பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Monday, September 8, 2014

குலசேகர ஆழ்வாரின் திருமலை பாசுரங்கள்


திருமலை பெருமாளிடம் கருவறை  படியாகவே கிடந்தது உன் பவளம் போன்ற வாயையே பார்த்து கொண்டிருப்பேன் என்று கூறிய ஆழ்வார் மேலும் குருகாய், மீனாய், மரமாய், குன்றாய், ஆறாய் வேங்கடமலையில் இருக்கவேண்டும் என்று தன்னுடைய ஆசையை கூறியிருக்கிறார்


 குருகாய் மீனாய்ப் பிறப்பேனே!
 

‘நப்பின்னைக்காக ஏழு எருதுகளை வென்றவனான எம்பெருமானின் சேவடிக்குத் தொண்டாற்றுவது அல்லாமல் உடல் வளர்ந்து தடிக்கின்றதாகிய இந்த மாந்தப் பிறவியை நான் வேண்டேன். அரம்பையர்கள் சூழும் வானுலகையோ மண்ணுலகையோ ஆளும் விருப்பமில்லை.  திருவேங்கடவன் வீற்றிருக்கும் திருவேங்கட மலையில் கோனேரி என்னும் குளத்தில் வாழும் நாரையாகப் பிறப்பேன்;  அல்லது அங்குள்ள சுனையில் மீனாகப் பிறப்பேன்.
 

தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில் 

மீனாய்ப் பிறக்கும் விதியுடையன் ஆவேனே! (678)
 

 உமிழும் வட்டில் பிடித்துப் புகுவேன்
 

திருமலைக் கோயிலினுள் புகுவதற்குரிய ஒரு முறையைக் கண்டுபிடிக்கிறார் ஆழ்வார்.
 

‘மண்ணுலக வைகுந்தமான திருமலை’ சிவனும் பிரமனும் இந்திரனும் நெருங்கி உள்ளே புகுவதற்கு இயலாததாக இருக்கிறது. அத்தகைய வைகுந்தத்தின் திருவாயிலிலே திருவேங்கடத்தான் உமிழ்கின்ற தங்க வட்டிலைக் கையில் ஏந்தி உள்ளே புகுகின்ற பேற்றினை அடைவேனாக!
 

  மரமாய்ப் பிறப்பேன்
 

‘மாயவன் மாலனின் திருவடிகளைக் காணும் ஆசையால் வண்டினங்கள் பண்பாடும் வேங்கட மலையில் செண்பக மலர்களைச் சொரிகிற மரமாக நிற்கும் புண்ணியம் பெறுவேனாக’.
 

‘இன்பம் தருகின்ற செல்வத்தையும் யானை மேலமர்ந்து செல்கின்ற அரசாட்சியையும் நான் விரும்பவில்லை.  எம்பெருமான் வீற்றிருக்கும் எழில் சூழ்ந்த வேங்கட மலையில் கருப்புக் குங்கிலிய மரமாய் நிற்கும் தவமுடையவனாக ஆவேன்’ என்று பாடுகிறார்.
 


   பொற்குவடாய் நிற்பேன்; கானாறாய்ப் பாய்வேன்! 
 

‘மின்னற் கொடி போன்ற நுண்ணிய இடையை உடைய ஊர்வசி மேனகை ஆகியோரின் ஆடல் பாடலை நான் விரும்பவில்லை.  வண்டினங்கள் இசை பாடும் திருவேங்கடத்தில் பொன்மயமாய்ப் பொலிந்து நிற்கும் குன்றாவதற்குரிய அரிய தவத்தை உடையவன் ஆவேன்’.
 

‘முழுநிலவுபோன்ற வெண் கொற்றக்குடையின்கீழ் அரசர்க்கு அரசனாய் வீற்றிருக்கக்கூடிய செல்வத்தை நான் பொருட்டாக மதிக்கமாட்டேன். தேனீக்கள் சூழ்ந்துகொண்டிருக்கும் பூஞ்சோலைகளை உடைய திருவேங்கட மலையில் காட்டாறாகப் பாயும் கருத்தை உடையவன் ஆவேன்’ என்கிறார்.
 

தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல் 

கானாறாய்ப் பாயும் கருத்துடையன் ஆவேனே! (683)
 

படியாயும் கிடப்பேன் 
 

குருகாய், மீனாய், மரமாய், குன்றாய், ஆறாய் வேங்கடமலையில் இருக்க விரும்பும் ஆழ்வாருக்கு மற்றொரு வேட்கை. அடியாரும் வானவரும் திருமாலை வணங்க வரும் வழியாகவும் படியாகவும் கிடந்து அவர்களின் பாதத் தூளிபடும் பேறு வேண்டும் என்கிறார்.
 

‘பிறை சூடிய சிவனும் பிரமனும் இந்திரனும் முறையாகச் செய்யும் பெரிய வேள்விகளின் வேண்டுதல்களை நிறைவேற்றுகிற மறையவனான எம்பெருமானின் திருவேங்கட மலைமேல் வழியாய் அமைந்திருக்கின்ற நிலையை அடைவேன்’.
 

‘செடிபோல் அடர்ந்திருக்கும் தீவினைகளைத் தீர்க்கும் திருமாலே! நெடியோனே! வேங்கடவா! உன் கோயில் வாயிலிலே அடியவர்களும் வானவரும் அரம்பையரும் ஏறி இறங்கும் வாயிற்படியாய்க் கிடந்து உன் பவழவாய் காண்பேன்’.
 

செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! 

நெடியோனே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல் 

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் 

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே! (685)
 

  ஏதேனும் ஆவேனே! 
 

திருவேங்கடத்தில் வேறு எப்பொருளாக ஆகவேண்டும்?  தம் வேட்கைகளைச் சொல்லி முடிக்க முடியவில்லை. இறுதியாகச் சொல்கிறார் :
 

‘மேல்உலகை எல்லாம் ஒருகுடைக்கீழ் ஆண்டு பொன்னணி அணிந்த ஊர்வசியின் கூடலைப் பெற்றாலும் அதனை விரும்பமாட்டேன். பெருமானின் திருவேங்கடப் பொன்மலைமேல் ஏதேனும் ஒரு பொருளாக இருக்கவே விரும்புகின்றேன்’.
 

எம்பெருமான் திருமலைமேல் ஏதேனும் ஆவேனே. (686)
 

  தமிழ்வல்லார் பெறும் பயன்
 

‘குளிர்ச்சாரல் வீசிக் கொண்டிருக்கும் வேங்கடமலையில் எழுந்தருளியுள்ள எம்பெருமானின் பொற்பாதங்களைக் கண்டு குலசேகர மன்னன் வணங்கிச் செய்த இத்தமிழ்ப் பதிகத்தைப் பயின்றவர்கள் எம்பெருமானின் திருவுள்ளத்திற்கு இனியவர் ஆவர்’ என்று இத்திருமொழியை முடிக்கின்றார் குலசேகர ஆழ்வார்.
 
திருவங்கடமுடையான் திருவடிகளே சரணம்!

கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா!

திருப்பதி பெருமாள் கருவறைப் படிக்கு, "குலசேகரன் படி" என்று பெயர்


திருப்பதி என்று இப்போது வழங்கப்படும் திருவேங்கட மலையில் இறைவன் எம்பெருமான் உறைவதால் அம்மலையில் குலசேகரர் எந்த நேரமும் இருந்து இறைவனைக் கண்டு பெரும்பேறு பெறவேண்டும் என்று ஏங்குகின்றார். அந்த ஏக்கத்தைப் போக்கிக்கொள்ளத் தாம் அம் மலையில் மரமாய், பறவையாய், மீனாய்ப் பிறப்பேன் என்றும் ஆறாய், மலைக்குன்றாய், வழியாய், வாயிற்படியாய் என்று ஏதேனும் ஒன்றாய் எப்போதும் அங்கு இருப்பேன் என்றும் பக்திப் பெருக்குடன் பாடுகிறார்

‘செடிபோல் அடர்ந்திருக்கும் தீவினைகளைத் தீர்க்கும் திருமாலே! நெடியோனே! வேங்கடவா! உன் கோயில் வாயிலிலே அடியவர்களும் வானவரும் அரம்பையரும் ஏறி இறங்கும் வாயிற்படியாய்க் கிடந்து உன் பவழவாய் காண்பேன்.


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!

நெடியோனே! வேங்கடவா! நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!

"காட்டுச்செடி, கள்ளிச்செடி போல் வெட்ட வெட்ட வளரும் ஊழ் வினைகளை எல்லாம் ஒழித்து, ஆவி காக்கும் திருமாலே,
உயரங்களின் உயரமே, வேங்கடவா, உன் கோவிலின் வாசற்படியில்,
அடியவர்களும், விண்ணோரும் அவர் பெண்ணோரும், 'தவமாய் தவமிருந்து' காத்துக் கிடக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் உன்னை நான் எப்படிப் பார்த்துக் கொண்டே இருக்க முடியும்?
"நகர்ந்து செல்; மற்றவருக்கும் வழி விடு" என்று தள்ளி விடுவார்களே! அவர்கள் சொல்வதும் நியாயம் தானே?
இதற்கு ஒரே வழி! பேசாமல் உன் கருவறைப் படிக்கட்டாய் என்னை மாற்றி விடு!
உன் பவள வாய், கமலச் செங்கண்ணை, குளிர் முகத்தை, சதா சர்வ காலமும், ஊழி தோறும், வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருப்பேன்" என்று காதலால் உருகுகிறார்!


இன்றைக்கும் திருவேங்கடமுடையான் கருவறைப் படிக்கு, "குலசேகரன் படி" என்று தான் பெயர். அதற்கு ஆரத்தியும் உண்டு

திருவங்கடமுடையான் திருவடிகளே சரணம்!





குலசேகர ஆழ்வார் வரலாறு


குலசேகர ஆழ்வார் சேர மன்னரும் சந்திர குலத்தவருமான திருடவிரதற்கு
மகனாக,கொல்லி நகரில் கலி 28வதான பராபவ வருடம் மாசி மாதம்
சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில்
பிறந்தார்.இவர் ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் கருதப் படுகிறார்.

இவர் தன் வீரம் மிகுந்த நால்வகைப் படையால் எதிரிகளை வென்று புறம்
கண்டு சேர நன்னாட்டில் அமைதி நிலவச் செய்து செங்கோல் ஆட்சி
செய்து வந்தார். இவர் மன்னர் குலத்தில் பிறந்திருந்தும், படைபலமும்
பெரும் செலவமும் பெற்றிருந்தும், மானுட வாழ்க்கையில் பற்றின்றி
மாலவன் சேவையை மனம் உகந்து செய்து வந்தார். எப்பொழுதும் அவன்
அடியார்களால் சூழப் பெற்றவராய் அவன் நாமம் போற்றியும், அவன்
திருவிளையாடல்களை அடியார்கள் கூறக் கேட்டும் வந்தார்.

திருவரங்கனையும் திருவேங்கடவனையும் மற்றும் அவன் உறையும் மற்ற
தலங்களையும் தரிசித்து அத்தலங்களிலே உள்ள அடியாரோடு இணயும்
நாள் எந்நாளோ என்ற ஏக்கத்தில் இருந்தார்.புராண இதிகாசங்களின் 
சாரமான முகுந்த மாலையைப் பாடி அருளினார்.

ஸ்ரீ வால்மீகி பகவான் அருளிச் செய்த இராம காதையின் மீது மிகுந்த
பற்றுடையவராய் அதை ஓதச் செய்து கேட்டு மகிழ்வதை பொழுது
போக்காய்க் கொண்டிருந்தார். ஒரு நாள் இராமன் சீதைக்குக் காவலாய்
இலக்குவனை நிறுத்தி விட்டுத் தனியொருவராய் கரன் திரிசிரன்
தூஷணன் முதலான பதிநான்காயிரம் அரக்கர்களுடன் போரிடத் துணிந்த
கதை கேட்க நேர்ந்தது. உடனே “என்னப்பன் இராமனுக்கு என்னாகுமோ?
துணையாய்ச் செல்ல எவருமில்லையே?” என்று எண்ணினார். தன் 
நால்வகைப் படையையும் திரட்டி தம் தலைமையில் இராம பிரானுக்கு
உதவி செய்யக் கிளம்பினார்.

இதைக்கண்ட அமைச்சர்கள் அரசர் தம் சொல்லை கோட்கும் மன 
நிலையில் இல்லை என்பதனை உணர்ந்தனர். தூதுவர் போல் சிலரை
அனுப்பி “மன்னா! இராம பிரான் தனியொருவராகவே அந்தப் 
பதிநான்காயிரம் அரக்கர்களை அழித்து வெற்றியுடன் திரும்பினார்” என்று
சொல்லச் செய்தனர். மகிழ்ந்த மன்னரும் படையோடு நாடு திரும்பினார்.

கவலையில் ஆழ்ந்த அமைச்சர்கள் கூடி இத்தகைய குழப்பங்களைத் 
தவிர்க்க என்ன செய்யலாம் என ஆலோசித்தனர். இதற்கெல்லாம்
வைணவ அடியாரோடு வேந்தன் கொண்டிருக்கும் தொடர்பே காரணம்
என்ற முடிவிற்கு வந்தனர். தொடர்பைத் துண்டிக்க ஓர் திட்டமும்
தீட்டினர். அரன்மனையுள் அரசன் வணங்கும் பெருமாளின் திருவாபரணப்
பெட்டியில் இருந்தவற்றுள் மிக அழகான ஒரு நவரத்தின மாலையை 
எடுத்து மறைத்து வைத்தனர். அரசனிடம் ஆபரணத்தைத் திருடியது
அடியவரே என்று பழி சுமத்தினர். ஒரு குடத்தினுள் நச்சுப் பாம்பொன்றை
இட்டு மூடினர். அடியவர் தாம் குற்றம அற்றவர் எனில் அக் குடத்தில்
கை விட்டு மீள வேண்டும் என்றனர். அரசரோ அடியவரைத் தடுத்து 
அவர்கள் சார்பாக “பரனன்பர் கொள்ளார்” என்று கூறி கோவிந்தனை
வேண்டிக் குடத்தில் கை விட்டு வெற்றிகரமாக மீண்டார். அமைச்சர்கள்
மனம் வருந்தி மன்னன் தாள் பணிந்து நவரத்தின மாலையை சமர்ப்பித்து
மன்னிக்க வேண்டினர்.

அடியாரை மதிக்காத, பொறுக்காத மக்களிடையே வாழ விருப்பற்ரவராய்
சேரலர்கோன் தன் மகனுக்கு முடி சூட்டி வைத்து “ஆனான செல்வத்து
அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்
வேண்டேன்” என்று தன் விருப்பத்திற்குரிய அடியார் குழாத்தோடு 
திருவரங்கம் சென்றடைந்தார். 

              குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்