பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Friday, April 1, 2011

மகாபலிபுர பெருமாளை விரும்பி வழிபடுபவரை விரும்பு என் நல்ல நெஞ்சே!
மகாபலிபுர பெருமாளின் மோகினி அலங்காரம் (double click & see. superb!)1098
நண்ணாத வாள் அவுணர்* இடைப் புக்கு* வானவரைப்
பெண் ஆகி * அமுது ஊட்டும் பெருமானார்* மருவினிய
தண் ஆர்ந்த கடல் மல்லைத்* தல சயனத்து உறைவாரை *
எண்ணாதே இருப்பாரை* இறைப் பொழுதும் எண்ணோமே* 2.6.1


நண்ணாத வாள் அவுணர் - பகைவரான கூரான பெரிய கத்தி வைத்திருக்கும் அசுரர்கள்
இடைப் புக்கு வானவரைப் - இடையில் புகுந்து வானவர்களுக்கு
பெண் ஆகி அமுது ஊட்டும் பெருமானார் - பெண் அமுது ஊட்டும் மோகினி பெருமாள்
மருவினிய தண் ஆர்ந்த கடல் மல்லைத் - இனிமையாக பொருந்திய குளிர்ச்சியான கடல் மல்லைத்
தல சயனத்து உறைவாரை - தல சயனத்தில் வசிப்பவரை
எண்ணாதே இருப்பாரை - மனதில் எண்ணாமல் இருப்பவரை
இறைப் பொழுதும் எண்ணோமே - ஒரு நொடி பொழுதும் எண்ணமாட்டோம்

விளக்கம்:-
பாற்கடலில் கடைந்து எடுத்த அமுதத்தை தீயவர்களான அசுரர்களுக்கும் கிடைக்காமல் இருக்க மற்றவர்களை தன் கவர்ச்சியால் மயக்க, அழகான மோகினி பெண்ணாய் மாறி தேவர்களுக்கு அமுதை ஊட்டும் பெருமாளும்,
இனிமையாக பொருந்திய குளிர்ச்சியான இடமான மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனத்தில் வசிப்பவருமான எம் செல்ல பெருமாளை எண்ணாமல் இருப்பவரை ஒரு நொடி பொழுது கூட எண்ண மாட்டோம்.

1099
பார் வண்ண மட மங்கை* பனி நல் மா மலர்க் கிழத்தி*
நீர் வண்ணன் மார்வத்தில்* இருக்கையை முன் நினைந்து அவன்
ஊர்* கார்வண்ண முது முந்நீர்க்* கடல் மல்லைத் தல சயனம்*
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார்* அவர் எம்மை ஆள்வாரே* 2.6.2

பார் வண்ண மட மங்கை - பூமியாக இருக்கும் இளைமையான பொண்ணும் (பூதேவி)
பனி நல் மா மலர்க் கிழத்தி - குளிர்ச்சியான நல்ல அழகான பெரிய தாமரை மலரில் அமர்ந்திருக்கும் தலைவியான மகாலட்சுமியும் (ஸ்ரீதேவி)
நீர் வண்ணன் மார்வத்தில் - நீர் வண்ணன் மார்பு இடத்தில்
இருக்கையை முன் நினைந்து அவன் ஊர் - இருக்கையில் முன் (அமர்ந்து அவனையே) நினைத்து (கொண்டிருப்பார்கள் அப்பேற்பட்ட) அவன் ஊர்
கார்வண்ண முது முந்நீர்க் - மேகம் போன்ற வண்ணம் கொண்ட பழமையான கடல் நீரின் (கரையில் உள்ள)
கடல் மல்லைத் தல சயனம் - (மகாபலிபுரம் என்ற) கடல் மல்லைத் தல சயனம் (பெருமாளை)
ஆர் எண்ணும் நெஞ்சு உடையார் - மேல் ஆசை வைத்து நினைக்கும் நெஞ்சை உடையவர்கள்
அவர் எம்மை ஆள்வாரே - அவர் எம்மை ஆள்வாரே

