பெரிய திருமொழி
958
வாலிமாவலத்தொருவன துடல்கெட வரிசிலைவளைவித்து,
அன்று ஏலநாறு தண்தடம்பொழிலிடம்பெற இருந்தநலிமய்யத்துள்,
ஆலிமாமுகிலதிர்தர அருவரை அகடுறமுகடேறி,
பீலிமாமயில்நடஞ்செயும் தடஞ்சுனைப் பிரிதிசென்றடை நெஞ்சே. (2) 1.2.1
விளக்கம்:-
மிக பெரிய வலிமை வாய்ந்த வாலி என்ற அரக்கனின் உடல் அழியுமாறு வில்லை வளைத்து அம்பு விட்டார் நம்ம இராமர்.
(இராமர் இருக்குமிடம் எப்படி இருக்குனு பாருங்க) நிறைய சோலைகள் சூழ்ந்துள்ள இமயமலையில் நல்ல அதிர்வோடு கரிய பெரிய மேகங்கள் மலைகளின் மீது உரசுவதால் வந்த சவுண்ட கேட்டு மயில்கள் தோகை விரித்து அழகா டான்ஸ் ஆடுது. அதோடு அருவிகளும் நிறைந்துள்ள ( என்னோட இராமர் வாழும் இடமான) திருபிரிதி சென்று அடை நெஞ்சே!
959
கலங்கமாக்கடலரிகுலம் பணிசெய்ய அருவரையணை கட்டி,
இலங்கைமாநகர்ப் பொடிசெய்தவடிகள் தாம் இருந்தநல்லிமயத்து,
விலங்கல்போல் வனவிறலிருஞ்சினத்தன வேழங்கள் துயர்க்கூர,
பிலங்கொள் வாளெயிற்றரியவை திரிதரு பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.2
விளக்கம்:-
பெரிய கடலும் கலங்கும்படி(சும்மா அதிருதுல்ல)
நம்ம ஆஞ்சநேயரும் அவரோட நண்பர்களும் சேர்ந்து மலைகளை தூக்கி வந்து கடலில் அணை( பிரிட்ஜ்) கட்டுனாங்க. கடலை கடந்து இலங்கை மாநகரை தூள் தூள் ஆக்கிய இராமர் இருக்குமிடம் அழகான இமயமலையில் மலை போல வலுவான மிக கோபமுடைய யானைகளுக்கும் துயரம் தருகின்ற
குகை மாதிரி பெரிய வாயுடைய சிங்கங்கள் திரிந்து கொண்டிருக்கும் (என்னோட இராமர் வாழும் இடமான)
திருபிரிதி சென்று அடை நெஞ்சே!
960
துடிகொள் நுண்ணிடைச்சுரிகுழல் துளங்கெயிற் றிளங்கொடிதிறத்து,
ஆயர் இடிகொள் வெங்குரலினவிடையடர்த்தவன் இருந்த நல்லிமயத்து,
கடிகொள்வேங்கையின் நறுமலரமளியின் மணியறை மிசைவேழம்,
பிடியினோடு வண்டிசைசொலத் துயில்கொளும் பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.3
விளக்கம்:-
சும்மா தல தலன்னு துடிக்கின்ற மெலிசான இடையையும் ,நல்ல கருப்பான கூந்தலையும், மெல்லிய சிரிப்பையும் இளம் கொடி (நல்ல இளசா இருக்கின்ற) நப்பின்னையை (யசோதையின் சகோதரன் பொண்ணு நப்பின்னையை கல்யாணம் பண்ணுவதற்காக) இடியை போல பயங்கரமான குரலை உடைய ஏழு எருதுகளை அடக்கிய நம்ம கண்ணன் இருக்குமிடம் இமயமலையில்
நல்ல வாசனையுள்ள வேங்கை மலர் மேல் (பெட் மாதிரி) யானை தன் குழந்தையோடு படுத்துக்கினு இருக்கு, அதே நேரத்தில வண்டுகள் கீ கீ ன்னு இனிமையான இசை எழுப்புவதை கேட்டு யானை ஹாயா தூங்குது!
(இப்படி அழகான என்னோட கண்ணன் இருக்கும் இடமான)
திருபிரிதி சென்று அடை நெஞ்சே!
961
மறங்கொளாளரியுருவென வெருவர ஒருவனதகல்மார்வம் திறந்து,
வானவர்மணிமுடி பணிதர இருந்தநல்லிமயத்துள்,
இறங்கியேனங்கள் வளைமருப்பிடந்திடக் கிடந்தருகெரிவீசும்,
பிறங்குமா மணியருவியொடிழிதரு பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.4
விளக்கம்:-
ஜிம் பாடியோட(6 pack) மனுசனும் சிங்கமும் கலந்தா போல உருவெடுத்து தூணை பிளந்து வெளிவந்து இரணியனின் மார்பை இரண்டா பிளந்தவனும், வானத்தில் உள்ளவர்களும் தலை வணங்கி தொழும் எங்க நரசிம்மர் இருக்குமிடம் இமயமலையில் உள்ள பன்றிகள் வளைந்த கொம்புகளால்
மணி பாறைகளை பிளக்க அவற்றிலிருந்து சிதறும் மணிகள் அருவியோடு கலந்து அழகா ஒளி (லைட்) தருது!
(இவ்ளோ அழகான என்னோட நரசிம்மர் இருக்குமிடமான)
திருபிரிதி சென்று அடை நெஞ்சே
962
கரைசெய்மாக்கடல்கிடந்தவன் கனைகழல் அமரர்கள்தொழுதேத்த,
அரைசெய்மேகலையலர்மகளவளொடும் அமர்ந்தநல்லிமயத்து,
வரைசெய்மாக்களிறீளவெதிர் வளர்முளை அளைமிகு தேன்தோய்த்து,
பிரசவாரிதன்னிளம்பிடிக்கருள்செயும் பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.5
விளக்கம்:-
கரையுடன் கூடிய பெரிய கடலில் படுத்து கொண்டு இருப்பவன் ,
(எங்க ஆளோட) மலர் பாதங்களை தேவர்களும் வழிபடுவார்கள்,
திருவரையில் சாத்தபட்ட உடையுடன் மகாலட்சுமியோடு ஜோடி போட்டுக்கிட்டு அமர்ந்த இமயமலையில் மலை போல பெரிய யானைகள் இளசான மூங்கில் இலைகளை பறித்து அருகில் இருக்கும் தேனில் தோய்த்து (dip panni)
அந்த தேன் வெள்ளத்தை பிழிந்து தன்னோட இளம் குட்டிகளின் வாயில் ஊட்டும்!
(ஸ் என்ன நாக்கு ஊறுதா! இவ்ளோ அழகான எம்பெருமான் வாழும் இடமான)
திருபிரிதி சென்று அடை நெஞ்சே!
963
பணங்களாயிரமுடைய நல்லவரவணைப் பள்ளிகொள் பரமாவென்று,
இணங்கி வானவர் மணிமுடி பணிதர இருந்தநல்லிமயத்து,
மணங்கொள் மாதவி நெடுங்கொடி விசும்புற நிமிர்ந்தவைமுகில்பற்றி,
பிணங்கு பூம்பொழில் நுழைந்து வண்டிசை சொலும் பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.6
விளக்கம்:-
ஆயிரம் தலைகள் உள்ள ஆதிசேசன் மேலே படுத்து கொண்டு இருக்கும் பரமா! என்று சொல்லி வானத்தில் உள்ளவர்கள் தலை தாழ்த்தி வணங்குவர் (என் பரமன் (இறைவன்) இருக்குமிடம்)
இமயமலையில் நல்ல வாசனையான குருத்தி கொடிகள் வானம் அளவுக்கு உயர்ந்து அங்கே இருக்கும் மேகங்களை பற்றி வளைக்கும்.
இப்படிபட்ட அழகான பூஞ்சோலைகள் நடுவே நுழைந்து வண்டுகள் இன்னிசை பாடும் (இவ்ளோ அழகான என் பரம்பொருள் இருக்கும் இடமான)
திருபிரிதி சென்று அடை நெஞ்சே!
964
கார்கொள் வேங்கைகள் கனவரைதழுவிய கறிவளர்க்கொடி துன்னி,
போர்கொள் வேங்கைகள் புனவரைதழுவிய பூம்பொழிலிமயத்துள்,
ஏர்கொள் பூஞ்சுனைத்தடம்படிந்தினமலர் எட்டுமிட்டிமையோர்கள்,
பேர்களாயிரம் பரவி நின்றடிதொழும் பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.7
விளக்கம்:-
வானம் அளவு உயர்ந்த வேங்கை மரங்களை
தாழ்வாக வளரும் மிளகு கொடிகள் தழுவுது,
நல்லா போர் செய்யும் வேங்கை புலிகள்
மலை குன்றுகளை தழுவி வாழ்கிறது,
அதுமட்டுமா! பூஞ்சோலைகளும் உள்ள இமயமலையில் பூக்கள் நிறைந்த குளத்தில் தேவர்கள் நல்லா நீராடி ( நம்மளோட ஸ்ரீமன் நாராயணன் மீது) எட்டு வகையான மலர்களை தூவி , பெயர்கள் ஆயிரம் சொல்லி நின்று அடி தொழும் திருபிரிதி சென்று அடை நெஞ்சே!
965
இரவுகூர்ந்திருள் பெருகிய வரைமுழை இரும்பசியதுகூர,
அரவமாவிக்கு மகன்பொழில்தழுவிய அருவரையிமயத்து,
பரமனாதியெம்பனிமுகில்வண்ணனென்று எண்ணிநின்று இமையோர்கள்,
பிரமனோடுசென்றடிதொழும்பெருந்தகைப் பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.8
விளக்கம்:-
நைட் ஆகிடிச்சு! ஒரே இருட்டா இருக்கு!மலை குகைகளில் ரொம்ப பசியோடு பாம்புகள் பெருமூச்சி விட்டு கொண்டிருக்கும்
உட்சோலைகளை தழுவிய மலைகள் சூழ்ந்துள்ள இமயமலையில்
பரமனே! ஆதி மூலமே! பனிமுகில் வண்ணா! என்று சொல்லி
நின்று தேவர்கள் பிரம்மனோடு சென்று அடி தொழும்
திருபிரிதி சென்று அடை நெஞ்சே
966
ஓதியாயிரநாமங்கள் உணர்ந்தவர்க்கு உறுதுயரடையாமல்,
ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை இருந்தநல்லிமயத்து,
தாதுமல்கிய பிண்டிவிண்டலர்கின்ற தழல்புரையெழில் நோக்கி,
பேதைவண்டுகளெரியெனவெருவரு பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.9
விளக்கம்:-
ஆயிரம் நாமங்கள் சொல்லி பொருளை உணர்ந்தவங்களுக்கு சிறு துன்பமும் வராமலும், மனசு கஷ்டம் ஏற்படாமலும் அருள் தரும் எமது பெரியவர் இருக்கும் இடமான இமயமலையில் தேன் நிறைந்துள்ள அசோக மலர்கள் விரிந்து எரிமலை போல செக்க செவேலென்று அழகா இருக்கு. இதை பார்த்து அறிவில்லாத வண்டுகள் எரிகின்ற நெருப்பு என நினைத்து பயப்படுதுங்க!
(ஹி ஹி ஒரே காமெடி போங்க! பூவின் சிகப்பை பார்த்து நெருப்புன்னு பயப்படுது வண்டு இப்படிப்பட்ட அழகான எம்பெருமான் இருக்கும் இடமான) திருபிரிதி சென்று அடை நெஞ்சே!
967
கரியமாமுகிற்படலங்கள்கிடந்து அவைமுழங்கிட,
களிறென்று பெரியமாசுணம் வரையெனப்பெயர்தரு பிரிதியெம்பெருமானை,
வரிகொள் வண்டறை பைம்பொழில் மங்கையர் கலியனதொலிமாலை,
அரியவின்னிசைபாடு நல்லடியவர்க்கு அருவினையடயாவே. 1.2.10
விளக்கம்:-
கருப்பு கலர்ல பெரிய மேகங்கள் (பூமிலர்ந்து தண்ணி நிறைய உறிஞ்சிடுச்சி போல) சுத்த முடியாம ஒரே இடத்துல கிடந்து சவுண்டு விடுது! இதை பார்த்து பெரிய மலை பாம்புகள் ஆஹா! நம்ம பசிக்கு இரையாக (கரிய மேகங்களை பார்த்து) யானைகள் வருது என்று அதை பிடிக்க மெதுவா ஊர்ந்து ஊர்ந்து வரும் இடமான திருபிரிதி எம்பெருமானை வரி வண்டுகள் இசைக்கும்! அதோடு பசுமையான சோலைகள் உள்ள திருமங்கை நாட்டு கலியனது ஒலி மாலையை அரிய இன்னிசையாடு பாடும் நல்ல அடியவர்களுக்கு தீவினைகளே வராதுப்பா!
பிரிதி பிரிதி என்று ஆழ்வார் சொல்றாரே பிரிதி எங்கப்பா இருக்கு?
திருமங்கை ஆழ்வார் சொன்ன திருப்பிருதி ஜோஷிமட் என வழங்கப்படுகிறது. பத்திரிநாத்திலிருந்து 52கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 6150 அடி உயரத்தில் உள்ளது. இங்கு நரசிம்மர் ஆலயமும், வாசுதேவப் பெருமாள் ஆலயமும் உள்ளது
பெருமாள்:- பரமபுருஷன் (Kidantha kolam)
தாயார்:- பரிமளவல்லி நாச்சியார்