்பீர் - தேவர்களுக்கும் கிடைக்காத வைகுண்டத்தில் 
(இருக்க வேண்டி)இருப்பவர்களே
பெரு நீர் நிவா உந்தி முத்தம் கொணர்ந்து - அதிக நீரையுடைய நிவா (என்னும் வெள்ளாறு
தள்ளி (கொண்டு) முத்துக்களை கொண்டு வந்து
எங்கும் வித்தும் வயலுள் கயல் பாய்ந்து உகள - எங்கும் விதைக்க , வயலுள் கயல்(மீன்கள்
பாய்ந்து துள்ள (அதோடு அங்கு) 
திரு நீலம் நின்று திகழ்கின்ற - அழகிய நீல (மலர்கள்) நின்று காணப்படுகின்ற 
தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே - தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று 
சேருங்களேன்

1167
சீரார் பொழில் சூழ்ந்து அழகாய* தில்லைத் திருச்சித்ரகூடத்து உறை செங்கண் மாலுக்கு* 
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப* அலை நீர்  உலகுக்கு அருளே  புரியும்*
காரார் புயல் கைக் கலிகன்றி* குன்றா ஒலி மாலை ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார்*
பாரார் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப்* பல காலம் நிற்கும்படி வாழ்வார் தாமே* 3.2.10

விளக்கம்:- 
சிறப்புகள் வாய்ந்த மலர் சோலைகள் சூழ்ந்த சிதம்பரம் திருச்சித்ரகூடத்தில் வசிக்கும் அழகிய 
கண்களை உடைய திருமாலிடம் எவ்வளவு அன்பும் பக்தியும் கொண்டு அனுபவித்தும் 
திருப்பதியே ஆகாதா உள்ளத்தவர்கள் கேட்டு மகிழும்படி,

கடல் நீர் சூழ்ந்த உலகுக்கு என்றுமே அருளே புரியும் கரிய மேகம் போன்ற கைகளையுடைய 
கலிகன்றி பாடிய குறைவில்லாத ஓசையுடன் கூடிய சொல் மாலையான இப்பத்தும் சொல்ல 
வல்லவர்கள் பூமியோடு சேர்த்து உலகம் முழுவதையும் அளந்த பெருமாளின் திருவடியின் கீழ் 
பல காலம் நிற்கும்படி வாழ்வார். 


மேலும் தெரிந்த கொள்ள விரும்பினால் :-
சீரார் பொழில் சூழ்ந்து அழகாய - சிறப்பு வாய்ந்த சோலைகள் சூழ்ந்து அழகான 
தில்லைத் திருச்சித்ரகூடத்து - சிதம்பரம் திருச்சித்ரகூடத்தில் 
உறை செங்கண் மாலுக்கு - வசிக்கின்ற அழகிய கண்கள் (உடைய) திருமாலுக்கு 
ஆராத உள்ளத்தவர் கேட்டு உவப்ப  - (எவ்வளவு பக்தி செய்தும்) திருப்தி ஆகாத 
உள்ளத்தவர்கள் கேட்டு மகிழ 
அலை நீர்  உலகுக்கு அருளே  புரியும் ௦- கடல் நீர் (சூழ்ந்த) உலகுக்கு அருளே புரியும் 
காரார் புயல் கைக் கலிகன்றி - கருமை பொருந்திய மேகம் (போன்ற) கைகளை உடைய
கலிகன்றி 
குன்றா ஒலி மாலை - குறைவில்லாத ஓசையுடன் (கூடிய சொல்) மாலை 
ஓர் ஒன்பதோடு ஒன்றும் வல்லார் - ஓர் ஒன்பதோடு ஒன்றும் (சொல்ல) வல்லவர்கள் 
பாரார் உலகம் அளந்தான் அடிக்கீழ்ப் - பூமியோடு சேர்த்து உலகம் (முழுதும்) அளந்தான்
அடி கீழ்ப் 
பல காலம் நிற்கும்படி வாழ்வார் தாமே - பல காலம் நிற்கும்படி வாழ்வார் தாமே 

மூலவர் :- கோவிந்தராஜன் (பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன்)
உற்சவர்:-  தேவாதி தேவன்         
அம்மன்/தாயார்:- புண்டரீக வல்லி தாயார் 
மங்களாசாசனம்: திருமங்கை ஆழ்வார்:- 32 பாசுரம்       
                                குலசேகர ஆழ்வார்:- 11 பாசுரம்       
              
புராண பெயர் :- தில்லைவனம், திருச்சித்திரகூடம் 
தற்போதைய பெயர்:-  சிதம்பரம் 

பெருமாளை தரிசிக்க போகும் வழி:- 
India – Tamilnadu -  சிதம்பரம் சென்று நடராஜர் கோவில் எங்கு இருக்கிறதுJ என்று கேட்டாலே சொல்லிவிடுவார்கள். சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடராஜர் சன்னதிக்கு அருகிலேயே 
இக்கோயில் அமைந்திருக்கிறது. தரிசிக்க வேண்டிய அற்புதமான ஆலயம்..



கோவிந்தராஜ பெருமாள் திவ்ய திருவடிகளே சரணம்!
கோவிந்தராஜ பெருமாள் திருவடிகளுக்கு சமர்ப்பணம்!


8 comments:

Krishna said...

தற்போது தான் தங்கள் ப்ளாக் பார்த்தேன் பிரமாதம். அடிமை ஆகிவிட்டேன்.

நாடி நாடி நரசிங்கா! said...

மிக்க நன்றி
அரங்கனின் அடிமை ஐயா :)

பித்தனின் வாக்கு said...

தற்போது தான் தங்கள் ப்ளாக் பார்த்தேன் பிரமாதம். அடிமை ஆகிவிட்டேன்.

repeatu i am also sir.

Rajewh said...

அடடே நீங்களுமா! மிக்க நன்றி சுதாகர் ஐயா!:)

நாடி நாடி நரசிங்கா! said...

அடடே நீங்களுமா! மிக்க நன்றி சுதாகர் ஐயா!:)

குறையொன்றுமில்லை. said...

நானும் இப்பதான் உங்க பதிவு பக்கம் வந்தேன் ஆன்மீக பதிவு நல்லா இருக்கு. நீளம் கொஞ்சம் குறைவா இருந்தா படிக்க சுவாரசியமா இருக்கும் என்று தோனுது.

Rajewh said...

நானும் நீளம் அதிகமா இருக்குமோ என்று எண்ணிகொண்டிருக்க நீங்களே சொல்லிவிட்டீர்களே . விரைவில் இதை பற்றி பரிசீலித்து கொண்டிருக்கிறேன் . எம்பெருமான் அருளலால் நல்ல முடிவு கிடைக்கும் :)

நாடி நாடி நரசிங்கா! said...

நானும் நீளம் அதிகமா இருக்குமோ என்று எண்ணிகொண்டிருக்க நீங்களே சொல்லிவிட்டீர்களே . விரைவில் இதை பற்றி பரிசீலித்து கொண்டிருக்கிறேன் . எம்பெருமான் அருளலால் நல்ல முடிவு கிடைக்கும் :)