பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Tuesday, May 17, 2011

பரஞ்சோதி போலிருக்கும் இவர் யார்? என்ன* அட்டபுயகர தேன் என்றாரே!!

1118
திரிபுரம் மூன்று எரித்தானும்* மற்றை மலர்மிசை மேல் அயனும் வியப்ப* 
முரி திரை மாகடல் போல் முழங்கி* மூவுலகும் முறையால் வணங்க
எரி அன கேசர வாள் எயிற்றோடு* இரணியன் ஆகம் இரண்டு கூறா
அரி உரு ஆம் இவர் ஆர்கொல்என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே2.8.1 

திரிபுரம் மூன்று எரித்தானும் - (அரக்கர்களின்) திரிபுரம் என்று சொல்லும் மூன்று நகரங்களை எரித்த சிவனும் 
மற்றை மலர்மிசை மேல் அயனும் வியப்ப - மற்றொருவரான தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் பிரம்மனும் ஆச்சர்யப்படும்படி 
முரி திரை மாகடல் போல் முழங்கி - வளைந்து வந்து அலை வீசும்   பெரிய கடலிலிருந்து வரும் சத்தத்தை போல , எல்லாரும் கோவிந்தாகோவிந்தா! என்று வாயார சொல்லி 
மூவுலகும் முறையால் வணங்க - மூன்று உலகத்தில் உள்ளவர்களும் அவரவர் முறைப்படி வணங்க 
எரி அன கேசர வாள் எயிற்றோடு - நெருப்பு போல முடிகளுடனும் கூர்மையான பற்களோடும்  
இரணியன் ஆகம் இரண்டு கூறா - இரணியனின் உடலை இரண்டாக பிளந்த 
அரி உரு ஆம் இவர் ஆர்கொல்? என்ன - சிங்க உருவம் உடைய இவர் யார்! என்று நினைக்க (அதற்க்கு அவரே நான் 
அட்டபுயகரத்தேன் என்றாரே - அட்டபுயகரத்தேன் என்றாரே 

விளக்கம்:-
திரிபுரம் எனப்படும் மூன்று பறக்கும் நகரங்களை, சிவபிரானிடம் கடும் தவம் புரிந்து மூன்று அசுரர்கள் வரமாக பெற்று ஆணவத்தால் அட்டகாசம் செஞ்சதால, கோபமுற்ற சிவபெருமான் திரிபுரம் மூன்றையும் எரித்தார். இப்படி திரிபுரம் மூன்றையும் எரித்த சிவபிரானும்தாமரை மலர் மேல் இருக்கும் பிரம்மனும் ஆச்சர்யப்படும்படிவளைந்து வளைந்து வந்து அழகா அலை வீசும் பெரிய கடலிலிருந்து வரும் கோஷம் போலவிண்ணுலகம்மண்ணுலகம்பாதாளுலகம் என்று மூன்று உலகத்தில் உள்ளவர்களும் கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா! என்று வாயார சொல்லி இவரை வணங்குகிறார்களே!

மேலும் முன்பு ஒரு காலத்தில்  நெருப்பு போல சிவந்த முடிகளோடும்கூர்மையான பற்களோடும்வந்து  கொடிய அரக்கனான இரணியனின் உடலை இரண்டு பிளவாக பிளந்த சிங்க உருவமாக தோன்றியவர் போலிருக்கும்  இவர் யார்என்று நான் மனதில் நினைக்கஅப்பெரியவரே என் மனதை புரிந்து கொண்டு அன்போடு நான்தான் அட்டபுயகர தேன் என்றாரே! 


1119
வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பார்* வேதம் உரைத்து இமையோர் வணங்கும்
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து* மாவலி வேள்வியில் மண் அளந்த
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே* 2.8.2

வெந்திறல் வீரரில் வீரர் ஒப்பார் - பயங்கர திறமை உடைய வீரர்களை காட்டிலும் பெரிய வீரரை போலுள்ள (இவரை)
வேதம் உரைத்து இமையோர் வணங்கும் ௦- வேதங்கள் சொல்லி தேவர்கள் வணங்குகிறார்கள் 
செந்தமிழ் பாடுவார் தாம் வணங்கும் - அழகான தமிழை பாடுபவர்கள்  வணங்கும் 
தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன் - தேவரை போன்ற இவர் யார் என்று  தெரியவில்லையே! 
வந்து குறள் உருவாய் நிமிர்ந்து - குறள்(வாமன) உருவாய் வந்து நிமிர்ந்து - குள்ள வடிவத்தில் வந்து (திரிவிக்ரமனாய்) வளர்ந்து 
மாவலி வேள்வியில் மண் அளந்த - மகாபலி (நடத்திய) வேள்வியில் பூமியை அளந்த 
அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன - உத்தமர் போலிருக்கும் இவர் யார்என்று நினைக்க (அதற்க்கு அவரே நான்)
அட்டபுயகரத்தேன் என்றாரே - அட்டபுயகரத்தேன் என்றாரே


விளக்கம்:-
மிக திறமை உடைய வீரர்களை காட்டிலும் பெரிய வீராரான இராமரை போல் இருக்கிறாரே! 
வேத வார்த்தைகள் சொல்லி வானிலுள்ள தேவர்களால் வணங்கப்படும் இவர் அழகான 
தமிழ்  பாசுரங்கள் பாடி ஆழ்வார்களால் அன்போடு வணங்கும் திருப்பதி பெருமாளா இருப்பாரோ! இவர் யாரென்று தெரியவில்லையே!

முன்பு  வாமன பெருமாளாய் குள்ள உருவத்துடன் வந்து, தேவலோக பதவியை அடைய மகாபலி நடத்திய வேள்வியில் மூன்று அடி மண் கேட்ககுள்ளன் மூன்று அடி மண் தானே! கேட்கிறான் என்று மகாபலி எடுத்து கொள் என்று சொல்லதிடீரென்று திரிவிக்கிரம  பெருமாளாய் மிக பெரிய உருவமாய் வளர்ந்து, தன் திருவடியாலே உலகு அளந்த உத்தமர் போலிருக்கும் இவர் யார்என்று நான் மனதில் நினைக்கஅப்பெரியவரே என் மனதை அறிந்து அன்போடு நான் அட்டபுயகர தேன் என்றாரே!



1120
செம்பொன் இலங்கு வலங்கை வாளி* திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள்*
உம்பர் இரு சுடர் ஆழியோடு* கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே*
வெம்பு சினத்து அடல்  வேழம் வீழ* வெண் மருப்பு ஒன்று பறித்து* இருண்ட 
அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே*  2.8.3

செம்பொன் இலங்கு வலங்கை வாளி - சுத்தமான தங்கம் போல ஒளிவீசும் வலக்கையில் அம்பையும் 
திண் சிலை தண்டொடு சங்கம் ஒள் வாள் - உறுதியான வில்லையும்கனமான கதையும்சங்குஒளி வீசும் வாளையும்  
உம்பர் இரு சுடர் ஆழியோடு - வானத்தில் இரண்டு சுடர் (சூரியன்சந்திரன் ஒளி வீசுவதை) போல சக்கரத்தையும் 
கேடகம் ஒண் மலர் பற்றி எற்றே - கேடயம்ஒளி வீசும் அழகிய மலரையும் பற்றி என்ன ஆச்சர்யம் (முன்பு) 
வெம்பு சினத்து அடல்  வேழம் வீழ - கொதித்து எழுந்த கோபத்துடன் (வந்த) வலிமையுடைய யானை தரையில் விழ செய்து (அதன்)
வெண் மருப்பு ஒன்று பறித்து - வெண்மையான கொம்பு ஒன்றை பறித்து (கம்சனை கொல்ல ஓடின)
இருண்ட அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன - கரிய மேகம் போலிருக்கும் இவர் யார்? என்று நினைக்க (அதற்க்கு அவரே நான்)
அட்டபுயகரத்தேன் என்றாரே - அட்டபுயகரத்தேன் என்றாரே 

விளக்கம்:-
சுத்தமான தங்கம் போல ஒளிவீசி கொண்டிருக்கும் அழகிய வலக்கையில் அம்பையும்,  ஸ்ட்ராங்கான வில்லையும், ஆஞ்சநேயர் வச்சிருப்பாரேஅதே மாதிரி கனமான கதையும்
சங்குஒளிவீசும் வாள்வானத்தில் இருக்கும் சூரியன்சந்திரன் போல ஒளிவீசும் 
சக்கரத்தையும்கேடயமும்ஒளிவீசும் அழகிய தாமரை மலர்இவற்றையெல்லாம் 
தனது எட்டு  கைகளிலும் வைத்திருக்கும் இவரை பார்த்தால்,

முன்பு கண்ணனை கொல்ல கம்சனால் ஏவப்பட்ட குவலாயபீடம் என்னும் வலிமை 
மிகுந்த யானையை வீழ்த்தி அதன் வெள்ளை  நிற கொம்பை பிடிங்கி,  கம்சனை 
நோக்கி ஓடிய  கரிய மேகம்  போலிருக்கும் இவர் யார்என்று நான் மனதில் நினைக்க
என்ன ஆச்சர்யம்! அப்பெரியவரே என் மனதை அறிந்து அன்போடு நான் 
அட்டபுயகர தேன் என்றாரே!




1121
மஞ்சு  உயர்  மா மணிக் குன்றம் ஏந்தி மா மழை காத்து ஒரு மாய னை
அஞ்ச* அதன் மருப்பு ஒன்று வாங்கும்* ஆயர்கொல் மாயம் அறிய மாட்டேன்*
வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி* வேதம் முன் ஓதுவார் நீதி வானத்து* 
அஞ்சுடர் போன்றிவர் ஆர்கொல்? என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே* 2.8.4

மஞ்சு  உயர்  மா மணிக் குன்றம் ஏந்தி - மேகம் போல உயர்ந்து சிறந்த வைரம் போன்று உள்ள மலையை தூக்கி 
மா மழை காத்து ஒரு மாய னை அஞ்ச - பெரிய மழையை (மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல்காத்துமுன்பு ஒரு நாள் (தன்னை கொல்ல வந்தகில்லாடி யானை பயப்படும்படி 
அதன் மருப்பு ஒன்று வாங்கும் - அதன் கொம்பு ஒன்றை பிடிங்கிய 
ஆயர்கொல் மாயம் அறிய மாட்டேன் - கண்ணனோஇவர் செய்யும் மாயம் அறியவில்லை 
வெஞ்சுடர் ஆழியும் சங்கும் ஏந்தி  - பிரமாதமா ஒளி வீசும் சக்கரத்தையும்சங்கையும் கையில் வைத்து (கொண்டிருக்கும் இவர்)
வேதம் முன் ஓதுவார் நீதி வானத்து - முன் வேதம் ஓதுவார் நீதி வானத்து  - முன்பு வேதங்களை சொல்கிறார்கள்முறையான வானத்தில் 
அஞ்சுடர் போன்றிவர் ஆர்கொல்? என்ன - பரஞ்சோதி போலிருக்கும் இவர் யார்என்று நினைக்க (அதற்க்கு அவரே நான்)
அட்டபுயகரத்தேன் என்றாரே - அட்டபுயகரத்தேன் என்றாரே 

விளக்கம்:-
நான் நினைக்கிறேன்! இவரை பார்த்தால்முன்பு இந்திரனுக்கு பூஜை செய்யாமல் கண்ணன் சொல்லை கேட்டு ஆயர்பாடி மக்கள் கோவர்த்தன மலைக்கு பூஜை செய்ததால் கோபமுற்ற இந்திரன் அதிபயங்கரமான பலத்த மழையை பெய்விக்க மக்களை காப்பாற்ற,  மேகம் அளவுக்கு உயர்ந்து, ஜொலிக்கும் வைரம் போல மின்னும் மிக  பெரிய கோவர்த்தன மலையை ஒரு விரலாலே தூக்கி ஆயர்பாடியில் வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்படாமல் காத்தவரும்

தன்னை கொல்லவதற்காக கம்சன் அனுப்பிய பயங்கரமான வலிமை கொண்ட யானை பயப்படும் படி அதன் கொம்பை முறித்த ஆயர் குலத்தில் பிறந்த கண்ணனை போலவே இருக்கிறாரே! கண்ணனாக இருப்பாரோ! இன்னாரென்று தெரிந்து கொள்ள முடியாத படி இவர் செய்யும் மாயம் அறியவில்லையே!

பிரமாதமா ஒளி வீசும் சக்கரத்தையும், சங்கையும் கையில் வைத்து கொண்டு பிரம்மன் போன்றவர்களுக்கு வேதங்களை சொல்லி கொடுத்துமுறை தவறாமல் சரியாக இயங்கும் வானத்தில் இருக்கும் பரஞ்சோதி போலிருக்கும் இவர் யார்என்று நினைத்து கொண்டிருக்க,
அப்பெரியவரே என் மனதை அறிந்து அன்போடு நான் அட்டபுயகர தேன் என்றாரே!



1122
கலைகளும் வேதமும் நீதி நூலும்* கற்பமும் சொல் பொருள் தானும்* மற்றை 
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்* நீர்மையினால் அருள் செய்து* நீண்ட 
மலைகளும் மா மணியும்* மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற* 
அலை கடல் போன்றிவர் ஆர்கொல்? என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே* 2.8.5

கலைகளும் வேதமும் நீதி நூலும் - கலைகள் = வேதாந்தங்கள் - மெய்பொருளை உணர்த்தும் நூல்களும்வேதம் - மந்திரம் ஓதுதல்சடங்குகள் இவற்றை உணர்த்தும் நூல்களும் நீதி நூல் - ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் நூல்களும்,
கற்பமும் சொல் பொருள் தானும் - கற்பம் = கல்ப சாஸ்திரம் - வேதங்களை உள்ளவற்றை செயல்படுத்துவது எப்படி என்று விளக்கும் நூல்களும்சொல் = வியாகரண சாஸ்திரம் - இவை நல்லது இவை தீயது என்று சுட்டி காட்டும் நூல்களும்பொருள் = மீமாம்சை - வேதங்களில் உள்ளவற்றை விளக்கும் நூல்களும்இவற்றை எல்லாம் பக்தர்களுக்கு உள்ளே இருந்து வெளிபடுத்தி அனைத்தும் தானே ஆகி 
மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்  -  மற்ற பொறுப்புகளை அவரவர்களுக்கு ஏற்றார்போல  சூரியன்சந்திரன் போன்று வானத்தில் உள்ளவர்களுக்கும்பிறருக்கும் 
நீர்மையினால் அருள் செய்து - தன் இயல்பான குணத்தினால் அருள் செய்து 
நீண்ட மலைகளும் மா மணியும் - பெரிய மலைகளும்சிறந்த முத்துபவளம் போன்ற ஜொலிக்கும் ரத்தினங்களும் 
மலர் மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற - (பாற்கடலை கடைந்த போது தோன்றிய) தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியும்சங்கும் எப்போதும் தங்குகின்ற 
அலை கடல் போன்றிவர் ஆர்கொல்? என்ன - அலை வீசும் கடலை போலிருக்கும்  இவர் யார்என்று நினைக்க (அதற்க்கு அவரே நான்)
அட்டபுயகரத்தேன் என்றாரே - அட்டபுயகரத்தேன் என்றாரே! 

விளக்கம்:-
நான் நினைக்கிறேன். இவரை பார்த்தால் மெய்பொருளை உணர்த்தும் வேதாந்த நூல்களும்மந்திரம் ஓதுதல்சடங்குகள்இறைவனை பற்றியும் உணர்த்தும் வேத நூல்களும்வேத நூல்களில் உள்ளவற்றை செயல்படுத்துவது எப்படி என்று விளக்கும் கல்ப சாஸ்திர நூல்களும்இவை நல்ல சொல்இவை தீய சொல் என்று சுட்டி காட்டும் வியாகரண சாஸ்திர நூல்களும்வேதங்களில் உள்ளவற்றை விளக்கும்  மீமாம்சை  எனப்படும் நூல்களும்இவற்றை எல்லாம் பரம பக்தர்களின் உள்ளே சென்று இவற்றை  வெளிபடுத்தி அனைத்தும் தானே ஆகி,

மற்ற பொறுப்புகளை அவரவர் செயலுக்கேற்ப சூரியன்சந்திரன் என பதவிகளை வானத்தில் உள்ளவர்களுக்கும்பிறருக்கும்தன்னுடைய இயல்பான குணத்தினால் அருள் செய்து

பெரிய மலைகளும்சிறந்த முத்துபவளம் போன்ற ஜொலிக்கும் நவரத்தினங்களும்பாற்கடலை கடைந்த போது தோன்றிய தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் மகாலட்சுமியும்சங்கும் எப்போதும் கடலில் இருப்பது போல இவரிடமும் இருக்கிறது. அதனால் அலை வீசும் கடலை போலிருக்கும் இவர் யார்என்று நினைத்து கொண்டிருக்கதாமாகவே முன் வந்து நான் அட்டபுயகர தேன் என்றாரே!



1123
எங்கனும் நாம் இவர் வண்ணம் எண்ணில்* ஏதும் அறிகிலம் ஏந்திழையார்
சங்கும் மனமும் நிறைவும்  எல்லாம்* தம்மன ஆகப் புகுந்து* தாமும் 
பொங்கு கருங்கடல் பூவை காயாப்* போது அவிழ் நீலம் புனைந்த மேகம்
அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல்? என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே* 2.8.6

எங்கனும் நாம் இவர் வண்ணம் எண்ணில்  - நாம் இவர் வண்ணம் எங்கணும் எண்ணில் -  நாம் இவரின் செய்கைகளை எவ்விதமாக ஆராய்ந்து பார்த்தாலும் 
ஏதும் அறிகிலம் ஏந்திழையார் - எதுவுமே அறியமுடியவில்லைநகைகள் அணிந்துள்ள அழகான பெண்களின் 
சங்கும் மனமும் நிறைவும்  எல்லாம் - வளையலும்நெஞ்சமும்கற்பு   எல்லாமே
தம்மன ஆகப் புகுந்து - தம்முடையதாக எடுத்துகொண்டு இங்கு புகுந்து 
தாமும் பொங்கு கருங்கடல் பூவை காயாப் - இவரும்  (அழகாக)  அலை பொங்குகின்ற கரிய கடல்பூவை பூகாயாம்பூ 
போது அவிழ் நீலம் புனைந்த மேகம் - மொட்டு மலரும் (போது தோன்றும்) நீலம், (அந்த நீலத்தைஅணிந்தது போல காட்சி தரும் மேகம் 
அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல்? என்ன - இவையெல்லாம்  போன்று (காட்சி தரும்இவர் யார்என்று நினைக்க (அதற்க்கு அவரே நான்)
அட்டபுயகரத்தேன் என்றாரே - அட்டபுயகரத்தேன் என்றாரே! 

விளக்கம்:-
ம்! என்னடா இதுஇவரின் செய்கைகளை எவ்விதமாக ஆராய்ந்து பார்த்தாலும் எதுவுமே அறியமுடியவில்லை.ஜொலிக்கும் நகைகளை அணிந்து கொண்டுள்ள அழகான பெண்கள் இவரை பார்த்தவுடன் இவரை பிரியாமல் இருக்கவே விரும்பி,ஏங்கி இருக்க, ஏக்கத்தில்
மெலிந்ததால் கைகளில் நிற்காமல் நழுவி கொண்டிருக்கும் அவர்களின்  வளையலையும், 
மனசையும்கற்பு என்று சொல்லும் மாசற்ற தன்மையையும், அடக்கத்தையும்,  

இப்படி எல்லாமே தம்முடையதாக கொள்ளை அடித்து,  கருவறை உள்ளே புகுந்து காட்சி தரும் இவரின் உருவமோ அலை வீசும் கரிய நிற கடல், பூவை பூ, காயாம்பூ மொட்டு மலரும் போது தோன்றும் நீலம்அந்த நீலத்தை அணிந்தது போல காட்சி தரும் மேகம்.  அப்பப்பா! இவரெல்லாம் போலிருக்கும் இவர் யார்? என்று நான் நினைத்து கொண்டிருக்க திடீரென்று ஒரு குரல். அவரே நான் அட்டபுயகர தேன் என்றாரே!

1125
மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க* வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை 
தேவி* அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம்* மற்று இவர் வண்ணம் எண்ணில்*
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார்* கண்ணும் வடிவும் நெடியராய்* என் 
ஆவி ஒப்பார் இவர் ஆர் கொல்? என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே* 2.8.8

மேவி எப்பாலும் விண்ணோர் வணங்க - எப்பாலும் மேவி விண்ணோர் வணங்க - எல்லா பக்கத்திலேயும் பரவி வானில் உள்ளவர்கள் வணங்க 
வேதம் உரைப்பர் முந்நீர் மடந்தை தேவி - வேதம் சொல்லி (கொண்டிருக்கும் இவர்) கடலில் (பிறந்த) மகாலட்சுமி தேவியும் 
அப்பால் அதிர் சங்கம் இப்பால் சக்கரம் - அந்த பக்கம் ஒலிக்கும் சங்கு இந்த பக்கம் சக்கரம் 
மற்று இவர் வண்ணம் எண்ணில் - மற்ற படி இவரின் நிறத்தை ஆராய்ந்தால்  
காவி ஒப்பார் கடலேயும் ஒப்பார் - கருநெய்தல் பூவின் நிறத்தை போல இருக்கிறார். கடல் நிறத்தை போலவும் இருக்கிறார் 
கண்ணும் வடிவும் நெடியராய் - கண்னழகிலும்திருமேனி அழகிலும் மிக உயர்ந்து இருக்கிறார் 
என் ஆவி ஒப்பார் இவர் ஆர் கொல்? என்ன - என் உயிரை போல இருக்கும் இவர் யார்? என்று நினைக்க (அதற்க்கு அவரே நான்)
அட்டபுயகரத்தேன் என்றாரே - அட்டபுயகரத்தேன் என்றாரே! 

விளக்கம்:-
வானத்தில் உள்ள தேவர்கள் எங்கும் பரவி நின்று வணங்கவேதங்களை சொல்லி கொண்டிருக்கும் இவரின் மார்பில் பாற்கடலை கடைந்த போது தாமரை மலரில் தோன்றிய மகாலட்சுமியும்அங்கிருக்கும் இடது கையில் சங்கும்இங்கிருக்கும் வலது கையில் சக்கரமும் வைத்திருக்கிறார்.

மற்ற படி இவருடைய நிறத்தை ஆராய்ந்து பார்த்தால் கருநெய்தல் பூ நிறத்தை போலவும்கடல் நிறத்தை போலவும் இருக்கிறாரேஇவருடைய கண்ணழகும்திருமேனி வடிவழகும் எல்லையில்லாமல் மிகவும் உயர்ந்து என் உயிரை போல இருக்கும் இவர் யார்என்று மனசுல நினைத்து கொண்டிருக்க, என்ன ஆச்சர்யம்! அவ்வினாடியே அவரேநான்தான் அட்டபுயகர தேன் என்றாரே! 

1126
தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா* நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு* 
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி* வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு* 
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம்* நான் இவர் தம்மை அறியமாட்டேன்* 
அஞ்சுவன் மற்று இவர் ஆர் கொல்? என்ன* அட்டபுயகரத்தேன் என்றாரே* 2.8.9

தஞ்சம் இவர்க்கு என் வளையும் நில்லா - அடைக்கலம் இவர்க்கே (என்று) என் வளையலும் (கையில்) நிற்காமல் நழுவுது 
நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு ௦- சிந்திதேற்க்கு நெஞ்சமும் தம்மதே - இவரை பற்றி சிந்தித்து கொண்டிருப்பதால் (என்) நெஞ்சமும் இவருக்கே (என்று ஆகியது) 
வஞ்சி மருங்குல் நெருங்க நோக்கி - வஞ்சி கொடி (போல இருக்கும் என்) இடையை உற்று பார்த்து 
வாய் திறந்து ஒன்று பணித்தது உண்டு - வாய் திறந்து ஒரு வார்த்தை சொன்னது உண்டு 
நஞ்சம் உடைத்து இவர் நோக்கும் நோக்கம் - விஷம் வெளிவருவது (போல கொடூரமாக) இவர் (என்னை உற்று உற்று) பார்க்கும் பார்வை (அப்பாப்பா!) 
நான் இவர் தம்மை அறியமாட்டேன் - நான் இவரை பற்றி (சிறிதும்) அறியமுடியவில்லை 
அஞ்சுவன் மற்று இவர் ஆர் கொல்? என்ன - மற்று அஞ்சுவன் இவர் ஆர் கொல்என்ன - மற்றபடி (சொல்லனும்னா! இவரை பார்த்தாலே) பயப்படுகிறேன். தாங்கள் யார்என்று கேட்க 
அட்டபுயகரத்தேன் என்றாரே - (பயப்படவேண்டாம் நான்தான்) அட்டபுயரத்தில் வசிப்பவன் என்றாரே!

விளக்கம்:-
இவரை நினைத்து நினைத்து ஏங்கி உடல் மெலிந்ததால்என் கையில் இருக்கும் வளைகள் கூட இவருக்கே அடைக்கலம்! என்று சொல்லுவது போல கையில் நிற்காமல் கழண்டு விழுகிறது. இவரை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பதால் என் நெஞ்சமும் இவர்க்கே உரியதாகி இருக்கிறது. 

வஞ்சி கொடி போல சும்மா வளைஞ்சு நெளிஞ்சு இருக்கும், என் அழகான இடையை உற்று பார்த்து கொண்டே ஆஹா! என்ன அழகு! இதுவும் எனக்கே உரியது! என்று என்னிடம் வாய் திறந்து ஒன்று சொன்னது உண்டு. 

பாம்பின் வாயிலிருந்து கொடிய விஷம் வெளிவருவது போல, கொடூரமாக என்னையே உற்று உற்று பார்க்கும் இவரின் பார்வையோ அப்பாப்பா! என்ன இது! எப்படி பார்த்தாலும் இவர் பற்றி கொஞ்சமும் அறியமுடியவில்லை. மற்றபடி சொல்லனும்னா! இவரை பார்த்தாலே பயப்படுகிறேன்.

அந்த பயத்தோடு மெதுவாக தாங்கள் யார்என்று பணிவுடன் கேட்க
ஹா! ஹா! ஹா! பயப்படாதே! நான்தான் உனக்கு அருள் கொடுத்து உன்னை கரையேற்றும் அட்டபுயகரத்தில் வசிப்பவன் என்றாரே!

1127
மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும்* நீள் முடி மாலை வயிரமேகன்* 
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி* அட்டபுயகரத்து ஆதி தன்னை*
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்* காமரு சீர்க் கலிகன்றி* குன்றா 
இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை* ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே* 2.8.10


மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும் நீள் முடி மாலை வயிரமேகன் -  தொண்டையர் கோன் மன்னவன் நீள் முடி மாலை வயிரமேகன் - தொண்டை நாட்டு  மன்னாதி மன்னன்  நீண்ட கிரீடத்தையும்மாலையையும் (அணிந்துள்ள) வயிரமேகன் 
தன் வலி தன் புகழ் சூழ்ந்த கச்சி - தன் வீர தீர பராக்ரமத்தால் புகழ் சூழ்ந்த காஞ்சிபுரத்தில் 
அட்டபுயகரத்து ஆதி தன்னை - அட்டபுயரத்தில் (உள்ளமுதல்வனாகிய இறைவனை 
கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன் - புதிய நல்ல பெரிய சுற்று சுவர்கள் (சூழ்ந்ததிருமங்கை மன்னன்  
காமரு சீர்க் கலிகன்றி - விரும்பத்தக்க குணங்களை உடைய கலிகன்றி 
குன்றா இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை - குறைய்வில்லாத இனிமையான இசையால் சொன்ன அழகான சொல் மாலையை
ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே - சொல்ல வல்லவர்களுக்கு இடம் வைகுண்டமே


விளக்கம்:-
தலையில் பெரிய கிரீடத்தையும்கழுத்தில் மாலையும் அணிந்துள்ள தொண்டை நாட்டு தலைவனும் மன்னனுமாகிய வயிரமேகன் தன் வலிமையாலும் நல்ல ஆட்சியாலும் எங்கும் புகழ் கொண்ட காஞ்சிபுரத்தில் உள்ள அட்டபுயகரத்தில் வசிக்கும் ஆதி இறைவனைபுதிய நல்ல பெரிய சுற்றுசுவர்கள் சூழ்ந்த திருமங்கை நாட்டு மன்னன்அனைவராலும் விரும்பத்தக்க குணங்களை உடைய கலிகன்றிகுறைவில்லாத இனிமையான இசையால் சொன்ன அழகு தமிழ் சொல் மாலையை சொல்ல வல்லவர்கள் இருக்குமிடம் வைகுண்டமே!



மூலவர் : ஆதிகேசவ பெருமாள் 
உற்சவர்:- அஷ்டபுஜ பெருமாள் 
அம்மன்/தாயார் : அலர் மேல் மங்கை  தாயார் 

மங்களாசாசனம்: திருமங்கை ஆழ்வார்:- 10 பாசுரம்
                                  பேய் ஆழ்வார்    - 1 பாசுரம்
புராண பெயர் :- அட்டபுயகரம் 
தற்போதைய பெயர்:-  அஷ்தபுஜம் 

அட்டபுயகர பெருமாள் கோவில் அமைந்துள்ள இடம்:-
INDIA – TAMILNADU - காஞ்சிபுரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து கி.மீ. தொலைவில் உள்ள சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பிகள் வீதியில் இத்தலம் அமைந்துள்ளது 



ஸ்ரீ ஆதிகேசவ பெருமாளுக்கு சமர்ப்பணம்
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் திருவடிகளே சரணம்

4 comments:

நாடி நாடி நரசிங்கா! said...

----
simmakkal said...
அட்டயபுரத் தேன் என்றா இருக்கிறது நுங்கள் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் ?

என்னிடம் உள்ளதில்

"அட்டயபுரத்தான் என்றாரே "

என்றுதான் இருக்கிறது.
May 16, 2011 6:10 AM
---

Narasimmarin Naalaayiram said...
Hi,

Yes. THis is அட்டயபுரத் தேன் only.

தேன் How Sweet! vow:))
May 16, 2011 10:01 PM

இராஜராஜேஸ்வரி said...

பயப்படாதே! நான்தான் உனக்கு அருள் கொடுத்து உன்னை கரையேற்றும் அட்டபுயகரத்தில் வசிப்பவன் என்றாரே!//
அருமையாய் திருப்பித்திருப்பி வாசிக்கத் தூண்டும் எளிமை ஆன விளக்க்ங்களும், பக்தி பரவசம் த்ரும் படங்களும்,. பாராட்டுக்களும் நன்றிகளும்.

நாடி நாடி நரசிங்கா! said...

இராஜராஜேஸ்வரி said...
பயப்படாதே! நான்தான் உனக்கு அருள் கொடுத்து உன்னை கரையேற்றும் அட்டபுயகரத்தில் வசிப்பவன் என்றாரே!//
அருமையாய் திருப்பித்திருப்பி வாசிக்கத் தூண்டும் எளிமை ஆன விளக்க்ங்களும், பக்தி பரவசம் த்ரும் படங்களும்,. பாராட்டுக்களும் நன்றிகளும்.
---


அனுபவித்து படித்ததற்கு மிக்க நன்றி . மிக்க மகிழ்ச்சி

Anonymous said...

Yes I have rechecked. U r correct. It is அட்டயபுரத் தேன்