பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Monday, September 8, 2014

திருப்பதி பெருமாள் கருவறைப் படிக்கு, "குலசேகரன் படி" என்று பெயர்


திருப்பதி என்று இப்போது வழங்கப்படும் திருவேங்கட மலையில் இறைவன் எம்பெருமான் உறைவதால் அம்மலையில் குலசேகரர் எந்த நேரமும் இருந்து இறைவனைக் கண்டு பெரும்பேறு பெறவேண்டும் என்று ஏங்குகின்றார். அந்த ஏக்கத்தைப் போக்கிக்கொள்ளத் தாம் அம் மலையில் மரமாய், பறவையாய், மீனாய்ப் பிறப்பேன் என்றும் ஆறாய், மலைக்குன்றாய், வழியாய், வாயிற்படியாய் என்று ஏதேனும் ஒன்றாய் எப்போதும் அங்கு இருப்பேன் என்றும் பக்திப் பெருக்குடன் பாடுகிறார்

‘செடிபோல் அடர்ந்திருக்கும் தீவினைகளைத் தீர்க்கும் திருமாலே! நெடியோனே! வேங்கடவா! உன் கோயில் வாயிலிலே அடியவர்களும் வானவரும் அரம்பையரும் ஏறி இறங்கும் வாயிற்படியாய்க் கிடந்து உன் பவழவாய் காண்பேன்.


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!

நெடியோனே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!

"காட்டுச்செடி, கள்ளிச்செடி போல் வெட்ட வெட்ட வளரும் ஊழ் வினைகளை எல்லாம் ஒழித்து, ஆவி காக்கும் திருமாலே,
உயரங்களின் உயரமே, வேங்கடவா, உன் கோவிலின் வாசற்படியில்,
அடியவர்களும், விண்ணோரும் அவர் பெண்ணோரும், 'தவமாய் தவமிருந்து' காத்துக் கிடக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் உன்னை நான் எப்படிப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்?
"நகர்ந்து செல்; மற்றவருக்கும் வழி விடு" என்று தள்ளி விடுவார்களே! அவர்கள் சொல்வதும் நியாயம் தானே?
இதற்கு ஒரே வழி! பேசாமல் உன் கருவறைப் படிக்கட்டாய் என்னை மாற்றி விடு!
உன் பவள வாய், கமலச் செங்கண்ணை, குளிர் முகத்தை, சதா சர்வ காலமும், ஊழி தோறும், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பேன்" என்று காதலால் உருகுகிறார்!


இன்றைக்கும் திருவேங்கடமுடையான் கருவறைப் படிக்கு, "குலசேகரன் படி" என்று தான் பெயர். அதற்கு ஆரத்தியும் உண்டு

திருவங்கடமுடையான் திருவடிகளே சரணம்!





No comments: