திருமலை பெருமாளிடம் கருவறை படியாகவே கிடந்தது உன் பவளம் போன்ற வாயையே பார்த்து கொண்டிருப்பேன் என்று கூறிய ஆழ்வார் மேலும் குருகாய், மீனாய், மரமாய், குன்றாய், ஆறாய் வேங்கடமலையில் இருக்கவேண்டும் என்று தன்னுடைய ஆசையை கூறியிருக்கிறார்
குருகாய் மீனாய்ப் பிறப்பேனே!
‘நப்பின்னைக்காக ஏழு எருதுகளை வென்றவனான எம்பெருமானின் சேவடிக்குத் தொண்டாற்றுவது அல்லாமல் உடல் வளர்ந்து தடிக்கின்றதாகிய இந்த மாந்தப் பிறவியை நான் வேண்டேன். அரம்பையர்கள் சூழும் வானுலகையோ மண்ணுலகையோ ஆளும் விருப்பமில்லை. திருவேங்கடவன் வீற்றிருக்கும் திருவேங்கட மலையில் கோனேரி என்னும் குளத்தில் வாழும் நாரையாகப் பிறப்பேன்; அல்லது அங்குள்ள சுனையில் மீனாகப் பிறப்பேன்.
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையன் ஆவேனே! (678)
உமிழும் வட்டில் பிடித்துப் புகுவேன்
திருமலைக் கோயிலினுள் புகுவதற்குரிய ஒரு முறையைக் கண்டுபிடிக்கிறார் ஆழ்வார்.
‘மண்ணுலக வைகுந்தமான திருமலை’ சிவனும் பிரமனும் இந்திரனும் நெருங்கி உள்ளே புகுவதற்கு இயலாததாக இருக்கிறது. அத்தகைய வைகுந்தத்தின் திருவாயிலிலே திருவேங்கடத்தான் உமிழ்கின்ற தங்க வட்டிலைக் கையில் ஏந்தி உள்ளே புகுகின்ற பேற்றினை அடைவேனாக!
மரமாய்ப் பிறப்பேன்
‘மாயவன் மாலனின் திருவடிகளைக் காணும் ஆசையால் வண்டினங்கள் பண்பாடும் வேங்கட மலையில் செண்பக மலர்களைச் சொரிகிற மரமாக நிற்கும் புண்ணியம் பெறுவேனாக’.
‘இன்பம் தருகின்ற செல்வத்தையும் யானை மேலமர்ந்து செல்கின்ற அரசாட்சியையும் நான் விரும்பவில்லை. எம்பெருமான் வீற்றிருக்கும் எழில் சூழ்ந்த வேங்கட மலையில் கருப்புக் குங்கிலிய மரமாய் நிற்கும் தவமுடையவனாக ஆவேன்’ என்று பாடுகிறார்.
பொற்குவடாய் நிற்பேன்; கானாறாய்ப் பாய்வேன்!
‘மின்னற் கொடி போன்ற நுண்ணிய இடையை உடைய ஊர்வசி மேனகை ஆகியோரின் ஆடல் பாடலை நான் விரும்பவில்லை. வண்டினங்கள் இசை பாடும் திருவேங்கடத்தில் பொன்மயமாய்ப் பொலிந்து நிற்கும் குன்றாவதற்குரிய அரிய தவத்தை உடையவன் ஆவேன்’.
‘முழுநிலவுபோன்ற வெண் கொற்றக்குடையின்கீழ் அரசர்க்கு அரசனாய் வீற்றிருக்கக்கூடிய செல்வத்தை நான் பொருட்டாக மதிக்கமாட்டேன். தேனீக்கள் சூழ்ந்துகொண்டிருக்கும் பூஞ்சோலைகளை உடைய திருவேங்கட மலையில் காட்டாறாகப் பாயும் கருத்தை உடையவன் ஆவேன்’ என்கிறார்.
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையன் ஆவேனே! (683)
படியாயும் கிடப்பேன்
குருகாய், மீனாய், மரமாய், குன்றாய், ஆறாய் வேங்கடமலையில் இருக்க விரும்பும் ஆழ்வாருக்கு மற்றொரு வேட்கை. அடியாரும் வானவரும் திருமாலை வணங்க வரும் வழியாகவும் படியாகவும் கிடந்து அவர்களின் பாதத் தூளிபடும் பேறு வேண்டும் என்கிறார்.
‘பிறை சூடிய சிவனும் பிரமனும் இந்திரனும் முறையாகச் செய்யும் பெரிய வேள்விகளின் வேண்டுதல்களை நிறைவேற்றுகிற மறையவனான எம்பெருமானின் திருவேங்கட மலைமேல் வழியாய் அமைந்திருக்கின்ற நிலையை அடைவேன்’.
‘செடிபோல் அடர்ந்திருக்கும் தீவினைகளைத் தீர்க்கும் திருமாலே! நெடியோனே! வேங்கடவா! உன் கோயில் வாயிலிலே அடியவர்களும் வானவரும் அரம்பையரும் ஏறி இறங்கும் வாயிற்படியாய்க் கிடந்து உன் பவழவாய் காண்பேன்’.
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியோனே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே! (685)
ஏதேனும் ஆவேனே!
திருவேங்கடத்தில் வேறு எப்பொருளாக ஆகவேண்டும்? தம் வேட்கைகளைச் சொல்லி முடிக்க முடியவில்லை. இறுதியாகச் சொல்கிறார் :
‘மேல்உலகை எல்லாம் ஒருகுடைக்கீழ் ஆண்டு பொன்னணி அணிந்த ஊர்வசியின் கூடலைப் பெற்றாலும் அதனை விரும்பமாட்டேன். பெருமானின் திருவேங்கடப் பொன்மலைமேல் ஏதேனும் ஒரு பொருளாக இருக்கவே விரும்புகின்றேன்’.
எம்பெருமான் திருமலைமேல் ஏதேனும் ஆவேனே. (686)
தமிழ்வல்லார் பெறும் பயன்
‘குளிர்ச்சாரல் வீசிக் கொண்டிருக்கும் வேங்கடமலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானின் பொற்பாதங்களைக் கண்டு குலசேகர மன்னன் வணங்கிச் செய்த இத்தமிழ்ப் பதிகத்தைப் பயின்றவர்கள் எம்பெருமானின் திருவுள்ளத்திற்கு இனியவர் ஆவர்’ என்று இத்திருமொழியை முடிக்கின்றார் குலசேகர ஆழ்வார்.
திருவங்கடமுடையான் திருவடிகளே சரணம்!
கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!