வராக பெருமாள்
1148
இருந்தண் மாநிலம் ஏனம் அது ஆய்* வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி*
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம்* கமல நல் மலர்த் தேறல்
அருந்தி* இன்னிசை முரன்று எழும் அளி குலம் பொதுளி* அம் பொழிலூடே*
செருந்தி நாள் மலர் சென்று அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே* 3.1.1
இருந்தண் மா நிலம் ஏனம் அது ஆய் - மிகவும் குளிர்ச்சியான பெரிய நிலமான (பூமியை) பன்றி உருவமாய்
வளை மருப்பினில் அகத்து ஒடுக்கி - வளைந்த தந்தத்தால் தன்னிடம் அடக்கி
கருந்தண் மா கடல் கண் துயின்றவன் இடம் - கரிய குளிர்ந்த பெரிய கடலில் கண் (மூடி) படுத்து கொண்டிருப்பவன் இடம்
கமல நல் மலர்த் தேறல் - நல் கமல மலர்த் தேறல் - நல்ல தாமரை பூவில் தேனை
அருந்தி இன்னிசை முரன்று எழும் - குடித்து இனிய இசை ஒலித்து கூத்தாடும்
அளிகுலம் பொதுளி அம்பொழிலூடே - வண்டு கூட்டம் நெருங்கி அழகிய சோலைகளுக்குள்ளே
செருந்தி நாள் மலர் சென்று - செருந்தி (மரத்தில்) நாளும் மலரும் (பூவில்) சென்று
அணைந்து உழி தரு திருவயிந்திரபுரமே - அமர்ந்து (அங்கும் தேனை குடித்து விட்டு)
பயப்படாமல் திரியும் திருவயிந்திரபுரமே
அருமையான பாசுரத்தில் வரும் கதை
“பூமியை மீட்ட பெருமாள்”
காசியப முனிவருக்கு இரு மனைவிகள் அதிதி மற்றும் திதி. இதில் அதிதிமஹாவிஷ்ணுவையே மகனாக பெற வேண்டும் என்று கடும் தவம் செய்து வந்தாள்.
ஆனால் திதியோ தேவர்களையும் வெல்லும் மகன்கள் வேண்டும் என்று ஆசைப்பட, அவள்
வயிற்றில் ஹிரண்யாக்ஷன், ஹிரண்ய கசிபு என்ற இரு ராட்சசர்கள் பிறந்தனர். அவர்களில் இளையவன் ஹிரண்யாக்ஷன்.
அவன் பிரம்மாவைக் குறித்துக் கோரதவம் செய்தான். பிரம்மா இரணியாக்ஷன் தவம்
அவன் பிரம்மாவைக் குறித்துக் கோரதவம் செய்தான். பிரம்மா இரணியாக்ஷன் தவம்
செய்யுமிடம் அடைந்து அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.அதற்கு அவன் சிருஷ்டியில் தோன்றிய யாராலும், எதனாலும், எந்த ஆயுதத்தாலும் மரணம் ஏற்படக் கூடாது. தனக்கு மூவுலகத்திற்கும் அதிபதியாகும் வரங்கள் இரண்டும் வேண்டினான்.அதன் பின் அவனது அட்டக்காசம் அதிகரித்தது.
வரம் பெற்ற இரணி யாக்ஷன் மூவுலகங்களையும் வென்று தனக்கு எதிரி யாருமின்றி ஆளத் தொடங்கினான். ஒரு சமயம் ஆணவத்தினால் பூமியை எடுத்து சென்று வேறொரு லோகத்தில் உள்ள ஆழமான கடலுக்குள் ஒளித்து வைத்துவிட பூமியைப் மீட்க ,
இறைவன் பன்றி உருவத்துடன் வராக பெருமாளாக வந்து இரணியாக்ஷன் மீது பாய்ந்து
தன் தந்தத்தால் (கோரைப் பல்லால்) குத்தினார். அவன் அதைத் தாளமுடியாமல் சமுத்திரத்திலே குதித்துமறைந்தான். அவனை வராக பெருமாள் தனது கால்களால் பற்றிக் கொண்டு மறுபடியும் தந்தத்தால் குத்தினார் . அதனால் அவன் உடனே மரணமடைந்தான்.
அவனால் எடுத்து செல்லப்பட்ட பூமியை வராகபெருமாள் தனது வளைந்த தந்தத்தால் மேல் தூக்கி கொண்டு வந்து பூமி தேவியை சரியான இடத்தில் வைத்து விட்டு
வைகுண்டம் அடைந்தார்.
வராக பெருமாள் அரக்கனிடம் சண்டையிடுடல்
விளக்கம் :-
ஹிரண்யாக்ஷன் என்ற அரக்கன் பூமியை தூக்கி கொண்டு போய் பாதாளத்தில் மறைத்து
ஹிரண்யாக்ஷன் என்ற அரக்கன் பூமியை தூக்கி கொண்டு போய் பாதாளத்தில் மறைத்து
வைக்க, மிக குளிர்ந்த பெரிய நிலத்தையுடைய பூமி தேவியை மீட்க பன்றி உருவில் வராக பெருமாளாக மாறி, பூமியை தன்னுடைய வளைந்த தந்தத்தில் வைத்து மேலே தூக்கி
வந்தவனும், கரிய பெரிய குளிர்ச்சியான கடலில் கண் மூடி படுத்து
கொண்டிருக்குமவனுமான இறைவனுக்கு இடம்,
நல்ல அழகான தாமரை மலரில் தேனை குடித்து விட்டு இனிய இசையோடு பாடி கூத்தாடும் வண்டு கூட்டங்கள், அழகிய மரம் செடிகள் சூழ்ந்த சோலைகளுக்குள்ளே
புகுந்து அங்கு உள்ள செருந்தி மரத்தில் நாளும் மலரும் பூவில் சென்று அமர்ந்து அங்கும் தேனை குடித்து விட்டு பயப்படாமல் திரியும் இடமான திருவயிந்திரபுரமே!
1149
மின்னும் ஆழி அங்கையன்* செய்யவள் உறை தரு திரு மார்பன்*
பன்னு நான்மறைப் பலபொருள் ஆகிய* பரன் இடம் வரைச்சாரல்*
பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வரப்* பிணி அவிழ் கமலத்துத்*
தென்ன என்று வண்டு இன்னிசை முரல் தரு* திருவயிந்திரபுரமே* 3.1.2
மின்னும் ஆழி அங்கையன் - மின்னும் சக்கரம் (வைத்திருக்கும்) அழகான கையை உடையவன்
செய்யவள் உறை தரு திரு மார்பன் - மகாலட்சுமி வசித்து கொண்டிருக்கும் திருமார்பன்
பன்னு நான்மறைப் பலபொருள் ஆகிய பரன் இடம் - ஓதும் நான்கு வேதங்களின் பல பொருள்களும் ஆகிய இறைவன் இடம்
வரைச்சாரல் பின்னும் மாதவிப் பந்தலில் பெடை வரப் - மலை சரிவுகளில் பின்னி
கொண்டிருக்கும் குருக்கத்தி கொடியின் பந்தலில் பெண் வண்டுகள் வர
பிணி அவிழ் கமலத்துத் தென்ன என்று வண்டு - குவிந்து இருக்கும் (மொட்டு) மலர்கிற
தாமரையிலிருந்து தென்ன (தென்னா) என்று வண்டு
இன்னிசை முரல் தரு திருவயிந்திரபுரமே - இனிய இசை ஒலி தரும் திருவயிந்திரபுரமே
விளக்கம் :-
தக தகன்னு மின்னும் சக்கரத்தை வைத்திருக்கும் அழகான கையை உடையவன், மகாலட்சுமி வசித்து கொண்டிருக்கும் திருமார்பன், வாய் விட்டு ஓதும் நான்கு வேதங்களின் பல பொருள்களும் தானே ஆகிய இறைவனுக்கு இடம்,
மலை சரிவுகளின் பக்கங்களில் பின்னி கொண்டிருக்கும் குருக்கத்தி கொடி பந்தலில் பெண்
வண்டுகள், வந்து சேர்வதற்காக மொட்டு மலரும் தாமரை பூவில் இருந்து கொண்டு தென்ன
1150
வையம் ஏழும் உண்டு ஆல் இலை* வைகிய மாயவன்* அடியவர்க்கு
மெய்யன் ஆகிய தெய்வ நாயகன் இடம்* மெய் தகு வரைச் சாரல்*
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய* முல்லை அம் கொடி ஆட*
செய்ய தாமரைச் செழும் பணை திகழ் தரு* திருவயிந்திரபுரமே* 3.1.3
வையம் ஏழும் உண்டு ஆல் இலை - உலகம் எழும் உண்டு ஆலமர இலையில்
வைகிய மாயவன் அடியவர்க்கு - தங்கியிருந்த மாயவன் அடியவர்க்கு
மெய்யன் ஆகிய தெய்வ நாயகன் இடம் - உண்மையானவன் ஆகிய தெய்வ நாயகன் இடம்
மெய் தகு வரைச் சாரல் - மேனிக்கு ஒத்த (நிறமுடைய) மலை சரிவுகளின் பக்கங்களில்
மொய் கொள் மாதவி சண்பகம் முயங்கிய - சூழ்ந்து அமைந்திருந்த குருக்கத்தி கொடி
செண்பக மரம் (இவைகளை) தழுவிய
முல்லை அம் கொடி ஆட - முல்லையின் அழகான கொடி ஆட
செய்ய தாமரைச் செழும் - சிவந்த தாமரை செழித்து (வளரும்)
பணை திகழ் தரு திருவயிந்திரபுரமே - நீர் நிலைகள் திகழ்ந்து (காட்சி) தரும் திருவயிந்திரபுரமே
விளக்கம் :-
முன்பு பழைய யுகம் முடியும் சமயத்தில் பெரும் அழிவு ஏற்பட்ட போது சத்ய லோகம்,
தப லோகம், ஜன லோகம், மகர லோகம் ,சுவர் லோகம்,புவர் லோகம், புலோகம் என மேல்
விளக்கம் :-
முன்பு பழைய யுகம் முடியும் சமயத்தில் பெரும் அழிவு ஏற்பட்ட போது சத்ய லோகம்,
தப லோகம், ஜன லோகம், மகர லோகம் ,சுவர் லோகம்,புவர் லோகம், புலோகம் என மேல்
உலகம் ஏழும், அதல லோகம், விதல லோகம், சுதல லோகம், தலாதல லோகம்,
மகாதல லோகம், ரசாதல லோகம், பாதாள லோகம் என கீழ் உலகம் ஏழும் உண்டு
பாதுகாப்பாக தன் வயிற்றில் வைத்து கொண்டு ஆல மர இலையில் தங்கியிருந்த மாய
கண்ணனும், தன்னிடம் அன்பு கொண்ட அடியவர்களுக்கு உண்மையானவனும் ஆகிய
தெய்வ நாயக பெருமாளுக்கு இடம்,
தன் திரு மேனி நிறம் போல இருக்கும் மலை சரிவுகளின் பக்கங்களில் எங்கும்
சூழ்ந்து அமையபெற்ற குருக்கத்தி கொடியையும், செண்பக மரங்களையும் தழுவி
கொண்டு வளரும் முல்லையில் அழகான கொடி காற்றில் அசைந்து ஆட, சிவந்த தாமரை
மலர்கள் செழித்து வளர்கின்ற நீர் நிலைகள் திகழ்ந்து காட்சி தரும் திருவயிந்திரபுரமே!
உலகம் உண்டு ஆல மர இலையில் படுத்து கொண்டிருக்கும் பெருமாள்
1151
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த வல் அவுணன் தன்* மார்பகம் இரு பிளவாக் *
கூறு கொண்டு அவன் குலமகற்கு* இன் அருள் கொடுத்தவன் இடம்* மிடைந்து
சாறு கொண்ட மென் கரும்பு இளங்கழை தகை* விசும்பு உற மணி நீழல்*
சேறு கொண்ட தண் பழனம் அது எழில் திகழ்* திருவயிந்திரபுரமே* 3.1.4
மாறு கொண்டு உடன்று எதிர்ந்த - பகை கொண்டு வெகுந்து எதிர்த்த
வல் அவுணன் தன் மார்பகம் இரு பிளவாக் - வலிமையான அரக்கன் அவன் மார்பகம் இரண்டு பிளவாக
கூறு கொண்டு அவன் குலமகற்கு - கூறு போட்டு அவன் குலத்தில் (பிறந்த) மகனுக்கு
இன் அருள் கொடுத்தவன் இடம் - இனிய அருள் கொடுத்தவன் இடம்
மிடைந்து சாறு கொண்ட - நெருங்கி சாறு கொண்ட
மென் கரும்பு இளங்கழை - மெல்லிய கரும்பின் இளம் தண்டு (வளரவிடாமல்)
தகை விசும்பு உற மணி நீழல் - தடை (செய்கின்ற) வானத்தை (தொடும் அளவுக்கு பெரியதாக) வளர்ந்து அழகிய நிழல் (தர)
சேறு கொண்ட தண் பழனம் அது - (கரும்புடன் ஊறி கொண்டிருக்கும் இனிப்பான தண்ணீரும் மண்ணும் கலந்த) சேறு கொண்ட குளிர்ந்த வயல்வெளிகளுடன்
எழில் திகழ் திருவயிந்திரபுரமே - அழகாக திகழும் திருவயிந்திரபுரமே
அருமையான பாசுரத்தில் வரும் கதை
"பிரகலாதனை காத்த பெருமாள்"
இரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும் என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன் அதை எதிர்த்தான். பிரகலாதன் ஸ்ரீமன் நாராயணன் ஒருவரையே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான்.
இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். ஒரு சமயத்தில் பள்ளி பாடத்தை முடித்து வந்த மகன் ஸ்ரீ ஹரி நாமம் சொல்வதை பார்த்த பிரகலாதன் மிகுந்த கோபம் கொண்டு எங்கேடா இருக்கிறான் ஹரி என்று கேட்க, அவன் எங்கும் இருப்பான் என்று பிரகலாதன் கூறினான்.
உடனே இரணியன் இந்த தூணில் இருப்பானா!!!! என்று வெகுண்டெழுந்து தூணை தட்ட, அங்கே அப்பொழுதே பரம்பொருளான ஸ்ரீமன் நாரயணன் சிம்ம முகமும் மானிட உருவமும் கலந்த நரசிம்ம உருவத்தில் தூணை பிளந்து வந்து இரணியனை அழித்தார். பிரகலாதனுக்கு நல் அருள் கொடுத்தார். பிரகலாதன் பக்தியை போன்றே நாமும் ஸ்ரீமன் நாராயணின் மேல் பக்தியோடு இருக்க ஸ்ரீமன் நாராயணனை வேண்டுவோம். அவர் நமக்கு நிச்சயம் நல் அருள் கொடுப்பார்.
இரணியனை பிளந்த நரசிம்மர்
பிரகலாதனுக்கு அருள் கொடுக்கும் நரசிம்மர்
விளக்கம் :-
ஆணவத்தோடு தானே கடவுள் என்னையே அனைவரும் வழிபடவேண்டும் என்று கூறி, இறைவனான ஸ்ரீமன் நாராயணனிடம் பகை கொண்டு வெகுந்து எதிர்த்த வலிமையான அரக்கன் இரணியனின் மார்பை இரண்டு பிளவாக கூறு போட்டு, அவன் குலத்தில் பிறந்த பிரகலாதனுக்கு இனிய அருள் கொடுத்தவன் இடம்
ஒன்றோடொன்று நெருங்கி வளரும் இனிப்பான சாறு கொண்ட மெல்லிய கரும்பின் இளம் தண்டுகள், தன்னை அதற்க்கு மேல் வளரவிடாமல் தடை செய்யும் வானம் அளவுக்கு உயர்ந்திருப்பதால் அழகிய நிழலை கொடுப்பதோடு, கீழே வேர் தண்டில் ஊறிக்கொண்டு இருக்கும் இனிப்பான நீர் மண்ணோடு கலந்திருப்பதால் சேறு கொண்ட குளிர்ந்த வயல்வெளிகளுடன் அழகாக திகழும் திருவயிந்திரபுரமே!
1152
ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று* அகல் இடம் அளந்து* ஆயர்
பூங்கொடிக்கு இன விடை பொருதவன் இடம்* பொன் மலர் திகழ்* வேங்கை
கோங்கு செண்பகக் கொம்பினில்* குதி கொடு குரக்கினம் இரைத்து ஓடி*
தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு* திருவயிந்திரபுரமே* 3.1.5
ஆங்கு மாவலி வேள்வியில் - அவ்விடத்தில் மகாபலி (நடத்திய) வேள்வியில்
இரந்து சென்று அகல் இடம் அளந்து - சென்று இரந்து அகல் இடம் அளந்து - சென்று (மூன்று அடி மண்) கெஞ்சி (கேட்டு) மிக பெரிய நிலபகுதியான (உலகம் முழுதும்) அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இன விடை பொருதவன் இடம் - பசு மேய்க்கும் (குலத்தில் பிறந்த) நப்பின்னைக்காக (ஒரே) இனமான எருதுகளை (எதிர்த்து) போர் புரிந்தவன் இடம்
பொன் மலர் திகழ் வேங்கை கோங்கு - பொன் (நிறத்தில்) மலர் அமையபெற்ற வேங்கை, கோங்கு
செண்பகக் கொம்பினில் குதி கொடு - செண்பக (மர) கொம்புகளில் தாவி கொண்டு
குரக்கினம் இரைத்து ஓடி - குரங்கு கூட்டம் ஆர்பரித்து ஓடி
தேன் கலந்த தண் பலங்கனி - தேன் கலந்த குளிர்ந்த பலாப் பழத்தை
நுகர் தரு திருவயிந்திரபுரமே - ருசித்து சாப்பிடும்படி அமையபெற்ற திருவயிந்திரபுரமே
அருமையான பாசுரத்தில் வரும் முதல் கதை
"உலகளந்த பெருமாள்"
மகாபலி என்று மன்னன் ஒருவன் இருந்தான். அவன் இரண்யகசிபுவின் புதல்வனான 'பக்த பிரகலாதன்' பேரனாவான். அவர், தன் தவ வலிமையால் தேவர்களை எல்லாம் வெற்றிக் கொண்டான்.அதேசமயம், உலக மக்களுக்கு ஒரு தீங்கும் செய்யாது, உலக உயிர்கள் அனைத்தும் இவனின் வெண்கொற்றங்குடைகீழ் மிகுந்த சுகபோகமாக வாழ்ந்தனவாம்.
ஆனால், ஒரு குட்டியோன்டு அளவுள்ள ஆணவம் மட்டும் மாவலிச் சக்கரவர்த்தியின் தலைக்குள்ள இருந்துச்சாம். தான் தான் இந்த உலகத்துலேயே ரொம்ப நல்லவரு.
வல்லவரு. யாரு என்னா கேட்டாலும் கொடுத்துடுறவரு; தானம் செய்வதில் தன்னை
விட தலைசிறந்தவர் எவருமில்லை என்ற எண்ணம் ரொம்பவே இருந்துச்சாம்.தான்தான் தானத்தின் தலைவன் என்கிற அளவுக்கு இருந்ததாம். இந்த எண்ணத்துடனேயே அவர்
ஆட்சி புரிந்து, விண்ணுலகம், மண்ணுலகம் எல்லாத்துலயும் ஒரு கலக்கு கலக்கினார் மாவலி சக்கரவர்த்தி.
தேவலோக பதவியில் இருந்து நழுவாமல் இருக்கும்படியாக நூறு அசுவமேத யாகம்
செய்யத் தொடங்கினான். இதனால் மூவுலகிலும் இவன் புகழ் ஓங்கி நின்றது.
அவன் ஆணவத்தை அடக்க பெருமாள் காசியப முனிவருக்கு மகனாக வந்து,
வாமனனாகத் பிறந்தார் . வாமனனாக வந்த இறைவன், ஒரு கையில் கமண்டலம்,
மறுகையில் ஒரு குடையும் கொண்டு, உடலை மறைக்க மேற்போர்வையாக உத்தரீகமும் அணிந்து கொண்டு, குள்ளமான உருவத்துடன், மகாபலிச் சக்கரவர்த்தி நடத்திய வேள்விக்கு சென்றான்.
சிறுவனாக வந்த வாமனனிடம், மகாபலிச் சக்கரவர்த்தி 'சிறுவனே! உனக்கு என்னிடம் இருந்து என்ன வேண்டும்?' என்று கேட்டார்.வாமனன், தன் காலடியால் அளக்கப்பெற்ற மூன்றடி அளவுடைய நிலம் வேண்டும் என்று யாசித்தார்.ஜுஜிபி! என்பது போல மூன்றடி மண்தானே எடுத்து கொள்! என்று கூற குள்ள வாமன பெருமாள் ஓங்கி உயர்ந்து தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.முதலடியால் மண்ணையும், இரண்டாம் அடியால் விண்ணையும் அளந்துவிட்டார்.
மூன்றடியில், இரண்டடியிலேயே அனைத்தையும் அளந்துவிட்டதும், மூன்றாம் அடிக்கு
இடம் இல்லாது திகைக்கவே....மாவலித் தலைகுனிந்து, இறைவனிடம் வணங்கி நின்று, மூன்றாமடிக்குத் தன்னையே ஏற்றுக் கொள்ளுமாறு கொடுத்துவிட்டார்.
இறைவனின் திருவடி பட்டதால், மாவலியின் ஆணவம் அழிந்து முக்தி பெற்றான்.
இறைவனின் திருவடி பட்டதால், மாவலியின் ஆணவம் அழிந்து முக்தி பெற்றான்.
குள்ளமான வாமன பெருமாள்
உலகம் அளந்த திரிவிகிரம பெருமாள்
அருமையான பாசுரத்தில் வரும் இரண்டாம் கதை
“ஏழு காளைகளை அடக்கிய எம்பெருமான்”
கண்ணன், யசோதையின் குழந்தையாக, ஆயர்பாடியில வளர்ந்துட்டு இருக்கும் போதே,
அதாவது கண்ணன் சின்ன பாலகனா இருக்கும் போதே, யசோதையின் சகோதரனும்,
துவரைப்பதியின் மன்னனுமான கும்பன் என்பவரின் பொண்ணுதான் நப்பின்னை.
கண்ணனின் வருங்கால மனைவி ன்னு சின்ன வயசுலேயே முடிவு செஞ்சுட்டாங்க.
நப்பின்னையும் கண்ணன் பால் காதல் கொள்கிறாள். ஆனா, நப்பின்னையோட அப்பா,
ஒரு நிபந்தனை வைக்கிறார். தன்னிடம் உள்ள ஏழு அடங்காத முரட்டுக் காளைகளை
யார் அடக்குறாங்களோ! அவங்களுக்குத்தான் நப்பின்னையை மணம் முடித்துக்
கொடுப்பேன்னு சொல்லிடறாரு.எத்தனையோ பேர் முயன்றும் முடியாமல் தோத்துப்
போக, நம்ம மதுரைவீரன், மாயக்கண்ணன் வந்து ஏழு காளைகளையும் அடக்கி, தன்
மாமாவின் மகளான நப்பின்னையைத் திருமணம் செய்து கொண்டார்.
ஏழு எருதுகளை அடக்கிய கண்ணன்
விளக்கம் :-
முன்பு மகாபலி சக்ரவர்த்தி நடத்திய பெரிய வேள்வியில் குள்ளமான வாமன வடிவில் சென்று மூன்று அடி மண்! கொடு என்று கெஞ்சி கேட்க, மூன்று அடி மண்தானே எடுத்து கொள்! என்று மகாபலி கூறியவுடன், மிக பெரிய உருவம் கொண்டு இரண்டு அடியாலே மண்ணையும், விண்ணையும் அளந்து , பின்பு கிருஷ்ணனாக பிறந்து நப்பின்னையை திருமணம் செய்வதற்காக ஏழு எருதுகளுடன் போரிட்டு வென்றவன் இடம்
பொன் நிறத்தில் பூக்கள் மலரும் வேங்கை, கோங்கு, செண்பக மர கொம்புகளில் தாவி கொண்டு, மிகவும் சந்தோஷமாக குரங்கு கூட்டங்கள் சத்தம் போட்டு கொண்டு தேன் கலந்தது போல இனிப்பான பலாப்பழத்தை ருசித்து சாப்பிடும் படி அமையபெற்ற திருவயிந்திரபுரமே!
1153
கூன் உலாவிய மடந்தை தன்* கொடுஞ்சொலின் திறத்து இளங்கொடியோடும்*
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம்* கவின் ஆரும்*
வான் உலாவிய மதி தவழ் மால் வரை* மா மதில் புடை சூழ*
தேன் உலாவிய செழும் பொழில் தழுவிய* திருவயிந்திரபுரமே* 3.1.6
கூன் உலாவிய மடந்தை தன் - கூன் (விழுந்து) சுற்றி கொண்டிருக்கும் பெண் மந்தரையின்
கொடுஞ்சொலின் திறத்து இளங்கொடியோடும் - கொடிய சொல்லின் வலிமையால் இலங்க்கொடியான (சீதா தாயோரோடு)
கான் உலாவிய கரு முகில் திரு நிறத்தவன் இடம் - காதில் திரிந்த கரிய மேகம் (போன்ற) திரு நிறம் கொண்டவன் இடம்
கவின் ஆரும் வான் உலாவிய மதி தவழ் - அழகு நிறைந்த வானில் திரியும் நிலா தவழும்
மால் வரை மா மதில் புடை சூழ - பெரிய மலையும், பெரிய மதிலும் பக்கங்களில் சூழ்ந்திருக்க
தேன் உலாவிய செழும் - தேன் நிறைந்த செழிப்பான
பொழில் தழுவிய திருவயிந்திரபுரமே - செடி கொடிகள் மரங்கள் சூழ்ந்திருக்கும் திருவயிந்திரபுரமே
அருமையான பாசுரத்தில் வரும் கதை
"கூனியால் காட்டில் வாழ்ந்த இராமர்"
தசரதனின் முதல் மனைவியான கோசலை மகன் இராமர். இரண்டாம் மனைவி கைகேயி, அவளது மகன் பரதன். தசரதன் இராமன் மன்னனாக இருக்க முடிவு செய்ய மந்தரை
மகாராணி கைகேயியின் பணிப்பெண்களில் ஒருத்தி. இவளை கூனி என்றும் அழைப்பார்கள். இவள் இராமன் மீது வெறுப்புற்றிந்தாள். இராமன் அரசனாவதை அவள் விரும்பவில்லை.
கைகேயியின் மகன் பரதன் அரசனாக வேண்டும் என்றே விரும்பினாள். அதனால், கைகேயியைத் தூண்டி விட்டு இராமன் அரசனாவதைத் தடுக்க எண்ணினாள். கைகேயியும் கூனியின் ஆலோசனைப்படி இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்றும் தனது மகனான பரதன் அரசனாக வேண்டும் என்றும் தசரத மன்னனிடம் வரம் கேட்டு பெற்றாள்.மந்தரையின் சூழ்ச்சியால் இராமர் தன் மனைவி சீதா தாயாரோடு
14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்தார்.
கூனியின் பேச்சை கேட்கும் கைகேயி
விளக்கம் :-
முதுகு வளைந்து கூன் விழுந்து சுற்றி கொண்டிருக்கும் சூழ்சிக்கார பெண் மந்தரையின் கொடூர சொல்லின் வலிமையால் தன் இளங்கொடி போல அழகான மனைவி சீதா தாயாரோடு காட்டில் திரிந்து கொண்டிருந்த கரிய மேகம் போன்ற நிறம் உடையவனின் இடம்
அழகான வானில் சுற்றி கொண்டிருக்கும் நிலா மேலே தவழும் அளவுக்கு, பெரிய மலையும்,பெரிய சுற்று சுவர்களும் அருகில் சூழ்ந்திருக்க, தேன் நிறைந்த செழிப்பான
செடி கொடிகள் மரங்கள் சூழ்ந்து காட்சி தரும் திருவயிந்திரபுரமே!
தந்தையின் உத்தரவால் காட்டில் திரியும் இராமர், லட்சுமணர், சீதை
1154
மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம்* விலங்கலின் மிசை இலங்கை
மன்னன்* நீள் முடி பொடி செய்த மைந்தனது இடம்* மணி வரை நீழல்*
அன்ன மா மலர் அரவிந்தத்து அமளியில்* பெடையோடும் இனிது அமர*
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு* தண் திருவயிந்திரபுரமே* 3.1.7
மின்னின் நுண் இடை மடக்கொடி காரணம் - மின்னல் (போல) மெல்லிய இடை இளம் கொடி (போன்ற பெண்ணான சீதா தாயாரின்) காரணமாக
விலங்கலின் மிசை இலங்கை மன்னன் - மலையின் மேல் (உள்ள) இலங்கை மன்னன்
நீள் முடி பொடி செய்த மைந்தனது இடம் - நீண்ட கிரீடங்களை (தலையோடு சேர்த்து) பொடி செய்த இறைவனது இடம்
மணி வரை நீழல் - அழகிய மலையின் நிழலிலே
அன்ன மா மலர் அரவிந்தத்து அமளியில் - அன்ன பறவை பெரிய மலரான தாமரை படுக்கையில்
பெடையோடும் இனிது அமர - ஜோடியோடு இனிமையாக அமர்ந்து (கொண்டிருக்க)
செந்நெல் ஆர் கவரிக் குலை வீசு - செந்நெல் ஆர் குலை கவரி வீசு - செழுமையான நெல் நிறைந்த கொத்தாக சாமரம் வீசும்
தண் திருவயிந்திரபுரமே - குளிர்ந்த திருவயிந்திரபுரமே
அருமையான பாசுரத்தில் வரும் கதை
"இராவணனை வீழ்த்திய இராமர்"
இலங்கையை ஆட்சி செய்த அரக்கன் இராவணன் அரசனாகவும், சிவ பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும், இருந்தான். ஒரு சமயம் இராமனின் மனைவியான
சீதையின் அழகில் மயங்கி அவளை இலங்கைக்கு கடத்திச்சென்று சிறைவைத்தான். அதனால் அயோத்தியின் அரசனான இராமன் படைத்திரட்டி இராவணனுடன் போரிட்டு அவனது பத்து தலைகளையும் வீழ்த்தி தன் மனைவியான சீதா தாயாரை மீட்டார்.
இராவணனை பிரம்மன் அம்பினால் கொல்லும் இராமர்
விளக்கம் :-
மின்னல் போல மெலிசா இடையுடைய இளம் கொடியான அழகிய சீதையை மீட்பதற்காக, சூவேல மலை மேலே உள்ள இலங்கை நாட்டு மன்னன் இராவணின் நீண்ட கிரீடங்களோடு சேர்த்து பத்து தலைகளையும் பொடி பொடியாக்கிய இறைவனந்து இடம்
அழகிய மலையின் நிழலிலே அன்ன பறவைகள் பெரிய தாமரை மலர் படுக்கையில் தன்னுடைய ஜோடிகளோடு இனிமையாக அமர்ந்து கொண்டிருக்க, செழுமையான நெல் கொத்துகள் காற்றில் அசைந்து விசிறி போல வீசும் குளிர்ச்சியான திருவயிந்திரபுரமே!
1155
விரை கமழ்ந்த மென் கருங்குழல் காரணம்* வில் இறுத்து அடல் மழைக்கு*
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன்* நிலவிய இடம் தடம் ஆர்*
வரை வளம் திகழ் மதகரி மருப்பொடு* மலை வளர் அகில் உந்தித்*
திரை கொணர்ந்து அணை செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே* 3.1.8
விரை கமழ்ந்த மென் கருங்குழல் காரணம் - மணம் வீசும் மென்மையான கரிய கூந்தலையுடைய (சீதா தாயாரை திருமணம் புரிய வேண்டும் என்ற) காரணத்தால்
வில் இறுத்து அடல் மழைக்கு - வில் முறித்து வலிமையான மழைக்கு
நிரை கலங்கிட வரை குடை எடுத்தவன் - பசுக்கள் கலங்கிட மலையை குடையாக எடுத்தவன்
நிலவிய இடம் தடம் ஆர் - வசிக்கும் இடம் நீர் நிலைகள் நிறைந்துள்ளதால்
வரை வளம் திகழ் மதகரி மருப்பொடு - மலை செழிப்புடன் திகழும் (இடத்தில் காணப்படும்)
மத யானை தந்தத்தோடு
மலை வளர் அகில் உந்தித் - மலையில் வளர்கின்ற வேப்ப (மரத்தையும்) தள்ளி
திரை கொணர்ந்து அணை - அலையோடு கொண்டு வந்து சேர்க்கும்
செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே - செழுமையான ஆறு வயலில் புகும்
திருவயிந்திரபுரமே
அருமையான பாசுரத்தில் வரும் முதல் கதை
"வில் உடைத்த இராமர்"
ஜனக ராஜாவின் மகள் சீதை . சீதை வயதுக்கு வந்தவுடன் அவரை மணமுடித்துக் கொடுக்க சுயம்வரம் நடத்திய ஜனகர், தனக்கு சிவனால் வழங்கப்பட்ட வில்லில் வெற்றியுடன் நாண் ஏற்றுபவருக்கு சீதையை திருமணம் செய்து வைப்பதாக அறிவித்தார். இந்த சுயம்வரத்தில் இராமர் உட்பட பல ராஜகுமாரர்கள் கலந்து கொண்டனர். எவராலும் அசைக்கக்கூட முடியாத வில்லை இராமர் தூக்கி நாணேற்ற முற்படும் போது பெரும் ஓசையுடன் வில் முறிந்தே விட்டது. இதனால் சீதை இராமரின் மனைவியானார்.
