பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Wednesday, December 28, 2011

பெண்கள் கை கூப்பி தொழும்படி வீதியில் வருபவன் தேவர்கள் வணங்கும் குளிர்ச்சியான சிதம்பரம் எனப்படும் தில்லை சித்திரகூடத்துள்ளானே!

1174
ஆவர் இவை செய்து அறிவார்* அஞ்சன மா மலை போலே* 
மேவு சினத்து அடல் வேழம்* வீழ முனிந்து* அழகாய 
காவி மலர் நெடுங்கண்ணார்* கை தொழ வீதி வருவான்* 
தேவர் வணங்கு தண் தில்லைத்* சித்திரகூடத்துள்ளானே* 3.3.7

விளக்கம்:-
கண்ணனை தவிர யார் இந்த செயல்களை செய்வார்கள்!!! கரிய பெரிய மலை
போல மிகுந்த கோபத்துடன் தன்னை கொல்ல வந்த வலிமையான யானை மடியும்படி
வெகுண்டெழுந்து போர் செய்து  கொன்றவனே! என்று சொல்லி  அழகான நீல மலரை
போன்ற நீண்ட  கண்களையுடைய பெண்கள் கை கூப்பி தொழும்படி வீதியில் வருபவன் 
தேவர்கள் வணங்கும் குளிர்ச்சியான சிதம்பரம் எனப்படும்  தில்லை சித்திரகூடத்துள்ளானே!

மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
ஆவர் இவை செய்து அறிவார் - வேறு யார் இந்த செயல்களை செய்வார் (என் கண்ணனை தவிர)

அஞ்சன மா மலை போலே - கரிய பெரிய மலை போலே 

மேவு சினத்து அடல் வேழம் - மிகுந்த கோபமுடைய வலிமையான யானை 
வீழ முனிந்து - அழியும்படி வெகுண்டெழுந்த (கண்ணனை)

அழகாய காவி மலர் நெடுங்கண்ணார்  - அழகான நீல மலரை (போன்ற) நீண்ட கண்களையுடைய (பெண்கள்)

கை தொழ வீதி வருவான் - கை கூப்பி வணங்க வீதியில் வருபவன் 

தேவர் வணங்கு தண் தில்லைத் - தேவர்கள் வணங்கும் குளிர்ச்சியான தில்லைத் 

சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே


அருமையான பாசுரத்தில் வரும் முதல் கதை
"கொல்ல வந்த யானை மற்றும் மல்யுத்த வீரர்களை த்வம்சம் செய்த கண்ணன்"
கம்சன் தனூர் யாகம் ஒன்று உடனே நடத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மல்யுத்தப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். இந்த விழாவிற்கு கண்ணனுக்கும், பலராமனுக்கும் அழைப்பு விடுத்தான்.

சாணூரன், சலன் முதலிய மல்லர்களை அழைத்து, கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மகன்களான கண்ணன், பலராமன் இவர்களால்தான் எனக்கு மரணம் என்று விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நான் ஏற்பாடு
செய்துள்ள மல்யுத்தத்திற்கு அவர்களை அழைத்துள்ளேன். நீங்கள் அவர்களுடன் மல்யுத்தம் செய்து அவர்களை அழித்துவிட வேண்டும்என்று ஆணையிட்டான்.
ஆனால் அதற்க்கு முன்பே கண்ணனை கொல்ல மேலும் ஒரு வழியை ஏற்பாடு செய்தான்குவலயாபீடம்என்னும் போர் யானையின் பாகனை அழைத்து மல்யுத்தம் காணவரும் கிருஷ்ணனையும், பலராமனையும், மல்யுத்த அரங்கு வாசலிலேயே குவலயாபீடத்தினால், மிதித்துக் கொல்ல ஏற்பாடு செய்என்றும் கம்சன் கட்டளையிட்டான். கண்ணன் அந்த யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்றான். அதன் பின் தயாராக இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்களையும் த்வம்சம் செய்தான் கண்ணன்

Tuesday, December 20, 2011

தெய்வாம்சமான கருட பறவை மேல் ஏறி வருபவன் சிதம்பரத்தில் கோவிந்தராஜனாக படுத்து கொண்டு காட்சி தருகிறானே!!!


1173
எய்யச் சிதைந்தது இலங்கை மலங்க* வரு மழை காப்பான்
உய்யப் பரு வரை தாங்கி* ஆ நிரை காத்தான் என்று ஏத்தி*
வையத்து எவரும் வணங்க* அணங்கு எழு மா மலை போலே
தெய்வப் புள் ஏறி வருவான்சித்திரகூடத்துள்ளானே* 3.3.6

விளக்கம்:-
ஸ்ரீ ராமராக பிறந்து கொடிய அரக்கன் இரணியனையும் அவன் ஊரான இலங்கையையும் அம்புகள் விடுத்து சிதைத்ததோடு மட்டுமல்லாமல் ஸ்ரீ கிருஷ்ணனாக பிறந்து கொடிய மழையிலிருந்து ஆயர்பாடியில் பசு கூட்டங்களையும் மக்களையும் காப்பதற்காக பெரிய மலையை தூக்கி 
குடையாக பிடித்து காத்தவன் என்று போற்றி உலகத்தில் உள்ளோர் அனைவரும்
வணங்க தெய்வாம்சம் கொண்ட பெரிய மலை எழுந்து வருவது போல தெய்வமான
கருட பறவை மேலே ஏறி வருபவன் சிதம்பரம் எனப்படும் 
தில்லை  சித்திரகூடத்துள்ளானே!




மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
எய்யச் சிதைந்தது இலங்கை - (திரு ராமராக அவதரித்து சரமாரியாக அம்பை) செலுத்தியதால்  சிதைந்தது இலங்கை (அதுமட்டுமின்றி)



மலங்க வரு மழை காப்பான் - (திரு கிருஷ்ணனாக அவதரித்து  ஆயர்பாடியில் உள்ளவர்கள்) துன்பப்படும்படி  வந்த மழையை தடுப்பதற்காக 

உய்யப் பரு வரை தாங்கி - (பசுக்கூட்டங்கள்) பிழைக்கவும் பெரிய மலையை தாங்கி 

ஆ நிரை காத்தான் என்று ஏத்தி - பசுக்கூட்டங்கள் (முதற்கொண்டு அனைவரையும்) காத்தான் என்று போற்றி 
வையத்து எவரும் வணங்க - உலகத்தில்  (உள்ளோர்) அனைவரும் வணங்க 

அணங்கு எழு மா மலை போலே - தெய்வாம்சம் (கொண்டு) எழுந்த பெரிய மலை போலே 

தெய்வப் புள் ஏறி வருவான்  - தெய்வாம்சமான (கருட) பறவை (மேல்) ஏறி வருவான் 

சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே