பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Monday, April 25, 2011

ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே!

திருஇடவெந்தை பெருமாளிடம் என் பெண்ணுக்கு என்ன செய்வதாக நினைத்து இருக்கிறாய்!  என்று பெண்ணின் தாய் முறையிடுதல்!


                                                                   லட்சுமி வராகப்பெருமாள்

1108
திவளும் வெண் மதி போல் திரு முகத்து அரிவை* செழுங்கடல் அமுதினில் பிறந்த
அவளும்* நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும்* ஆகிலும் ஆசை விடாளால்*
குவளை அம் கண்ணி  கொல்லி அம் பாவை சொல்லு* நின் தாள் நயந்திருந்த
இவளை* உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! 2.7.1

திவளும் வெண் மதி போல் திரு முகத்து அரிவை - ஒளி வீசுகின்ற வெள்ளை நிலவு போல அழகிய முகமுடைய இளைமையான பெண்ணும் 
செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும் - செழுமையான கடல் அமுதினில் பிறந்தவளுமான மகாலட்சுமி 
நின் ஆகத்து இருப்பதும் அறிந்தும் ஆகிலும் ஆசை விடாளால் - உன் மார்பில் இருப்பது தெரியும் . இருந்தாலும் (உன் மேல் இருக்கும்) ஆசை விடாமல் (இருக்கும்) 
குவளை அம் கண்ணி  கொல்லி அம் பாவை - கரு நீல அல்லி மலர் போல கண்களை உடையவளும், கொல்லி மலையில் இருக்கும் அழகு பெண் தெய்வத்தை  போன்ற அழுகுடையவளும் (ஆன என் மகள்) 
சொல்லு நின் தாள் நயந்திருந்த இவளை - உன் திருவடியையே விரும்பியிருந்த இவளை
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் - உன் மனத்தால் என்ன நினைத்து கொண்டு இருக்கிறாய் சொல்லு 
இடவெந்தை எந்தை பிரானே - இடவெந்தை என் தந்தையாகிய எம்பெருமாளே!  
  
விளக்கம்:-
ஜகஜோதியா ஒளி வீசி கொண்டிருக்கும் நிலவை போல அழகான முகம் கொண்ட
இளசான பெண்ணானவளும், முன்பு பாற்கடலை கடைந்த போது கடல்  அமுதிலிருந்து தோன்றிய அழகான பொண்ணு மகாலட்சுமி உனது மார்பில் இருப்பது தெரிந்தும்,

உன் மேல் வைத்திருக்கும் ஆசையை விடாமல் இருக்கும் என் மகள். நீல அல்லி மலர்  போல அழகான கண்களை உடையவள் , கொல்லி மலை பெண் தெய்வத்தை போல செம்ம  அழகானவள்,  உன் அழகிய பாதத்தின் மீதே ஆசை வைத்திருக்கும் இவளை பற்றி உன் மனதில் அப்படி என்னதான் நினைத்து கொண்டிருக்கிறாய் சொல்லு! திருஇடவெந்தை  எந்தை பிரானே!

1109
துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள்* துணை முலை சாந்து கொண்டு அணியாள்*
குளம் படு குவளைக் கண் இணை எழதாள்* கோல் நல் மலர் குழற்கு அணியாள்* 
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த* மால் என்னும் மால் இன மொழியாள்*
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! 2.7.2 

துளம் படு முறுவல் தோழியர்க்கு அருளாள் -  மாதுளம் பழம் (போன்ற பற்களை  கொண்டவளான என் மகள்) தோழிகளுக்கு முன்பு புன்னகைப்பதில்லை  
துணை முலை சாந்து கொண்டு அணியாள் - (அழகுக்கு ஏற்றவாறு சிறப்பா) பொருந்திய முலைகளில் சந்தனம் பூசி அலங்கரித்து கொள்ளவதில்லை 
குளம் படு குவளைக் கண் இணை எழதாள் - குளத்தில் பூக்கும் கரு நீல அல்லி மலரை போன்ற கண்களில் மை இட்டு கொள்வதில்லை 
கோல் நல் மலர் குழற்கு அணியாள்  - அழகிய நல்ல மலர்களை கூந்தலில் அணிவதில்லை 
வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த - வளம் மிக்க கடல் சூழ்ந்த உலகத்தை முன்பு (தன் திருவடியாலே) அளந்த 
மால் என்னும் மால் இன மொழியாள் - பெருமாள் என்று சொல்லும் காம  மயக்கத்தோடு கலந்த பேச்சை உடையவள்
இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் - இளமையான பெண்ணான இவளுக்கு என்ன (செய்வதாக) நினைத்து இருக்கிறாய் 
இடவெந்தை எந்தை பிரானே - - இடவெந்தை என் தந்தையாகிய எம்பெருமாளே! 

விளக்கம்:-
மாதுளம் பழத்தின் உள்ளே பொடி பொடியா இருக்கும் இனிப்பான விதையை போன்ற பற்களை கொண்ட என் மகள், அவளோட தோழிகளுக்கு கூட புன்னகைப்பதில்லை.  உடல் அழகுக்கு ஏத்தா மாதிரி நச்சுனு இருக்கும் அழகான பெரிய முலைகளுக்கு சந்தனம் பூசி கொள்வதில்லை.  குளத்தில் பூக்கும் 
நீல அல்லி மலரை போல அழகான கண்களுக்கு மை இட்டு கொள்வதில்லை. அழகான நல்ல மலர்களை தன் கூந்தலில் வைத்து கொள்வதில்லை.

ஆனால் எப்போதும் முத்து, பவளம் என்று நிறைந்திருக்கும் வளம் மிக்க கடல் சூழ்ந்த உலகத்தை, முன்பு தன் அழகிய திருவடிகளால் அளந்த பெருமாள் என்று காமம் கலந்த மயக்கத்தோடு பேசி கொண்டிருக்கிறாள். இளசான அழகிய பெண்ணான இவளுக்கு  என்ன செய்வதாக நினைத்து கொண்டிருக்கிறாய் திருஇடவெந்தை எந்தை பிரானே! 





                                                                அழகிய என் பெண்


1110
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்* தட முலைக்கு அணியிலும்  தழல் ஆம்*
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்* பொரு கடல் புலம்பிலும்  புலம்பும்* 
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்* வளைகளும் இறை நில்லா*
எந்தன் ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! 2.7.3

சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் - சந்தனமும், நகைகளும், நீர் கலந்த சந்தனமும் 
தட முலைக்கு அணியிலும்  தழல் ஆம் - பெரிய முலைக்கு அணிந்து கொண்டாலும் நெருப்பாம் 
போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும் - வரும் வெள்ளை நிலாவும் சூரியன் போல சுட (உடல்) மெலிகிறது 
பொரு கடல் புலம்பிலும்  புலம்பும் - அலை அடிக்கும் கடல் கோஷம் எழுப்பினாலும் இவள் கதறுவாள் 
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம் - புதிதாக துளிர் விட்ட இலை போல வழவழப்பான உடல் நிறமும் (காம மயக்காதால்) பொன் நிறமாம் 
வளைகளும் இறை நில்லா - (கை) வளையல்களும் சிறிதும் நிற்காமல் (கழண்டு விழுகிறது) 
எந்தன் ஏந்திழை இவளுக்கு என் நினைந்து இருந்தாய் - ஏந்திழை எந்தன் - நகைகள் அணிந்த என்னுடைய (பெண்ணான) இவளுக்கு என் நினைந்து இருந்தாய் 
இடவெந்தை எந்தை பிரானே - இடவெந்தை என் தந்தையாகிய பெருமாளே! 

விளக்கம்:-
குளிர்ச்சியான சந்தனமும், அழகான நகைகளும், தண்ணீர் கலந்த சந்தனமும் அழகான பெரிய முலைகளுக்கு அணிந்து கொண்டிருந்தாலும், அவையெல்லாம் இவளுக்கு நெருப்பு போலவே எரிப்பதாக எண்ணுகிறாள். குளிர்ச்சியாக வானத்தில் தெரியும் வெள்ளை நிலவும் இவளுக்கு நெருப்பு போல சுடுவதால் உடம்பும் ஒல்லியாகி கொண்டே போகிறது.

அதுமட்டுமல்ல அலைகள் சரமாரியாக அடித்து கொண்டு ஆர்ப்பரிப்பதை  பார்த்து இவளும் ஓ! என்று கத்துகிறாள்.  மாநிறம் கொண்ட அழகான வழவழப்பான உடலும்  காம மயக்கத்தால் பொன் நிறமாக மாறியிருக்கிறது. கையில் வளையல்களும் சிறிதும் நிற்காமல் கழண்டு விழுகிறது.
அழகான நகைகள் அணிந்துள்ள என் பெண்ணான இவளுக்கு  என்ன செய்வதாக நினைத்து கொண்டிருக்கிறாய் திருஇடவெந்தை  எந்தை பிரானே! 

1111
ஊழியின் பெரிதால் நாழிகை! என்னும்* ஒண் சுடர் துயின்றதால்! என்னும்* 
ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா* தென்றலும் தீயினில் கொடிதாம்* 
தோழி ஓ! என்னும் துணை முலை அரக்கும்* சொல்லுமின் என் செய்கேன்? என்னும்* 
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! 2.7.4

ஊழியின் பெரிதால் நாழிகை! என்னும் - நாழிகை ஊழியின் பெரிதால் என்னும் - ஒரு சில நிமிடங்கள் ஒரு யுகத்தை விட பெரிதாக தோன்றுகிறது என்கிறாள் 
ஒண் சுடர் துயின்றதால்! என்னும் - ஒளிமிக்க சூரியன் தூங்கி விட்டதா என்கிறாள் 
ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா - (இரவில்) கடலும் அலை வீசி புலம்புகிறது ஆகிலும் (இவள்) தூங்காமல் இருக்கிறாள் 
தென்றலும் தீயினில் கொடிதாம் - தென்றல் காற்றும் நெருப்பை விட கொடுமையாக இருக்கிறதாம் 
தோழி ஓ! என்னும் துணை முலை அரக்கும் - ஐயோ! தோழி (என்ன செய்வேன்) என்கிறாள், (வெறுப்பில்) இரண்டு முலைகளையும் கசக்குகிறாள் 
சொல்லுமின் என் செய்கேன்? என்னும் - சொல்லுங்கள் (நான்) என்ன செய்வேன்? என்று கேட்கிறாள் 
ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் - (உன் மேல் அளவில்லாத காதல் கொண்ட) ஏழையான என் (செல்ல) தங்கத்துக்கு (என்ன செய்வதாக) நினைத்து  இருக்கிறாய் 
இடவெந்தை எந்தை பிரானே - திருஇடவெந்தை என் தந்தையாகிய பெருமாளே!

விளக்கம்:-
அரை மணி நேரம் கூட ஒரு பெரிய யுகமே கடந்ததை விடவும் பெரிதாக உணர்கிறாள். இவ்வளவு நேரமாகியும் உதிக்காமல் இருக்கும் ஒளியுடைய சூரியன் தூங்கி விட்டதா? என்று கேட்கிறாள். கடலும் நள்ளிரவில் அலைகளால் ஓசை எழுப்புகிறது! ஆனாலும் இவள் தூங்குவதில்லை!. மென்மையான தென்றல் காற்றும் இவளுக்கு சுடும் நெருப்பை விட கொடுமையாக உணர்கிறாள்.

!! தோழி...! என்று கதறுகிறாள். இரண்டு முலைகளையும் வெறுப்பால் கசக்கு கசக்கு என்று கசக்குகிறாள். சொல்லுங்கள் நான் என்னதான் செய்வது? என்று கேட்கிறாள். பெரும் காமம் கலந்த காதல் நோயால் அவதிப்பட்டு இருக்கும் ஏழையான என் செல்ல தங்கத்துக்கு என்ன செய்வதாக நினைத்து கொண்டிருக்கிறாய்! திருஇடவெந்தை எந்தை பிரானே!

1112
ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஒதாள்* உருகும் நின் திரு உரு நினைந்து*
காதன்மை பெரிது கையறவு  உடையள்* கயல் நெடுங்கண் துயில் மறந்தாள்*
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது* தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல்
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! 2.7.5

ஓதிலும் உன் பேர் அன்றி மற்று ஒதாள் - வாய் விட்டு கூறினாலும் உன் பேர் தவிர மற்றவை கூறமாட்டாள் 
உருகும் நின் திரு உரு நினைந்து - நின் திரு உரு நினைந்து உருகும் - உன் திருஉருவம் கண்டு உருகுவாள் 
காதன்மை பெரிது கையறவு  உடையள் - (உன் மேல் வைத்திருக்கும்) காதல் பெரியது. செயலற்ற நிலையில் இருக்கிறாள் 
கயல் நெடுங்கண் துயில் மறந்தாள் - கெண்டை மீன் போல பெரிய கண்கள் (கொண்ட என் மகள்) தூக்கத்தை மறந்தாள்
பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது - கள்ளம் கபடம் இல்லாத (என்) பெண்ணின் சிறு பிள்ளைத்தனம் பெரியதாக உள்ளது 
தெள்ளியள் வள்ளி நுண் மருங்குல் - தெளிவானவள், கொடி (போல) மிக சிறிய இடுப்பை உடையவள் 
ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய் - எதிரிகள் முன்னால் (இவளுக்கு) என்ன நினைத்து இருந்தாய் 
இடவெந்தை எந்தை பிரானே - திரு இடவெந்தை என் தந்தையாகிய பெருமாளே! 

 விளக்கம்:-
வாய் விட்டு கூறினாலும் உன் பேர் தவிர மற்றவற்றை கூறமாட்டாள். உன் அழகிய உருவத்தை கண்டு உள்ளம் உருகுவாள்.உன் மேல் வைத்திருக்கும் காதலும் அதிகமாயிருப்பதால் என்ன செய்வதென்றே தெரியாமல் இருக்கிறாள்.கெண்டை மீனை போல பெரிய கண் கொண்ட இவள் தூங்குவதையே மறந்தாள். வெளி உலகு தெரியாத என் பெண்ணின் குழந்தை தனமும் பெரியதாக உள்ளது.

ஆனாலும் உன்னை பற்றி தெரிந்து கொள்வதில் தெளிவுள்ளவளாய் இருக்கும், வள்ளி கொடி போல வளைஞ்சி நெளிஞ்சி இருக்கும் அழகிய இடுப்பை கொண்ட இவளுக்கு, தெய்வமே இல்லை என்று சொல்பவர்களுக்கு முன்பாக, அவர்களுக்கு சாதகமாக நீ ஒருவன் இல்லை என்பது போல இப்பெண்ணை  தவிக்க விடுவாயா? நீ இருக்கிறாய் என்று நிரூபிக்க இவளுக்கு அருள்வாயா? என்ன செய்வதாக நினைத்து கொண்டு இருக்கிறாய் திருஇடவெந்தை எந்தை பிரானே! 


1113
தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்* தடங்கடல் நுடங்கு எயில் இலங்கை* 
வன் குடி  மயங்க வாள் அமர் தொலைத்த* வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்*
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி* மென் முலை பொன் பயந்திருந்த*
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! 2.7.6

தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்  - தன் குலத்திற்கு (என்று) எதுவும் பொருத்தமா நினைக்கமாட்டாள் 
தடங்கடல் நுடங்கு எயில் இலங்கை  - பெரிய கடலோடு வளைந்த மதில் இலங்கை 
வன் குடி  மயங்க வாள் அமர் தொலைத்த - கொடிய குலத்தவர் (அரக்கர்கள்) மயங்கும்படி  கொடிய போரில் (அவர்களை) அழித்த 
வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும் - செய்தியை கேட்டு இன்புறும் மயங்கும் 
மின் கொடி மருங்குல் சுருங்க மேல் நெருங்கி - மின்னல் கொடி போல (இருக்கும்) இடை சுருங்க மேலே நெருங்கி 
மென் முலை பொன் பயந்திருந்த - மென்மையான முலையில் பொன் நிறமாகி இருந்த 
என் கொடி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் - என் பெண் இவளுக்கு என்ன செய்வதாக நினைத்து கொண்டு இருக்கிறாய் 
இடவெந்தை எந்தை பிரானே - திருஇடவெந்தை என் தந்தையாகிய பெருமாளே !

விளக்கம்:-
துன்பம் நீக்கினால் நீக்கு! நீக்கவிட்டாலும் சரி! உன் விருப்பபடியே நடக்கட்டும்! நான் உன்னிடமே அன்பு செலுத்துவேன் என்று சொல்லும் அளவுக்கு இறை பக்தி கொண்ட பெருமை வாய்ந்த குலத்தில் பிறந்த இவள் தன் குலத்திற்கு தகுந்தவாறு நினைக்காமல் நீ உடனடியாக வேண்டியதை கொடுக்க வேண்டும் என்பது போல அவசரபடுகிறாள்.

முன்பு சீதையை கடத்திய இராவணனிடமிருந்து சீதையை மீட்க பெரிய கடலும்,  வளைந்த மிக பெரிய சுற்று சுவர்களும் கொண்ட இலங்கையில் கொடிய அரக்கர்களிடம் போர் புரிந்து அவர்களை அழித்த செய்தியை கேட்டு நீ சீதாவுக்காக என்னவெல்லாம் செய்கிறாய்  என்று எண்ணி சந்தோசமடைகிறாள். அதே போல் தனக்கு ஒன்றும் செய்யவில்லையே என்று எண்ணி மயங்குகிறாள் 

உன் மேல் கொண்ட காதலால் மின்னல் போலவும், வஞ்சி கொடி போலவும் நச்சன்னு இருக்கும் இடை சுருங்க, வழவழன்னு இருக்கும் முலைகளும் ஒன்றோடொன்று மார்பின் மேலே நெருங்கி பொன்னிறமாக மாறி இருக்கிறது.  கொடி போன்ற அழகான என் செல்ல பெண்ணுக்கு என்ன செய்வதாக நினைத்து இருக்கிறாய் திரு இடவெந்தை எந்தை பிரானே!  

1114
உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும்* உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால்*
வளங்கனிப் பொழில் சூழ் மாலிருஞ்சோலை* மாயனே! என்று வாய் வெருவும்*
களங்கனி முறுவல் காரிகை பெரிது* கவலையோடு அவலம் சேர்ந்திருந்த
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே!2.7.7 

உளம் கனிந்து இருக்கும் உன்னையே பிதற்றும் - உள்ளம் பழுத்து இருக்கும் உன்னை பற்றியே பேசுகிறாள் 
உனக்கு அன்றி எனக்கு அன்பு ஒன்று இலளால் - உன்னிடம் அன்றி என்னிடம் அன்பு சிறிதும்   இல்லை 
வளங்கனிப் பொழில் சூழ் மாலிருஞ்சோலை - செழிப்பான பழங்கள் கொண்ட சோலைகள் சூழ்ந்த திருமாலிருஞ்சோலை 
மாயனே! என்று வாய் வெருவும் மாயனே! என்று வாயில் கூறி கொண்டிருக்கிறாள் 
களங்கனி முறுவல் காரிகை - களாப்பழம் போன்ற புன்னகையும் அழகும் கொண்டவள் 
பெரிது கவலையோடு அவலம் சேர்ந்திருந்த - பெரிய கவலையோடு உடல் அசதியும் சேர்ந்திருந்த 
இளங்கனி இவளுக்கு என் நினைந்து இருந்தாய் - இளமையான பெண்ணான இவளுக்கு என்ன (செய்வதாக) நினைத்து இருக்கிறாய் 
இடவெந்தை எந்தை பிரானே - திரு இடவெந்தை என் தந்தையாகிய பெருமாளே !

 விளக்கம்:-
உள்ளம் பழுத்து தெளிவா இருக்கும் என் பெண் உன்னை பற்றியே எந்நேரமும் பேசி கொண்டிருக்கிறாள். உன்னிடம் மட்டுமே அன்பு செலுத்தும் இவள் உன்னை தவிர என் மேல் கூட இவளுக்கு அன்பு இல்லை.

சுவையான கொழுத்த பழங்கள் நிறைய இருக்கும், சோலைகள் சூழ்ந்த திருமாலிருஞ்சோலை மாயனே! என்று வாயால் கூறி கொண்டிருக்கிறாள். களாப்பழம் இனிப்பதை போல அவள் புன்னகையும் இனிக்கும் அளவுக்கு  ரொம்ப அழகானவள்.

பெரிய கவலையோடு உடலும் நொந்து போய் இருக்கும், இளமையான பெண்ணான இவளுக்கு என்ன செய்வதாக நினைத்து இருக்கிறாய்! திரு இடவெந்தை எந்தை பிரானே! 


                                                                        திருப்புட்குழி
1115
அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு* அழியுமால் என் உள்ளம்! என்னும்*
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்* போதுமோ நீர்மலைக்கு என்னும்* 
குலம் கெழு கொல்லிக் கோமள வல்லிக்* கொடி இடை நெடு மழைக் கண்ணி*
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! 2.7.8

அலம் கெழு தடக்கை ஆயன் வாய் ஆம்பற்கு -  கலப்பை கொண்ட பெரிய கையையுடைய கண்ணன் வாயில்  வைத்து ஊதும் குழல் ஓசைக்கு 
அழியுமால் என் உள்ளம்! என்னும் - அழிகிறதே! என் உள்ளம் என்கிறாள் 
புலம் கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும் -  வயல்கள் சூழ்ந்த (அதற்க்கு) ஏற்றார்போல நீர்கள் உடைய திருப்புட்குழி பெருமாளை பற்றி பாடுகிறாள் 
போதுமோ நீர்மலைக்கு என்னும் - போலாமா திருநீர்மலைக்கு என்கிறாள் 
குலம் கெழு கொல்லிக் கோமள வல்லிக் - நல்ல மக்கள்  கொண்ட கொல்லி மலை  அழகிய பெண் 
கொடி இடை நெடு மழைக் கண்ணி - கொடி (போன்ற) இடை, பெரிய மழை (போல) கண்களில் நீர் ஊற்றும் கண்ணை உடையவள் 
இலங்கு எழில் தோளிக்கு என் நினைந்து இருந்தாய் - பிரகாசமான அழகு தோள்களை கொண்டவளுக்கு என்ன (செய்வதாக) நினைத்து இருக்கிறாய் 
இடவெந்தை எந்தை பிரானே!  - திரு இடவெந்தை என் தந்தையாகிய பெருமாளே! 

விளக்கம்:-
கலப்பை கொண்ட அழகான பெரிய கைகளை உடைய பலராமனாக பிறந்தவனும், பசு மேய்க்கும் குலத்தில் பிறந்தவனுமான கண்ணன்  வாயில் வைத்து ஊதும் புல்லாங்குழலின் ஓசைக்கு அழிகிறதே! எனது உள்ளம் என்கிறாள். 

சுற்றிலும் வயல்கள் சூழ்ந்த, வயல்களுக்கு ஏற்றார்போல அழகான நீர்நிலைகளும் பொருந்தியுள்ள, காஞ்சிபுரத்தில் உள்ள திருப்புட்குழி கோவிலை பற்றி ஆசையோடு பாடுகிறாள். திடீரென்று திருநீர் மலை பெருமாள் ஞாபகம் வர இப்பவே போலாமா! சென்னையிலுள்ள திருநீர்மலைக்கு என்கிறாள் .

நல்ல மக்கள் வாழும் கொல்லி மலையில் இருக்கும் மற்றவர்களை வசீகரிக்கும் பேரழகு கொண்ட கொண்ட, கொல்லி பாவை பெண் தெய்வத்தை போன்று ரொம்ப அழகான என் பெண், கொடி போல வளைந்து நெளிந்து நச்சுன்னு இருக்கும் இடை கொண்டவள்.

உன்னை நினைத்து ஏங்கியதோடு மட்டுமில்லாமல் அவளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையே!! என்ற ஏக்கத்தோடு சர சரன்னு ஊற்றும் மழை போல கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருக்கிறது . பிரகாசமான பளபளன்னு இருக்கும் அழகிய மென்மையான தோள்களை கொண்ட என் பெண்ணுக்கு அப்படி என்னதான் செய்வதாக நினைத்து கொண்டிருக்கிறாய்! திரு இடவெந்தை எந்தை பிரானே





                                                                           திருநீர்மலை


1116
பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள்* பொரு கயல் கண் துயில் மறந்தாள்*
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது* இவ் அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன்* 
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி* வீங்கிய வன முலையாளுக்கு* 
என் கொல் ஆம்! குறிப்பில் என் நினைந்து இருந்தாய்* இடவெந்தை எந்தை பிரானே! 2.7.9

பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் - தங்கம் போல (காமம் கலந்த காதலால்) பசலை நிறம் கொண்ட மென்மையான் தோளை உடையவள்  
பொரு கயல் கண் துயில் மறந்தாள் - சண்டை போடும் கயல் மீன்களை போல கண்ணை கொண்ட இவள் தூக்கத்தையே மறந்தாள்
அன்பினால் உன் மேல் ஆதரம் பெரிது - அன்பினால் உன் மேல் இருக்கும் ஆசை அதிகமாகி கொண்டே போகிறது 
இவ் அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் - இப்பெண்ணுக்கு உண்டான் நோய் எது என்று தெரியவில்லை 
மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி - மின்னல் போல இருக்கும் இடை சுருங்க (அந்த சுருக்கம் மார்பின்) மேலே நெருங்கி 
வீங்கிய வன முலையாளுக்கு - வீங்கிய அழகு முலை கொண்டவளுக்கு 
என் கொல் ஆம்! குறிப்பில் என் நினைந்து இருந்தாய் - என்ன ஆகுமோ! உன் உள்ளத்தில் என்ன (செய்வதாக) நினைத்து இருக்கிறாய் 
இடவெந்தை எந்தை பிரானே!  - திரு இடவெந்தை என் தந்தையாகிய பெருமாளே!

 விளக்கம்:-
உன் மேல் கொண்ட காதலால் உடலின் நிறம் தங்கம் போல பசலை பூத்திருக்கும்  மென்மையான தோள்களை உடையவள். பாசி படிந்த குளத்தில் கை வைத்தால் அந்த பாசி நீங்குவது போல உன் கை பட்டால்தான் இந்த பசலை நிறம் நீங்கும் போலிருக்கிறது . ஒன்றோடொன்று சண்டை போடும் கயல் மீன்களை போல அழகான கண்களை கொண்ட இவள் தூக்கத்தையே அடியோடு மறந்தாள்.

அன்பினால் உன் மேல் இருக்கும் மதிப்பும் ஆசையும் மேலும் மேலும் பெருகி கொண்டே போகிறது.
திருமணம் ஆகவில்லையே என்ற வருத்தமா! உன்  ஆசியும் துணையும் அருளும் முழமையாக கிடைக்க வேண்டும் என்ற ஆசையா!  நீ இவளுடன் பேச வேண்டும் என்ற ஆசையா! உன்னை அடைய வேண்டும் என்ற ஏக்கமா! இந்த அழகிய பெண்ணுக்கு உண்டான நோய் எது! என்று சரியாக தெரியவில்லை.

மின்னல் போல மெலிசா வளைஞ்சி நெளிச்சு இருக்கும் அழகான இடை சுருங்க அந்த சுருக்கம் அப்படியே மார்பின் மேலே ஏறி வீங்கிய அழகு முலைகளை கொண்ட இவளுக்கு அம்மா கல்யாணம் செய்து வைப்பாங்க! அப்ப செய்வாரு! சொந்தகாரங்க செய்வாங்க! நமக்கென்ன என்று இருந்தாயோ? அப்படியானால் நீ பரமபதத்தில் இருந்து வந்து திருவிடந்தையில் வசிப்பது எதற்கு? இப்படியே  போனால் இவளுக்கு என்ன ஆகுமோ? உன் உள்ளத்தில் இவளுக்கு என்ன செய்வதாக நினைத்து கொண்டு இருக்கிறாய்! திருஇடவெந்தை எந்தை பிரானே!

1117
அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய* எம் மாயனே! அருளாய்* என்னும் 
இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும்* இடவெந்தை எந்தை பிரானை
மன்னு மா மாட மங்கையர் தலைவன்* மானவேல் கலியன் வாய் ஒலிகள்
பன்னிய பனுவல் பாடுவார்* நாளும் பழவினை பற்று அறுப்பாரே* 2.7.10 


அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய - ஹம்சமாய், மட்சமாய், கூர்மமாய், நரசிம்மாய் அவதரித்த
எம் மாயனே! அருளாய் என்னும் - எம் மாயனே! அருளாய் என்னும்

இன் தொண்டர்க்கு இன் அருள் புரியும் - இனிய தொண்டர்க்கு இனிய அருள் புரியும் 
இடவெந்தை எந்தை பிரானை - திருஇடவெந்தை என் தந்தையாகிய பெருமாளை  
மன்னு மா மாட மங்கையர் தலைவன் - சிறந்த பெரிய மாடங்கள் உள்ள திருமங்கை நாட்டு தலைவன் 
மானவேல் கலியன் வாய் ஒலிகள்  - சிறந்த வேலை கையில் கொண்டுள்ள கலியன் வாயில் ஓசையோடு 
பன்னிய பனுவல் பாடுவார் - கூறிய பாசுரத்தை பாடுவார் 
நாளும் பழவினை பற்று அறுப்பாரே - எந்நாளும் பழைய தீய வினைகளை வேரோடு அறுப்பாரே !

விளக்கம்:-
ஹம்சமாய்,மட்சமும்,கூர்மமும், நரசிம்மமாகவும் அவதரித்த எம் பெருமாளே! அருளாய் என்று வேண்டும் இனிய தொண்டர்களுக்கு இனிய அருள் புரியும் திருஇடவெந்தையில் வசிக்கும் என் தந்தையாகிய பெருமாளை, சிறந்த அழகிய பெரிய மாடங்கள் உள்ள திருமங்கை நாட்டு தலைவன் கலிகன்றி வாயில் அழகிய இசையோடு கூறிய பாசுரத்தை பாடுவார் எந்நாளும் பழைய தீய செயல்களான வினைகளை வேரோடு அறுப்பாரே.

குறிப்பு: என்னடா!  திருமங்கை ஆழ்வார் இப்பெண்ணுக்கு என்ன செய்வதாக நினைத்திருந்தாய்? என்று மேலே 9 பாசுரங்களில் கேட்டு கொண்டிருக்க, பெருமாள் பதிலே சொல்லாமல் இருந்தாரே!! என்று நினைகிறீர்களா! இதோ 10-வது பாசுரத்தில் இனிய தொண்டர்களுக்கு இனிய அருள் புரியும் திருஇடவெந்தையில் வசிக்கும் என் தந்தையாகிய பெருமாளை என்று சொன்னாரே! அப்படியானால் பெருமாள் பயப்படாதே! வருத்தம் கொள்ளாதே! யாம் அருள் புரிந்தோம் என்று அருளியதால் இப்படி பாடியிருக்கிறார் என்று தானே அர்த்தம்! என்ன புரிஞ்சுதோ! 


                                                            நித்ய கல்யாணப் பெருமாள்


மூலவர் : லட்சுமி வராகப்பெருமாள்

உற்சவர்: நித்ய கல்யாணப் பெருமாள்

அம்மன்/தாயார் : கோமளவல்லி தாயார்

மங்களாசாசனம்: திருமங்கை ஆழ்வார்:- 13 பாசுரம்



திருஇடவெந்தை திருத்தலம் அமைந்துள்ள இடம்:-

INDIA – TAMILNADU - சென்னையிலிருந்து 42KM தொலைவில் உள்ளது . மகாபலிபுரம் போற வழியால் அதாவது ECR ரோட்டுல இருக்கு. திருவிடந்தை என்று கேட்டாலே சொல்வாங்க. 







திரு இடவெந்தை எந்தை பிரான் திருவடிகளே சரணம்!
திரு இடவெந்தை எந்தை பிரான் மலர் பாதங்களுக்கு சமர்ப்பணம்!


2 comments:

இராஜராஜேஸ்வரி said...

நாளை என்பது இல்லையே நரசிம்மத்திற்கு.இடவெந்தை எம்பிரானை வணங்கிப் பணிகிறோம்.

நாடி நாடி நரசிங்கா! said...

திருஇடந்தை பெருமாளை வணங்கி பணிகிறோம் என்று தாங்கள் சொல்வதில் மிக்கக மகிழ்ச்சி
நன்றி