சீதையை திருமணம் புரிவதற்காக வில் முறித்த இராமர்
அருமையான பாசுரத்தில் வரும் இரண்டாம் கதை
"கோவர்த்தன மலையை தூக்கிய கண்ணன்"
ஒரு சமயம் ஆயர்பாடி மக்கள் பழைய நடைமுறைப்படி பலவகையான படையல்களிட்டு இந்திரனைச் சிறப்பு செய்யும் இந்திர விழாவினை, செய்ய வரும்போது, தேவர்களின் தலைவன் என்ற கர்வம் இந்திரனுக்கு இருந்த படியால் நம் அன்பு கண்ணன் வீணாக இந்திரனுக்கு பூஜை செய்யாதீர்கள். அதற்க்கு பதில் பசுக்கள் பசிதீர புல் மேயும் கோவர்த்தன மலைக்குச் செய்யுமாறு ஆயர்களிடம் கூறினான். ஆயர்களும் அவ்வண்ணமே செய்ய,கோபமுற்ற இந்திரன், ஆயர்ப்பாடியில் பயங்கர ஆலங்கட்டி மழையை பொழிய செய்தான். மழையிலிருந்து ஆயர்களையும், பசு க்களையும் காக்க, கண்ணன், மிக பெரிய கோவர்த்தன மலையையே தூக்கி குடையாய்ப் பிடித்து, அதனடியில் அனைவரையும் நிற்க வைத்து, கொடிய மழையிலிருந்து அனைவரையும் காத்தான்.
கோவர்த்தன மலையை தூக்கிய கண்ணன்
விளக்கம் :-
மணம் வீசும் மென்மையான கரிய கூந்தலையுடைய சீதையை திருமணம் செய்வதற்காக வில்லை முறித்தவனும், பலத்த மழை பெய்ததால் பசு கூட்டங்கள் செய்வது அறியாமல் கலங்க, பசுக்களையும் ஆயர்பாடி மக்களையும் காப்பதற்காக பெரிய கோவர்த்தன மலையை குடையாக எடுத்தவன் இடம்,
நீர் நிலைகள் நிறைந்து பெருக்கெடுத்து ஓடுவதால் , மலைகள் செழிப்புடன் சூழ்ந்த இடங்களில் உள்ள மத யானைகளின் தந்தங்களோடு, மலையில் வளரும் வேப்ப மரத்தையும் பெரும் அலையுடன் அடித்து கொண்டு வந்து சேர்க்கின்ற செழுமையான ஆறு வயலில் புகும் திருவயிந்திரபுரமே!
1156
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில்* விசயனுக்காய்* மணித் தேர்
கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம்* குலவு தண் வரைச் சாரல்*
கால்கொள் கண் கொடிக் கை எழக்* கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல் *
சேல்கள் பாய் தரு செழு நதி வயல் புகு* திருவயிந்திரபுரமே* 3.1.9
வேல் கொள் கைத் தலத்து அரசர் வெம் போரினில் - கைத் தலத்து வேல் கொள் அரசர் வெம் போரினால் - கையில் வேலை கொண்டுள்ள அரசர்களை கொடிய போரினால்
விசயனுக்காய் மணித் தேர் - அர்சுனனுக்காக அழகிய தேரில்
கோல் கொள் கைத் தலத்து எந்தை பெம்மான் இடம் - கைத் தலத்து கோல் கொள் எந்தை பெம்மான் இடம் - கையில் சாட்டையை கொண்டுள்ள என் தந்தையாகிய இறைவன் இடம்
குலவு தண் வரைச் சாரல் - வளைந்த குளிர்ந்த மலைகளின் பக்கங்களில்
கால் கொள் கண் கொடிக் கை எழக் - (வெற்றிலை) தோட்டத்தில் கணுக்கள் (தோறும்) கொடிகள் உயர வளர
கமுகு இளம் பாளைகள் கமழ் சாரல் - பாக்கு (மரத்தில்) இளம் பிஞ்சுகள் நறுமணம் வீசும் பகுதிகளிலே
சேல்கள் பாய் தரு - மீன்கள் பாயும்படி அமையபெற்ற
செழு நதி வயல் புகு திருவயிந்திரபுரமே - செழுமையான ஆறானது வயல்களில் புகும் திருவயிந்திரபுரமே
அருமையான பாசுரத்தில் வரும் கதை
"அர்ச்சுனனுக்கு தேர் ஒட்டிய கண்ணன்”
தம்பி பாண்டுவின் முதல் மனைவி குந்தி தேவியின் மூலம் தருமன், பீமன், அருச்சுனன்
என மூவரும், இரண்டாம் மனைவி மாத்ரியின் மூலம் நகுலன், சகாதேவன் என மொத்தம் பாண்டுவிற்கு பிறந்தவர்கள் 5 பேர், பாண்டவர்கள் எனப்பட்டனர். குந்தி தேவியின் தம்பி வசுதேவருக்கு பிறந்தவர் கண்ணன்.
வெகுநாட்களாக கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் அஸ்தினாபுரம் ஆட்சியை
பிடிப்பதில் பிரச்சனை இருந்து வந்தது. ஒரு சமயத்தில் பிரச்னை அதிகமாகவே இவர்கள் இருவருக்கு மிக பெரிய குருசேத்திர (பாரத) போர் ஏற்பட்டது.அதில் நல்லவர்களான பாண்டவர்களுக்கு கிருஷ்ணர் துணை இருந்தார், கையில் சாட்டை கொண்டு அர்ச்சுனனுக்கு தேர் பாகனாக இருந்து பாண்டவர்களுக்கு ஆதரவாக இருந்தார். இறுதியில் கௌரவர்கள் அழிந்து பாண்டவர்கள் வெற்றி பெற்றனர்.
அர்ச்சுனனுக்கு தேர் ஒட்டிய கிருஷ்ணர்
விளக்கம் :-
கையில் வேலாயுதத்தை கொண்டுள்ள துரியோதனன் முதலான அரசர்களின் கொடிய
போரில், பாண்டவர்களுக்கு அதரவு தந்து அர்ச்சுனனின் அழகிய தேர் பாகனாக கையில் சாட்டையை கொண்டுள்ள என் தந்தையாகிய இறைவனது இடம்
வளைந்த குளிர்ச்சியான மலைகளின் பக்கங்களிலே காணப்படும் வெற்றிலை தோட்டத்தில்
கணுக்கள் தோறும் கொடிகள் உயர வளர பெற்றதும் , பாக்குமரத்தில் இளம் பிஞ்சிகள் கம கமன்னு நறுமணம் வீசும் அழகிய பகுதிகளும், மீன்கள் துள்ளி விளையாடுகிற செழுமையான ஆறானது வயலில் புகும் திருவயிந்திரபுரமே!
1157
மூவர் ஆகிய ஒருவனை* மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை*
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச* தண் திருவயிந்திர புரத்து*
மேவு சோதியை வேல் வலவன்* கலிகன்றி விரித்த்துரைத்த*
பாவு தண் தமிழ் பத்து இவை பாடிடப்* பாவங்கள் பயிலாவே* 3.1.10
மூவர் ஆகிய ஒருவனை - (சிவன், பிரம்மன், திருமால்) என மூவர் ஆகிய ஒருவனை
மூவுலகு உண்டு உமிழ்ந்து அளந்தானை - (பூலோகம், வானுலகம், பாதாள உலகம்) என மூன்று உலகங்களையும் உண்டு உமிழ்ந்து அளந்தானை
தேவர் தானவர் சென்று சென்று இறைஞ்ச - தேவர்களும், அசுரர்களும் சென்று சென்று தாழ்ந்து வணங்கும்படி
தண் திருவயிந்திர புரத்து - குளிர்ச்சியான திருவயிந்திரபுரத்தில்
மேவு சோதியை வேல் வலவன் - பரவிய சோதியை வேல் (கொண்டு போரிடுவதில்) வல்லவன்
கலிகன்றி விரித்த்துரைத்த - கலிகன்றி விரிவாக சொன்ன
பாவு தண் தமிழ் பத்து இவை பாடிடப் ௦- தண் தமிழ் பாவு இவை பாடிடப் - இனிய தமிழ் பாட்டு இவை பாடிட
பாவங்கள் பயிலாவே - பாவங்கள் அணுகாது
விளக்கம் :-
அவனும் அவனே என்பது போல திருமால் பிரம்மன் சிவன் என மூவர் ஆகிய ஒருவனை, பாதாளம், வானுலகம், பூவுலகம் என மூன்று உலகங்களையும் முன் யுக முடிவில் ஏற்பட்ட பிரளயத்தில் எந்த பாதிப்பும் ஏற்பதாதவாறு உண்டு பின்பு புது யுகம் ஆரம்பிக்க தன் வயிற்றிலிருந்து உமிழ்ந்தவனை,
குள்ளமான வாமனனாக மகாபலி நடத்திய யாகத்தில் மூன்று அடி மண் பணிந்து கேட்டு பின்பு திரிவிக்ரமனாக உயர வளர்ந்து மூவலகையும் இரண்டே அடியாலே அளந்தவனை,
தேவர்களும், அசுரர்களும் சென்று சென்று தாழ்ந்து வணங்கும்படியாக , குளிர்ச்சியான திருவயிந்திரபுரத்தில் பரவிய சோதியை, வேலை கொண்டு போரிடுவதில் திறமைசாலியான கலிகன்றி விரிவாக கூறிய இனிய தமிழ் பாட்டான இவைகளை பாடிட பாவங்கள் சிறிதளவும் வந்து சேராது.
மூலவர் : தெய்வ நாயக பெருமாள்
உற்சவர்:- அச்சுதன்
அம்மன்/தாயார்:_ செங்கமல தாயார்
மங்களாசாசனம்: திருமங்கை ஆழ்வார்:- 10 பாசுரம்
புராண பெயர் :- திருவயிந்திரபுரம்
தற்போதைய பெயர்:- திருவகிந்திபுரம்
பெருமாளை தரிசிக்க போகும் வழி”-
திரு தெய்வ நாயக பெருமாள் திருவடிகளே சரணம்!
திரு தெய்வ நாயக பெருமாள் திருவடிகளுக்கு சமர்ப்பணம்!