விளக்கம்:-
நாம் வசிக்கும் பூமியாக இருக்கும் நல்ல குணங்கள் கொண்ட இளமையான பெண்ணான பூமி தாயாரும், குளிர்ச்சியான இருக்கும் அழகான தாமரை மலர் மேல் அமர்ந்திருக்கும் தலைவி நம்ம மகாலட்சுமி என்கின்ற ஸ்ரீதேவியும்,

நீர் வண்ணனின் மார்பில் அதாவது நீர் எதில் ஊற்றுகிறோமோ அந்த வடிவத்தை பெரும். இறைவனும் அதுபோலவே வடிவில்லாதவன். தான் விரும்பும் வடிவத்தில் இருக்கிறான். அதனால் அவனுக்கு நீர் வண்ணன் என்ற பெயர் . So நீர் வண்ணனின் இட பக்கத்தில் பூதேவியும், வலப்பக்கத்தில் ஸ்ரீதேவியும் மார்பின் முன் வசித்து கொண்டு எம்பெருமானையே நினைத்து கொண்டிருப்பர்.

அப்பேற்பட்ட அவன் ஊர் இருக்குமிடம், மேகம் போல நீல கலர்ல இருக்கும் பழமையான கடல் இருக்கும் மகாபலிபுரம் கடல் மலை தல சயனம். எம்பெருமான் மேல் ஆசை வைத்து நினைக்கும் நெஞ்சம் உடையவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் எம்மை ஆள்வாரே!

1100
ஏனத்தின் உருவு ஆகி* நில மங்கை எழில் கொண்டான்*
வானத்தில் அவர் முறையால்* மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள*
கானத்தின் கடல் மல்லைத்* தல சயனத்து உறைகின்ற*
ஞானத்தின் ஒளி உருவை* நினைவார் என் நாயகரே*2.6.3


ஏனத்தின் உருவு ஆகி - பன்றியின் உருவம் ஆகி
நில மங்கை எழில் கொண்டான் - பூமி தாயார் அழகு (மாறாமல் கடலில் இருந்து தூக்கி) வந்தான்
வானத்தில் அவர் முறையால் - வானத்தில் தேவர்கள் அவர்கள் முறைப்படி
மகிழ்ந்து ஏத்தி வலம் கொள்ள - மகிழ்ந்து வழிபட்டு சுற்றி வருவதற்கு வசதியாக
கானத்தின் கடல் மல்லைத் தல சயனத்து உறைகின்ற - காட்டில் உள்ள கடல் மல்லைத் தல சயனத்தில் வசிக்கின்ற
ஞானத்தின் ஒளி உருவை - அனைத்தும் அறிந்த ஒளி கொண்ட உருவத்துடன் (இருக்கும் பெருமாளை)
நினைவார் என் நாயகரே - நினைப்பவர் என் தலைவரே!

விளக்கம்:-
பல யுகங்களுக்கு முன்பு இரணியனின் தம்பி இரணியாக்சன் என்ற அரக்கன் பூமியை அலேக்கா தூக்கி கொண்டு கடலுக்கு அடியில் வைத்து விட்டதால் பூமியை காப்பாற்ற வளைந்த கோரை பற்களுடன் பன்றி வடிவம் எடுத்து பூமி தாயாரின் அழகு மாறாமல் கொம்பினால் குத்தி பெயர்த்து எடுத்து வந்தவனை,

வானத்தில் உள்ளவர்கள் அவர்களின் பழக்க வழக்கத்தின் படி மகிழ்ச்சியுடன்
போற்றி வழிபட்டு பிரதக்ஷணம் செய்வதற்கு வசதியாக காட்டின் நடுவே உள்ள
மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனத்தில் வசிக்கும், அனைத்தும் அறிந்த ஒளி உருவத்துடன் உள்ளவரை நினைப்பவர் என் தலைவரே!

1101
விண்டாரை வென்று ஆவி* விலங்கு உண்ண மெல்லியலார்*
கொண்டாடும் மல் அகலம்* அழல் ஏற வெம் சமத்துக்*
கண்டாரை கடல் மல்லைத்* தல சயனத்து உறைவாரைக்
கொண்டாடும் நெஞ்சு உடையார்* அவர் எங்கள் குல தெய்வமே* 2.6.4

விண்டாரை வென்று ஆவி - பகைவர்களை வென்று அவர்களின் உடலை
விலங்கு உண்ண மெல்லியலார் - விலங்குகள் உண்ண (செய்தவனும்) மென்மையான பெண்கள்
கொண்டாடும் மல் அகலம் - கொண்டாடும் வலிமை வாய்ந்த மார்பை
அழல் ஏற வெம் சமத்துக் கண்டாரை - நெருப்பு திண்ணும்படி வலிமையான போரில் பார்த்து கொண்டிருந்தவரை
கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரைக் - கடல் மல்லைத் தல சயனத்தில் வசிப்பவரை
கொண்டாடும் நெஞ்சு உடையார் - கொண்டாடும் நெஞ்சம் உடையவர் எவராக இருந்தாலும்
அவர் எங்கள் குல தெய்வமே - அவர் எங்கள் குல தெய்வமே

விளக்கம்:-
பகைவர்களான பொல்லாத அரக்கர்களை வென்று, அவர்களின் உடலை நாய், நரி போன்ற விலங்குகள் உண்ணும்படி அவர்களை அழித்தவனை,

மென்மையான நச்சுன்னு நெளிவு சுளிவு கொண்ட அழகான பொண்ணுங்க அனுபவித்து போற்றி கொண்டாடும் வலிமை வாய்ந்த மார்பை உடைய அரக்கர்களை, நெருப்பு உண்ணும்படி அழிப்பதற்காக, முன்பு நடந்த பயங்கரமான போரில் அரக்கர்களை கண்டு கொண்டு அந்த பாவிகளை அடியோடு அழித்தவரை,

மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனத்தில் வசிப்பவரை, மகிழ்ந்து போற்றி கொண்டாடும் நெஞ்சு உடையவர்கள் எவராக இருந்தாலும் அவர் எங்கள் குல தெய்வமே

1102
பிச்சச் சிறு பீலிச்* சமண் குண்டர் முதலாயோர்*
விச்சைக்கு இறை என்னும்* அவ் இறையைப் பணியாதே*
கச்சிக் கிடந்தவன் ஊர்* கடல் மல்லைத் தல சயனம்*
நச்சித் தொழுவாரை* நச்சு என் தன் நல் நெஞ்சே*2.6.5

பிச்சச் சிறு பீலிச் - மயிலின் சிறு இறகை (கொண்டு இருக்கும்)
சமண் குண்டர் முதலாயோர் - மாற்றி படிக்க - குண்டர் சமண் அதாவது கீழ்தரமான சமணர் முதலானோர்
விச்சைக்கு இறை என்னும் - கல்விக்கு இறைவன் என்னும் (அவர்கள் வணங்கும்)
அவ் இறையைப் பணியாதே - அந்த இறைவனை பணியாதே
கச்சிக் கிடந்தவன் ஊர் - காஞ்சிபுரத்தில் படுத்து கொண்டு தரிசனம் தருபவன் ஊர்
கடல் மல்லைத் தல சயனம் - கடல் மல்லைத் தல சயனம் (அங்கு எம்பெருமானை)
நச்சித் தொழுவாரை - விரும்பி வழிபடுபவரை
நச்சு என் தன் நல் நெஞ்சே - விரும்புவாய் என்னுடைய நல்ல நெஞ்சமே

விளக்கம்:-
மயில் இறகால் செய்த குடையையும், சின்னதா ஒரு மயில் இறகையும் கையில் வைத்து கொண்டு ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக ரோட்டில் திரியும் கீழ்தரமான சமணர் முதலானோர், கல்விக்கு கடவுள் என்று வணங்கும் அந்த தெய்வத்தை பணியாமல்,

காஞ்சிபுரத்தில் சயன கோலத்தில் அழகாக காட்சி தரும் யதோத்தகாரி பெருமாளின் ஊர், மகாபலிபுரம் கடல் மலை தல சயனம் என்று விரும்பி வழிபடுபவரை விரும்புவாய் என்னுடைய நல்ல நெஞ்சமே.1103
புலன் கொள் நிதிக் குவையோடு* புழைக் கை மா களிற்று இனமும்*
நலம் கொள் நவமணிக் குவையும்* சுமந்து எங்கும் நான்று ஒசிந்து*
கலங்கள் இயங்கும் மல்லைக்* கடல் மல்லைத் தல சயனம்*
வலங்கொள் மனத்தார் அவரை* வலங்கொள் என் மட நெஞ்சே*2.6.6

புலன் கொள் நிதிக் குவையோடு - ஐம்புலன்களை கொள்ளை கொள்ளும் நல்ல நல்ல பொருள்களின் குவியலோடு
புழைக் கை மா களிற்று இனமும் - துளை கொண்ட தும்பிக்கையுடைய பெரிய யானை கூட்டமும்
நலம் கொள் நவமணிக் குவையும் - நல்லா (மனசை) கொள்ளை கொள்ளும் நவரத்தின குவியலையும்
சுமந்து எங்கும் நான்று ஒசிந்து - சுமந்து தொங்கி தளர்ந்து எங்கும்
கலங்கள் இயங்கும் மல்லைக் - கப்பல்கள் இயங்கும் பெருமை மிகுந்த
கடல் மல்லைத் தல சயனம் - கடல் மல்லைத் தல சயனம் (பெருமாளை)
வலங்கொள் மனத்தார் அவரை - சுற்றி வரும் மனம் உடைய அவரை
வலங்கொள் என் மட நெஞ்சே - சுற்றி வருவாய் என் அறிவில்லாத நெஞ்சமே


விளக்கம்:-
நம்மை போல மனுசங்களுக்கு ஆசையை தூண்டும் பொன் குவியல்களையும், முனையில் ஓட்டை கொண்ட தும்பிக்கையுடைய பெருசு பெருசா இருக்கும்
யானை கூட்டத்தையும், நல்லா மனசை கொள்ளை கொள்ளும் ஜொலிக்கும் நவரத்தின குவியல்களையும் ஏற்றி கொண்டு, சுமையை சுமக்க முடியாமல் தொங்கி தளர்ந்து செல்லும் கப்பல்கள் கடலில் அழகா எங்கும் சுற்றி கொண்டிருக்கும்,

இப்படி எல்லா சிறப்பும் வசதிகளும் பெற்றுள்ள பெருமை வாய்ந்த மகாபலிபுரம், கடல் மல்லைத் தல சயன பெருமாளை விரும்பி சுற்றி வரும் மனதை உடையவர்களை சுற்றி வாருவாய்! என் அறிவிலாத மட நெஞ்சே!

1104
பஞ்சிச் சிறு கூழை* உரு ஆகி மருவாத*
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட* அண்ணல் முன் நண்ணாத*
கஞ்சைக் கடந்தவன் ஊர்* கடல் மல்லைத் தல சயனம்*
நெஞ்சில் தொழுவாரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே*2.6.7

பஞ்சிச் சிறு கூழை - பஞ்சு போல சிறு முடி கொண்ட
உரு ஆகி மருவாத - உருவம் ஆகி இரக்கமில்லாத
வஞ்சப் பெண் நஞ்சு உண்ட - சூழ்ச்சி பெண் விஷம் உண்ட
அண்ணல் முன் நண்ணாத - இறைவன் முன்பு பகைவனான
கஞ்சைக் கடந்தவன் ஊர் - கம்சனை அழித்த அவன் ஊர்
கடல் மல்லைத் தல சயனம் - கடல் மல்லைத் தல சயனம்
நெஞ்சில் தொழுவாரைத் - நெஞ்சில் வழிபடுபவரை
தொழுவாய் என் தூய் நெஞ்சே - வழிபடுவாய் என் தூய நெஞ்சே

விளக்கம்:-
பஞ்சு போல மெத்து மெத்துனு கைகளிலும் உடலிலும் அழகா சிறு முடிகளை கொண்ட யசோதை அம்மாவின் உருவமாக தன்னை மாற்றி கொண்டு இரக்கமே இல்லாத சூழ்ச்சிக்கார அரக்கியான பூதனை பொண்ணு முலையில் தடவியிருந்த விஷத்தை உண்ட என் அன்பு அண்ணல்,
முன்பு விரோதியான கொடூரமான கம்சனை போரில் வெற்றி பெற்று அழித்தான். அவன் ஊர் மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனம். அங்கு அழகாக தரையில் படுத்து கொண்டு இருக்கும் பெருமாளை ஆசையோடு வழிபடுபவரை வழிபடுவாய் என் தூய நெஞ்சே!


திருமங்கை ஆழ்வார் மற்றும் அவர் மனைவி குமுதவல்லி

1105
செழு நீர் மலர்க் கமலம்* திரை உந்த வன் பகட்டால்*
உழு நீர் வயல் உழவர் உழ* பின் முன் பிழைத்து எழுந்த*
கழு நீர் கடி கமழும்* கடல் மல்லைத் தல சயனம்*
தொழு நீர் மனத்து அவரைத்* தொழுவாய் என் தூய் நெஞ்சே* 2.6.8

செழு நீர் மலர்க் கமலம் - செழு நீர் கமலம் மலர்க் - செழுமையான நீரில் தாமரை மலர்
திரை உந்த வன் பகட்டால் - வன் பகட்டால் திரை உந்த - வலிமையான எருதுகளால் அலை தள்ளப்பட
உழு நீர் வயல் உழவர் உழ - உழுவதற்காகவே ஊற்ற பட்ட நீர் சூழ்ந்த கழனியில் உழவர் உழ
பின் முன் பிழைத்து எழுந்த - முன்னும் பின்னும் தப்பித்து வந்த
கழு நீர் கடி கமழும் - அழகிய நீரில் வாசம் வீசும்
கடல் மல்லைத் தல சயனம் - கடல் மல்லைத் தல சயனம்
தொழு நீர் மனத்து அவரைத் - இயற்கையாகவே வணங்கும் மனசு உடையவரை
தொழுவாய் என் தூய் நெஞ்சே - வணங்குவாய் என் தூய நெஞ்சே

விளக்கம்:-
கழனியில் உழவர்கள் மாடுகளை வைத்து கொண்டு உழும்போது ஏற்பட்ட அலைகளால்,
முன்னும் பின்னும் அடித்து செல்லபட்டு தப்பித்து தரை மேலே எழுந்த தாமரை மலர்களின்
வாசம் சூழ்ந்த அழகான மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயன கோவிலில் பூமியின் மேலே
படுத்து கொண்டிருக்கும் பெருமாளை ஆசையோடு வணங்கும் மனது உடையவரை
வணங்குவாய் என் தூய நெஞ்சே


1106
பிணங்கள் இடு காடு அதனுள்* நடமாடு பிஞ்ஞகனோடு*
இணங்கு திருச் சக்கரத்து* எம் பெருமானார்க்கு இடம்* விசும்பில்
கணங்கள் இயங்கும் மல்லைக்* கடல் மல்லைத் தல சயனம்*
வணங்கும் மனத்தார் அவரை* வணங்கு என் தன் மட நெஞ்சே*2.6.9

பிணங்கள் இடு காடு அதனுள் - பிணங்களை எரிக்கும் சுடுகாடு அதற்குள்
நடமாடு பிஞ்ஞகனோடு - நடனமாடும் ஈசனோடு
இணங்கு திருச் சக்கரத்து - சேர்ந்திருக்கிற திருசக்கரங்களை உடைய
எம் பெருமானார்க்கு இடம் - என்னுடைய பெருமானுக்கு இடம்
விசும்பில் கணங்கள் இயங்கும் மல்லைக் - வானத்தில் இருக்கும் தேவர்கள் கூட்டதோடு வந்து வழிபடும் பெருமையுடைய
கடல் மல்லைத் தல சயனம் - மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனம்
வணங்கும் மனத்தார் அவரை - வணங்கும் மனமுடைய அவரை
வணங்கு என் தன் மட நெஞ்சே - வணங்கு என்னுடைய அறிவற்ற நெஞ்சே

