திரிவிக்கிரம பெருமாள்
1138
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும்* வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் *
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர்* இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை*
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால்* தூய நான் மறையாளர் சோமுச் செய்ய*
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே * 2.10.1
மஞ்சாடு வரை ஏழும் கடல்கள் ஏழும் - மேகம் ஆடும் மலை ஏழும் கடல்கள் ஏழும்
வானகமும் மண்ணகமும் மற்றும் எல்லாம் - வானமும் பூமியும் மற்றும் எல்லாம்
எஞ்சாமல் வயிற்று அடக்கி ஆலின் மேல் ஓர் - முழுமையாக வயிற்றில் அடக்கி
ஆலமரத்தின் மேல் ஒரு
இளந்தளிரில் கண்வளர்ந்த ஈசன் தன்னை - இளம் இலையில் கண் மூடி படுத்து கொண்டுள்ள இறைவனை
துஞ்சா நீர் வளம் சுரக்கும் பெண்ணைத் தென்பால் - தொடர்ச்சியாக நீர் செழிப்புடன் சுரக்கும் பெண்ணை ஆற்றின் தெற்கு பக்கம்
தூய நான் மறையாளர் சோமுச் செய்ய - தூய்மையான வேதம் ஓதுபவர்கள் சோம யாகம்
செய்ய
செஞ்சாலி விளை வயலுள் திகழ்ந்து தோன்றும் - செழுமையான நெல் விளையும் வயலுள் அமைந்து காட்சிதரும்
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே - திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
விளக்கம் :-
முன்பு யுகம் முடிவில் மிக பெரிய பேரழிவு ஏற்படும் சமயத்தில், மேகங்கள் உலவி
கொண்டிருக்கும் மிக பெரிய மலைகளான கயிலை, இமயம், விந்தம், ஏமகூடம், நீலகிரி,
நிடதம், மந்தரம் என ஏழு மலைகளையும்,உப்புக்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், மதுக்கடல்,
நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், சுத்தநீர்க்கடல் என ஏழுகடல்களையும், வானத்தையும்,
பூமியையும் மற்றும் எல்லாவற்றையும் முழுமையாக உண்டு, தன் வயிற்றில் வைத்து
பாதுகாத்து கொண்டு ஆலமர இளம் இலையின் மேல் குழந்தையாக ஒன்றும் தெரியாதது
போல கண் மூடி படுத்து கொண்டிருக்கும் இறைவனை ,
ஓய்வில்லாமால் தொடர்ச்சியாக நீர் சுரந்து கொண்டிருக்கும், தென்பெண்ணை ஆற்றின் தெற்கு பக்கத்தில் தூய்மையான மனம் படைத்த வேதங்களை கற்றவர்கள் சோம யாகம் செய்ய,
சுற்றிலும் செழுமையான வயல்கள் சூழ்ந்த பகுதியில் அமைந்து காட்சிதரும் திருக்கோவிலூர் கோவிலுக்குள் கண்டேன் நானே
உலகம் உண்ட கண்ணன்
1139
கொந்து அலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம்* தீபம் கொண்டு அமரர் தொழப் பணம் கொள் பாம்பில்*
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை* தாம் இருவர் அடி வருடும் தன்மையானை*
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம்* ஐந்து வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்*
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும்* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே* 2.10.2
கொந்து அலர்ந்த நறுந்துழாய் சாந்தம் தூபம் - கொத்தாக மலர்ந்த வாசனையான துளசி )மாலையையும்(சந்தனத்தையும் வாசனை புகையும்
தீபம் கொண்டு அமரர் தொழப் பணம் கொள் பாம்பில் - தீபமும் கொண்டு தேவர்கள் தொழ
)தலைகள் தூக்கி ( படம் எடுக்கும் பாம்பில்
சந்து அணி மென் முலை மலராள் தரணி மங்கை - சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட மென்மையான முலைகளையுடைய மலர் மங்கை)மகாலட்சுமி (பூமி தாயார்
தாம் இருவர் அடி வருடும் தன்மையானை - தாங்கள் இருவரும் அடி வருடும்
எம்பெருமானை
வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் - வழிபாடு செய்து இசை ஏழும் ஆறு அங்கமும்
ஐந்து வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும் - ஐந்து பெரிய வேள்வியும் நான்கு
வேதங்களும் மூன்று தீயும்
சிந்தனை செய்து இரு பொழுதும் ஒன்றும் - இரு பொழுதும் சிந்தனை செய்து ஒன்றும் –
இரவும் பகலும் சிந்தனை செய்து ஒன்று சேரும்
செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே - வளம் மிக்க திருக்கோவிலூர்
அதனுள் கண்டேன் நானே
விளக்கம் :-
கொத்தாக மலர்ந்த நல்ல மணம் வீசும் துளசி மாலையையும், சந்தனத்தையும், நல்ல மணம் வீசும் புகையையும், தீபத்தையும் கொண்டு வானத்தில் உள்ள தேவர்கள் வழிபட,
படமெடுத்து ஆடும் ஆதிசேஷன் பாம்பின் மேல் படுத்து கொண்டிருப்பவனை,
மகாலட்சுமியும், பூமி தாயாரும் பாதத்தை மென்மையாக தடவும் எம்பெருமானை
ச ரி க ம ப த நி என ஸ்வரங்களை கொண்டு இசைக்கும் ஏழு இசையும்சீக்ஷை,வ்யாகரணம்,
சந்தஸ்,நிருக்தம்,ஜ்யோதிஷம்,கல்பம் என ஆறு வேதங்களின் பகுதியும் தேவயாகம்,
பிரமயாகம்,பூதயாகம்,பிதிர்யாகம்,மாநுடயாகம் என ஐந்து பெரிய வேள்வியும்
சந்தஸ்,நிருக்தம்,ஜ்யோதிஷம்,கல்பம் என ஆறு வேதங்களின் பகுதியும் தேவயாகம்,
பிரமயாகம்,பூதயாகம்,பிதிர்யாகம்,மாநுடயாகம் என ஐந்து பெரிய வேள்வியும்
ரிக்,யஜூர்,சாம,அதர்வண என நான்கு வேதமும் காருக பத்தியம், ஆகவனீயம்,
தக்கிணாக்கினி என மூன்று தீயும் கொண்டு வழிபாடு செய்து கொண்டிருக்கும் எம்பெருமானை பற்றியே இரவும் பகலும் சிந்தனை செய்யும் பக்தர்கள் ஒன்று கூடும் வளம் மிகுந்த திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
தக்கிணாக்கினி என மூன்று தீயும் கொண்டு வழிபாடு செய்து கொண்டிருக்கும் எம்பெருமானை பற்றியே இரவும் பகலும் சிந்தனை செய்யும் பக்தர்கள் ஒன்று கூடும் வளம் மிகுந்த திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
1140
கொழுந்து அலறும் மலர்ச் சோலைக் குழாங்கொள் பொய்கைக்* கோள் முதலை வாள்
எயிற்றுக் கொண்டற்கு எள்கி*
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி* அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை*
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட* இரும் புன்னை முத்து அரும்பிச் செம்பொன் காட்ட*
செழுந்தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே* 2.10.3
கொழுந்து அலறும் மலர்ச் சோலைக் குழாங்கொள் - இளம் இலைகளையும் மலரும் மலர்களையும் (கொண்ட( சோலை கூட்டங்கள் (சூழ்ந்த)
பொய்கைக் கோள் முதலை வாள் - பொய்கையில் வலிமையான முதலை கத்தி )போன்ற(
எயிற்றுக் கொண்டற்கு எள்கி - பற்களினால் கவ்வியதர்க்கு வருந்தி )ஆதிமூலமே!
என்பதுபோல பிளிற(
அழுந்திய மா களிற்றினுக்கு அன்று ஆழி ஏந்தி - (குளத்தில்)மூழ்கிய பெரிய யானைக்கு அன்று சக்கரம் வைத்துகொண்டு
அந்தரமே வரத் தோன்றி அருள் செய்தானை - வானத்திலே வந்து தோன்றி அருள்
செய்தவனை
எழுந்த மலர்க் கரு நீலம் இருந்தில் காட்ட - (குளத்தில்) எழுந்த மலரான கரு நீலம்
கருமையை காட்ட
இரும் புன்னை முத்து அரும்பிச் செம் பொன் காட்ட - பெரிய புன்னை (மரத்தில்) முத்து (போன்ற) மொட்டுக்கள் பசும்பொன்னை (போன்ற மலர்களை) தோற்றுவிக்க
செழுந்தட நீர்க் கமலம் தீவிகைபோல் காட்டும் - வளமான குளத்து நீரில் (பூத்த) தாமரை
விளக்கு போல் காட்சி தரும்
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே – திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
அருமையான பாசுரத்தில் வரும் கதை
"கஜேந்திர மோட்சம்"
பெருமாள் மீது பக்தியுடைய யானை ஒன்று தினமும் குளத்தில் இருந்து தாமரை
மலர்களை பறித்து பெருமாளுக்கு சமர்பித்து கொண்டு இருந்தது. ஒரு சமயம் குளத்தில்
இறங்கி தாமரையை பறித்த போது முதலை யானையின் காலை பிடிச்சுக்கிச்சி. உடனே
யானை தன் உடலை பற்றி சிறிதும் கவலை படாமல் எப்படியாவது தாமரை மலரை பெருமாளுக்கு சமர்பிக்க வேண்டுமே! என்ற ஏக்கத்தில் “ஆதி மூலமே” என்று நினைத்து
பிளிறிய போது பெருமாள் கருட வாகனத்தில் விரைந்து வந்து முதலையை தன்
சக்கரத்தால் அழித்து யானையை காப்பாற்றினார். யானைக்கு மறு பிறவி இல்லாத
மோட்சத்தை பெருமாள் அருளினார்.
விளக்கம் :-
இளசான இலைகளையும் நிறைய பூக்கும் மலர்களையும் கொண்டுள்ள செடி, ,கொடி,
மரங்கள் சூழ்ந்த பொய்கை குளத்தில் முன்பு ஒரு நாள் யானை அன்போடு பெருமாளுக்கு சமர்பிக்க தாமரை மலர்களை எடுக்க குளத்தில் இறங்கிய போது, பெரிய முதலை ஒன்று
அதன் காலை கடிக்க, அந்த வலியோடு குளத்தில் மூழ்க தன்னை பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் எப்படியாவது பெருமாளுக்கு பூ சமர்ப்பிக்க வேண்டுமே! என்ற ஏக்கத்தில் ஆதிமூலமே! என்று நினைத்து பிளிற, உடனே கருட வாகனத்தில் வானத்தில் தோன்றி தன்னிடமிருந்த சக்கரத்தால் முதலையை அழித்து யானையை காப்பாற்றி அருள் செய்தவனை,
குளத்தில் பூத்த கரு நீல மலரால் குளமே கருப்பாக தோன்ற, அருகிலிருக்கும் பெரிய
புன்னை மரங்களில் முத்து போன்ற மொட்டுகள் பசும்பொன் போன்ற மலர்களை
தோற்றுவிக்க, வளமான நீர் நிறைந்த குளத்தில் பூத்த தாமரை மலர், விளக்கு போன்று
காட்சி அளிக்கும் அழகான திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே!
1141
தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து* தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை*
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும்* அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை*
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக்* குழா வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு*
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே* 2.10.4
தாங்கு அரும் போர் மாலி படப் பறவை ஊர்ந்து - தாங்கமுடியாத கடும் போர் செய்யும்
மாலி அழியும்படி கருட பறவையில் ஊர்ந்து
தராதலத்தோர் குறை முடித்த தன்மையானை - உலகத்தில் உள்ளார் குறையை தீர்த்த பெருமையுடையவனை
ஆங்கு அரும்பிக் கண் நீர் சோர்ந்து அன்பு கூரும் - கண் நீர் அரும்பி சோர்ந்து அன்பு
கூரும் ஆங்கு - கண்ணீர் துளிகள் பெருகி அன்பு காட்டுபவர்களுக்கு அப்போதே
(அவ்வினிய)
அடியவர்கட்கு ஆர் அமுதம் ஆனான் தன்னை - அடியவர்களுக்கு நிறைந்த அமுதம்
ஆகிய பெருமாளை
கோங்கு அரும்பு சுரபுன்னை குரவு ஆர் சோலைக் - கோங்கு (மரத்தில் பூக்கள்) துளிர் விட,
சுர புன்னை மரங்களும், கடம்ப மரங்களும் பொருந்திய சோலையில்
குழா வரி வண்டு இசை பாடும் பாடல் கேட்டு - கூட்டமாக அழகிய வண்டுகள் இசை
பாடும் பாடல் கேட்டு
தீங்கரும்பு கண் வளரும் கழனி சூழ்ந்த - இனிய கரும்பு கணுக்கள் வளரும் வயல்கள்
சூழ்ந்த
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே - திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
அருமையான பாசுரத்தில் வரும் கதை
"அரக்கனை அழித்த அண்ணல் "
சுமாலி என்பவன் இராவணனுடைய தாயாகிய கேகசிக்குத் தந்தை. அதாவது தாய் வழிப் (தாத்தா)பாட்டன். இவன் தன் சகோதரர்களான மாலி, மாலியவான் ஆகியோருடன்
இலங்கையில் குடிபுகுந்து பலருக்கு சொல்லமுடியாத பல கொடுமைகளை செய்துவந்தான்.
ஒரு கட்டத்தில் மாலியின் கொடூர செயல்கள் அதிகரிக்கவே, கருட வாகனத்தில் வந்த எம்பெருமான் மாலியை அழித்து உலகத்தில் உள்ளவர்களின் குறையை போக்கினார்.
விளக்கம் :-
முன்பு ஒரு காலத்தில் யாராலும் தாங்கமுடியாத கடுமையான போர் செய்வதில்
திறமையான மாலி என்ற அரக்கனின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட , கருட
வாகனத்தில் எழுந்தருளி அரக்கனை அழித்து உலகத்தில் உள்ளவர்களின் குறையை
தீர்த்த பெருமையுடையவனை, கண்ணில் நீர் துளிகள் பெருகி உள்ளம் உருகி அன்பு
காட்டும் அடியவர்களுக்கு அப்பொழுதே உள்ளம் நிறைந்த இனிய அமுதம் ஆகிய எம்பெருமானை
அழகான பூக்கள் துளிர்விடும் கோங்கு மரங்களும், மாங்ரொவ் (mangrove) எனப்படும்
சுரபுன்னை மரங்களும், கடம்ப மரங்களும் கொண்ட சோலையில், கூட்டமாக வந்த அழகிய
வண்டுகள் இசையோடு பாடும் பாடல் கேட்டு, இனிய கரும்புகளின் கணுக்கள் வளர்ந்த
வயல்கள் சூழ்ந்த திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
1142
கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி* கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள்*
பிறை எயிற்று வாழ் அரக்கர் சேனை எல்லாம்* பெருந்தகையோடு உடன் துணிந்த பெம்மான் தன்னை*
மறை வளரப் புகழ் வளர மாடம் தோறும்* மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத*
சிறை அணைந்த பொழில் அணைத்த தென்றல் வீசும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே* 2.10.5
கறை வளர் வேல் கரன் முதலாக் கவந்தன் வாலி – (ரத்த (கறை படிந்த வேல் )கொண்ட(
கரன் முதலாக கபந்தன் வாலியும்
கணை ஒன்றினால் மடிய இலங்கை தன்னுள் - அம்பு ஒன்றினால் அழியும்படி இலங்கை நாட்டிலே
பிறை எயிற்று வால் அரக்கர் சேனை எல்லாம் - பிறை )போன்ற(பற்களையும் )போர்) வாளையும் )உடைய(அரக்கர் படை எல்லாம்
பெருந்தகையோடு உடன் துணிந்த பெம்மான் தன்னை - (நானே இலங்கைக்கு அதிபதி என்ற) பெருமையுடையவனோடு )இராவணனனோடு (உடன் (போரிட்டு(அழித்த இறைவனை
மறை வளரப் புகழ் வளர மாடம் தோறும் - மாடம் தோறும் மறை வளரப் புகழ் வளர –
திண்ணைகள் தோறும் வேதங்கள் வளரவும் புகழ் வளரவும்
மண்டபம் ஒண் தொளி அனைத்தும் வாரம் ஓத - ஒண் தொளி மண்டபம் அனைத்தும்
வாரம் ஓத - அழகிய வீதிகளில் )உள்ள(மண்டபங்கள் அனைத்திலும் தெய்வ பாடல் பாடி கொண்டிருக்க
சிறை அணைந்த பொழில் அணைத்த தென்றல் வீசும் - நீர்நிலைகளுக்கு நெருக்கமாக
)அமைந்த(சோலைகளோடு சேர்ந்து )குளிர்ச்சியான(தென்றல் )காற்று(வீசும்
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே - திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
அருமையான பாசுரத்தில் வரும் கதை
"கரன், கபந்தன், வாலி "
1. வாலி - இந்திரனின் அருளால் பிறந்த வானர அரசன் . வாலி தன் தம்பி சுக்ரீவனை
பகைத்து கொண்டு எதிர்த்து வந்தான். இதனால் தனக்கு ஆபத்து வருமோ என பயந்த
சுக்ரீவன் ஸ்ரீ ராமரிடம் அடைக்கலம் புகுந்தான். வாலி சுக்ரீவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவனை கொல்ல போரிடும்போது தன்னை நம்பி வந்த சுக்ரீவனை
2. கரன் - அரக்கனான இராவணனின் தம்பி. இராவணின் தங்கையான சூர்பனகை
தந்திரத்தால் ஸ்ரீ ராமரை மணக்க விரும்பிய போது அவளின் சூழ்ச்சியை அறிந்த
லட்சுமணன் அவளின் மூக்கை அறுத்தான் . இதனால் அவமானம் தாங்காமல் தன் அண்ணன்களிடம் முறையிட கரன் முதலான அரக்கர்கள் ஸ்ரீ ராமரிடம் போர் செய்து
கொல்ல முயன்றனர் .கரன் முதலான அரக்கர்களை ராம பிரான் அழித்தார்
3. கபந்தன் - தலையும் காலும் இல்லாத அரக்கன். பல வரங்களை பெற்ற இவன்
ஆணவத்தால் பல பல அட்டூழியங்களை செய்தான் . இவனின் அட்டகாசத்தை அடக்க
விளக்கம் :-
பலரை கொன்று குவித்ததால் ரத்த கறை படிந்த கூரான போர் வேலை உடைய கரன்,
கபந்தன், வாலி முதலானவர்களை தன்னுடைய அம்பால் இறக்கும் படி அவர்களை
வீழ்த்தி, இலங்கை நாட்டிலே பிறை வடிவத்தில் கூரான பற்களையுடைய அரக்கர்
படைகளை எல்லாம், நானே இலங்கைக்கு அதிபதி என்ற அகங்காரத்தோடு சேர்ந்த பெருமையுடையவனான இராவணனோடு கூடவே சேர்த்து அழித்த இறைவனை,
ஒவ்வொரு வீட்டிலுள்ள திண்ணைகள் தோறும் வேதங்கள் ஓதுவதால் வேதம் வளர,
அதனால் புகழும் சேர்ந்து வளர, அதுமட்டுமில்லாமல் அழகிய வீதிகளில் அமைந்துள்ள
மண்டபங்கள் அனைத்திலும் தெய்வீக பாடல்கள் பாடி கொண்டிருக்க, நீர்நிலைகளின்
அருகிலேயே அமைந்த செடி கொடிகள் சூழ்ந்த அழகிய சோலையோடு சேர்ந்து குளிர்ந்த
தென்றல் காற்று வீசும் திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
1143
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று* அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி
உரலோடு ஆர்க்க *
தறி ஆர்ந்த கருங்களிறே போல நின்று* தடங்கண்கள் பனி மல்கும் தன்மையானை*
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு* வியன் கலை எண் தோளினாள் விளங்கு* செல்வச்
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும்* திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே*2.10.6
உறி ஆர்ந்த நறு வெண்ணெய் ஒளியால் சென்று - கயிறில் கட்டப்பட்ட வாசனை (மிக்க) வெண்ணையை இருட்டில் சென்று
அங்கு உண்டானைக் கண்டு ஆய்ச்சி உரலோடு ஆர்க்க - அங்கு )வெண்ணையை(
உண்டவனை கண்டு யசோதை தாய் உரலாடு சேர்த்து கட்ட
தறி ஆர்ந்த கருங்களிறே போல நின்று - கம்பத்தில் சேர்த்து கட்டப்பட்ட கரிய யானை
போல நின்று
தடங்கண்கள் பனி மல்கும் தன்மையானை - பெரிய கண்கள் நீர் மல்கும் படி
நின்றவனை
வெறி ஆர்ந்த மலர் மகள் நா மங்கையோடு - வாசனை பொருந்திய (தாமரை)
மலரில் (தோன்றிய) மகாலட்சுமி, நாக்கில் (குடியிருக்கும்) சரஸ்வதியோடு
வியன் கலை எண் தோளினாள் விளங்கு செல்வச்- வியக்கத்தக்க சக்திகளை (உடைய)
எட்டு கைகளுடைய துர்க்கை அம்மன், விளங்கும் செல்வ செழிப்பும்
செறி ஆர்ந்த மணி மாடம் திகழ்ந்து தோன்றும் - நெருக்கம் பொருந்திய (விளக்கு) ஒளி
வீசும் மாடங்கள் அமைந்து காட்சி அளிக்கும்
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே-திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
விளக்கம் :-
முன்பு இரவிலே விளக்கு ஒளியில் சென்று, அங்கு கயிறில் கட்டப்பட்ட வெண்ணெய் பானையிலிருந்து வெண்ணையை உண்டவனை பார்த்த அம்மாவான யசோதை, யாருக்கும் தெரியாமல் வெண்ணையை உண்ட தன் குழந்தையிடம் கோபம் கொண்டு, பெரிய உரலில் கட்டிவிட,ஒரு கம்பத்தில் கருப்பான யானையை கட்டிவிட்டது போல நின்று கொண்டு
அழகான பெரிய கண்கள் நீர் ததும்ப நின்றவனை,
நல்ல வாசனையான தாமரை மலரில் பிறந்த மகாலட்சுமி மற்றும் நாக்கில்
குடியிருக்கும் சரஸ்வதியோடும், வியக்கும்படியான சக்திகளை உடைய எட்டு கைகள்
கொண்ட துர்க்கை அம்மனும், அதோடு நன்கு விளங்குகின்ற செல்வ செழிப்பும்,
நெருக்கமாக அமையபெற்ற விளக்குகளால் ஒளி வீசும் மாடங்களும் அமைந்து காட்சி
தரும் திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
இரவில் வெண்ணை திருடி உண்ட கண்ணன்
வெண்ணை உண்டதால் அம்மாவால் உரலில் கட்டப்பட்ட கண்ணன்
1144
இருங்கை மா கரி முனிந்து பரியைக் கீறி* இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து*
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு* வஞ்சகம் செய் கஞ்சனுக்கு நஞ்சானானை* கருங்கமுகு பசும் பாளை வெண் முத்தீன்று* காயெல்லாம் மரகதமாய்ப் பவளம் காட்ட*
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத்* திருக்கோவலூர் அதனுள்
கண்டேன் நானே*2.10.7
இருங்கை மா கரி முனிந்து பரியைக் கீறி - பெரிய தும்பிக்கை )உடைய(யானையை சீறி, குதிரையை பிளந்து
இன விடைகள் ஏழ் அடர்த்து மருதம் சாய்த்து –ஒரே இனத்தை )சேர்ந்த(எருதுகள்
ஏழையும் அடக்கி, மருத )மரங்களை(சாய்த்து
வரும் சகடம் இற உதைத்து மல்லை அட்டு - வரும் சக்கரம் அழிய )காலால்(உதைத்து, மல்லர்களை தாக்கி
வஞ்சகம் செய் கஞ்சனுக்கு நஞ்சானானை - தீங்கு செய்த கம்சனுக்கு விஷமானவனை
கருங்கமுகு பசும் பாளை வெண் முத்தீன்று - கரிய பாக்கு )மரங்களில்(பசுமையான
பிஞ்சிலிருந்து )வரும் பூக்கள்(வெள்ளை முத்து )போல(வெளிவர
காயெல்லாம் மரகதமாய்ப் பவளம் காட்ட - காயெல்லாம் மரகதமாய் )அதன் பழங்கள்(
பவளமாய் காட்ட
செருந்தி மிக மொட்டு அலர்த்தும் தேன் கொள் சோலைத் - செருந்தி )மரத்தில்(நிறைய மொட்டுகள் மலரவும், தேன் கொண்ட சோலைகளையுடைய
திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே - திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
அருமையான பாசுரத்தில் வரும் முதல் கதை
"கொல்ல வந்த யானை மற்றும் மல்யுத்த வீரர்களை த்வம்சம் செய்த கண்ணன்"
கம்சன் தனூர் யாகம் ஒன்று உடனே நடத்தப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து மல்யுத்தப்
போட்டியும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். இந்த விழாவிற்கு கண்ணனுக்கும், பலராமனுக்கும் அழைப்பு விடுத்தான். சாணூரன், சலன் முதலிய
மல்லர்களை அழைத்து, கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மகன்களான கண்ணன், பலராமன் இவர்களால்தான் எனக்கு மரணம் என்று விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நான் ஏற்பாடு
செய்துள்ள மல்யுத்தத்திற்கு அவர்களை அழைத்துள்ளேன். நீங்கள் அவர்களுடன் மல்யுத்தம்
செய்து அவர்களை அழித்துவிட வேண்டும்’ என்று ஆணையிட்டான். ஆனால் அதற்க்கு
முன்பே கண்ணனை கொல்ல மேலும் ஒரு வழியை ஏற்பாடு செய்தான்
‘குவலயாபீடம்’ என்னும் போர் யானையின் பாகனை அழைத்து ‘மல்யுத்தம் காணவரும் கிருஷ்ணனையும், பலராமனையும், மல்யுத்த அரங்கு வாசலிலேயே குவலயாபீடத்தினால்,
மிதித்துக் கொல்ல ஏற்பாடு செய்’ என்றும் கம்சன் கட்டளையிட்டான். கண்ணன் அந்த
யானையின் தந்தங்களை உடைத்து அதனைக் கொன்றான். அதன் பின் தயாராக இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்களையும் த்வம்சம் செய்தான் கண்ணன்.
அருமையான பாசுரத்தில் வரும் இரண்டாம் கதை
"குதிரை வடிவில் வந்த அரக்கனை கொன்ற கண்ணன்"
கம்சன் கேசி என்ற அரக்கனை அழைத்து, நீ கோகுலம் சென்று நந்தகோபரின் மகன்கள்
கண்ணனையும், பலராமனையும் கொன்றுவிட்டு வா என்று கட்டளை இட்டு அனுப்பினான்.
கம்சன் அனுப்பிய கேசி என்ற அரக்கன் மிக பெரிய குதிரை வடிவில் கண்ணனை
கொல்ல வந்ததை அறிந்து, தன்னோட கையை குதிரை வாயில் வைத்து, வாயை
பிளந்து கேசி என்ற அரக்கனை கொன்றான்
அருமையான பாசுரத்தில் வரும் மூன்றாம் கதை
“ஏழு காளைகளை அடக்கிய எம்பெருமான்”
கண்ணன், யசோதையின் குழந்தையாக, ஆயர்பாடியில வளர்ந்துட்டு இருக்கும் போதே,
அதாவது கண்ணன் சின்ன பாலகனா இருக்கும் போதே, யசோதையின் சகோதரனும்,
துவரைப்பதியின் மன்னனுமான கும்பன் என்பவரின் பொண்ணுதான் நப்பின்னை.
கண்ணனின் வருங்கால மனைவி ன்னு சின்ன வயசுலேயே முடிவு செஞ்சுட்டாங்க.
நப்பின்னையும் கண்ணன் பால் காதல் கொள்கிறாள்.
ஆனா, நப்பின்னையோட அப்பா,ஒரு நிபந்தனை வைக்கிறார். தன்னிடம் உள்ள ஏழு அடங்காத முரட்டுக் காளைகளையார் அடக்குறாங்களோ! அவங்களுக்குத்தான் நப்பின்னையை மணம் முடித்துக்கொடுப்பேன்னு சொல்லிடறாரு.எத்தனையோ பேர் முயன்றும் முடியாமல் தோத்துப்போக, நம்ம மதுரைவீரன், மாயக்கண்ணன் வந்து ஏழு காளைகளையும் அடக்கி, தன்மாமாவின் மகளான நப்பின்னையைத் திருமணம் செய்து கொண்டார்.
ஆனா, நப்பின்னையோட அப்பா,ஒரு நிபந்தனை வைக்கிறார். தன்னிடம் உள்ள ஏழு அடங்காத முரட்டுக் காளைகளையார் அடக்குறாங்களோ! அவங்களுக்குத்தான் நப்பின்னையை மணம் முடித்துக்கொடுப்பேன்னு சொல்லிடறாரு.எத்தனையோ பேர் முயன்றும் முடியாமல் தோத்துப்போக, நம்ம மதுரைவீரன், மாயக்கண்ணன் வந்து ஏழு காளைகளையும் அடக்கி, தன்மாமாவின் மகளான நப்பின்னையைத் திருமணம் செய்து கொண்டார்.
அருமையான பாசுரத்தில் வரும் நான்காம் கதை
"உரலில் கட்டப்பட்ட கண்ணன் செய்த லீலை"
நளகூபன், மணிக்ரீவன் என்ற அவ்விருவரும் குபேரனின் பிள்ளைகள்.
பெருஞ்செல்வத்தால் ஆணவம் கொண்டிருந்த அவர்கள் இருவரும் கந்தர்வப்
பெண்களுடன் ஒரு தடாகத்தில் நீர் விளையாட்டு விளையாடச் சென்றனர். அப்போது தற்செயலாக நாரத முனிவர் அவ்விடத்தைக் கடக்க நேரிட்டது. அவரைக் கண்டதும்
அந்த கந்தர்வ பெண்கள் நடுநடுங்கி விரைவில் தங்கள் ஆடைகளை அணிந்து கொண்டு
அவரை வணங்கி நின்றனர்.
ஆனால் குபேரனின் பிள்ளைகளோ, மிதமிஞ்சிய மது மயக்கத்தாலும் தங்கள் ஆணவத்தாலும் நாரதர் வந்ததையே கவனியாமலும் தங்கள் ஆடைகளை அணியாமலும் இருந்தனர். இதைக் கண்டு கோபமுற்ற நாரதர் மரம் போல் நிற்கும் நீங்கள் இருவரும் பூவுலகில் இரு மருத மரங்களாக மாறக் கடவது என்று சாபமளித்தார். அவரது சாபத்தைக் கேட்டு தன் நிலையறிந்த இருவரும் நாரதரிடம் மன்னிப்புக் கேட்டு, தங்கள் சாபத்திற்கு விமோசனத்தை அருளும்படி வேண்டினர்.
ஆனால் குபேரனின் பிள்ளைகளோ, மிதமிஞ்சிய மது மயக்கத்தாலும் தங்கள் ஆணவத்தாலும் நாரதர் வந்ததையே கவனியாமலும் தங்கள் ஆடைகளை அணியாமலும் இருந்தனர். இதைக் கண்டு கோபமுற்ற நாரதர் மரம் போல் நிற்கும் நீங்கள் இருவரும் பூவுலகில் இரு மருத மரங்களாக மாறக் கடவது என்று சாபமளித்தார். அவரது சாபத்தைக் கேட்டு தன் நிலையறிந்த இருவரும் நாரதரிடம் மன்னிப்புக் கேட்டு, தங்கள் சாபத்திற்கு விமோசனத்தை அருளும்படி வேண்டினர்.
அவர்கள்பால் இரக்கம் கொண்ட முனிவரும், ஸ்ரீமந்நாராயணன் பூமியில் கண்ணனாக
அவதாரம் எடுக்கும்போது உங்களுக்கும் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார்.
அதற்கான காலமும் வந்தது . ஒரு நாள் நம் கண்ணன் வெண்ணெய் உண்டதால் அம்மா யசோதை குழந்தை கண்ணனை உரலில் கட்டிவிட உரலோடு இழுத்து கொண்டு
ஒன்றுகொன்று அருகில் நின்றிருந்த இரு மருத மரங்களின் இடையில் புகுந்து
சென்றதால் மரம் இரண்டாக உடைய அவர்களுக்கு சாப விமோசனம் கிடைத்தது.
குபேரனின் குமாரர்களும், கண்ணனை வணங்கி தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.
அருமையான பாசுரத்தில் வரும் ஐந்தாம் கதை
“சகடாசுரனை அழித்த கண்ணன்"
கண்ணன் ஐந்து மாதக் குழந்தையாக இருந்த போது, அவனை ஒரு மாட்டுவண்டியின்
நிழலில் படுக்கவைத்திருந்தனர். கம்சன், கோகுலத்தில் இருந்த குழந்தை கண்ணனைக்
கொல்ல, முதலில் பூதனை )பூதகி(என்னும் அரக்கியை அனுப்பினான். அவளைக்
கண்ணன் கொன்றுவிடவே, இரண்டாவது முயற்சியாக, சகடாசுரன் என்னும் அசுரனை அனுப்பிவைத்தான்.
சகடாசுரன், கண்ணன் படுத்திருந்த வண்டியின் சக்கரத்திற்குள் சென்று, குழந்தை மேலேறிக் கொல்ல முயன்றான். குழந்தை கண்ணனோ, விளையாட்டுத் தனமாகக், காலை உதைத்து விளையாடிக் கொண்டிருக்கும் பாவனையில், சக்கரத்தை ஒரு உதை உதைத்தான்.
குழந்தை கண்ணனின் பிஞ்சு பாதம் பட்ட வேகத்தில் வண்டியின் சக்கரத் தூளாக
சகடாசுரன், கண்ணன் படுத்திருந்த வண்டியின் சக்கரத்திற்குள் சென்று, குழந்தை மேலேறிக் கொல்ல முயன்றான். குழந்தை கண்ணனோ, விளையாட்டுத் தனமாகக், காலை உதைத்து விளையாடிக் கொண்டிருக்கும் பாவனையில், சக்கரத்தை ஒரு உதை உதைத்தான்.
குழந்தை கண்ணனின் பிஞ்சு பாதம் பட்ட வேகத்தில் வண்டியின் சக்கரத் தூளாக
நொறுங்கி, அதனுளிருந்த அசுரனும் கொல்லப்பட்டான்
அருமையான பாசுரத்தில் வரும் ஆறாம் கதை
"நயவஞ்சகன் கம்சனை அழித்த கண்ணன்"
கொடிய அரக்கன் கம்சன் தன் தங்கை தேவகியின் வயிற்றில் பிறக்கக்கூடிய எட்டாவது
குழந்தை தன்னை கொல்லப் போகின்றது என்பதை முன்பே அறிந்து தங்கையான
தேவகியையும் தேவகியின் கணவனையும் சிறையிலடைத்து வைத்துவிட்டான்.தேவகிக்கு
குழந்தைகள் பிறக்கப் பிறக்க அவற்றை ஒவ்வொன்றாக கொல்லவும் செய்தான். பல ஆண்டுகளாக இது தொடர தேவதிக்கு எட்டாவது குழந்தையாய் கண்ணன் பிறந்தான்.அவன் பிறந்தவுடனேயே, பெற்றோர்க்கு தன் சுயரூபக் காட்சியைக், சங்கு சக்கரங்கள் ஏந்திய
கைகளுடன் பெற்றோர்க்குத் தெய்வக் குழந்தையாய்க் காட்சியளிக்க, பதறிப் போனாள்.
.தேவகியின் வேண்டுகோளுக்கிணங்கி மானுடக் குழந்தையாக மாறினான் கண்ணன்.
கம்சன் தனது எட்டாவது குழந்தையையும் கொன்று விடுவானே என்று பயந்து, சிறைச்சாலையில் பிறந்திருந்த கண்ணனை, இரவோடு இரவாக, வசுதேவர்
கம்சன் தனது எட்டாவது குழந்தையையும் கொன்று விடுவானே என்று பயந்து, சிறைச்சாலையில் பிறந்திருந்த கண்ணனை, இரவோடு இரவாக, வசுதேவர்
கொண்டு சென்று தன் நண்பனான நந்தகோபரிடத்து, கொடுத்துவிட்டு, அவருடைய பெண்பிள்ளையை வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.
மறுநாள் காலையில், கம்சன், மாற்றப்பட்ட குழந்தையை சுவற்றில் வீசிக் கொல்ல
மறுநாள் காலையில், கம்சன், மாற்றப்பட்ட குழந்தையை சுவற்றில் வீசிக் கொல்ல
முயன்ற போது, சக்தியின் அம்சமான அக்குழந்தை, 'கம்சா! உன்னைக் கொல்லப்
போகும் தெய்வக்குழந்தை பாதுகாப்பாய் வேறிடத்து உள்ளது. அவன் கையில் நீ இறக்கப் போவது உறுதி!' என்று கூறிவிட்டு விண்ணிற்கு பறந்து சென்றது. கம்சன் தன்னை
கொள்ளும் ஒருவன் பிறந்து விட்டன என்பதை தெரிந்து கொண்டு கண்ணனை கொல்ல
பல திட்டங்களை போட்டான். அனைத்தும் தோல்வியில் முடிந்தது . மகா கொடூர அரக்கன் கம்சனும் கண்ணனால் கொல்லபட்டான்.
விளக்கம் :-
தன்னை தாக்க கம்சனால் அனுப்பப்பட்ட குவலயாபீடம் என்ற பெரிய தும்பிக்கை உடைய யானையை வீழ்த்தி, மேலும் கம்சனால் தன்னை கொல்ல அனுப்பிய கேசி என்ற குதிரை
வடிவில் வந்த அரக்கனின் வாயை பிளந்து, மாமன் மகள் நப்பின்னையை திருமண
செய்ய ஒரே இனத்தை சேர்ந்த வலிமையான ஏழு எருதுகளை அடக்கி, மரமாகும் படி
சாபம் பெற்ற இருவரின் சாபம் நீக்க ஒன்றுகொன்று அருகருகே நின்றிருந்த மருத
மரங்களை சாய்த்து, சூழ்ச்சி செய்து தீங்கிழைக்கும் வஞ்சக எண்ணம் கொண்ட மகா
கொடூர அரக்கன் கம்சனை அழித்தவனை,
கரிய பாக்கு மரத்தில் உள்ள பசுமையான பிஞ்சிலிருந்து பூக்கள் வெள்ளை நிற முத்துகளை போல வெளிவர, அதன் காய்கள் பச்சை நிற மரகதத்தை போலவும், அதன் கனிகள் சிவப்பு நிற
பவளத்தை போலவும் காட்சி தர, செருந்தி மரத்திலிருந்து நிறைய மொட்டுக்கள் பூத்து குலுங்க,
தேன் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
1145
பார் ஏறு பெரும் பாரம் தீரப்* பண்டு பாரதத்துத் தூது இயங்கி * பார்த்தன் செல்வத்
தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை* செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை*
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும்* புரந்தரனும் நான்முகனும்
பொருந்தும் ஊர் போல்*
சீர் ஏறு மறையாளர் நிறைந்த* செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே* 2.10.8
பார் ஏறு பெரும் பாரம் தீரப் - பூமியின் மேலே பெரும் சுமையை தீர்க்க
பண்டு பாரதத்துத் தூது இயங்கி பார்த்தன் செல்வத் - முற்காலத்தில் பாரத )போர் ஆரம்பமாகும்போது பலமுறை பாண்டவர்களுக்காக (தூது சென்று அர்ச்சுனனின்
பொக்கிசமான
தேர் ஏறு சாரதியாய் எதிர்ந்தார் சேனை - தேர் மேலே பாகனாய் )இருந்து(எதிர்த்த
படைகளான )கௌரவர்களை(
செருக்களத்துத் திறல் அழியச் செற்றான் தன்னை - போர் களத்தில் வலிமை அழிய
வீழ்த்திய பெருமையுடையவனை
போர் ஏறு ஒன்று உடையானும் அளகைக் கோனும் - போர் எருது ஒன்றை உடைய
)சிவனும்(அளகாபுரி அரசன் )குபேரனும்(
புரந்தரனும் நான்முகனும் பொருந்தும் ஊர் போல் - தேவேந்திரனும், பிரம்மனும்
வசிக்கும் ஊர் போல்
சீர் ஏறு மறையாளர் நிறைந்த – பெருமை மிகுந்த வேதியர்கள் நிறைந்த
செல்வத் திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே - வளமான திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
அருமையான பாசுரத்தில் வரும் கதை
" பார்த்தனுக்கு சாரதியாக இருந்த கண்ணன்”
திருதராஷ்டிரனின் மகன்கள் 100 பேர், கௌரவர்கள் எனப்பட்டனர். திருதராஷ்டிரனின்
தம்பி பாண்டுவின் முதல் மனைவி குந்தி தேவியின் மூலம் தருமன், பீமன், அருச்சுனன்
என மூவரும், இரண்டாம் மனைவி மாத்ரியின் மூலம் நகுலன், சகாதேவன் என மொத்தம் பாண்டுவிற்கு பிறந்தவர்கள் 5 பேர், பாண்டவர்கள் எனப்பட்டனர். குந்தி தேவியின் தம்பி வசுதேவருக்கு பிறந்தவர் கண்ணன்.
வெகுநாட்களாக கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் அஸ்தினாபுரம் ஆட்சியை
பிடிப்பதில் பிரச்சனை இருந்து வந்தது. ஒரு சமயத்தில் பிரச்னை அதிகமாகவே இவர்கள் இருவருக்கு மிக பெரிய குருசேத்திர (பாரத) போர் ஏற்பட்டது.அதில் நல்லவர்களான பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் துணை இருந்தார், அர்ச்சுனனுக்கு தேர் பாகனாக இருந்து பாண்டவர்களுக்கு ஆதரவாக இருந்தார். இறுதியில் கௌரவர்கள் அழிந்து பாண்டவர்கள்
வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்றனர்.
விளக்கம் :-
பூமியில் உள்ள ஜீவன்கள் கஷ்டபடுவதை பார்த்து அவர்களின் பாரம் தீர்க்க முன் ஒரு காலத்தில் கிருஷ்ணனாய் பிறந்து, பாரத போர் ஆரம்பிக்கும் சமயத்தில் பாண்டவர்களுக்காக
பல முறை கௌரவர்களிடம் தூது சென்று, பாரத போரில் அர்ச்சுனனின் பொக்கிசமான
தேரில் தேர் ஓட்டுபவனாக இருந்து, அர்ச்சுனனுக்கு சொல்வது போல அனைவருக்கும்
பகவத் கீதையை உபதேசித்து, பாண்டவர்களை எதிர்த்த கௌரவர்களின் படைகளை
போர் களத்தில் அவர்களின் திறமை அழியும்படி வீழ்த்திய பெருமையுடையவனை,
போர் செய்வதற்கு ஏற்ற வலிமையான எருது ஒன்றை உடைய சிவனும், அளகாபுரி
நகரத்தின் மன்னன் குபேரனும், தேவேந்திரனும், பிரம்மனும் வசிக்கும் வானுலகிற்கு
சமமான ஊர் போல காட்சி தர, பெருமை மிகுந்த வேதம் ஓதிடும் வேதியர்கள் நிறைந்த,
வளம் மிகுந்த திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
1146
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு* சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்ற*
கா வடிவின் கற்பகமே போல நின்று* கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை*
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை* செம்பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை*
தீ வடிவின் சிவன் அயனே போல்வார்* மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே* 2.10.9
தூ வடிவின் பார் மகள் பூ மங்கையோடு - தூய அழகுடைய பூமி தாயாரோடும் ,
பூ மகளோடும் (மகாலட்சுமியோடு(
சுடர் ஆழி சங்கு இரு பால் பொலிந்து தோன்ற - ஒளி வீசும் சக்கரம், சங்கு இரு பக்கமும் ஜொலிக்கும்படி காட்சி தர
கா வடிவின் கற்பகமே போல நின்று – (தேவலோக(சோலையில் விளங்குகின்ற )கேட்டதை கொடுக்கும்(கற்பக மரம் போல நின்று
கலந்தவர்கட்கு அருள் புரியும் கருத்தினானை - )தன்னிடம்(அன்பு கொண்டவர்களுக்கு
அருள் புரியும் உள்ளமுடையவனும்
சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை - சிவந்த திருவடி, திருக்கைகள், திருவாய், கண்,
சிவந்த ஆடை
செம்பொன் செய் திரு உருவம் ஆனான் தன்னை - சிவந்த தங்கத்தால் செய்ததை போல
திருஉருவம் ஆகிய அவனை
தீ வடிவின் சிவன் அயனே போல்வார் - தீ வடிவுடைய சிவனும், பிரம்மனும் போன்ற (தெய்வங்களும் வழிபடும்)
மன்னு திருக்கோவலூர் அதனுள் கண்டேன் நானே - நிலைபெற்ற திருக்கோவிலூர்
அதனுள் கண்டேன் நானே
விளக்கம் :-
அழகிய வடிவுடைய பூமி தாயார் , மகாலட்சுமியோடும், ஒளி வீசும் சங்கும் , சக்கரமும் இரு பக்கமும் பளிச்சென்று காட்சி தர, தேவலோக சோலையில் இருக்கும் கேட்டதை கொடுக்கும் கற்பக மரத்தை போல நின்று கொண்டு தன்னிடம் அன்பு கலந்து பக்தி செய்பவர்களுக்கு அருள் புரியும் உள்ளமுடையனும்,
சிவந்த திருவடி, திருவாய்,கண், சிவந்த ஆடை, சிவந்த பொன்னால் செய்யப்பட்டதை போல அழகான திருஉருவம் ஆகிய எம்பெருமானை, ஜோதி வடிவத்தில் காட்சி தரும் சிவனும், நான்முகனாகிய பிரம்மனும் போன்ற தெய்வங்களும் வழிபடப்படும் அவனை , நிலையான திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் நானே
விளக்கம் :-
1147
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை* நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னைச்*
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த* செல்வத் திருகோவலூர் அதனுள் கண்டேன் என்று*
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன்* வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார்*
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக்* கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே* 2.10.10
வாரணம் கொள் இடர் கடிந்த மாலை - யானை பெற்ற துன்பத்தை போக்கிய பெரியவரை
நீல மரகதத்தை மழை முகிலே போல்வான் தன்னைச் - நீல மரகதத்தை (போலவும்)
மழை மேகம் போலவும் (உருவம் உடைய) எம்பெருமானை
சீர் அணங்கு மறையாளர் நிறைந்த - இயல்பாகவே தெய்வத்திற்கு ஒப்பான வேதியர்கள் நிறைந்த
செல்வத் திருகோவலூர் அதனுள் கண்டேன் என்று - வளமான திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் என்று
வார் அணங்கு முலை மடவார் மங்கை வேந்தன் - துணியால் (மறைத்த) அழகான முலைகளையுடைய பெண்கள் (வாழும்) திருமங்கை நாட்டு மன்னன்
வாட் கலியன் ஒலி ஐந்தும் ஐந்தும் வல்லார் - வாள் (போர் செய்வதில் வல்லவன்) கலியன் சொன்ன ஐந்தும் ஐந்தும் (சொல்ல) வல்லவர்கள்
காரணங்களால் உலகம் கலந்து அங்கு ஏத்தக் - (ஏதோ ஒரு) காரணங்களால் உலக
(ஜீவன்கள்) திரண்டு வந்து வழிபட
கரந்து எங்கும் பரந்தானைக் காண்பர் தாமே - மறைந்து எங்கும் நிறைந்திருப்பவனை காண்பார்கள் தாமே
விளக்கம் :-
முன்பு ஒரு நாள் யானை அன்போடு பெருமாளுக்கு சமர்பிக்க தாமரை மலர்களை எடுக்க, குளத்தில் இறங்கிய போது பெரிய முதலை ஒன்று அதன் காலை கடிக்க வலி தாங்கமுடியாத யானை, அதை பொருட்படுத்தாமல் எப்படியாவது பெருமாளுக்கு பூ சமர்ப்பிக்க வேண்டுமே!
என்ற ஏக்கத்தில் ஆதிமூலமே! என்று நினைத்து பிளிறியது.
உடனே கருட வாகனத்தில் வானத்தில் தோன்றி தன்னிடமிருந்த சக்கரத்தால் முதலையை அழித்து யானையின் துன்பத்தை போக்கிய பெருமாளை ,இயல்பாகவே நல்ல குணத்துடன் தெய்வத்திற்கு ஒப்பான வேதியர்கள் நிறைந்த வளமான திருக்கோவிலூர் அதனுள் கண்டேன் என்று, மெல்லிய துணியினால் மறைத்த அழகான முலைகளையுடைய பெண்கள் வாழும் திருமங்கை நாட்டின் மன்னன், வாள் போர் செய்வதில் வல்லமை படைத்த கலியன் சொன்ன ஐந்தும் ஐந்தும் ஆகிய இப்பத்தும் சொல்ல வல்லவர்கள்,
தனக்கு விருப்பான வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும் என்பது போன்ற பல
காரணங்களால் உலக ஜீவன்கள் கூட்டமாக வந்து வழிபட, அவர்கள் விருப்பங்களை நிறைவேற்றும் பொருட்டு மறைந்து எங்கும் நிறைந்திருக்கும்
பரம்பொருளை காண்பார்கள் தாமே
மூலவர் : திரு விக்கிரமர்
உற்சவர்:- ஆயனார், கோவலன்
அம்மன்/தாயார் : புஷ்பவல்லி தாயார்
மங்களாசாசனம்: திருமங்கை ஆழ்வார்:- 18 பாசுரம்
பொய்கை ஆழ்வார் :- 2 பாசுரம்
பூதத் ஆழ்வார் :- 1 பாசுரம்
புராண பெயர் :- திருக்கோவலூர்
தற்போதைய பெயர்:- திருக்கோவிலூர்
விழுப்புரத்திலிருந்து Bus வசதி நிறைய உள்ளது. திருக்கோவிலூர் சென்றடைய முக்கிய ஊர்களிலிருந்து தூரம்:-
விழுப்புரம் – 36Km திருவண்ணாமலை -36Km கடலூர் – 75Km கள்ளக்குறிச்சி – 40km
திரு விக்கிரம பெருமாள் திருவடிகளே சரணம்
திரு விக்கிரம பெருமாள் திருவடிகளுக்கு சமர்ப்பணம்.
3 comments:
Great post, God is Omani present, beautiful blog. I like your bogs, thanks for sharing,
Cheap flights to Auckland |
Cheap flights to Johannesburg |
cheap flights to Perth |
cheap flights to Shanghai |
cheap flights to Rio de Janeiro |
Cheap flights to Melbourne |
பதிவு கவர்ச்சியாக அமைந்திருக்கிறது இதைமுழுக்க வடிவமைக்க நீங்கள் மிகவும் சிரமப்பட்டிருக்கவேண்டும்.
பாசுரங்களை அருளிச்செய்தவர் திருமங்கை ஆழ்வார் என நினைக்கிறேன். சரிதானே?
இத்திருக்கோவிலூர் விழுப்புரம் பக்கத்தில், அல்லது திருவண்ணாமலைக்குப்போகும் வழியில் உள்ளதுதானே ? முதலாழ்வார்கள் வைபவம் நடந்த கோயில்தானே ?
கள்ளபிரான் said...
//பதிவு கவர்ச்சியாக அமைந்திருக்கிறது இதைமுழுக்க வடிவமைக்க நீங்கள் மிகவும் சிரமப்பட்டிருக்கவேண்டும்.//
நம்மக்கிட்ட என்னங்க இருக்கு? எல்லாமே எம்பெருமானின் அருளே!
//பாசுரங்களை அருளிச்செய்தவர் திருமங்கை ஆழ்வார் என நினைக்கிறேன். சரிதானே?//
சரிதான்
//இத்திருக்கோவிலூர் விழுப்புரம் பக்கத்தில், அல்லது திருவண்ணாமலைக்குப்போகும் வழியில் உள்ளதுதானே ? //
சரியா சொன்னீங்க
//முதலாழ்வார்கள் வைபவம் நடந்த கோயில்தானே ?//
அடடே சரிதான்!
Post a Comment