பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

காளிங்கன் பாம்பின் மேல் நடமாடி கொண்டு வரும் கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்தராஜ பெருமாளாக தரிசனம் தருகிறானே!


1171
வளைக் கை நெடுங்கண் மடவார்* ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப* 
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத்* தண் தடம்புக்கு அண்டர் காண*
முளைத்த எயிற்று அழல் நாகத்து* உச்சியில் நின்று அது வாடத்* 
திளைத்து அமர் செய்து வருவான்* சித்திரகூடத்துள்ளானே*3.3.4

விளக்கம்:-
வளையல் போட்டு கொண்டு பெரிய நீண்ட கண்களையுடைய அழகான பசு மேய்க்கும் 
பெண்கள் பயப்பட்டு கொண்டு எல்லாரும் வாங்களேன்! காளிங்க பாம்பின் மேல் நம் 
கண்ணன் நடனமாடுகிறான்!! என்று அழைக்கவும், அழகாக மலர்ந்த தாமரை மலர்கள் உள்ள
பொய்கை குளத்தின் குளிர்ச்சியான கரைக்கு வந்து பசு மேய்க்கும் பெண்கள் காணும்படி,
முளைத்த கூரான பற்களையுடைய விஷ பாம்பின் தலைகளின் உச்சியில் நின்று அது 
வாடும்படி அனுபவித்து ஆனந்த நடனம் செய்து கொண்டு வருபவன் சிதம்பரம் எனப்படும்  
தில்லை சித்திரகூடத்துள்ளானே!



மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
வளைக் கை நெடுங்கண் மடவார் - வளையல் (அணிந்த) கைகளும், பெரிய நீண்ட கண்களும்
(உள்ள) பெண்களான 
ஆய்ச்சியர் அஞ்சி அழைப்ப - பசு மேய்க்கும் பெண்கள் பயப்பட்டு (காளிங்க பாம்பின் மேல் 
கண்ணன் நடமாடுவதை இங்கே வந்து பாருங்கள் என்று) அழைக்க 
தளைத்து அவிழ் தாமரைப் பொய்கைத் - கட்டு அவிழ்ந்த தாமரை (பூக்களுடைய) பொய்கை 
(குளத்தின்)
தண் தடம்புக்கு அண்டர் காண  - குளிர்ந்த கரைக்கு வந்து பசு மேய்க்கும் பெண்கள் காண 
முளைத்த எயிற்று அழல் நாகத்து - முளைத்த (கூரான) பற்களுடைய விஷ பாம்பின் 
உச்சியில் நின்று அது வாடத் - உச்சியில் நின்று அது வாடும்படி 
திளைத்து அமர் செய்து வருவான் - அனுபவித்து ஆனந்த (தாண்டவம்) செய்து (கொண்டு)
வருபவன் 
சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே

அருமையான பாசுரத்தில் வரும் கதை
காளிங்க நர்த்தனம்''
யமுனை நதியின் ஒருபகுதியில் கொடிய விஷத்தைக் கொண்டுள்ள ஐந்து தலை நாகமொன்று 
இருந்து வந்தது. அதன் பெயர் காளிங்கம் () காளியன். அது தன் விஷத்தை எல்லாம் நதி நீரிலேயே 
கக்கி கக்கி அப்பகுதி நீர் முழுதும் விஷமாகவே மாறிவிட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் எந்த 
ஒரு உயிரினமும், தாவரங்களோ, விலங்கினங்களோ உயிர் வாழ முடிவதில்லை. ஒரே ஒரு 
கடம்ப மரம் மட்டும் கரையில் வளர்ந்திருந்தது

ஒரு நாள் பிருந்தாவனத்திலே, தன் தோழர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தான் சிறுவன் 
கண்ணன். அப்பொழுது திடீரென அப்பந்து காளிங்கன் இருந்த பகுதியில் சென்று விழுந்து விட்டது.
பலர் அங்கு செல்லவேண்டாம் விஷ பாம்பு உள்ளது என்று சொல்லி தடுத்தும் கண்ணன்
கடம்ப மரத்தின் கிளை வழியாக காளிங்கன் இருந்த இடத்திற்குச் சென்றான்.

கண்ணனும் அவன் போக்கிலே விட்டு பின் அதன் தலைமேல் ஏறி நின்று, தன் புல்லாங்குழலை
இசைத்தவண்ணம் நடனம்(நர்த்தனம்) புரியத் துவங்கினான். இந்த நடனத்தின் பெயர் ''காளிங்க நர்த்தனம்''.

இறைவனின் கால் காளிங்கனின் தலை மேல் படும் போது, அண்ட சராசரமே திரண்டு வந்து தன் 
தலையில் உருளுவதைப் போல் உணர்ந்தான். தன் ஆணவத்தால் அவன் தலைத் தூக்கும் 
போதெலாம், இறைவன் அந்த தலையில் ஒரே மிதியாய் மிதித்து நடனமாடினான். காளிங்கனும் 
சோர்வுற்று மரணபயம் கொண்டு, செய்வதறியாது திகைத்தான்.இறைவனும் காளிங்கனைக் 
கொல்லாது, அதன் ஆணவத்தை மட்டும் கொன்று திருவருள் புரிந்தான்.

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

வெண்ணை திருடி உண்ட கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்த ராஜனாக தரிசனம் தருகிறானே! - 3


1170
பண்டு இவன் வெண்ணெய் உண்டான்  என்று* ஆய்ச்சியர் கூடி இழிப்ப* 
எண் திசையோரும் வணங்க* இணை மருது ஊடு நடந்திட்டு*
அண்டரும் வானத்தவரும்* ஆயரம் நாமங்களோடு*
திண் திறல் பாட வருவான்* சித்திரகூடத்துள்ளானே*3.3.3

விளக்கம்:-
முன்பு இவன் வெண்ணெய் திருடி உண்டான் என்று பசு மேய்க்கும் பெண்கள் எல்லோரும் 
கூடி கேலி பேசியும், குற்றம் கூற, எட்டு திசைகளில் உள்ளவரும் வணங்கும் பெருமை 
வாய்ந்தவனை, குழந்தை பருவத்தில் வெண்ணெய் உண்டதற்காக அம்மா கோபத்தில் உரலில்
கட்டி விட உரலை இழுத்து கொண்டு அருகருகே நின்றிருந்த இரண்டு மருத மரங்களின் 
இடையே சென்று மரங்களை சாய்த்து இருவரின் சாபம் நீக்கியவனை,பூமியில் உள்ளவரும்
வானத்தில் உள்ளவரும் ஆயிரம் திருபெயர்களோடு திடமான திறமைகளை பாடும்படி 
வருபவன்  சிதம்பரம் எனப்படும்  தில்லை சித்திரகூடத்துள்ளானே!

மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
பண்டு இவன் வெண்ணெய் உண்டான்  - முன்பு இவன் வெண்ணெய் (திருடி) உண்டான் 
என்று ஆய்ச்சியர் கூடி இழிப்ப - என்று பசு மேய்க்கும் பெண்கள் கூடி குற்றம் கூறவும் 
எண் திசையோரும் வணங்க - எட்டு திசையில் உள்ளோரும் வணங்க 
இணை மருது ஊடு நடந்திட்டு - இரண்டு அருகருகே (உள்ள) மருத (மரங்களின்) இடையே 
நடந்து (இருவரின் சாபம் போக்கி)

அண்டரும் வானத்தவரும் - பூமியில் உள்ளோரும் வானத்தில் உள்ளோரும் 
ஆயரம் நாமங்களோடு - ஆயிரம் திரு பெயர்களோடு 
திண் திறல் பாட வருவான் - வலிமையான் திறமையை பாடும்படி வருபவன் 
சித்திரகூடத்துள்ளானே - சித்திரகூடத்துள்ளானே 



அருமையான பாசுரத்தில் வரும் கதை
"உரலில் கட்டப்பட்ட கண்ணன் செய்த லீலை"
நளகூபன், மணிக்ரீவன் என்ற அவ்விருவரும் குபேரனின் பிள்ளைகள்.பெருஞ்செல்வத்தால் 
ஆணவம் கொண்டிருந்த அவர்கள் இருவரும் கந்தர்வப்பெண்களுடன் ஒரு தடாகத்தில் நீர் 
விளையாட்டு விளையாடச் சென்றனர். அப்போது தற்செயலாகநாரத முனிவர் அவ்விடத்தைக் 
கடக்க நேரிட்டது. அவரைக் கண்டதும் அந்த கந்தர்வ பெண்கள் நடுநடுங்கி விரைவில் தங்கள் 
ஆடைகளை அணிந்து கொண்டுஅவரை வணங்கி நின்றனர்.

ஆனால் குபேரனின் பிள்ளைகளோ, மிதமிஞ்சிய மது மயக்கத்தாலும் தங்கள் ஆணவத்தாலும் 
நாரதர் வந்ததையே கவனியாமலும் தங்கள் ஆடைகளை அணியாமலும் இருந்தனர். இதைக் 
கண்டு கோபமுற்ற நாரதர் மரம் போல் நிற்கும் நீங்கள் இருவரும் பூவுலகில் இரு மருத மரங்களாக 
மாறக் கடவது என்று சாபமளித்தார். அவரது சாபத்தைக் கேட்டு தன் நிலையறிந்த இருவரும் 
நாரதரிடம் மன்னிப்புக் கேட்டு, தங்கள் சாபத்திற்கு விமோசனத்தை அருளும்படி வேண்டினர்.

அவர்கள்பால் இரக்கம் கொண்ட முனிவரும், ஸ்ரீமந்நாராயணன் பூமியில் கண்ணனாக அவதாரம் எடுக்கும்போது உங்களுக்கும் சாப விமோசனம் கிடைக்கும் என்று அருளினார்.அதற்கான காலமும் 
வந்தது . ஒரு நாள் நம் கண்ணன் வெண்ணெய் உண்டதால் அம்மா யசோதை குழந்தை கண்ணனை 
உரலில் கட்டிவிட உரலோடு இழுத்து கொண்டு ஒன்றுகொன்று அருகில் நின்றிருந்த இரு மருத 
மரங்களின் இடையில் புகுந்து சென்றதால் மரம் இரண்டாக உடைய அவர்களுக்கு 
சாப விமோசனம் கிடைத்ததுகுபேரனின் குமாரர்களும், கண்ணனை வணங்கி 
தத்தம் இருப்பிடங்களுக்குச் சென்றனர்.

புதன், 21 செப்டம்பர், 2011

அழகான பெண்கள் மலர் தூவ ஆயர்பாடியில் வரும் கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்தராஜனாக தரிசனம் தருகிறானே! - 2


1169
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட* பிள்ளை பரிசு இது என்றால்*
மா நில மா மகள்* மாதர் கேள்வன் இவன் என்றும்* வண்டு உண்
பூ மகள் நாயகன் என்றும்* புலன் கெழு கோவியர் பாடித்*
தே மலர் தூவ வருவான்* சித்ரகூடத்துள்ளானே * 3.3.2

விளக்கம்:-
பேயாக வந்த பெண்ணின் முலையில் தடவியிருந்த விஷத்தை உண்ட இந்த பிள்ளை  
யசோதைக்கு கிடைத்த பரிசு  என்று சொல்லவும், பூமி தாயாரின் கணவன் என்றும், வண்டுகள்
தேன் உண்ணும் தாமரை மலரில் பிறந்த மகாலட்சுமிக்கு நாயகன் என்றும், அழகுடைய 
பசு மேய்க்கும் பெண்கள் பாடி கொண்டு  தேன் நிறைந்த மலர்கள் தூவ ஆயர்பாடியிலே 
வருபவன் சிதம்பரம் எனப்படும் தில்லை சித்ரகூடத்துள்ளானே!



மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால்:-
பேய் மகள் கொங்கை நஞ்சு உண்ட - பேய் பெண்ணின் முலையில் விஷம் உண்ட 

பிள்ளை பரிசு இது என்றால் - பிள்ளை பரிசு இது என்று சொன்னால் (இன்னொரு பக்கம்) 
மா நில மா மகள் மாதர் - பூமி தாயாரின் 
கேள்வன் இவன் என்றும் - அன்புக்கு உரியவன் இவன் என்றும் 
வண்டு உண் பூ மகள் நாயகன் என்றும் - வண்டுகள் (தேன்) உண்ணும் (தாமரை) பூ(வில்) 
பிறந்த பெண் (மகாலட்சுமியின்) நாயகன் என்றும் 
புலன் கெழு கோவியர் பாடித் - கண், காது, மூக்கு, நாக்கு, தோல் இவைகள் நல்ல நிறமுடைய
(அழகான) பசு மேக்கும் பெண்கள் பாடி 
தே மலர் தூவ வருவான் - தேன் (நிறைந்த) மலர்கள் தூவ வருகின்ற (பெருமாள்) 
சித்ரகூடத்துள்ளானே - சித்ரகூடத்துள்ளானே 





அருமையான பாசுரத்தில் வரும் கதை
"
பூதனை பேயை கொன்ற கண்ணன்"
குழந்தைக் கண்ணனைக் கொல்வதற்காக, கம்சனால் அனுப்பப்பட்டவள் தான் இந்த பூதனை என்னும் அரக்கி. அவள், தன் பேயுருவத்தை மாற்றி மானுடப் பெண்ணைப் போல் உருமாறி கண்ணனின் மாளிகைக்கு வந்தாள். அழுது கொண்டிருந்த பிள்ளையை கொஞ்சுவது போல், அவள் குழந்தைக் கண்ணனுக்கு விஷம் கலந்த தாய்ப்பாலைக் கொடுத்து கொன்றுவிடலாம் என்று எண்ணி, குழந்தைக்கு தாயமுது கொடுத்தாள். கண்ணனோ, பூதகியிடம் தாய்ப்பால் குடிப்பது போல் பாவனை செய்து, அவள் உயிரையும் அவ்வழியே குடித்துவிட்டான்.