பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Monday, June 6, 2011

நல்ல பண்புடைய பல்லவ மன்னன் பணிந்து வழிபட்ட வைகுண்ட பெருமாள் கோவில் அதுவே!



1128
சொல்லு வன் சொல் பொருள் தான் அவையாய்ச்* சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய்*
நல் அரன் நான்முகன்  நாரணனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகாய கச்சி* 
பல்லவன் வில்லவன் என்று உலகில்* பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் 
பல்லவன்மல்லையர் கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரம் அதுவே* 2.9.1 

சொல்லு வன் சொல் பொருள் தான் அவையாய்ச் - பேசும் வார்த்தைவலிமையான
சொல்லான வேதம்அவற்றின் பொருளும் தானே அவைகளாக இருப்பவனும் 
சுவை ஊறு ஒலி நாற்றமும் தோற்றமுமாய் - சுவைதொடு உணர்வுசப்தம்,வாசனை,
காட்சி தெரிதல் (போன்ற ஐந்து புலன்களாகவும்) தானே ஆகி
நல் அரன் நான்முகன்  நாரணனுக்கு இடம் தான் - நல்லவர்களான சிவனுக்கும்,
பிரம்மனுக்கும்  (உள்ளுயிராய் உள்ள) நாராயணனுக்கு இடம் 
தடம் சூழ்ந்து அழகாய கச்சி - குளங்கள் சூழ்ந்து அழகாக உள்ள காஞ்சிபுரம் 
பல்லவன் வில்லவன் என்று உலகில் - பல்லவன்வில்லவன் என்று உலகில் 
பலராய்ப் பல வேந்தர் வணங்கு கழல் - பலராய் பல மன்னர்கள் வணங்கும் திருவடி 
பல்லவன் மல்லையர் கோன் பணிந்த - மல்லையர் கோன் பல்லவன் பணிந்த 
மகாபலிபுரத்தில் முன்பு அரசனாக இருந்த பல்லவன் வழிபட்ட 
பரமேச்சுர விண்ணகரம் அதுவே - பரமேச்சுர விண்ணகரம் அதுவே 

விளக்கம் :-
நாம் பேசும் வார்த்தைவேதங்களில் உள்ள வார்த்தைஅவற்றின் பொருளும் தானே ஆகிஐம்புலன்கள் என்று சொல்லப்படும் சுவைதொடு உணர்வுசப்தம்வாசனைஉள்ளும் வெளியும் தெரியும் காட்சிகள் என்று இவை அனைத்தும் தானே ஆகி

நல்லன்பு  சிவனும்பிரம்மனும்  ஆகிய  நாராயணுக்கு இடம்குளங்கள் நிறைந்து  காட்சி தரும் அழகான காஞ்சிபுரம்அங்கு சென்று பல்லவன்வில்லவன் என்று பல பெயர்கள் கொண்ட  
பல மன்னர்களும் வணங்கும் பொன் மலர் பாதத்தைமகாபலிபுரத்தை ஆட்சி செய்த
பல்லவ மன்னன் பணிந்து வழிபட்ட   வைகுண்ட பெருமாள் கோவில் அதுவே 



1129
கார்மன்னு நீள் விசும்பும்* கடலும் சுடரும் நிலனும் மலையும்* தன் உந்தித் 
தார்மன்னு தாமரைக் கண்ணன் இடம்* தடம் மா மதில் சூழ்ந்து அழகாய கச்சி* 
தேர்மன்னு தென்னவனை முனையில்* செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன்* 
பார்மன்னு பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரம் அதுவே* 2.9.2

கார்மன்னு நீள் விசும்பும் - மேகம் பொருந்திய பெரிய வானமும் 
கடலும் சுடரும் நிலனும் மலையும் - கடலும்நிலாசூரியன் போன்ற வெளிச்சமும்,
பூமியும்,மலையும்
தன் உந்தித் தார்மன்னு தாமரைக் கண்ணன் இடம் - தன் தொப்புள் மலரில் தோற்றுவித்த தாமரை போன்ற கண்களை உடைய கண்ணனுக்கு இடம் 
தடம் மா மதில் சூழ்ந்து அழகாய கச்சி - குளங்கள்பெரிய சுற்று சுவர்கள் சூழ்ந்த
காஞ்சிபுரம் 
தேர்மன்னு தென்னவனை முனையில் - தேரில் வந்த பாண்டிய மன்னனை போரில் 
செருவில் திறல் வாட்டிய திண் சிலையோன் - சண்டை செய்யும் வில்லின் திறமையை வீழ்த்திய வலிமை வாய்ந்த வில்லையுடைய  
பார்மன்னு பல்லவர் கோன் பணிந்த - பூமியில் சிறப்பாக (வாழ்ந்த) பல்லவ மன்னன் 
வழிபட்ட 
பரமேச்சுர விண்ணகரம் அதுவே - பரமேச்சுர விண்ணகரம் அதுவே


விளக்கம் :-
அழகிய மேகம் சூழ்ந்த பெரிய வானமும், கடலும்,சூரியன், நிலா, நட்சத்திரம் போன்ற ஒளி வீசும் பொருள்களும், நாம் வாழும் பூமியும், மலைகளையும் தனது தொப்புள் கொடியில் 
இருந்து தோற்றுவித்தஅழகிய தாமரை மலர் போன்ற கண்களையுடைய கண்ணன்
வசிக்கும் இடம், அழகிய குளங்கள்,  பெரிய பெரிய சுற்று சுவர்கள் சூழ்ந்து காட்சி தரும் அழகிய காஞ்சிபுரம்.

முன் ஒரு காலத்தில் சிறந்த தேரில் கம்பீரமாக வரும் பாண்டிய மன்னனுடன் நடந்த போரில்  அவனது வில்லை வீழ்த்திய வலிமையான வில்லை உடையவனும்பூமியில் சிறப்பாக வாழ்ந்தவனுமாகிய பல்லவ மன்னன் பணிந்து வழிபட்ட  வைகுண்ட பெருமாள் கோவில் அதுவே 



1130
உரம்  தரு மெல் அணைப் பள்ளி கொண்டான்* ஒரு கால் முன்னம் மா உருவாய்க் கடலுள்*
வரம் தரு மா மணிவண்ணன் இடம்மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர்வேல்நெடு வாயில் உகச் செருவில் முன நாள்
பரந்தவன் பல்லவர் கோன் பணிந்தபரமேச்சுர விண்ணகரம் அதுவே* 2.9.3

ஒரு கால் முன்னம் மா உருவாய்க் கடலுள் - முன்னம் ஒரு கால் மா உருவாய்க்
கடலுள் - முன் ஒரு காலத்தில் பெரிய உருவாய் 
உரம்  தரு மெல் அணைப் பள்ளி கொண்டான் - உரம் மெல் தரு அணைப் பள்ளி
கொண்டான் - வலிமையுடைய மிருதுவான (சுகத்தை) தரும் (பாம்பு) படுகையில்
படுத்து கொண்டிருப்பவனான 
வரம் தரு மா மணிவண்ணன் இடம்  - விரும்புவதை தரும் சிறந்த நீல மணி (போன்ற) நிறமுடையவனுக்கு இடம் 
மணி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி - (விளக்குகளால்) ஒளி வீசும் மாடங்கள் சூழ்ந்த
அழகான காஞ்சிபுரம் 
நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல் - மண்ணையில் நிரந்தவர் புண் நுகர் வேல் 
 பூமியில் எதிரிகளின்  சதையை விரும்பும் வேலின் 
நெடு வாயில் உகச் செருவில் முன நாள் - நீண்ட வாயில்  அவர்களை வீழ்த்தி போரில் முன்
ஒரு நாள் 
பரந்தவன் பல்லவர் கோன் பணிந்த - எங்கும் தன் படைகள் சூழ்ந்து போர் புரிந்த பல்லவ மன்னன் பணிந்த 
பரமேச்சுர விண்ணகரம் அதுவே - பரமேச்சுர விண்ணகரம் அதுவே

விளக்கம் :-
ஆதி காலத்தில் மிக பெரிய உருவம் கொண்டு வலிமையோடு மென்மையும் நல்லா
எசமா சுகத்தையும் தரும் ஆதிசேசன் பாம்பு படுக்கையில் படுத்து கொண்டு
விரும்பியதை தரும் சிறந்த நீல வைரம் போன்ற நிறமுடையவனுக்கு இடம், எல்லா வீடுகளின் வாசலிலும் ஜகஜோதியா ஒளி வீசும் விளக்குகள் வைக்கும் மாடங்கள்
சூழ்ந்த அழகான காஞ்சிபுரம் .

முன் ஒரு காலத்தில் நடந்த போரில் பூமியில் உள்ள எதிரி நாட்டு மன்னர்களை தனது
கூரிய வேலினால் வீழ்த்தி ,வீரத்தோடு எங்கும் தன் படைகள் சூழ சுற்றி சுற்றி சும்மா 
பறந்து பறந்து வீரத்தோடு போர் புரிந்த பல்லவ மன்னன் பணிந்து வழிபட்ட வைகுண்ட பெருமாள் கோவில் அதுவே 

1131
அண்டமும் எண் திசையும் நிலனும்* அலை நீரோடு வான் எரி கால் முதலா 
உண்டவன்* எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி
விண்டவர் இண்டைக் குழாமுடனே* விரைந்தார் இரிய செருவில் முனிந்து
பண்டு ஒரு கால் வளைத்தான் பணிந்த* பரமேச்சுர விண்ணகரம் அதுவே* 2.9.4

அண்டமும் எண் திசையும் நிலனும் - உலகங்களையும்எட்டு திசைகளையும்பூமியையும் 
அலை நீரோடு வான் எரி கால் முதலா உண்டவன் - கடல் நீரோடுவானம்நெருப்புகாற்று முதலியவற்றை உண்டவன்  
எந்தை பிரானது இடம் ஒளி மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி - என் தந்தையாகிய இறைவனது இடம் ஒளி (வீசும்மாடங்கள் சூழ்ந்த அழகான காஞ்சிபுரம் 
விண்டவர் இண்டைக் குழாமுடனே - பகைவர்கள் நெருங்கிய கூட்டத்துடனே 
விரைந்தார் இரிய செருவில் முனிந்து - வரைந்து வந்தவர் நீங்க போரில் வெகுண்டு  
பண்டு ஒரு கால் வளைத்தான் பணிந்த - முன் ஒரு காலத்தில் (அம்பை)வளைத்தவன் பணிந்த 
பரமேச்சுர விண்ணகரம் அதுவே - பரமேச்சுர விண்ணகரம் அதுவே 

விளக்கம் :-
பேரழிவு ஏற்பட்டபோது எல்லா உலகங்களையும்எட்டு திசைகளையும்பூமியையும்
கடல் நீரோடுநெருப்புகாற்று முதலியவற்றை வாயில் விழுங்கி தன் வயிற்றில் வைத்து காத்த என் தந்தையாகிய இறைவனுக்கு இடம்வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வைக்கும் ஒளி வீசும் மாடங்கள் சூழ்ந்த அழகான காஞ்சிபுரம். 

முன் ஒரு காலத்தில்  எதிரிகள் நெருங்கிய கூட்டம் கூட்டமாக விரைந்து வந்தவர்கள் தோற்று  ஓடும்படும் படி, அவர்களை வீழ்த்தி  போரில் வலிமையான வில்லை 
வளைத்து அம்பால் அவர்களை வீழ்த்தியவீரம் கொண்ட பல்லவ மன்னன் 
பணிந்து வழிபட்ட வைகுண்ட பெருமாள் கோவில் அதுவே 

1132
தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின்* துயர் தீர்த்து அரவம் வெருவ* முன நாள் 
பூம்புனல் பொய்கை புக்கான் அவனுக்கு இடம் தான்* தடம் சூழ்ந்து அழகாய கச்சி* 
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத்* திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற* 
பாம்பு உடைப் பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரம் அதுவே* 2.9.5

தூம்பு உடைத் திண் கை வன் தாள் களிற்றின் - துளை உடைய திடமான தும்பிக்கை வலிமையான கால்கள் (உடைய) யானையின் 
துயர் தீர்த்து அரவம் வெருவ முன நாள்  - துயரம் தீர்த்து பாம்பு அஞ்ச முன்பொரு நாள்  
பூம்புனல் பொய்கை புக்கான் - அழகிய நீர் நிலையான பொய்கைக்குள் புகுந்தான் 
அவனுக்கு இடம் தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி - அவனுக்கு இடம்தான் குளங்கள்
சூழ்ந்த அழகான காஞ்சிபுரம் 
தேம் பொழில் குன்று எயில் தென்னவனைத் - தேன் (நிறைந்த) சோலைகளும் மலை (போன்ற) கோட்டை சுவர்கள் (கொண்ட) பாண்டிய மன்னனை 
திசைப்ப செருமேல் வியந்து அன்று சென்ற - திகைக்க போர் மேல் (அனைவரும்) ஆச்சர்யப்படும்படி அன்று சென்ற 
பாம்பு உடைப் பல்லவர் கோன் பணிந்த - பாம்பு (கொடி) உடைய பல்லவ மன்னன் பணிந்த 
பரமேச்சுர விண்ணகரம் அதுவே - பரமேச்சுர விண்ணகரம் அதுவே

அருமையான பாசுரத்தில்  வரும் இரண்டு கதைகள் 
"கஜேந்திர மோட்சம்" 
பெருமாள் மீது பக்தியுடைய யானை ஒன்று தினமும் குளத்தில் இருந்து தாமரை
மலர்களை பறித்து பெருமாளுக்கு சமர்பித்து கொண்டு இருந்தது. ஒரு சமயம் குளத்தில் இறங்கி தாமரையை பறித்த போது முதலை யானையின் காலை பிடிச்சுக்கிச்சி. உடனே யானை தன் உடலை பற்றி சிறிதும் கவலை படாமல் எப்படியாவது தாமரை மலரை பெருமாளுக்கு சமர்பிக்க வேண்டுமே என்ற ஏக்கத்தில் ஆதி மூலமே” என்று நினைத்து பிளிறிய போது பெருமாள் கருட வாகனத்தில் விரைந்து வந்து முதலையை தன்
சக்கரத்தால் அழித்து யானையை காப்பாற்றினார். யானைக்கு மறு பிறவி இல்லாத மோட்சத்தை பெருமாள் அருளினார்.

''காளிங்க நர்த்தனம்''
யமுனை நதியின் ஒருபகுதியில் கொடிய விஷத்தைக் கொண்டுள்ள ஐந்து தலை நாகமொன்று இருந்து வந்தது. அதன் பெயர் காளிங்கம் (அ) காளியன். அது தன்
விஷத்தை எல்லாம் நதி நீரிலேயே கக்கி கக்கி அப்பகுதி நீர் முழுதும் விஷமாகவே மாறிவிட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் எந்த ஒரு உயிரினமும்தாவரங்களோவிலங்கினங்களோ உயிர் வாழ முடிவதில்லை. ஒரே ஒரு கடம்ப மரம் மட்டும் கரையில் வளர்ந்திருந்தது

ஒரு நாள் பிருந்தாவனத்திலேதன் தோழர்களுடன் பந்து விளையாடிக் கொண்டிருந்தான் சிறுவன் கண்ணன். அப்பொழுது திடீரென அப்பந்து காளிங்கன் இருந்த பகுதியில் சென்று விழுந்து விட்டது.பலர் அங்கு செல்லவேண்டாம் விஷ பாம்பு உள்ளது என்று சொல்லி தடுத்தும் கண்ணன்கடம்ப மரத்தின் கிளை வழியாக காளிங்கன் இருந்த இடத்திற்குச் சென்றான்.கண்ணனும் அவன் போக்கிலே விட்டு பின் அதன் தலைமேல் ஏறி நின்று,
தன் புல்லாங்குழலை இசைத்தவண்ணம் நடனம்(நர்த்தனம்) புரியத் துவங்கினான். இந்த நடனத்தின் பெயர் ''காளிங்க நர்த்தனம்''.

இறைவனின் கால் காளிங்கனின் தலை மேல் படும் போதுஅண்ட சராசரமே திரண்டு
வந்து தன் தலையில் உருளுவதைப் போல் உணர்ந்தான். தன் ஆணவத்தால் அவன்
தலைத் தூக்கும் போதெலாம்இறைவன் அந்த தலையில் ஒரே மிதியாய் மிதித்து நடனமாடினான். காளிங்கனும் சோர்வுற்று மரணபயம் கொண்டுசெய்வதறியாது திகைத்தான்.இறைவனும் காளிங்கனைக் கொல்லாதுஅதன் ஆணவத்தை மட்டும்
கொன்று திருவருள் புரிந்தான்.

விளக்கம் :-
கனமான தும்பிக்கையும், அந்த தும்பிக்கையில் அழகான துளையும்வலிமையான குண்டு குண்டா கால்களும் உடைய கஜேந்திர யானையின் துயரை தீர்த்து மோட்சம் கொடுத்துகாளிங்கன் என்னும் பாம்பு அஞ்சும்படி முன்பு ஒரு நாள் அழகிய நீர் நிறைந்த
பொய்கையில் குதித்து ஐந்து தலைகள் கொண்ட காளிங்கன் பாம்பு  மேல் நடனம் ஆடியவனுக்கு இடம்தான் குளங்கள் சூழ்ந்து காட்சி தரும் அழகான காஞ்சிபுரம். 

முன்பு ஒரு காலத்தில் டேஸ்டான தேன் நிறைந்த பூஞ்சோலைகளும்மலைகள் போன்ற பெரிய பெரிய கோட்டைகளும் கொண்ட பாண்டிய நாட்டு மன்னவனை போரில் வீழ்த்தி. அனைவரும் ஆச்சர்யப்டும்படி  வெற்றியுடன் சென்ற, பாம்பு கொடி உடைய பல்லவ
மன்னன் பணிந்து வழிபட்ட வைகுண்ட பெருமாள் கோவில் அதுவே 



1133
திண் படைக் கோளரியின் உருவாய்* திறலோன் அகலம் செருவில் முன நாள்* 
புண் படப் போழ்ந்த பிரானது இடம்* பொரு மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி* 
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப* விடை வெல் கொடி வேல் படை முன் உயர்த்த* 
பண்புடைப்  பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரம் அதுவே* 2.9.6

திண் படைக் கோளரியின் உருவாய் - திடமான கருவியுடன் சிங்கத்தின் உருவத்துடன் 
திறலோன் அகலம் செருவில் முன நாள் - வல்லமையுடையவனின் மார்பை
சண்டையில் முன்பு ஒரு நாள் 
புண் படப் போழ்ந்த பிரானது இடம்  - காயம் ஏற்பட பிளந்த இறைவனது இடம் 
பொரு மாடங்கள் சூழ்ந்து அழகாய கச்சி - சமமான மாடங்கள் சூழ்ந்து அழகான
காஞ்சிபுரம் 
வெண் குடை நீழல் செங்கோல் நடப்ப  - ஒரே ஆட்சியின் நிழலில் தன் கட்டளைப்படி
நடக்க 
விடை வெல் கொடி வேல் படை முன் உயர்த்த - நிமிர்ந்த வெற்றி கொடியை வேல் (கொண்ட தன்) படையின் முன் உயர்த்த 
பண்புடைப்  பல்லவர் கோன் பணிந்த - நல்ல இயல்புடைய பல்லவ மன்னன் பணிந்த 
பரமேச்சுர விண்ணகரம் அதுவே - பரமேச்சுர விண்ணகரம் அதுவே

அருமையான பாசுரத்தில்  வரும் கதை
எங்கும் இருப்பார் இறைவன் " 
இரணியன் என்னும் அரக்கன்தன்னையே எல்லோரும் கடவுள் என தொழ வேண்டும்
என்று எண்ணினான். இரணியனின் மகன் பிரகலாதன்அதை எதிர்த்தான். பிரகலாதன்
ஸ்ரீமன் நாராயணன் ஒருவரையே கடவுள் என்று போற்றிபூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன்மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்திதன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.
பிரகலாதன் விடாமல் ஹரி ஹரி என்று பெருமாளையே பூஜித்து கொண்டிருந்தான். ஒரு சமயத்தில் மிகுந்த கோபமுற்ற இரணியன் சும்மா எப்ப பாத்தாலும் ஹரி ஹரி நாராயண என்று சொல்றியே எங்கேடா இருக்கிறான் உன் நாராயணன் காட்டுடா பார்க்கலாம் என்று ஆக்ரோசத்துடன் கூறினான். 

பிரகாலாதன் சாந்தமாக ஸ்ரீமன் நாரயணன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான் எங்கும் நிறைந்திருப்பான் என்று ஹரி பக்தியோடு கூறினான். மாட்னடா நீ! என்பது
போல எங்கே அருகில் இருக்கும் தூணை தட்டி எங்கே இந்த தூணில் இருப்பானா!
என்று இரணியன் கேட்டான்.

பிரகலாதன் உடனே ம்! இந்த தூணிலும்  இருப்பார் என்று கூறியவுடனே ஹா! ஹா!
க்ரா! க்ரா! என்ற கர்ஜனையுடன் சிங்க முகமும்மானிட உடலும் கலந்து நரசிம்ம
பெருமாள் தூணை உடைத்து வெளிவந்தார். மகா அரக்கனான இரணியனின் உடலை 
தன் கூரிய நகங்களாலே பிளந்து அவனை அழித்தார். பிரகலாதனுக்கு ஆசி வழங்கினார். 

விளக்கம் :-
முன்பு ஒரு காலத்தில் கூர்மையான நகங்களுடன் நரசிம்ம உருவத்துடன், மகா பலசாலியான கொடூர அரக்கன் இரணியனின் மார்பை, இரத்தம் பீரித்து வரும்படி பிளந்த இறைவனது
இடம், எல்லா வீடுகளிலும் ஒரே மாதிரியான விளக்கு ஏற்றும் மாடங்கள் சூழ்ந்த அழகான காஞ்சிபுரம்.

முன்பு ஒரே குடையின் கீழ் நன்கு ஆட்சி புரிந்துதன் கட்டளை படி அனைவரும் ஏற்று நடக்கவேல் ஆயுதத்தை கையில் கொண்டுள்ள தன் படைகளின் முன்பு, கம்பீரமாக நிமிர்ந்த வெற்றி கொடியை உயர்த்தியநல்ல குணமுடைய பல்லவ மன்னன் பணிந்து வழிபட்ட வைகுண்ட பெருமாள் கோவில் அதுவே 

1134
இலகிய நீள் முடி மாவலி தன் பேரு வேள்வியில்* மாண் உருவாய் முன நாள்* 
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகாய கச்சி* 
உலகு உடை மன்னவன் தென்னவனைக்* கன்னி மாமதில் சூழ் கருவூர் வெருவ
பல படை சாய வென்றான் பணிந்த* பரமேச்சுர விண்ணகரம் அதுவே* 2.9.7

இலகிய நீள் முடி மாவலி தன் பேரு வேள்வியில் - இரக்க (குணம் கொண்டவனும்)
பெரிய கிரீடத்தை (தலையில் சூடியவனுமான) மகாபலி தன் பெரிய வேள்வியில் 
மாண் உருவாய் முன நாள் - உயர்ந்த உருவத்துடன் முன்பு ஒரு நாள் 
சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்தான் - (மகாபலி)
 தாரை வார்த்து (கொடுக்க) பெரிய  உலகத்தை கொண்டவனுக்கும் இடம்தான் 
தடம் சூழ்ந்து அழகாய கச்சி - குளங்கள் சூழ்ந்த அழகான காசிபுரம் 
உலகு உடை மன்னவன் தென்னவனைக்  - பல நிலபகுதிகளை உடைய மன்னவனான பாண்டியனை 
கன்னி மாமதில் சூழ் கருவூர் வெருவ - புதிய பெரிய சுற்று சுவர்கள் சூழ்ந்த கருவூர்
அஞ்ச 
பல படை சாய வென்றான் பணிந்த - பல படைகளை வீழ்த்தி வென்றான் பணிந்த 
பரமேச்சுர விண்ணகரம் அதுவே - பரமேச்சுர விண்ணகரம் அதுவே 

அருமையான பாசுரத்தில்  வரும் கதை
"உலகளந்த பெருமாள்"
மகாபலி என்று மன்னன் ஒருவன் இருந்தான். அவன் இரண்யகசிபுவின் புதல்வனான 'பக்த பிரகலாதன்' பேரனாவான். அவர், தன் தவ வலிமையால் தேவர்களை எல்லாம் வெற்றிக் கொண்டான்.அதேசமயம், உலக மக்களுக்கு ஒரு தீங்கும் செய்யாது, உலக உயிர்கள் அனைத்தும் இவனின் வெண்கொற்றங்குடைகீழ் மிகுந்த சுகபோகமாக வாழ்ந்தனவாம். ஆனால், ஒரு குட்டியோன்டு அளவுள்ள ஆணவம் மட்டும் மாவலிச் சக்கரவர்த்தியின் தலைக்குள்ள இருந்துச்சாம். தான் தான் இந்த உலகத்துலேயே ரொம்ப நல்லவரு.
வல்லவரு. யாரு என்னா கேட்டாலும் கொடுத்துடுறவரு; தானம் செய்வதில் தன்னை
விட தலைசிறந்தவர் எவருமில்லை என்ற எண்ணம் ரொம்பவே இருந்துச்சாம்.தான்தான் தானத்தின் தலைவன் என்கிற அளவுக்கு இருந்ததாம். இந்த எண்ணத்துடனேயே அவர்
ஆட்சி புரிந்து, விண்ணுலகம், மண்ணுலகம் எல்லாத்துலயும் ஒரு கலக்கு கலக்கினார் மாவலி சக்கரவர்த்தி.

தேவலோக பதவியில் இருந்து நழுவாமல் இருக்கும்படியாக நூறு  அசுவமேத யாகம்
செய்யத் தொடங்கினான். இதனால் மூவுலகிலும் இவன் புகழ் ஓங்கி நின்றது.
அவன் ஆணவத்தை அடக்க பெருமாள் காசியப முனிவருக்கு மகனாக வந்து, 
வாமனனாகத் பிறந்தார் . வாமனனாக வந்த இறைவன், ஒரு கையில் கமண்டலம், 
மறுகையில் ஒரு குடையும் கொண்டு, உடலை மறைக்க மேற்போர்வையாக உத்தரீகமும் அணிந்து கொண்டு, குள்ளமான உருவத்துடன், மகாபலிச் சக்கரவர்த்தி நடத்திய வேள்விக்கு  சென்றான்.

சிறுவனாக வந்த வாமனனிடம், மகாபலிச் சக்கரவர்த்தி 'சிறுவனே! உனக்கு என்னிடம் இருந்து என்ன வேண்டும்?' என்று கேட்டார்.வாமனன், தன் காலடியால் அளக்கப்பெற்ற மூன்றடி அளவுடைய நிலம் வேண்டும் என்று யாசித்தார்.ஜுஜிபி! என்பது போல மூன்றடி மண்தானே எடுத்து கொள்! என்று கூற குள்ள வாமன பெருமாள் ஓங்கி உயர்ந்து  தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.முதலடியால் மண்ணையும், இரண்டாம் அடியால் விண்ணையும் அளந்துவிட்டார்.

மூன்றடியில், இரண்டடியிலேயே அனைத்தையும் அளந்துவிட்டதும், மூன்றாம் அடிக்கு
இடம் இல்லாது திகைக்கவே....மாவலித் தலைகுனிந்து, இறைவனிடம் வணங்கி நின்று, மூன்றாமடிக்குத் தன்னையே ஏற்றுக் கொள்ளுமாறு கொடுத்துவிட்டார்.
இறைவனின் திருவடி பட்டதால், மாவலியின் ஆணவம் அழிந்து முக்தி பெற்றான்.

விளக்கம் :-
இரக்ககுணமும்தலையில் அழகான பெரிய கிரீடத்தையும் உடைய மகாபலி நடத்திய வேள்வியில் முன்பு ஒரு நாள் குள்ளமாக வாமன வடிவில் சென்று மூன்று அடி மண் தா!
என்று கேட்டவுடன்மகாபலியும் மூன்று அடி மண்தானே! எடுத்துகொள் என்று நீர் ஊற்றி
தாரை வார்த்து கொடுக்கஉடனே மிக பெரிய உருவம் எடுத்து எல்லா உலகங்களையும் இரண்டு அடியாலே அளந்து தன் வசம் கொண்டவனுக்கு இடம்தான் குளங்கள் நிறைந்த அழகான காஞ்சிபுரம் 

பல நிலபகுதிகளை தன் கைவசம் உடைய பாண்டிய மன்னனின் ஒரு நிலபகுதியான  புதியதாக கட்டப்பட்ட பெரிய சுற்று சுவர்கள் சூழ்ந்த கருவூரும் அஞ்சும்படி பாண்டிய மன்னனை போரில் தோற்கடித்து கருவூரை கைப்பற்றியவனும்இப்படியாக பல
படைகளையும் வீழ்த்தி வென்றவனான பல்லவ மன்னன் பணிந்து வழிபட்ட வைகுண்ட பெருமாள் கோவில் அதுவே 






1135
குடைத் திறல் மன்னவனாய்* ஒரு கால் குரங்கைப் படையா* மலையால் கடலை
அடைத்தவன் எந்தை பிரானது இடம்* மணி மாடங்கள் சூழ்ந்த அழகாய கச்சி* 
விடைத் திறல் வில்லவன் நென் மெலியில்* வெருவச் செரு வேல் வலங்கைப் பிடித்த 
படைத் திறல் பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரம் அதுவே* 2.9.8

குடைத் திறல் மன்னவனாய் ௦- ஆட்சி திறமை (உள்ள) மன்னவனாய் 
ஒரு கால் குரங்கைப் படையா - ஒரு காலத்தில் ஆஞ்சநேயர் படைகளை (கொண்டு)
மலையால் கடலை அடைத்தவன் எந்தை பிரானது இடம் - மலையால் கடலை அடைத்தவன்
என் தந்தையாகிய இறைவனது இடம் 
மணி மாடங்கள் சூழ்ந்த அழகாய கச்சி - (விளக்குகளால்) ஒளி வீசும் மாடங்கள் சூழ்ந்த
அழகான காஞ்சிபுரம் 
விடைத் திறல் வில்லவன் நென் மெலியில்  - காளை (போன்ற) வலுவுடைய வில் வித்தையில் சிறந்தவனை நென் மெலியில் 
வெருவச் செரு வேல் வலங்கைப் பிடித்த - அஞ்ச போர் வேலை வலக்கையில் பிடித்த 
படைத் திறல் பல்லவர் கோன் பணிந்த - படைகளை (நடத்துவதில்) திறமையுடைய
பல்லவ மன்னன் பணிந்த 
பரமேச்சுர விண்ணகரம் அதுவே - பரமேச்சுர விண்ணகரம் அதுவே


அருமையான பாசுரத்தில்  வரும் கதை
ராமர் அனுமன் உட்பட வானர சேனைகளோடு கட்டிய அணை
இலங்கையில் அரசாண்ட இராவணனிடம் இருந்து சீதா தாயாரை மீட்க  ராமநாதபுரதில் உள்ள  திருப்புல்லாணியில் இருந்து இலங்கை செல்ல சமுத்திரத்தின் மீது பாலம்
கட்டலாம் என்று இராமர் சொன்ன உடனேயே ஆஞ்சநேயர்  உட்பட வானர சேனைகள்  செயலில் ஈடுபடலாயின. காடுகளில் போய் பெரியபெரிய மரங்களையெல்லாம் வேரோடு பெயர்த்து எடுத்து வந்தனர். மலைகளில் இருந்து பாறைகளை உருட்டிக் கொண்டு வந்தன. இவற்றையெல்லாம் கடலில் போட்டபோது அதன் நீர் ஆகாயம் வரை உயரக்கிளம்பி சிதறியது. 
பால வேலை துரிதமாகவே நடைபெற பெற்றது. கற்களையும்மரங்களையும் சீராக வானரங்கள் அடுக்கிஅடுக்கி வைத்தவாறே அழகிய பாலத்தை வெகு சீக்கிரத்தில் அமைத்தும் விட்டனர். இவ்வளவும் நளனென்னும் வானரனின் தலைமையில் நடந்தது. அவனது திறமைமிக்க ஆணைகள் மூலமாக பெரிய பெரிய மலை பாறைககளும்மரங்களும் உரிய இடங்களில் ஒழுங்காக வைக்கப் பட்டன. 
சிறிது காலத்திலேயே பாலம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. இலங்கையை அடையப் பாலம் அமைக்கப்பட்டபின் வானரர்கள் அடைந்த மகிழ்ச்சியைக் கூறவும் வேண்டுமா?
மறுவினாடியே எல்லா வானரங்களும் அதன் வழியே சென்று இலங்கையின் கரையை அடைந்து விட்டனர். விபீஷணன் தன் ஆள்களுடன் கதையைத் தோளில்மீது வைத்தவாறே அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தான்.யாராவது எதிர்க்க வந்தால் அவர்களோடு
போரிடவே அவன் அப்படி செய்தான்.
இராமரையும் இலட்சுமணனையும்அனுமாரும் அங்கதனும் தம் தோள்மீது ஏற்றிக் கொண்டு இலங்கைக்குக் கொண்டு போய்ச் சேர்த்தனர். கொடூர அரக்கன் இராவணனை அழித்து சீதையை மீட்டனர் 

விளக்கம் :-
முன்பு ஒரு காலத்தில் ஓர் ஆட்சியின் கீழ் திறமையோடு ஆட்சி  செய்த உத்தமராகிய எம்பெருமான், தன் மனைவியான  சீதா தாயாரை, இலங்கையில்  உள்ள கொடூர 
இராவணனிடமிருந்து மீட்க சென்றார். அப்போது அங்கு தடையாக இருந்த கடலை
கடக்க ஆஞ்சநேயர் மற்றும் அவரது நண்பர்களை கொண்டு மலைகளை கொண்டு  
கடலில் அணை கட்டிய, என் தந்தையாகிய இறைவனுக்கு இடம், விளக்குகளால்
ஒளி வீசும் மாடங்கள் சூழ்ந்த அழகான காஞ்சிபுரம்

காளை போன்று வலுவுடைய காஞ்சிபுரத்தில் உள்ள நென் மெலியில் வில் வித்தையில் சிறந்த மன்னன் அஞ்சும்படி போர் வேலை வலக்கையில் பிடித்து அவனை
தோற்கடித்தவனும்தன் படைகளை சிறப்பாக நடத்துவதில் திறமையுடைய பல்லவ
மன்னன் பணிந்து வழிபட்ட வைகுண்ட பெருமாள் கோவில் அதுவே 

1136
பிறையுடை வாள் நுதல் பின்னை திறத்து* முன்னே ஒரு கால் செருவில் உருமின்* 
மறையுடை மால் விடை ஏழ் அடர்த்தார்க்கு இடம்தான்* தடம் சூழ்ந்து அழகாய கச்சி* 
கறையுடை வாள் மற மன்னர் கெட* கடல்போல் முழங்கும் குரல் கடுவாய்* 
பறையுடைப் பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகரம் அதுவே* 2.9.9

பிறையுடை வாள் நுதல்  பின்னை திறத்து - வாள் உடை பிறை நுதல் பின்னை திறத்து - ஒளியுடைய சந்திரனை (போன்ற) நெற்றியுடைய நப்பின்னைக்காக 
முன்னே ஒரு கால் செருவில் உருமின் - முன்னே ஒரு காலத்தில் போரில் இடி (போன்ற) குரலுடன் 
மறையுடை மால் விடை ஏழ் அடர்த்தார்க்கு - எதிர்ப்புடைய பெரிய காளை ஏழையும் அடக்கியவருக்கு 
இடம்தான் தடம் சூழ்ந்து அழகாய கச்சி - இடம்தான் குளங்கள் சூழ்ந்து அழகான காஞ்சிபுரம் 
கறையுடை வாள் மாற மன்னர் கெட - (இரத்தகறையுடைய வாளுடன் (வந்தவீரமுடைய மன்னர்கள் தோற்று (ஓடும்படி அவர்களை போரில் தோற்கடித்த)
கடல்போல் முழங்கும் குரல் கடுவாய் - கடல் போல முழங்கும் குரலுடன் வேகமாக அடிக்கும் 
பறையுடைப் பல்லவர் கோன் பணிந்த - மத்தளத்தையுடைய பல்லவ மன்னன் பணிந்த 
பரமேச்சுர விண்ணகரம் அதுவே - பரமேச்சுர விண்ணகரம் அதுவே

அருமையான பாசுரத்தில்  வரும் கதை
ஏழு காளைகளை அடக்கிய எம்பெருமான் 
கண்ணன்யசோதையின் குழந்தையாகஆயர்பாடியில வளர்ந்துட்டு இருக்கும் போதேஅதாவது கண்ணன் சின்ன பாலகனா இருக்கும் போதேயசோதையின் சகோதரனும்துவரைப்பதியின் மன்னனுமான கும்பன் என்பவரின் பொண்ணுதான் நப்பின்னை.  கண்ணனின் வருங்கால மனைவி ன்னு சின்ன வயசுலேயே முடிவு செஞ்சுட்டாங்க.

 
நப்பின்னையும் கண்ணன் பால் காதல் கொள்கிறாள். ஆனாநப்பின்னையோட அப்பா,
ஒரு நிபந்தனை வைக்கிறார். தன்னிடம் உள்ள ஏழு அடங்காத முரட்டுக் காளைகளை
யார் அடக்குறாங்களோ! அவங்களுக்குத்தான் நப்பின்னையை மணம் முடித்துக் கொடுப்பேன்னு சொல்லிடறாரு.
எத்தனையோ பேர் முயன்றும் முடியாமல் தோத்துப் போகநம்ம மதுரைவீரன்மாயக்கண்ணன் வந்து ஏழு காளைகளையும் அடக்கிதன் மாமாவின் மகளான 
நப்பின்னையைத் திருமணம் செய்து கொண்டார்.

விளக்கம் :-
நிலவின் ஒளி போல அழகான நெற்றியுடைய தன் மாமன் மகள் நப்பின்னைக்காகஇடி இடிப்பது போல கணீர் குரலுடன்  தன்னை எதிர்த்து வந்த வலிமை வாய்ந்த ஏழு
காளைகளை அடக்கியவருக்கு இடம்தான் குளங்கள் சூழ்ந்து காட்சி தரும் அழகான காஞ்சிபுரம். 

இரத்த கறையுடைய கூர்மையான வாளுடன் வந்த வீரம் கொண்ட மன்னர்கள் கெடும்படி போரில் அவர்களை தோற்கடித்து வெற்றி பெற்று தன் ஊருக்கு கம்பீரமாக செல்லும்போதே, அங்கு  எல்லாருக்கும் ஒரு நற்செய்தி!!  நம் மாமன்னர் வெற்றி பெற்றார்!
என்று கடல் போல முழங்கும் சத்தத்துடன் வேகமாக அடிக்கும் மத்தளத்தையுடைய
பல்லவ மன்னர் பணிந்து வழிபட்ட வைகுண்ட பெருமாள் கோவில் அதுவே 

1137
பார் மன்னு தொல் புகழ்ப் பல்லவர் கோன் பணிந்த* பரமேச்சுர விண்ணகர் மேல்* 
கார் மன்னு நீள் வயல் மங்கையர் தம் தலைவன்* கலிகன்றி குன்றாது உரைத்த* 
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார்* திருமாமகள் தன் அருளால்* உலகில் 
தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ்* செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே* 2.9.10

பார் மன்னு தொல் புகழ்ப் - பூமியில் நிலைத்த தொன்மையான புகழுடைய 
பல்லவர் கோன் பணிந்த - பல்லவ மன்னன் பணிந்த 
பரமேச்சுர விண்ணகர் மேல் - பரமேச்சுர விண்ணகர் மேல் 
கார் மன்னு நீள் வயல் - பசுமை பொருந்திய நீண்ட வயல்கள் (சூழ்ந்த)
மங்கையர் தம் தலைவன் - திருமங்கை நாட்டிலுள்ளவர்களுக்கு தலைவனான 
கலிகன்றி குன்றாது உரைத்த - கலிகன்றி குறையில்லாமல் சொன்ன 
சீர் மன்னு செந்தமிழ் மாலை வல்லார் - ழகு பொருந்திய செந்தமிழ் மாலை (சொல்ல) வல்லவர்கள் 
திருமாமகள் தன் அருளால் - மகாலட்சுமியின் அருளால் 
உலகில்  தேர் மன்னராய் ஒலி மா கடல் சூழ் - உலகில் தேர் மன்னராய் ஆர்பரிக்கும் பெரிய கடலால் சூழ்ந்த 
செழு நீர் உலகாண்டு திகழ்வர்களே - செழுமையான நீரையுடைய உலகத்தை ஆண்டு திகழ்வார்கள் 

விளக்கம் :-
உலகில் நிலைத்த தொன்மையான புகழுடைய பல்லவ மன்னன் பணிந்து வழிபட்ட வைகுண்ட பெருமாள் மேல்பசுமையான நீண்ட வயல்கள் சூழ்ந்த திருமங்கை நாட்டு மக்களுக்கு தலைவன் கலிகன்றி சொன்ன அழகான செந்தமிழ் மாலையை சொல்ல வல்லவர்கள் மகாலட்சுமியின் அருளால் உலகில் தேர் வைத்திருக்கும் மன்னராக
முழங்கும் செழுமையான கடல் நீர் சூழ்ந்த இவ்வுலகை உலகை ஆண்டு திகழ்வார்கள் 

மூலவர் : பரமபதநாதர்(வைகுண்ட பெருமாள்)
அம்மன்/தாயார் : வைகுண்ட வல்லி தாயார் 

மங்களாசாசனம்: திருமங்கை ஆழ்வார்:- 10 பாசுரம                         
புராண பெயர் :- பரமேஸ்வர விண்ணகரம்
தற்போதைய பெயர்:-  காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவில் 

காஞ்சிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் கோயில் அமைந்துள்ளது.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ளது.


திரு வைகுண்ட பெருமாள் திருவடிகளே சரணம் !
திரு வைகுண்ட பெருமாள் திருவடிக்கு சமர்ப்பணம்  !