விளக்கம்:-
பிணங்களை எரிக்கும் சுடுகாட்டில் அழகாக நடனமாடும் ஈசனுக்கு, அன்போடு தன்னுடைய வலபக்கத்தில் இடம்கொடுத்து ஈசனோடு சேர்ந்து இருக்கும் திருசக்கரத்தை கையில் கொண்டுள்ள எம்பெருமானுக்கு இடம்,

வானத்தில் தேவர்கள் கூட்டதோடு வழிபடும் பெருமை வாய்ந்த, மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனத்தில் தரையில் படுத்து கொண்டு அழகாக காட்சி தரும் பெருமாளை, அன்போடு வணங்கும் மனது உடையவரை வணங்கு என்னுடைய அறிவற்ற நெஞ்சே

1107
கடி கமழும் நெடு மறுகின்* கடல் மல்லைத் தல சயனத்து*
அடிகள் அடியே நினையும்* அடியவர்கள் தம் அடியான்*
வடி கொள் நெடு வேல் வலவன்* கலிகன்றி ஒலி வல்லார்*
முடி கொள் நெடு மன்னவர் தம்* முதல்வர் முதல் ஆவாரே*2.6.10

கடி கமழும் நெடு மறுகின் - வாசனை வீசும் பெரிய தெருவில்
கடல் மல்லைத் தல சயனத்து - கடல் மல்லைத் தல சயனத்து
அடிகள் அடியே நினையும் - பெருமாளின் திருவடியே நினைக்கும்
அடியவர்கள் தம் அடியான் - அடியவர்களுக்கும் அடியவன்
வடி கொள் நெடு வேல் வலவன் - கூர்மையான பெரிய வேல் கொண்டு போரிடுவதில் வல்லவன்
கலிகன்றி ஒலி வல்லார் - திருமங்கை ஆழ்வார் பாடியதை சொல்ல வல்லவர்
முடி கொள் நெடு மன்னவர் தம் - கிரீடத்தை உடைய பெரிய மன்னருக்கு முதல்வர் முதல் ஆவாரே. - முதல்வராக இருப்பவர்க்கும் முதல்வராக ஆவார்கள்

விளக்கம்:-
மகாபலிபுரம் பீச்சு பக்கத்துல கம கமன்னு வாசனை வீசும் பெரிய தெருவில் கடல் மலை தல சயனத்தில் படுத்து கொண்டிருக்கும் பெருமாளின் திருவடிகளையே நினைக்கும் அடியவர்களுக்கும் அடியவனான,
கையில் கூர்மையான வேல் கொண்டு போரிடுவதில் வல்லவனுமான திருமங்கை ஆழ்வான் பாடியதை ஆசையோடு சொல்ல வல்லவர், தலையில் பெரிய கிரீடம் வைத்து கொண்டிருக்கும் மன்னருக்கு முதல்வராக இருப்பவருக்கும் முதல்வர் ஆவீர்கள்!


திருமங்கை ஆழ்வார்

திருகடல் மல்லைசயன திருத்தலம் அமைந்துள்ள இடம்:-


INDIA – TAMILNADU - சென்னையிலிருந்து 64KM தொலைவில் உள்ளது . மகாபலிபுரம் பீச்சுக்கு போய் இருக்கீங்களா! அதுக்கு பக்கதுலதாங்க இருக்கு! நம்ம  ஸ்தல சயன பெருமாள் ஜம்முனு பூமியின் மேலே அதாவது தரையில அழகா படுத்துக்கொண்டு காட்சி தராரு! எவ்ளோ அழுகு தெரியுமா SO NICE!

மூலவர் : ஸ்தல சயன பெருமாள்
உற்சவர்: உலகுய்ய நின்றான்
அம்மன்/தாயார் : நிலமங்கை தாயார்


மங்களாசாசனம்: திருமங்கை ஆழ்வார்:- 26 பாசுரம்
பூதத்தாழ்வார் - 1 பாசுரம்திருகடல் மல்லைத் ஸ்தல சயன பெருமாள் திருவடிகளே சரணம்!
திருகடல் மல்லைத் ஸ்தல சயன பெருமாளின் திருவடிகளுக்கு சமர்ப்பணம்!

No comments: